தென் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம்

தென் இலங்கை முஸ்லிங்களின் வரலாறானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றின் ஓர் அங்கமாகும். எனவே, இலங்கை முஸ்லிங்களின் வராறு கீழைத்தேய உலகிற்கும் மேற்குலகிற்குமிடையிலான வணிகத் தொடர்பின் பின்னணியிலும், பாரசிக வளைகுடாப் பிரதேசத்திற்கும் சீனாவிற்குமிடையிலான வணிகத் தொடர்பின் பகைப்புலனிலும் ஆராயப்படுவது போன்று, தென் இலங்கை முஸ்லிங்களின் வரலாறு, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பின்னணியிலேயே நோக்கப்படல் வேண்டும்.

வரலாற்றுப் பின்னணி மேற்குலகிலிருந்து கிழக்கிற்கான கடல் பயணத்தை மேற்கொள்வதற்கு நன்னம்பிக்கை முனையூடான பாதை (CAPE ROUTE) கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், மேற்கையும், கிழக்கையும் பிணைக்கும் இரண்டு முக்கிய கடற்பாதைகளாக பாரசிக வளைகுடாவும், செங்கடலும் விளங்கின. இவற்றை அதன் இரு மருங்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ள அரபுத் தீபகற்பத்தின் கேந்திர நிலையானது, ‘இந்து சமுத்திர வணிகம்’ என அழைக்கப்பட்ட இவ்வணிகத்தில் அரபிகள் மிக முக்கியத்துவ இடத்தை வகிக்கும் நிலைய அளித்தது. பாரசீக வளைகுடாவிற்கும், சீனாவிற்குமிடையில் அமைந்திருந்த இந்த வணிகப்பாதையில் துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை வகித்தன. இந்த துறைமுகங்கள் வணிக மத்திய தலங்களாக விளங்கின. இந்த வணிக மத்திய நிலையங்களின் அமைப்பு, முக்கியத்துவம் ஆகியவற்றை இந்து சமுத்திரத்தின் ‘காற்று வீசும் முறை’ யே (WIND SYSTEM) நிர்ணயித்தது. உதாரணமாக பாரசிக வளை குடாவிலிருந்து, ஸுமத்திராவிற்கு ஒரே பருவப் பெயர்ச்சிக் காற்றை (MONSOON WIND) ப் பாயன்படுத்திப் பயணத்தை மேற்கொள்ளுதல் சாத்தியமற்றதாகக் காணப்பட்டது. எனவே, இக்கப்பல்கள் இந்தியக் கரையிலோ அல்லது இலங்கைக் கரையிலோ உள்ள துறைமுகங்களில் தரித்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. வியாபாரச் சரக்குகள் காணப்படல், பாதுகாப்பான துறைமுகங்கள், உணவும் குடிநீரும் காணப்படல், கப்பல்களைப் பழுது பார்ப்பதற்கான வசதிகள் உள்ளமை ஆகிய அம்சங்களை இத்துறைமுகங்கள் தெரிவு செய்யப்படுவதை நிர்ணயித்தன. பாரசீகர், அராபியர், சீனர் ஆகியோர் பங்குற்றிய இந்த இந்து சமுத்திர வணிகத்தில் இலங்கையின் வடகிழக்கு, மேற்கு தெற்கு கரையோரங்களில் காணப்பட்ட துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை வகித்தன. திருகோணமலை, கொழும்பு, மன்னார் என்பன இவ்வகையில் முக்கிய துறைமுகங்களாக விளங்கின. இலங்கையின் தெற்கு கரையோரப் பகுதியானது காலி போன்ற இயற்கைத் துறைமுகங்களை மட்டுமன்றி பல பாதுகாப்பான குடாக்களையும் (Sheltered Bays) கடல் சார்ந்த உட்பிரதேசங்களையும் (INLETS) கொண்டுள்ளது. இந்த அமைப்பைப் பெற்றிருந்த தெற்குக் கரையிலுள்ள ‘நிலவளாதித்த’ என அழைக்கப்பட்ட மாத்தறை ‘வலுகாமம்’ என அழைக்கப்பட்ட வெலிகாமம் ‘பீமாதித்த’ எனப்பெயர் பெற்ற பெருந்தோட்ட ஆகிய பிரதேசங்கள் கால வளர்ச்சியில் வணிகத் துறைமுகங்களாக வளர்ச்சியடைந்தன.

இந்து சமுத்திர வணிகத்தில் பாரசிகர்கள் மிக ஆரம்பகாலத்திலிருந்தே மிக முக்கிய இடம் வகித்தனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் பாரசிக முஸ்லிம் வணிகர்கள் சீனாவிலுள்ள கண்டன் (CANTON) துறைமுகம் வரை பயணம் செய்தனர். கி.பி. 717ம் ஆண்டு வஜ்ரபோதி என்பார் இலங்கையிலிருந்து சுமாத்ரா வரை முப்பத்து ஐந்து பாரசிகக் கப்பல்களைக் கொண்ட ஒரு கூட்டத்தோடு பயணம் செய்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது. பாரசிகரைப் போன்றே அராபியரும் இந்து சமுத்திர வணிகத்தில் சிறப்பிடம் பெற்றனர். இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் பாரசிகர், அராபியர் என்றவகையில் அவர்கள் இனங்காணப்பட்டாலும், இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர், குறிப்பாக கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் பாரசிகர், அராபியர், ஆகிய இருசாராரும் அராபியர் என்றே இனங்காணப்பட்டனர். இலங்கையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் கணிசமான அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டதை வரலாற்றாசிரியர் அவ் – பலாஸசரியின் குறிப்புக்கள் உணர்த்துகின்றன.

 

இலங்கையின் கரையோரத் துறைமுகங்களைப் பொறுத்தளவில் ஆரம்பகாலப் பிரிவில் வடக்குப் பகுதியில் காணப்பட்ட துறைமுகங்கள் இவ்வணிகத்தில் முக்கியம் இடம் வகித்தன. அண்மையில் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகள், இக்காலப்பிரிவில் இலங்கைக்கும் பாரசிக வளை குடாவுக்குமிடையில் நடைபெற்ற வணிகத்தில் திருகோணமலை, மாந்தைத் துறைமுகங்கள் முக்கிய இடம் வகித்ததை உறுதிப்படுத்துகின்றன. கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொராம் நூற்றாண்டு வரையிலாக காலப்பிரிவின் மத்திய கிழக்கைச் சார்ந்த மட்பாண்டங்களும், இதேகாலப்பிரிவின் சீனாவைச் சார்ந்த மட்பாண்டங்களும் மாந்தையில் கண்டுபிடிக்கபட்டதாது, இக்காலப்பிரிவில் மாந்தை ஒரு முக்கிய வணிக மத்தியதலமாக விளங்கியதைக் குறிக்கின்றது. கி.பி. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட அரபுச் சிவாசனமும், இதேகாலப்பிரிவைச் சேர்ந்த புளியந்தீவு அரபுச் சிவாசனமும், இக்காலப்பிரிவில் கொழும்பு, மன்னார் ஆகிய பிரதேசங்கள் அரபு வணிகர்களின் முக்கிய குடியேற்றங்களாக விளங்கின என்பதற்குச் சான்றாக அமைகின்றன. திருகேபணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பொலன்னறுவை ராஜதானியின் இறுதிக்காலப் பிரிவைச் சேர்ந்த அரபுச் சிலாசனம் அது ஒரு முக்கிய அரபுக் குடியேற்றமாக இக்காலப் பிரிவில் விளங்கியதற்குச் சான்றாக அமைகின்றது. இவை கி.பி. 10, 11, 12ம் நூற்றாண்டுகளில் இலங்கை – அராபிய வணிகத்தில் வடக்குப் பகுதியைச் சேர்ந்த துறைமுகங்கள் முக்கிய இடத்தை வகித்ததை உணர்த்துகின்றன.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பொலன்னறுவை ராஜதானியின் வீழ்ச்சியோடு இலங்கையின் அரசியல் தலைநகரம் தீவின் தென்மேற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அத்தோடு, கடல் வணிகத்தின் மத்திய நிலையும் வங்காள விரிகுடாவிலிருந்து அராபிய கடல் பிரதேசத்தை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இலங்கையின் அரசர்கள் தென்மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த தலைநகரங்களால் கவரப்படலாயினர். இக்காலப்பிரிவிலேயே பேருவலை, காலி, வெலிகாமம், மாத்தறை போன்ற தென்மாகாண கடல் துறைமுக நகரங்களில் அரபு வணிகர்கள் பெருமளவு குடியேற ஆரம்பித்தனர். இக்காலப்பிரிவில் சீனாவிலிருந்து பாரசிக வளைகுடாவினை ஒரு சீனக் கப்பலில் பயணம் செய்த மார்கோபோலோ இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெருமளவு அரபு வணிகர்கள் காணப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்.

கி.பி. 13, 14ம் நூற்றாண்டுகளில் தென்னிலங்கையில் முஸ்லிங்கள் வணிகத்துறையில் மிகச் சிறப்புற்று விளங்கியதையும், குறிப்பாக அவர்களின் முக்கிய வணிக மத்திய நிலையமாக காலி விளங்கியதையும் 1344ல் இலங்கையைத் தரிசித்த அரபுப் பயணி இப்னு பதூதாவின் குறிப்புக்கள் மூலம் நாம் அறிய முடிகின்றது. இப்னு பதூதா கொழும்பில் ‘ஜலஸ்தி’ என்னும் பெயருடைய ஒரு கப்பல் தளபதியைச் சந்தித்ததாகவும் அவருடன் 500 அபிஸீனியர்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார். ‘ஜலஸ்தி’ என்ற பதம் துறைமுகத்தோடு தொடர்புடைய பதமாக ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. இப்னு பதூதாவின் குறிப்புகள் தேவந்துறை (தெவிநுவர) முஸ்லிம்களின் ஒரு முக்கிய வணிகக் குடியேற்றமாக விளங்கியதை உணர்த்துகின்றன. தெவந்துறையை ‘தீனவார்’ எனக் குறிப்பிடும் இப்னு பதூதா அங்கு பல முஸ்லிம்கள் வணிகர்கள் காணப்படுவதாக அவரது பிரயாண நூலில் கூறுகின்றார். காலித் துறைமுகத்தில் முஸ்லிம்களின் வணிகக் கப்பல்கள் அக்காலப்பிரிவில் கணிசமானளவு காணப்பட்டிருக்கலாம் என்பதனை இப்னு பதூதாவின் குறிப்புகளிலிருந்து நாம் ஊகித்து உணரமுடிகின்றது. காலியின் தான் இப்ராஹிம் என்னும் பெயருடைய கப்பல் தலைவரொருவரைச் சந்தித்தாகவும், காலி நகரில் அவரது வீட்டில் விருந்தினராகத் தான் தங்கியதாகவும் அவர் தனது பிரயாண நூலில் குறிப்பிடுகின்றார். இது தொடர்பாக தென்மாகாணத்தில் மிகப் பரவலாக சிங்கள மக்கள் மத்தியில் வழக்கிலுள்ள சிங்களப் பெயரான ‘ஸஹபந்து’ (SAHABANDU) என்னும் சிங்களப் பெயர் ‘ஷாஹ் பந்தர்’ (SHAH BANDAR) என்ற பாரசிகப் பெயரின் சிங்கத் திரிபேயாகும் என்ற உண்மையும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். பாரசிக மொழியில் ‘ஷாஹ்’ எனில் அரசன் அல்லது தலைவன் எனவும், ‘பந்தர்’ எனில் துறைமுகம் எனவும் பொருள்படும். எனவே, ‘ஷாஹ் பந்தர்’எனில் துறைமுகத் தலைவன் என்பது கருத்தாகும். இது முஸ்லிம்கள் தென்னிலங்கைப் பிரதேசத்தில் முக்கிய துறைமுகங்களில் தலைவர்களாகப் பணிபுரிந்துள்ளார்கள் என்பதற்குச் சான்றாக உள்ளது. 1911ம் ஆண்டு காலி கிறிப்ஸ் வீதியில் காலி மாகாண என்ஜினியராகப் பணிபுரிந்த எச். எப். டொமலின் (TOMALIN) கண்டெடுத்த சீனம், பாரசிகம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் அமைந்துள்ள காலி மும்மொழிச் சிலாசதைப் (GALLE tri lingual inscription) முக்கியம் பெறுகின்றது.

கி.பி. 1410ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த கப்பல் தளபதி செங்ஹோ (CHENG HO) வினால் பொருத்தப்பட்ட இச்சிலாசனம் பாரசிகம், தமிழ், சீனம் ஆகிய மூன்று மொழிகளிலும் அமைந்துள்ளது. பௌத்த, இந்து, முஸ்லிம்களின் வணக்கத்தலங்களுக்கு சீன மன்னன் அனுப்பி வைத்த அன்பளிப்புகள் பற்றி இச்சிலாசனம் குறிப்பிடுகின்றது. சீனமொழியில் காணப்படும் குறிப்புகள் புத்தரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. தமிழில் ‘தேனாவரை – நயினார்’ என்ற வார்த்தை உள்ளது. இதனைப் பேராசிரியர் பரணவிதான தெவிந்துறைக் கடவுளைக் (GOD OF DEUINUWARA) குறிப்பதாகக் கொள்கின்றார். பாரசிக வரிகள் பெரும்பாலும் தெளிவற்றுக் காணப்படுகின்றன. இதனை வாசித்து இனங்கண்ட இந்தியாவைச் சேர்ந்த, ஜனாப் குவாஜா முஹம்மத் அஹ்மத், இதில் ‘நுருல் இஸ்லாம்’ இஸ்லாத்தின் ஒளி என்னும் சொல் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றார். இந்த சிலாசனம் காலியில் வாழும் வணிர்களின் நன்மை கருதியே பொருத்தியிருக்கப்படல் வேண்டும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலங்கையில் வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு வணிகர்களின் கையிலிருந்ததையும், இவ்வணிகத்தில் பாரசிக முஸ்லிம்கள் கணிசமான இடத்தை வகித்தமையும், அவர்கள் காலியில் காணப்பட்டதையும் இச்சிலாசனத்தின் மூலம் நாஙகள் அனுமானிக்க முடிகின்றது. குடியேற்றங்கள் காணப்பட்டதற்கான சான்றுகள், இக்காலப்பிரிவில் சிங்கள மொழியில் எழுந்த ‘ஸந்தேஸ காவிய’ என்னும் தூது இலக்கியங்களில் காணப்படுகின்றன. பராக்கிரமபாகு மன்னனின் காலப்பிரிவில் (1440 – 1450) இயற்றப்பட்ட ‘கோகில ஸ்ந்தேஸய’ ‘கிராஸந்தேய’ ஆகிய நூல்கள் சோனகப் பெண்களை ‘யொன்வியர்’ எனக் குறிப்பிடுவதுடன், ‘மஹாவெலி கம்’ (வெலிகாமம்) முஸ்லிம் குடியேற்றம் பற்றியும் குறிப்பிடுகின்றது.

கி.பி. பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் மேற்குக் கரையோரப் பகுதியில் உள்ள துறைமுக நகரங்களான கொழும்பு, களுத்துறை, பேருவலை, காலி, வெலிகாமம், மாத்தறை ஆகிய இடங்களில் பெருமளவு முஸ்லிம் குடியேறியிருந்தனர். இக்காலப்பிரிவில் இந்து சமுத்திரா வணிகத்தில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்கின்றது.

இந்து சமுத்திரத்தில் இலங்கையில் அரபுக் குடியேற்றங்கள் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்த தென்னிந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதியான மலைபார் பிரதேசத்திலும், கிழக்குக் கரையான மஃபர் பிரதேசத்திலும் அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டன. மஃபர் பிரதேசத்தின் பிரதான அரபு வணிகக் குடியேற்றமாக காயல்பட்டணம் விளங்கியது. இப்பிரதேசத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கும், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குமிடையிலான அரபு நாணயங்களை கால்டுவெல் (CALDWELL) கண்டுபிடித்த காயல்பட்டணம் பிரதேசம் மிக ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு முக்கிய அரபு வணிக மத்திய தலமாக விளங்கியதைக் குறிக்கின்றது. இதுபோன்றே பஸார் பகுதியின் முக்கிய துறைமுகமான சிரங்க நூர் (CIRANGANORE) மிக ஆரம்பகாலத்திலிருந்தே அரபு வணிகர்களின் ஒரு முக்கிய குடியேற்றமாக விளங்கியது. ‘காயல்’ என அழைக்கப்பட்ட காயல்பட்டணத் துறைமுகம் இலங்கை வணிகத்தில் முக்கிய இடம் வகித்தது. சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் தமிழகத்தில் முஸ்லிம்களின் முக்கிய வணிக மத்தியதலமாக காயல்பட்டணம் வளர்ச்சியடைந்தது. காயல்பட்டண வணிகர்கள் இலங்கையில் மேற்குக் கரையோரத்தில் பல துறைமுகங்களை உள்ளடக்கிய வகையில் அவர்களது வணிகத்தை பரவலாக்கியிருந்தனர். பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய முஸ்லிம் வணிகர்கள் இந்து சமுத்திர வணிகத்தில் முக்கிய இடம் வகித்தனர். காலியில் கண்டுபிடிக்கப்பட்ட 1401 ஆண்டைச் சேர்ந்த செங்ஹோவின் (Chamy – Ho) வின் மும்மொழிச் சிலாசனத்தில் பாரசிக, சீன மொழிகளுடன், தமிழ் மொழியும் இடம்பெற்றிருப்பதானது இக்காலப்பிரிவில் தமிழ் தென்-கிழக்காசிய, இந்து சமுத்திர வணிக மொழிகளுள் ஒன்றாக விளங்கியதை உணர்த்துகின்றது. இக்காலப்பிரிவிலேயே இலங்கை முஸ்லிம்களுக்கும் குறிப்பாக தென்னிந்தியாவின் மேற்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த, மலபார், காயல்பட்டணம், கிழக்கரை முஸ்லிம்களுக்கிடையில் மிக நெருங்கிய வணிகத் தொடர்பும், இறுக்கமான கலாசார, பண்பாட்டு இணைப்பும் ஏற்படுகின்றது.

கி.பி. 1505ம் ஆண்டு போர்த்துக்கேயரின் வருகையோடு, இலங்கை முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய உலகுக்கும் இடையிலான கலாசார, பண்பாட்டுத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இலங்கை முஸ்லிம்களுக்கும், தென் இந்தியரின் மஃபர் பகுதியைச் சார்ந்த (காயல்பட்டணம்) முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்பட்ட கலாசார, பண்பாட்டுத் தொடர்பே இலங்கை முஸ்லிம்களின் மத, கலாசார, பண்பாட்டுத் தனித்துவத்தைப் பாதுகாக்கத் துணைபுரிந்தது.

இலங்கையில் போர்த்துக்கேயரின் வருகை நிகழ்ந்த காலப்பிரிவில், இலங்கையின் தென், தென்மேற்குக் கரைப்பகுதியில் கொழும்பு, களுத்துறை, பேருவலை, அலுத்கம, காலி, வெலிகமை, மாத்தறை ஆகிய பகுதிகளில் முஸ்லிம் குடியேற்றங்கள் மிகப்பரவலாகக் காணப்பட்டமே போர்த்துக்கேய வரலாற்று ஆவணங்கள் மூலமாக நாம் அறிய முடிகின்றது என்ற கருத்தை கலாநிதி டீ. பி. அபயஸிங்ஹ தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார். இந்த துறைமுக நகரங்களில் முஸ்லிம்கள் அவர்களது சமூக பரிபாலன விடயங்களுக்காக தலைவர்களை நியமித்திருந்தனர். 1614 ஆண்டு அலுத்கமையில் முஸ்லிம் சமூகம் மிக ஸ்திர நிலையில் மூன்று தலைவர்களைக் கொண்டு இயங்கியது. போர்த்துக்கேய வரலாற்று ஆவணங்கள் ‘தோம்பு’ (TOMBO) என அழைக்கப்படுகின்றன. இவற்றுள் ஓர் ஆவணமான ருவா டீ மோரோஸ் (Rua dos Mouros) என்னும் தோம்பு வெலிகாமத்தில் முஸ்லிம்களுக்கென்றே ஒரு தனிப்பட்ட வீதிகள் காணப்பட்டன என்றும், மாத்தறையில் முஸ்லிம்கள் நகரத்தின் மத்திய சந்தைப் பிரதேசத்திலே (Baza area) முக்கியமாக வாழ்ந்தனரென்றும் குறிப்பிடுவதாக கலாநிதி அபயஸிங்ஹ கருத்துத் தெரிவிக்கின்றார்.

போர்த்துக்கேயர் காலப்பிரிவில் தெற்குக் கரையோரப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பல வகையில் தொல்லைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டனர். பலவகையிலும் முஸ்லிம்களின் வணிக முயற்சிகளைச் சீர்குலைக்கும் முயற்சிகள் போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சூழலில் கூட தென்னிலங்கை முஸ்லிம்கள் தமது பொருளாதார பலத்தையும், இஸ்லாமிய தனித்துவத்தையும் பேணி வாழ்ந்தனர்.

கி.பி. 1658ல் இலங்கை டச்சுக்காரரின் ஆட்சிக்கு உட்பட்டது. முஸ்லிம்களைப் பொறுத்தளவில் டச்சுக்காரரும், போர்த்துக்கேயரின் கொள்கையையே பின்பற்றினர். வணிகத் துறையின் முஸ்லிம்களின் செல்வாக்கை முறியடிப்பதை அவர்களது முக்கிய நோக்கங்களுள் ஒன்றாக கொண்டு டச்சுக்காரர் செயல்புரிந்தனர். கி.பி. 1650 காலி முஸ்லிம்கள் தையல் தொழில் மூலம் இலாபமீட்டுவதை அவதானித்த அவர்கள், அந்த வாய்ப்பினை முஸ்லிம்களிடமிருந்து பார்த்து பரங்கியருக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாக்கு வியாபாரத்தையும் முஸ்லிம்களின் கையிலிருந்து பரங்கியருக்கு மாற்றும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

காலி, வெலிகாமம், மாத்தறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் உள்நாட்டிற்குச் சென்று நெல், பாக்கு முதலியவற்றை வாங்கி கண்டி இராசதாணிகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் உள்நாட்டுக்குச் சென்று வியாபாரச் சரக்குகளை வாங்குவதைத் தடுக்கும் முயற்சிகளை டச்சு ஆட்சியாளர் மேற்கொண்டனர். முஸ்லிம்கள் தங்களது செல்வாக்கைப் பரவச் செய்ததைத் தடுக்கும் நோக்கோடு காலி, வெலிகாமம், மாத்தறையைச் சேர்ந்த முஸ்லிம்கள் நகர எல்லையைவிட்டு வியாபாரத்திற்காக வெளியேறக்கூடாது என 1659ம் ஆண்டு ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வணிகத்துறையில் மட்டுடன்றி மத விவகாரங்களைப் பொறுத்தளவிலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் டச்சுக்காரர்களின் கீழ் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினர். டச்சு அதிகாரியான மட்ஸியூகொ (Matsuyeker)’முஹம்மதிய மதத்தின் சாபத்தை ஒழித்துக் கட்டி, கிறிஸ்துவ மதத்தை பரப்புவதை’ தனது முக்கிய கொள்கைiயாகப் பிரகடனப்படுத்தினார். இதற்கேற்ப டச்சு அதிகாரி வான் கோயென்ஸ் (VAN GOENS) மாத்தறை முஸ்லிம்களுக்கு அவர்களது மதக்கடமைகளை நிறைவேற்ற அனுமதியளிக்க வேண்டாமென்றும் நகரத்தின் எல்லைக்குற்பட்ட பிரதேசத்திலோ அல்லது வெளிப் பிரதேசங்களிலோ முஸ்லிம்களின் மதத்தலைவர்களுக்கு இடமளிக்க வேண்டாமென்றும் கட்டளை பிறப்பித்தார். ஆனால் காலப்போக்கில் தன் யதார்த்த நிலையை உணர்ந்த டச்சுக்காரர் அவர்களது பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்துவதில் முஸ்லிம்களை புறக்கணிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தனர். எனவே, முஸ்லிம் சமூகத்துடன் தங்களது தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளத் துணைச்சாதனமாக முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் அதிகாரிகளை (Meadman) நியமித்தனர். கி.பி. 1762ம் ஆண்டு கொழும்பில் முஸ்லிம்களின் அதிகாரியான உதுமான் கண்டி மேஸ்திரி அய்துருஸ் லெப்பை மரிக்கார் நியமிக்கப்பட்டார். இதுபோன்றே டச்சுக்காரரின் ஆட்சியின் இறுதிக்காலப்பிரிவில் காலி, மாத்தறை ஆகிய நகரங்களிலும் இத்தகைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 1789ம் ஆண்டு சின்ன லெப்பை மரிக்கார் சீதக்காதி லெப்பை மாத்தறை முஸ்லிம்களின் தலைவராக நியமிக்கப்பட்டதாக டச்சு ஆவணங்கள் குறிப்பிடுவதாக கலாநிதி ஜே.பி. கொத்தலாவலை கருத்துத் தெரிவிக்கின்றார். வான் இம்ஹோப் (Van Imhoff)என்னும் டச்சு அதிகாரி 1733ல் மாத்தறையில் முஸ்லிம் கமிஷனர்களை நியமித்தார். இவர் (Moor Commissioner) என அழைக்கப்பட்டனர். டச்சுக்களின் ஆட்சியில் கீழ் உள்ள பிரஜைகள் மாதத்தில் சிலநாட்கள் ஏதாவதொரு அரசாங்கப் பணியில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டது. இது ஊழியம் என அழைக்கப்பட்டது. இத்தகைய ஊழிய வேலைக்கு ஆட்களைத் திரட்டி ஒழுங்குபடுத்துவதே டச்சுக்காரர் நியமித்த அதிகாரிகளின் பணியாக அமைந்தது. காலியில் உள்ள முஸ்லிம் அதிகாரிகள் காலித் துறைமுகத்தில் பொருட்களை கப்பலில் ஏற்றுதல், இறக்குதல் போன்ற பணிகளுக்கு போதிய ஆட்களைத் திரட்டாத பட்சத்தில் அவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படுவது மட்டுமன்றி, அந்த அதிகாரிகளையே காலில் விலங்கிடப்பட்டு வேலை செய்யும்படி பணிக்கப்படுவார்களென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இவ்வாறு முஸ்லிம்களை அடக்கி, ஒடுக்கி ஆட்சி செய்த டச்சுக்கார் அவர்களது ஆட்சியின் இறுதிக் காலப்பிரிவில் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் ஓரளவு சகிப்புத் தன்மையைக் கடைப்பிடித்தனர். 1789ல் ஆரம்பித்த பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முஸ்லிம்களுக்கு டச்சுக்காரரால் இழைக்கப்பட்ட அநீதிகளை நிவர்த் திக்கும் முயற்சிகள் ஓரளவு மேற்கொள்ளப்பட்டன.

தென்னிலங்கை முஸ்லிம்களின் குடிசனப் பரம்பல் பற்றி நோக்குமிடத்து, போர்த்துக்கேயர் டச்சுக்காரர்களின் ஆட்சிக்காலப்பிரிவில் காலி, மாத்தறை போன்ற முக்கிய நகர்களில் முஸ்லிம்கள் அவர்களின் அடக்கு முறைக்கு ஆளாகிய போது கரையோரப் பகுதியைத் தாண்டி உள்நாட்டிலுள்ள சிங்களக் கிராமங்களை நோக்கி நகர்த்திருக்கலாம் என்பதனை அனுமானிக்க முடிகின்றது. கிருந்தை, மீயல்லை, யக்கலமுல்லை, கொடபிடிய போன்ற கிராமங்கள் இவ்வகையிலேயே தோற்றமெடுத்திருத்தல் வேண்டும் என நாம் கொள்ளலாம்.

தென்னிலங்கை முஸ்லிம்களின் வரலாற்றோடு இணைந்து காணப்படுவது அவர்களின் கலாசாரப் பாரம்பரியமாகும். தென்னிலங்கை முஸ்லிம்களில் யெமன் நாட்டின் ஹஸ்ரமௌத் கலாசாரத்தின் செல்வாக்கு கணிசமாகக் காணப்படுகின்றது. இந்த ஹஸ்ரமீ கலாச்சாரம் யெமன் நாடடுடனான நேரடித் தொடர்பு மூலமும், மலபார், காயல்பட்டணம், கிழக்கரை போன்ற தமிழகத்தின் முக்கிய முஸ்லிம் வணிக பண்பாட்டு மத்திய தலங்கள் மூலமாகவும் அதன் தாக்கத்தை தென் இலங்கை முஸ்லிம்களில் ஏற்படுத்தியது.

‘அஹ்லுல் பைத்’ என்னும் நபி (ஸல்) அவர்களின் பரம்பரையினர், ஸுபி மெர்ரானிகள், தரிகாக்கள் மூலம் ஹஸ்ரமௌத் கலாசாரத்தின் தாக்கம் இப்பிரதேசத்தில் ஏற்பட்டது. இத்துறையில் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படின் கிழக்காபிரிக்கா, இந்தோனேசியா ஆகிய இடங்களில் காணப்படும் ஹஸ்ரமி கலாசாரத்திற்கும் தென்னிலங்கை முஸ்லிம்களின் கலாசாரத்திற்குமிடையில் சில ஒருமைப்பாடுகளை நாம் இனம்காண முடியும். ஆனால், இது ஒரு தனிப்பட்ட ஆய்வை வேண்டி நிற்கும் துறையாகும்.

பொதுவாக நோக்குமிடத்து தென்னிலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம் மிக பூர்வீகமானது: பாரம்பரியச் சிறப்பு மிக்கது: கி.பி. 1505 க்கும் கி.பி. 1796 க்குமிடையில் போர்த்துக்கேயர், டச்சுக்காரரின் அடக்கு முறைகளை எதிர்கொண்டு தங்களது இஸ்லாமிய தனித்துவத்தைப் பாதுகாத்து இன்றைய தலை முறையினருக்கு வாரிசாக அளித்த எமது மூதாதையர்கள் எங்களால் என்றும் நன்றிக்கடனுடன் நினைவு கூறப்பட வேண்டியவர்களாவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *