அபூ ரய்ஹான் அல் – பெரூனி : மதங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வின் ஒரு முன்னோடி

மத்தியகாலப்பிரிவில் தோன்றிய, மிக அரிதான, அதிசயிக்கத்தக்க ஆளுமை படைத்த அறிஞர்களுள் அபூரய்ஹான் அல் – பெரூனியும் ஒருவர். எதனையும் பகுத்தாய்ந்து உணரும் வேட்கை, சத்தியம் எங்கி ருப்பினும் அதனைத்தேடி அறியும் தனியான தாகமும், பல்வேறு விடயங்களை ஒன்று திரட்டி, அவற்றை ஒன்றிணைத்து (Synthesize) அவற்றினூடே இழையோடி நிற்கும் ஒருமைப்பாட்டைத் தரிசிக்கும் சிந்தனைப் பாங்கும், உளப்பண்பும் கொண்ட அகலுலகு நோக்குப் படைத்த அற்புத மனிதர் அல் – பெரூனி.

வானவியல், கணிதம், புவியியல் ஆகிய பல்வேறு கலைகள் தொடர்பான எண்ணற்ற நூல்களை எழுதிய அவர், மதங்கள் பற்றிய ஒப்பீட்டாய்வின் முன்னோடியாகவும் வரலாற்றில் காட்சி நல்குகின்றார்.

அல் – பெரூனி மத்திய ஆசியாவிலுள்ள குவாரிஸ்ம் என்னும் பிரதேசத்தில் பிறந்தார். அவரது காலப்பிரிவில் டிரான்ஸ் ஸொக்ஸியானா (Transoxiana) என அழைக்கப்பட்ட இப்பிரதேசம், தற்போது சோவியத் சோஷலிசக் குடியரசில், உஸ்பெகிஸ்தான் என வழங்கப்படும் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அல் – பெரூனி இயற்கையிலேயே எதனையும் நுட்பமாக ஆராய்ந்து உணரும் தன்மை மிக்கவராக விளங்கினார். புகழ்பூத்த முஸ்லிம் தத்துவஞானி ராஸியின் நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கும் போது அதில் மானி (Mani) யின் நூல் ஒன்றைப் பற்றிய குறிப்பு காணப்பட்டது. அவரது கவனத்தை ஈர்ந்தது. அந்நூலைத் தேடிக் கொண்டிருக்கும் முயற்சியில் நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து அவர் ஈடுபட்டார் என வரலாறு குறிப்பிடுகிறது. இவ்வாறு அவர்பால் இயற்கையாகக் காணப்பட்ட அறிவு வேட்கையும், அவர் பிறந்து, வளர்ந்த பிரதேசத்தில் நிலவிய சமூக, பண்பாட்டுச் சூழ்நிலையுமே அவரை பிற பண்பாடுகள் பற்றி ஆராயவும், அவற்றை ஒப்பிட்டு நோக்கவும் தூண்டின எனலாம். அவரது வாழ்நாள் முழுவதும், இஸ்லாமிய பண்பாடு, நாகரிகத்தோடு மட்டுமன்றி, ஏனைய நாகரிகங்களோடும், பண்பாடுகளோடும் தொடர்புள்ளவராகவும், பரிச்சயமுள்ளவராகவும் அவர் விளங்கினார். அவர் பிறந்த பிரதேசமான ‘குவாரிஸம்’ அவரது காலப்பிரிவில் மிக வளர்ச்சியடைந்த நாகரிக, பண்பாட்டு நிலையைக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அப்பாஸியரின் கீழும், பிற்காலப் பிரிவில் பாரசீக ஸமனைதுகளின் கீழும் (Samanid) இப்பிரதேசம் அறிவு, கலைத்துறையில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டது. கிரேக்க, ஸீரிய (Syriac) பஹ்லவி மொழிகளில் காணப்பட்ட பல்வேறு கலைகளைத் தழுவிய நூல்கள், குவாரிஸமிலுள்ள நூலகங்களில் காணப்பட்டன. அத்தோடு பல்வேறு இனத்தவர்களைக் கொண்ட சமூக அமைப்பும் அங்கு நிலவியது.

கி.பி. 1017ம் ஆண்டு குவாரிஸம் பிரதேசம் கஸ்னவி ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அல் – பெரூனிக்கு மஹ்மூத் கஸ்னவியுடன் தொடர்பு ஏற்பட்டது. மஹ்மூத் கஸ்னவி குவாரிஸம் பிரதேசத்திலிருந்து பல முக்கிய அறிஞர்களைச் சிறைப்பிடித்து கஸ்னீக்கு எடுத்துச் சென்றார். இக்காலப்பிரிவில் வானவியல், கணிதம், தத்துவம், புவியியல் ஆகிய துறைகளில் புகழ்பூத்த அறிஞராக விளங்கிய அல் – பெரூனியும் கஸ்னீக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கஸ்னியில் இந்தியாவைச் சேர்ந்த பல அறிஞர்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

கி.பி.   1020 – 30 க்குமிடையில் இந்தியாவிற்குச் சென்ற அவர் அங்கு ஸமஸ்கிருத பண்டிதர்களையும் அறிஞர்களையும் சந்தித்து, அவரது 45வது வயதில் ஸமஸ்கிருத மொழியைக் கற்றார். ஏற்கனவே அப்பாஸிய காலப்பிரிவில் பெயர்க்கப்பட்ட இந்திய நூல்களோடு அவருக்குப் பரிச்சயமிருந்தது. ஆனால், அந்த மொழிபெயர்ப்புகளில் பல குறைகள் இருப்பதை அவர் அவதானித்தார். உதாரணமாக ஜீவ (Jiva) என்னும் ஸமஸ்கிருதச் சொல் அரபியில் ஜீப் (Jeeb) என மாற்றப்பட்டு, ஐப் என்னும் அரபுப்பதம் தரும் வேறு ஒரு கருத்துடன் இணைக்கப்பட்டு கருத்து மயக்கத்திற்கு உட்பட்டிருப்பதை அவரது ஆய்வுகள் அவருக்கு உணர்த்தின. அல் பெரூனியினால் கண்டுபிடிக்கப்பட்ட இத்தகைய தவறுகள் அவரை ஸமஸ்கிருதத்திலுள்ள மூல நூல்களைப் படித்தறிவதற்காக, ஸமஸ்கிருத மொழியைப் படிக்கத் தூண்டின. எனவே, அவருக்கு கஸ்னியை வந்தடைந்து ஹிந்துக்களுடன் நேரடியான தொடர்பு ஏற்பட்ட போது, அச்சந்தர்ப்பத்தை அவர் பூரணமாகப் பயன்படுத்தினார். ஸமஸ்கிருத மொழியைப் படிப்பதற்கு நீண்டகாலம் சென்றதென்றும், படிப்படியாக முன்னேறி இறுதியில் அம்மொழியில் தேர்ச்சி பெற்றார் என்றும் தனது ‘கானுன் அல் மஸூதி’ என்னும் நூலில் அவர் குறிப்பிடுகின்றார். நூல்களைத் திரட்டி ஹிந்துப் பண்டிதர்களின் துணைகொண்டு காலத்தையும் நேரத்தையும் அர்ப்பணித்து இந்த மொழியைத் தாம் கற்றதாக அவர் குறிப்பிடுகின்றார். ஏறக்குறைய 2500 சமஸ்கிருத சொற்களை அவர் அறிந்திருந்தாரென பேராசிரியர் ஸுனிதகுமார் சட்டர்ஜி தனது ‘அல் – பெரூனியும் சமஸ்கிருதமும்’ என்ற ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்திய மக்களின் நம்பிக்கைகள், ஆசாரங்கள், கோட்பாடுகளை மிக லாவகமாக அவர் விளக்குவதானது, மொழியிலும், அவர் எடுத்துக்கொண்ட பொருளிலும் அவருக்கிருந்த ஆற்றலையே காட்டுகின்றன என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஸமஸ்கிருத உச்சரிப்பில், சாதாரண மக்களின் உச்சரிப்பு முறையை விடுத்து, பண்டிதர்களின் பண்பாடான உச்சரிப்பு முறையையே அவர் பின்பற்றினார். இந்துக்களின் பேச்சு வழக்கு மொழிக்கும், எழுத்துவடிவமான மொழிக்குமிடையிலான வித்தியாசத்தை அவர் நன்கு அறிந்திருந்தார். அக்காலப்பிரிவில் நிலவிய பல்வேறு எழுத்து வடிவங்களையும், எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்களையும் அவர் விளக்குகின்றார். மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை சித்ஹ மத்ரிகா (Sidha Matrika) என அவர் குறிப்பிடுகின்றார்.

அல் -பெரூனியின் காலப்பிரிவிற்கு முன்பிருந்த முஸ்லிம்கள் ஏனைய பண்பாடுகள், மதங்கள் பற்றி அறிவதில் ஆர்வம் செலுத்தியுள்ளனர். புராதன இனங்களைப் பொறுத்தளவில் கிரேக்கர்கள் ஏனைய பண்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் செலுத்தினர் என வரலாறு குறிப்பிடுகின்றது. முஸ்லிம்கள் அவர்களது வரலாற்றின் ஆரம்ப காலப்பிரிவில் இஸ்லாத்தில் தோன்றிய பொதுவான சமய மரபிற்கு முரணான அம்சங்களைக் கொண்ட (Heretical Sects)பிரிவுகள் பற்றி ஆராய்வதில் கவனம் செலுத்தினர். அல் – அஷ்அரீ (மரணம் கி.பி. 953) அல் – ஜாஹிஸ் (கி.பி. 869) நவ் பக்தி (கி.பி. 912) இப்னு ஹஸம் (கி.பி. 1064) யாகூபி (கி.பி. 889) மல் மஸூதி (கி.பி. 956) ஆகியோர் இஸ்லாத்தில் தோன்றிய பிரிவுகள், பிற பண்பாடுகள், மதங்கள் பற்றி ஆராய்வதில் ஆர்வங்காட்டினார். இவர்களுள், ‘அல்-பஸ்ல் பில் மிலல் வல் அஹ்வா உன் நிஹல்’ என்னும் நூலை எழுதிய ஹஸம், மதங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வின் முன்னோடியாக விளங்குகின்றார். (Honour of being the first scholar in the field of Comparative Religion) எனப் பேராசிரியர் ஹிட்டி குறிப்பிடுகின்றார்.1

இத்தகைய ஓர் அறிவுப் பாரம்பரியத்தின் வாரிசாகவே அல் – பெரூனி தோன்றினார். அல் – பெரூனியின் ஆர்வம் குறிப்பாக இந்திய பண்பாடு, ஹிந்து மதம், அதனோடு தொடர்புடைய ஆசாரங்கள், பழக்கவழக்கங்கள், வேத நூல்கள் பற்றியதாகவே அமைந்தது. அல் – பெரூனியின் ‘கிதாப் லிதஹ்கீக் மாலில் ஹிந்த்’ என்னும் நூலில் இவை பற்றிய சிறந்த பல விளக்கங்களை அளித்துள்ளார். இந்நூலின் முன்னுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

‘எனது நோக்கம் மதம் பற்றிய வாதப்பிரதிவாதங்களில் (Polemics) ஈடுபடுவதன்று. நான் நேரடியாக அவதானித்தவற்றை மிக நேர்மையாக அப்படியே உள்ளவாறு சித்திரிப்பதாகும்.’2

எனவே அல் – பெரூனியின் இந்த விளக்கங்களைப் பொறுத்தளவில், அவருக்குப் பிற்காலத்தில் தோன்றிய மதங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வோடு தொடர்புடைய ஒரு கலையான henomenology யின் சாயல்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வாறு தான் நேரடியாக அவதானித்ததை விளக்கும் போது, அவருக்கு முந்திய காலப்பிரிவில் எழுதப்பட்ட நூல்களில், வெறும் செவிவழிச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, அந்நூலாசிரியர்கள் விளக்கியுள்ள தவறான விளங்கங்களைச் சுட்டிக்காட்டியுள்ள அல் – பெரூனி உண்மையையும், சத்தியத்தையும் அறியும் அறிவுப் பயணத்தை மேற்கொண்டார். அவர் தன்னையே விமர்சனத்துக்கு உள்ளாக்கினார். ‘இந்துக்களின் மதம் பற்றி விளக்கும் போது நான் கூட சிலவேளைகளில் தவறாக விளங்கி அதனை விளக்க இடமுண்டு’ எனக் குறிப்பிடுகின்றார்.

அல் – பெரூனி ஹிந்துக்களின் நம்பிக்கைகள், சடங்குகுள், சம்பிரதாயங்கள் பற்றி சிறந்த விளக்கமொன்றை அளித்துள்ளார். ஹிந்துக்களின் இறைவனைப் பற்றிய கோட்பாடு, மறு பிறப்பு பற்றிய விசுவாசம் ஆகியவற்றை விளக்கும் அவர், இந்தியப் பிராமணர்களின் (Brahamins) மத்தியில் நிலவிய இந்த நம்பிக் கைகளை கிரேக்கர்களின் நம்பிக்கையோடு ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். கிறிஸ்தவ மதத்தின் தோற்றத்திற்கு முன்னர், ஹிந்துக்களின் நம்பிக்கைகள் போன்றே கிரேக்கர்களின் நம்பிக்கையும் அமைந்திருந்தது.

ஹிந்துக்கள் தங்களது நூல்களை ‘ஓம்’ என்னும் வார்த்தையோடு ஆரம்பிப்பார்களென்றும், இது முஸ்லிம்கள் ‘பிஸ்மில்லாஹ்’ (இறைவனது நாமத்தால்) என ஒன்றை ஆரம்பிப்பது போன்றது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.3

ஹிந்துக்கள் மத்தியில் காணப்படும் கடவுள் கொள்கை, திருமணச் சடங்குகள், பிரேதங்களை எரித்தல், எழுத்து முறை, கணிதக் கலை வற்றிய விடயங்களை ஒப்பு நோக்கி அவர் விளக்கியுள்ளார். ஹிந்துக்களைப் போன்றே புராதன கிரேக்கர்களும் இறந்தவர்களின் சடலங்களை எரித்தனர் எனக் குறிப்பிடும் அவர் ஹிந்துக்கள் குறிப்பிடும் ‘இந்திரனின் வில்லை’ பாரசீகரகள் மத்தியில் மரபுவழியாக வழங்கப்பட்டு வரும் ருஸ்துமின் வில்லிற்கு உவமிக்கிறார்.

ஹிந்துக்களின் நம்பிக்கைகள் தத்துவங்களை அவர் ஸம்ப்கிய (Sampkiya)பதஞ்சல் (Batanjal), பகவத்கீதை (Gita) ஆகிய நூல்களை மூலாதாரமாகக் கொண்டு விளக்கியுள்ளார். இந்நூல்களில் சில கருத்துக்களை பிளோட்டோவின் Dialogue ல் காணப்படும் சில கருத்துக்களுக்கு ஒப்பு நோக்கி அவர் விளக்கியுள்ளார். மேலும் ஹிந்துக்களின் சில தத்துவதங்கள் பைபிலுள்ள மத்தேயுவின் கவிசேஷம்லூக்கின் கவிஷேசம் ஆகியவற்றிற்கும் பாரசீகத்திலுள்ள ‘கிதாப் ஈரான் ஷஹ்ரி’யில் காணப்படும் சில கருத்துக்களையும் ஒப்பு நோக்கி விளக்கியுள்ளார். ஹிந்துக்கள் மத்தியில் காணப்படும் அத்வைதக் கோட்பாட்டை சில தீவிரவாதிகளான ஸூபிகளில் காணப்படும் ‘வுஜூத்’ பற்றிய கோட்பாட்டோடும், கிரேக்க நியோ பிளேட்டோனிய தத்துவத்தோடும் ஒப்பு நோக்கி அவர் விளக்குகின்றார்.4

அல்- பெரூனி தனது ஒப்பு நோக்கு முயற்சியில் வெறும் நூல்களில் மட்டும் தங்கியிருக்கவில்லை. மக்களின் வாழ்வின் நிகழ்வுகளையும் தனது ஒப்பு நோக்கு முயற்சிக்கு அடிப்படையாகக் கொண்டார். ஹிந்து மதத்த விளக்குவதில் அவருக்கு ஏற்பட்ட சில சிரமங்களை அவர் குறிப்பிடுகின்றார். நூல்களில் குறிப்பிடப்படும் கருத்துக்களோடு மக்களின் வாழ்விற்கும் இடையில் காணப்படும் இடைவெளியும், சமஸ்கிருத மொழிக்கும் மக்களின் அன்றாட பேச்சு (Dialects) மொழிக்குமிடையில் காணப்படும் வித்தியாசமும் இத்துறையில் பல சிரமங்களைத் தோற்றுவிப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

சமூகத்தின் சாதிகளின் (Caste) தேற்றம் பற்றியும் அல் பெரூனி ஆராய்ந்துள்ளார். மதக்கட்டளைகளின்றி, புராதன அரசர்கள் தங்களது பிரஜைகளை அடிமைப்படுத்தி வைக்கும் முயற்சியே சமூகத்தின் சாதிப்பிரிவினையைத் தோற்றுவித்தது எனக் குறிப்பிடும் அல் – பெரூனி, இதனை விளக்க ஈரானிலும், இந்தியாவிலும் காணப்பட்ட சாதிப்பாகுபாட்டு முறைகளை எடுத்துக்காட்டுகின்றார். ஈரானில் காணப்பட்ட ஏழு சாதிகள் பற்றி அல்-பெரூனி குறிப்பிடுகின்றார். இது மெகஸ்தீனஸ் (Megasthenes) குறிப்பிடும் இந்தியாவில் காணப்பட்ட ஏழு சாதிகளை ஒத்துள்ளது.

அவர் நான்கு சாதிகளின் தோற்றத்தினையும், அவற்றிற்கிடையே காணப்படும் வித்தியாசத்தையும் விளக்குவ தோடு, நான்கு சாதிகளுள் வைஷியரும் (Vaisya) சூத்திரரும் (Sudra) பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நெருங்கி, ஒன்றாகக் கலந்து பழகினர் என கூறுகின்றார். இந்த நான்கு தவிர, ‘அந்தயாஜ’ (Antyaja) என அழைக்கப்பட்ட, எந்த ஒரு தொழிலையும் புரியாத சாதிகள் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.5

பிராமணர்களின் வாழ்க்கை பற்றி அவர் விரிவான விளக்கமொன்றை அளித்துள்ளார். அவர்களின் முக்கிய இரு பிரிவுகள் (Agnihotras, Dikshats) பற்றியும், அவர்களது வாழ்க்கையின் நான்கு பிரிவுகள், பழக்கவழக்கங்கள் பற்றியும் அவர் குறிப்பிடுகின்றார். பிராமணர்களின் கடமைகளாக பக்தி, மருமம் புரிதல், தருமம் பெறுதல், வேதங்களைப் படித்தல், போதித்தல் ஆகியன இருந்தன. வெங்காயம், வெள்ளைப்பூடு ஆகியன அவருக்குத் தடுக்கப்பட்டிருந்தன. ஷத்திரியர் (Kohatriya) வேதங்களை ஓதிப்படித்தனர். ஆனால், போதிக்கவில்லை. புராணங்களின் விதிப்படி நடந்து, அவர்களின் போர்களில் பங்குபற்றினர். வைஷயர் விவசாயிகளாகவும், கால்நடைகளை வளர்ப்போராகவும் தொழில் புரிந்தனர். சூத்திரர் பணியாட்களாக விளங்கினர்.

இந்தியாவில் காணப்பட்ட திருமணச் சடங்குகள் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். பால்ய திருமணங்கள் வழக்கிலிருந்தன. சீதனம் பற்றிய எந்த ஒரு குறிப்பும் காணப்படவில்லை. திருமணத்தின் போது கணவன் மனைவிக்கு, தான் பொருத்தமானது எனக் கருதுகின்ற ஓர் அன்பளிப்பை அளிப்பான். இதனைப் திரும்பப் பெறும் உரிமை அவனுக்கில்லை. ஆனால் மனைவி விரும்பினால் அதனை அவனுக்குக் கொடுத்துவிட முடியும். நான்கு திருமணங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

ஒரு குழந்தையின் சாதி அக்குழந்தையின் தாயின் சாதியைப் பொறுத்தே அமைந்தது எனக்குறிப்பிடும் அல்-பெரூனி, கணவன் இறந்ததும், மனைவி உடன்கட்டை ஏறும் சதி (Sati) என்னும் வழக்கம் பற்றியும் விளக்குகின்றார். ஹிந்துக்களின் பல்வேறு பழக்கவழக்கங்களைப் பற்றிக் குறிப்பிடும் அவர், அவர்கள் மத்தியில் காணப்பட்ட சதுரங்க ஆட்டம் பற்றியும் விளக்கியுள்ளார்.

இந்தியாவில் காணப்பட் எழுத்துமுறை பற்றி விளக்கும் அவர், பல்வேறு வகையான எழுத்து முறைகளையும், அவற்றின் பெயர்களையும் குறிப்பிடுகின்றார். ‘சித்தமெத்ரிகா’ (Sadha Matrika) என்பது மிகப்பிரபல்யமான எழுத்து முறையாகும். கஷ்மீர், மத்யதேஷ் (தற்போதைய உத்தர பிரதேசம்) பகுதிகளிலும் வாரனாஸி (Benares)) யிலும் இது வழக்கிலிருக்கிறது. கஷ்மீரே இந்த எழுத்து முறையின் பிறப்பிடம் என மரபுவழிக் குறிப்புக்கள் உணர்த்துகின்றன. இன்னொரு மரபுவழிக் கதையின் படி கஷ்மீரிலேயே முதன் முதல் வேதங்கள் எழுதப்பட்டன.

எழுதுவதற்குப் பயன்பட்ட சாதனங்கள் பற்றியும் அல்-பெரூனீ குறிப்பிடுகின்றார். இந்தியாவின் வடமத்திய பகுதியில் ‘தூஸ்’ (Tuz) என்னும் மரத்தின் பட்டைகள் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இம்மரப்பட்டையின் மேல்பகுதியில் எண்ணெய் பூசப்பட்டு, அவை கடினமாகவும், வழுவழுப்பாகவும் அமையும் வகையில் ஆக்கப்பட்டன. அவற்றில் எழுதப்பட்ட பின்னர் அத்தகைய பக்கங்கள் புடைவையால் சுற்றப்பட்டு, அதே அளவுள்ள இரண்டு தடித்த அட்டைகள் இரு பகுதியில் வைக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இத்தகைய நூல் ‘புதி’ (Puthi) என அழைக்கப்பட்டது.6

அல் -பெரூனி வேதங்கள் பற்றி மிகச் சிற்நத விளக்கமொன்றை அளித்துள்ளார். வேதங்கள் பிரமாணங்களுக்கு உரியவையாக இருந்தன. அவை பாடல் அமைப்பில் எழுதப்பட்டு கட்டளைகளை, துதிப்பாடல்களை உள்ளடக்கியிருந்தன. அவற்றைப் பாடும் முறைகள் வித்தியாசமாக அமைந்திருந்தன.

வேதங்களுக்கு அடுத்தபடியாக புராணங்கள் விளங்கின பதினெண் புராணங்களாக அமைந்த இவை ரிஷி (Rishi) களினால் இயற்றப்பட்டன. இந்தப் பதினெட்டுப் புராணங்களில் மத்ஸய (Matsya), அதித்வ (Aditva), வாயு (Vayu) புராணங்களின் சில பகுதிகளைத் தனக்குக் காணும் சந்தர்ப்பம் கிடைத்ததாக அல்-பெரூனி குறிப்பிடுகின்றார். வேதங்களிலிருந்து (Vadas) பெறப்பட்ட ஸ்மிருதிகளின் (Smirithi) கட்டளைகளையும், விளக்கங்களையும் இவை உள்ளடக்கியிருந்தன. அல்-பெரூனி ஸ்மிருதிகளை இயற்றிய இருபது நூலாசிரியர்களைக் குறிப்பிடுகின்றார். அத்தோடு பதன்ஜலி (Patanjali), விஷ்னுதர்ம (Vishnu Dharma) ஆகிய வேறு நூல்களையும் குறிப்பிடுகின்றார். அதேநேரத்தில் ஹிந்துக்களின் இந்த நூல்களை விளக்குவதில் அந்நியர் ஒருவர் எதிர்நோக்கும் சிரமங்கள், இடர்பாடுகளையும் அவர் விளக்கியுள்ளார்.

வியாசரின் மகாபாரதம் பற்றியும் அல்-பெரூனி குறிப்பிட்டுள்ளார். ஒரு லட்சம் பாடல்களைக் கொண்டுள்ள இந்நூல், பர்வன் (Parvan) என அழைக்கப்படும் பதினெட்டுப் பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார். இராமாயணம், பகவத்கீதை பற்றிய குறிப்புக்களும் அவரது நூலில் காணப்படுகின்றன. இரா மன் விஷ்னுவின் அவதாரம் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் காணப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அல்-பெரூனி பௌத்த மதம் குறித்தும் அறிந்திருந்தார். ‘புத்த’ என்ற பெயரை அவர் அறிந்திருந்தார். ஆனால், பௌத்தர்களை ‘ஷம்அனிய்யா’ (Shamaniyya) என அவர் அழைக்கின்றார். இந்துக்களைப் போன்றே பௌத்தர்களும் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்களென்றும் இவ்வுலகம் பற்றி அவர்களிடையே வித்தியாசமான கருத்துக்கள் நிலவுவதாகவும் அல்-பெரூனி குறிப்பிடுகின்றார். ஆனால், ‘புத்த’ ‘தர்ம’ ‘ஸங்க’ பற்றிய தெளிவான குறிப்புகள் அவரது நூல்களில் காணப்படவில்லை. பெரும்பாலும் இக்காலப்பிரிவில் பௌத்த மதத்தின் செல்வாக்கு அல்-பெரூனிக்கு பரிச்சயமாக இருந்த பகுதிகளில் குறைந்திருக்கலாமெனவும் எனவே அவருக்கு பௌத்தம் பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்திருக்காதென்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஸொராஸ்திர்யா (Zorastianism) மதம், மனீகிய மதக்கோட்பாடு (Manichacism) பற்றியும் அவர் நீண்ட விளக்கங்களை அளித்துள்ளார். அல்-பெரூனியின் காலப்பகுதியில் கணிசமான அளவு ஸொராஸ்திர்யர் காணப்பட்டிருத்தல் வேண்டும். ஸொராஸ்திர்யப் பிரதேசங்களில் (பாரசீக குராஸானிய) இஸ்லாமிய ஆட்சி பரவினாலும், இஸ்லாம் படிப்படியாகவே இப்பிரதேசங்களில் பரவியது. எனவே, ஸொராஸ்திர்ய மதக் கோட்பாடுகள், பழக்கவழக்கங்கள் பற்றி நேரடியாக அவதானித்து அறியும் வாய்ப்பு அவருக்கு இருந்திருத்தல் வேண்டும். ஸொராஸ்திர்ய மதம் பற்றி சில குறிப்புகளை அளித்துள்ள இரண்டு கிறிஸ்தவர்களை அவர் குறிப்பிடுகின்றார். அவர்களது மத நம்பிக்கைகள், சடங்குகள், திருவிழாக்கள் பற்றிய தகவல்களை அவர் அளித்துள்ளார். மனீகிய மதக்கோட்பாட்டை நிறுவிய மனீ பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார். இறைவனும், பிசாசு (Devil) என்னும் தீய ஆவியும் என்றும் நிலைத்திருக்கும் சக்திகள் என்ற நம்பிக்கையுடைய இருமைவாதிகளே (Dualits) மனீகியா ஆவர். இக்கோட்பாட்டை நிறுவிய மனீ (Mani) பல மதங்கள், தத்துவங்களிலிருந்து பல கோட்பாடுகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றினை ஒன்றிணைத்தே அவரது தத்துவக் கோட்பாட்டை உருவாக்கினார். இந்து, பௌத்த தத்துவங்களிலிருந்து மறுபிறப்புக் கோட்பாட்டையும், கிறிஸ்தவர்களிலிருந்து வேதநூல் பற்றிய கோட்பாட்டையும், யூத, கிறிஸ்தவ சமய மரபிலிருந்து சுவர்க்கம் பற்றிய கோட்பாட்டையும் மனீ பெற்றுக் கொண்டிருக்கலாமென அல்-பெரூனி குறிப்பிடுகின்றார்.

கிரேக்கர்களின் மத நம்பிக்கைகள் பற்றியும், அல்-பெரூனி பல குறிப்புகளை அளித்துள்ளார். பிளோட்டோ, சோக்கிரடீஸ், அரிஸ்டோட்டல், தொலமி, கலன் (Galen) போன்ற கிரேக்க சிந்தனையாளர்கள் பற்றிய குறிப்புகள் இவரது நூல்களில் காணப்படுகின்றன. புராதன கிரேக்க மதம், சிலைவணக்கம், இறைவனுக்கு மனிதப் பண்பினை அளிக்கும் கொள்கை (Anthropomorphism) ஆகியவற்றை உள்ளடக்கியிருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார். ஹிந்துக்களின் சட்டங்கள், நியாயங்கள் ரிஷிகள் மூலமாகப் பெறப்பட்டது போல, கிரேக்கர்களின் சட்டங்களும், மரபுகளும் பைதோகரஸ் (Pythogarus) மைனோஸ் (Minos) போன்ற   ஞானிகள் மூலம் பெறப்பட்டதாக அவர்கள் கருதுகின்றனர். யூத மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய விளக்கங்களையும் அவர் அளித்துள்ளார். பழைய ஆககம் பற்றிய குறிப்புகள் அவரது நூல்களில் காணப்படுகின்றன. ஜெரூஸலம் யூதர்களின் மதப்பாரம்பரியத்தில் வகிக்கும் முக்கியத்துவம், சனிக்கிழமையை ஓய்வு நாளாக கருதும் அவர்களது Sabbath பற்றிய கோட்பாடு ஆகியவற்றையும் அவர் விளக்கியுள்ளார்.

கிறிஸ்தவ மதம், அதோடு தொடர்புடைய விசுவாசக் கோட்பாடுகள், உட்பிரிவுகள் பற்றிய அழகிய விளக்கமொன்றை அல்-பெரூனி அளித்துள்ளார். மத்தேயுவின் சுவிசேஷம், லூக்கின் சுவிசேஷம் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கோட்பாடான ‘திரித்துவக் கோட்பாடு’ (Trinity) பற்றி விளக்கும் போது ஹிந்துக்களின் முதற் காரணமான பிரஹ்ம, இரண்டாவது சக்தியான நாராயண (Narayana) மூன்றாவது சக்தியான ருத்ர (Ridra) பற்றிய கோட்பாடானது, பிதா (Father) குமரர் ; (Son) பரிசுத்த ஆவி (Holy Ghost) என்ற கிறிஸ்தவ திரித்துவக் கோட்பாடோடு ஒத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

பொதுவாக நோக்குமிடத்து அல்-பெரூனி மதங்கள் பற்றிய ஒப்பீட்டு முயற்சியின் முன்னோர்களின் ஒருவராகக் காணப்படுகின்றார். எத்தகைய விருப்பு வெறுப்புமின்றி நடுநிலை நின்று, தான் அவதானித்தவற்றையும், அறிந்தவற்றையும் மிக நுட்பமாக அவர் பதிவு செய்துள்ளார். மிக அண்மைக்காலம் வரை இத்தகைய பாரபட்சமற்ற ஒரு நோக்கினை ஒப்பீட்டு ஆய்வு முயற்சியில் நாம் காணமுடியாது என பேராசிரியர் ஜேப்ரீ, அல்-பெரூனி பற்றி மிகச் சிறந்த முறையில் மதிப்பீடு செய்கிறார்.

அல்-பெரூனி ஒரு அறிஞர் என்ற நிலைக்கு அப்பாற்பட்டவர். அவர் நீதியின் வழியில் நின்று செயல்பட்ட ஒரு மனிதர். அவரது மதத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த நம்பிக்கையானது ஏனைய சமூகத்தவரின் பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் குறைவாக நோக்கி எடைபோடும் குறுகிய நோக்கை அவரில் தோற்றுவிக்கவில்லை. அவரது காலப்பிரிவில் மிக, அகலுலக நோக்குடைய சர்வதேசிய அறிஞராக அவர் ஒருவர் மட்டுமே விளங்கினார் எனப் பேராசிரியர் ஸூனித குமார் சட்டர்ஜி, அல்-பெரூனியை நோக்குகின்றார்.

இஸ்லாமியப் பண்பாடு தோற்றுவித்த பரந்த மனப்பான்மை, பரஸ்பர நல்லுறுவு, பிறறைப் புரிந்து வாழும் தன்மை, அகலுலக நோக்கு ஆகியவற்றின் பிரதிபலிப்பே அல்-பெரூனியின் ஆளுமையும், அறிவுப்பங்களிப்புமாகும்.

References

  1. Philip K. Hitti, History of Arabs, London 1960 – p.558.
  2. Al Beruni, Tahqiq Malik Hind – p. 8.
  3. Al Beruni, Tahqiq, op.cit. – p.173
  4. Gunidar Kaur, Al Beruni, An Earl Student of Comparative Religions, Islamic Quarterly – Colume No, 2, 1982 – p. 61.
  5. Hakim Sa’id and Dr. Zahid Khan op. cit. – p. 52.
  6. Ibid 114

*       Hakim Sa’id and Dr. Zahid Khan Al Beruni, His Times, Life and Works Karachi 1981

*       Sunit Kumar Chattergi, Al Beruni and Sanskrit in Al Beruni Commemoration volume           Calcutta, 1981.

*       A. Jefferey, Al Beruni’s Contribution to Comparative Religion in Commemoration –            Vol.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *