இப்னு துபைலின் ‘ஹய் இப்னு யக்ளான்’ தத்துவ நாவல்

முஸ்லிம் ஸ்பெயினின் தத்துவஞானிகள் வரிசையில்,அபூபக்கர் இப்னு துபைல் சிறப்பிடம் பெறுகின்றார்.(மரணம் கி.பி 1185) மருத்துவம், தத்துவம், கணிதம், வானவியல் போன்ற பலதுறைகளில் புலமை பெற்ற இப்னு துபைல்  ஸ்பெயினில் மவஹித் ஆட்சியாளர் அபூ யாகூப் யூஸுபின் அரண்மனை  மருத்துவராகவும், நீதிபதியாகவும்  பணிபுரிந்தார். அவரது வாழ்வு பற்றி மிகக் குறைவான தகவல்களே உள்ளன. வானவியல், மருத்துவம், தத்துவம் பற்றி பல நூல்களை அவர் எழுதினார் என்ற குறிப்புகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் அவை ஒன்றும் எமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ‘ஹய் இப்னு யக்ளான்’ என்னும் அவரது தத்துவ நாவல் காரணமாகவே அவரது புகழ் பரவக் காரணமாக அமைந்தது. மத்திய காலப் பிரிவில் தோன்றிய மிகச் சிறந்த நூல்களில் ஒன்றாக இதனை ஜோர்ஜ் ஸகர்டன்  குறிப்பிடுகின்றார்.(1)
அறநெறிப் போதனைகளையும் ஆழமான தத்துவக் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாக உருவகக் கதைகளைப் பயன்படுத்தும் மரபு பல்வேறு இலக்கியங்களில் காணப்படுகின்றது. இப்னு துபைல் தனது தத்துவக் கருத்துக்களை வெளியிடுவதற்கு ‘ஹய் இப்னு யக்ளான்| என்னும் கதையை உருவாக்கினார். பாத்திரம், பாத்திர வளர்ச்சியைப்  பொருத்தளவில் இதனை  நவீன நாவலுக்கு உவமிக்கலாம்.
இப்னு துபைலின் நாவலின் நோக்கம் பற்றி வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகின்றன. கலாநிதி முஹம்மத்  கல்லாப் புவியில் மனிதனின் தோற்றம் பற்றி  அறிவியல் ரீதியான விளக்கம் அளிப்பதையே இந்நாவல் நோக்கமாகக் கொண்டுள்ளது எனக் கருதுகின்றார்.(2) கலாநிதி அப்துல் ஹலீம் மஹ்மூத் ஒரு ஸுபியின் ஆத்மீக அனுபவங்களை வெளியிடும் நோக்கிலேயே இந்த தத்துவ நாவலை இப்னு துபைல்எழுதியுள்ளார் எனக் கூறுகின்றார்.
ஹய் இப்னு யக்ளானின் நோக்கம் பற்றி முஹம்மத் யூனுஸ் பரங்கி மஹல்லி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:(3)
‘தத்துவஞானம், ஆத்மீகவியல்  போன்றே மதமும் மனித முன்னேற்றத்திற்கு மிக அவசியமானது என்பதை தத்துவ ஞானியான ஹய், ஆத்மஞானியான அஸ்அல், ஸல்மான் ஆகிய மூன்று பாத்திரங்களையும் ஒன்றினைத்து இப்னு துபைல் விளக்கியுள்ளார். தத்துவ ஞானத்தை உரிய முறையில் புரிந்து கொண்டால் அது மதத்தோடு ஒன்றுபடுவதையும் உண்மை யில் மதத்தினதும் தத்துஞானத்தினதும், புறம் சார்ந்த அம்சங்களும், உள்ளார்ந்த அம்சங்களும்  ஒவ்வொரு  தனிமனிதனினதும்  ஆற்றலுக்கேற்ப வழங்கப்பட்ட நித்திய உணர்வு கள் வெளிப்படுத்தும் வழிகளாகும் என விளக்குவதே இப்னு துபைலின் நோக்கமாகும்.
இந்து சமுத்திரத்தில் மனித சஞ்சாரமற்ற ஒரு தீவு இப்னு துபைலின் நாவலின் களமாக அமைகின்றது. இந்த நாவலின் பிரதான பாத்திரமாக ஹய் விளங்குகின்றார்.  ஒரு குழந்தையின் நிலையிலிருந்து  படிமுறையாக ஹய்யின் பாத்திர வளர்ச்சி விளக்கப்படுகின்றது. யக்ளான் என்பாரை இரகசியமாகத் திருமணம் முடித்த ஒரு இளவரசி அவர்களது உறவு மூலமாகக் கிடைத்த  குழந்தையைக் கடலில் ஒரு படகில்  மிதக்க விடுகின்றார். அப்படகு கடல் அலைகளால்  அடித்துச் செல்லப்பட்டு ஒரு தீவின் கரையை அடைகின்றது. மனித சஞ்சாரமற்ற அத்தீவில் ஒதுங்கியிருந்த படகில் இருந்த அக்குழந்தையை, தனது குட்டியை இழந்திருந்த ஒரு பெண்மான் காணுகின்றது. அது பாலூட்டி வளர்க்கின்றது. அக்குழந்தை மீது அன்பையும் பாசத்தையும் சொரிந்து இழந்த குட்டிக்கு இணையாக அக்குழந்தையைக் கருதுகின்றது.
குழந்தை சிறிது உடல் வளர்ச்சியைக் கண்டதும் அதன் புலன்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன. தனது சூழலை அவதானிக்கின்றது. தான் நிர்வாணமாக இருப்பதையும், ஏனைய உயிரினங்களிலிருந்து தான் வித்தியாசமாக இருப்பதையும், இப்போது ஏழு வயது அடைந்திருந்த ‘ஹய்| என்னும் அச்சிறுவன் உணர்கிறான். வெட்கமும்இ நாணமும் அவனில் தோன்றி ஒழுக்கப் பெறுமானங்களின் ஆரம்ப உணர்வுகள் அவனில் செயல்பட ஆரம்பிக்கின்றன. இலைகுழைகளைப் பயன்படுத்தி தனது மானத்தை மறைக்கிறான். அவனைப் பாலூட்டி வளர்த்து  இணைபிரியாது தோழமையில் இணைந்திருந்த மான்  இறந்துவிடுகின்றது.  ஒரு நாள் திடீரென அம்மான் அசைவும், இயக்கமும் உணர்வுமற்று இருப்பதை  அவதானிக்கிறான். அதன் உடலை அறுத்து அதன் உள் அவயவங்களைப் பரிசோதனை செய்கிறான். அதன் உடலின் உஷ்ணம் படிப்படியாகக் குறைந்து வருவதைக் கண்டான.; மனிதனின்; உடலின் அசைவுக்கும் இயக்கத்திற்கும்  உணர்வுகளுக்கும் காரணமாக உடலில் அமைந்த ஏதோ ஒரு மூலப்பொருள் அதனை விட்டுப் பிரிந்ததே அதன் இறப்புக்குக் காரணம் என்ற முடிவுக்கு வருகிறான். இங்கு புலன்களின்; அவதானம்இ பரிசீலனை மூலம் தனது அறிவைப் பெறுகின்றார்.
ஹய்யின் ஆளுமை  படிப்படியாக வளர்ச்சியடைந்தது. ஒரு நாள்  இரண்டு மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்ததன் காரணமாக நெருப்புத் தோன்றுகிறது.  நெருப்பு அவரது இரண்டாவது முக்கிய கண்டுபிடிப்பாக அமைகிறது. அதனை ஆச்சரியமாக நோக்குகின்றார். அந்த நெருப்பை எடுத்துவந்து தனது குகையில் எரித்து  குளிர்காய்கிறார். தான் வேட்டையாடிய மிருகங்களின் இறைச்சியில் அந்த நெருப்பை விட்டு வேகவைத்து உணவாகக் கொள்கிறார்.
இவ்வாறு படிப்படியாக அவரது அவதானம், பரிசீலனை அனுபவத்தின் களம் விசாலமடைகின்றது. புலன்கள் துடிப்புடன் செயல்பட ஆரம்பிக்கின்றன. அவர் இப்போது தனது தேவைகளைப் பூர்த்திசெய்ய உபகரணங்களைக் கண்டு பிடிக்கிறார். தாவரங்களையும் மிருகங்களையும் ஒப்பு நோக்குகிறார். அவற்றின் பல்வேறு படித்தரங்கள், நிலைகள் பற்றி  அறிகின்றார்.
பறவைகளின் கூடுகளை அவதானித்து தானும் மரங்களால் செய்யப்பட்ட ஒரு வீட்டை  அமைத்துக் கொள்கிறார். மிருகங்கள், பறவைகளை வளர்த்துத் தனது தேவைகளைப்   பூர்திசெய்துகொள்கின்றார்.
அவருக்கு இப்பொது இருபத்தெட்டு வயதாகியது. சிந்தனை இப்போது  துடிப்புடன் செயல்பட ஆரம்பிக்கிறது. தன்னைச் சூழ உள்ள வான்வெளி, நட்சத்திரங்கள், இரவு பகல் மாற்றம், கனிப் பொருள் உலகம், தாவர உலகம், மிருக உலகம், உடல், உள்ளம், அவற்றை இயங்க வைக்கும்   பொருள் பற்றி யெல்லாம் படிப்படியாக அறிவு முதிர்ச்சி பெறுகின்றார். ஹய் இப்னு யக்ளானின்  இந்த ஆளுமை வளர்ச்சி மிகச் சிறப்பாக இப்னு துபைலினால் விளக்கப்படுகிறது.
படைப்புகள் பற்றி மிக அழகாகப் பரிசீலனை செய்த ஹய் இப்போது காரண காரியத் தெளிவுகள் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறார். பிரபஞ்சத்தில் ஓர் ஒழுங்கும் நியதியும் படைப்புக்களில்  ஒரு சீர்மையும் இருப்பதை அவர் காணுகிறார்.  இப்பிரபஞ்சம் இயற்கையாகவே தோன்றியதா அல்லது அவை பற்றி அனைத்து ஞானமும் அறிவும் பொதிந்த ஒரு சக்தியால் இது உருவாகியுள்ளதா என்ற வினா அவருள் ஏற்படுகின்றது. நீண்ட சிந்தனைப் போராட்டமும் அவதானத்தினதும் பகுப்பாய்வினதும் பின்னர் இந்த பிரபஞ்சம்இ அதன் பேரற்புதமான அமைப்பும் செயல்பாடும்  ஒழுங்கும் இயற்கையாகத்  தோன்றியிருக்க முடியாதென்றும்இ எனவே  அதனைப் படைத்த ஒருவன் இருத்தல் வேண்டும் என்ற  உறுதியான  முடிவுக்கு அவர் வருகின்றார்.
மனித சஞ்சாரமற்ற அத்தீவில் எவரது துணையுமின்றி, தனது புலன்கள், அவதானம், பகுத்தறிவு சிந்தனை என்பவற்றைப்  பயன்படுத்தி இறைவனின் இருப்பு பற்றிய இந்த முடிவுக்கு ஹய் இப்னு யக்ளான் வந்ததை விளக்குவதன் மூலம் மனிதனில் இயற்கையாகவே இறைவனின் இருப்பு பற்றிய  அறிவைப் பெறும்  இயற்கைத் தன்மை உள்ளது என்பதை இப்னு துபைல் விளக்குகிறார்.
இறைவனின் இருப்பு பற்றிய அறிவை அவர் பெற்றதும் இந்த அறிவு அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? அதனை எவ்வாறு பெற முடிந்தது என்ற வினா அவருக்குள் தோன்றுகின்றது. இந்த அறிவை தனது புலன்கள் மூலம் பெற முடியாது என்பதையும், புலன்கள்  சடப் பொருள்கள் பற்றிய அறிவை மட்டுமே பெற முடியும் என்பதையும் அவர் உணர்ந்தார். அவரது கற்பனைச் சக்தியின்  மூலமும் அவர் இந்த அறிவைப் பெற்றிருக்க முடியாது. ஏனெனில் அது  நீளம்,அகலம், ஆழம் ஆகிய  முப்பரிமாணங்களுக்கு உட்பட்டவைகளை மட்டுமே கிரகிக்க முடியும் என்பது  தெளிவாகியது. அதுவும் சடத்தோடு தொடர்புடையது எனபதும்  அவருக்குத் தெளிவாகியது. எனவே அவர்  சடத்திற்கும் புலன் களுக்கும் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட, ஆனால் தனக்குள் அமைந்திருக்கும் ஏதோ ஒரு  நுட்பமான ஓர் உணர்வு சக்தியின் மூலம் அனைத்துப்  படைப்பிற்கும் காரணமான தன்னில்  தானாகவே நிலைத்திருக்கும் (வாஜிபுல் வுஜுத்) அந்த மாபெரும் வல்லமை மிக்க  சக்தியைப் பற்றி அறிவைப் பெற முடிந்தது என்ற முடிவுக்கு அவர்  வருகின்றார்.
அனைத்துக்கும் மூலமான இந்த தெய்வீக சத்திய மெய்ப் பொருள் பற்றிய அறிவு அவரில் தோன்றியதால் அவரது ஆளுமையில்  ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. இப்போது படிப்படியாக அவரது ஆளுமையில் ஒரு மாற்றம் நிகழ ஆரம்பித்தது.  பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு, அதன் செயல்பாட்டுக்கு  மூல காரண கர்த்தாவான  இறைவனைப் பற்றியும் அவனது படைப்புக்கள் பற்றி  அவதானித்து அவனது மாட்சிமை பற்றி சிந்திப்பது அவரது உள்ளத்தில் ஓர்  விவரிக்க முடியாத மனநிறைவையும் அமைதியையும் ஏற்படுத்தியது. நீண்ட பொழுதுகளைத் தனிமையிலும் சிந்தனையிலும் தியானத்திலும் கழித்தார்.  தியானம், சிந்தனையிதும் பிரத்தியட்ச சட உலகிற்கு உள்ளம் மீண்டபோது அதில் சலிப்படைந்தார். மீண்டும் அவர் தியான உலகுக்கு  மீண்டார். இவ்வாறு மனித சஞ்சாரமற்ற அந்த தீவில் அமைதியான சூழலில் நீண்ட கால தேடலின் முற்றுப் பேறாக அவர் பெற்ற  மனத் தெளிவினதும் அறிவினதும்  விளைவாக அவர் பெற்ற சத்தியத்தின் ஒளியில் தியானத்திலும் இறை சிந்தனையிலும்  நிறைவும் கண்டு  அமைதியான ஒரு வாழ்வை மேற்கொண்டிருந்த நிலையில் சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடைபெறுகின்றது.
ஹய் இப்னு யக்ளான்  வாழ்ந்த தீவுக்கு அண்மையில் இன்னொரு தீவு காணப்பட்டது. அல்லாஹ்வால் மனித  சமூகத்திற்கு வழிகாட்டுவதற்கு அனுப்பப்பட்ட  இறைதூதர்களின் போதனைகள் அங்கு பரவியிருந்தது.  அந்த  தீவில் பரவிய இறை மார்க்கத்தை அந்நாட்டு மன்னன் முதல் மக்கள்வரை பின்பற்றினர். முறையே ‘ஸல்மான்|, ‘அஸ்அல்| என்னும் பெயருடைய இரு இளைஞர்கள் அத்தீவில் வாழ்ந்தனர். அவர்கள்  இருவரும்  தீவில் பின் பற்றப்பட்ட மார்க்கத்தைக் கடைப்பிடித்து அதன் போதனைகளின் நெறி முறைகளைப் பின்பற்றி வாழ்ந்தனர். ஆனால் அவர்கள் இருவரது  ஆளுமையும் வித்தியாசமாக அமைந்திருந்தன. ‘அஸ்அல்| சன்மார்க்க போதனைகள் கருத்துக்கள் கோட்பாடுகளை வெறுமனே மேலோட்டமாகத் தெரிந்து கொள் வதில் திருப்தியடையவில்லை. அவற்றில் பொதிந்துள்ள ஆத்மார்த்த நுட்பங்கள், தத்துவங்களை ஆழமாக விசாரணை செய்யும் உளப்பண்பைப் பெற்றிருந்தார். ஆனால் ஸல்மானோ இதற்கு முற்றிலும் வித்தியாசமான தன்மையைக் கொண்டிருந்தார். அவர் சன்மார்க்கத்தின் போதனைகள், கோட்பாடுகள், கிரியைகளின் வெளிப்படையான அம்சங்கள் மட்டும் தெரிந்துகொள்வதிலும் பின்பற்றுவதிலும் திருப்தியடைந்தார். அவற்றில் பொதிந்துள்ள ஆழமான தத்துவங்களைத் தெரிந்து கொள்வது பற்றி  ஆர்வமும், தேடலும்  அவரில் காணப்படாதது மட்டுமன்றி, அதனை அவர்  தவிர்க்கும்  மனப்பான்மை கொண்டவ ராகவே காணப்பட்டார். மேலோட்டமாக அவற்றை ஏற்றுக்கொண்டு பின்பற்றும் தன்மை ஸல்மானில் காணப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் உறுதியான விசுவாசம் படைத்தவர் களாக தங்களது மனோ இச்சையின் தூண்டுதல்களுக்கு எதிராகப் போராடி  உளப் பரிசுத்தத்தைப் பாதுகாப்பதில் ஈடுபாடு கொண்டோராகக் காணப்பட்டனர்.
அண்மையிலுள்ள மனித சஞ்சாரமற்ற தீவைப் பற்றிக் கேள்வியுற்ற அஸ்அல் தனது எஞ்சிய காலத்தை அத்தீவில் அமைதியான சூழலில் வணக்கத்திலும் தியானத்திலும் கழிக்க அங்கு செல்வதற்குத் தீர்மானித்தார். அத்தீவின் ஏகாந்த சூழ்நிலையில் வாழும் ‘ஹய்| பற்றி அவர் எதுவும் அறிந்திருக்கவில்லை.
ஒரு நாள் அத்தீவில் ஒரு மனிதர் காணப்படுவதை தூரத்திலிருந்து அஸ்அல் அவதானித்தார். ஆனால் அந்த மனிதரின் அமைதியைக் குலைக்க அவர்; விரும்பவில்லை. இந்த விசித்திர அந்நிய மனிதரைக் கண்ட ஹய் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் அவரது கண்ணிலிருந்து மறைந்துவிட்டார். இறுதியில் அவர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. அவர்களது நட்பும் தோழமையும் வளர்ந்தது. அஸ்அல் தனது தோழனான ஹய்யுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஹய் தனது அனுவங்களை, குறிப்பாக ஆத்மீக அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிட்டார். இது அஸ்அலுக்கு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட வைத்தது. சன்மார்க்கத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் பலவற்றை ஹய் தனது ஆத்மிக அனுபவங்கள்  மூலமாகப் பெற்றுள்ளதை  அவர் அறிந்துகொண்டார். அதே நேரம் அஸ்அல் குறிப்பிட்ட  இறைவேத வெளிப்பாட் டோடு தொடர்புடைய உண்மைகள்  கிரியை கள் அனைத்தும், தான் ஆத்மீக ரீதியாகப் பெற்ற அறிவு அனுபவங்களோடு ஒத்திருப்பதையும் அவதானித்தார்.
ஹய்யின் உள்ளத்தில் இப்போது இரண்டு வினாக்கள்  தோன்றி அவரது மனதை அலைக்கழித்தது. இறைவனின் தன்மைகள், மறைவான உலகு பற்றிய விடயங்களை நேரடியாக விளக்காமல் ஏன் இறைவனினதும் இறைதூதரினதும்  போதனைகள் உவமானங்களையும் உருவகங்களையும்  கையாளுகின்றது என்பது ஒரு வினாவாகும்.
சன்மார்க்கம் ஏன் சில கடமைகளையும் கிரியைகளையும் விதித்துள்ளது? மக்களுக்கு உலக வாழ்வின் இன்பத்தில் திளைக்கும் வகையில் ஏன் உணவையும், உடல் தேவைகளைப்  பூர்த்தி செய்வதையும்  அனுமதித்துள்ளது என்பது அடுத்த வினாவாகும்.
அனைத்து மனிதர்களும் ஏதோ சிந்தனைத் தரத்திலும், ஆத்மிகப் படித்தரத்திலும் உள்ளவர்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே ஹய் இந்த வகையில் சிந்தித்ததாக இப்னு துபைல் குறிப்பிடுகின்றார். ஆனால்  பொது மக்களின் சிந்தனைத்தரம் மிக சாதாரண மட்டத்திலேயே உள்ளது என்பதை அறிந்து விளங்குவதற்கும் ஹய் இப்னு யக்ளானுக்கு நீண்ட காலம் எடுக்கவில்லை.
சாதாரண சிந்தனைத் தரத்திலுள்ள சராசரி  மனிதர் மீது கருணையும் அனுதாபமும் அவருக்கு ஏற்பட்டது. தானும் அஸ்அலும் கண்டறிந்த உண்மைகளை அவர்களுக்கும் போதித்து அவர்களது சிந்தனைத் தரத்தை உயர்வடையச் செய்யும் ஆர்வம் ஆவருக்கு ஏற்பட்டது. அவர் தனது இந்தக் கருத்தை அஸ்அலுக்கு வெளியிடவே அவரும் இறுதியில் இதற்கு இணங்கினார். எனவே அவர்கள் இருவரும் அஸ்அலின் பிறந்தகமான அண்மையிலுள்ள தீவுக்குச் சென்றனர்.
அஸ்அல் தனது நண்பரான  ஹய்யை அவரது தோழர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.  அவரது நண்பன் ஸல்மான்  அத்தீவின் தலைமைப் பதவியை அடைந்திருந்தார். எனவே ஹய் தான் கண்டறிந்த உண்மைகள், பெற்ற அனுபவங்களை அவருக்குப் போதிக்க ஆரம்பித்தார். ஆனால்  சன்மார்க்கத்தின் விடயங்கள் பற்றி மட்டுமே மேலோட்டமாக அறிவதில் திருப்தியடைந்த ஸல்மான்  ஹய்யின் சன்மார்க்க விடயங்களோடு தொடர்புடைய உள்ளார்ந்த ஆத்மீக ரீதியான விடயங்கள் பற்றி அறிவதில் ஆர்வம்காட்டவில்லை.  அத்தீவில் வாழ்ந்த, தங்களது நாளாந்த வாழ்வின் விவகாரங்கள், பொழுதுபோக்குகளில் ஈடுபட்டிருந்த சாதாரண சராசரி மனிதர்களும் ஹய்யின் விடயங்களில் ஆர்வம் காட்டவில்லை. விசாரணை உள்ளமும், விடயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் அவர்களில் காணப்படவில்லை.  தான் பெற்ற அறிவையும், அனுபவங்களையும் அவர்களுக்கு வழங்கி அவர்களது சிந்தனைத்  தரத்தையும், ஆத்மிக நிலையையும் உயர்த்த முயற்சிப்பது எத்தகைய  பயனையும் அளிக்காது என்பதை ஹய் உணர்ந்தார்.
வேதநூல் இத்தகையயவிற்கு அவர்கள் விளங்கும் மொழியில் பேசுவதற்கும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உதாரணங்கள், உருவகங்களைக்  கையாளு வதற்குமான காரணத்தை ஹய் இப்போது விளங்கிக்கொண்டார். வேத நூலில் பொதிந்துள்ள  மறைவான ஆழமான கருத்துக்களை  விளங்கிக்கொள்ளச் செய்வதற்கு, அவரது நாட்டில் வாழ்ந்த சராசரி மக்களுக்கு அறிவூட்டியதானது தனது தவறு என்பதை ஏற்றுக்கொண்டு, ஹய் நாட்டின் தலைவர் ஸல்மானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவர்கள் வாழ்ந்த விதமே  தங்களது சராசரி வாழ்வை மேற்கொள்ளும்படியும், ஷரீஆவின் விதிமுறைகளைப் பேணி  வாழும்படியும்  அவர்களைக் கேட்டுக்கொள்வதே அவரது  பிரியாவிடைச் செய்தியாக அமைந்தது.
சாதாரண சராசரி மனிதர்கள் பின்பற்றுவதற்கு இதுவே பாதுகாப்பான வழியாகும் என்பதையும் அவர்கள் அப்பாதையிலிருந்து விலகிவிட்டால்  இழப்பையும்  நஷ்டத்தையுமே அடைவர்கள் என்பதையும் ஹய்யும் அஸ்அலும் உணர்ந்தனர். கவலையும் வேதனையும் நிறைந்த உள்ளத்துடன் அவர்கள் இருவரும் ஹய் வாழ்ந்த தீவுக்குத் திரும்பினர். அவர்கள் அந்த தீவில் அமைதியான, ஏகாந்த சூழ்நிலையில் அவர்களது வணக்கத்தையும் தியானத்தையும் தொடர்ந்தனர்.  சன்மார்க்கப் போதனைகள் அனைவருக்கும்  பொதுவானது என்பதையும் அதன் ஆழமான விளக்கங்களைப் பெறும்  தன்மையும் ஆற்றலும் சிந்தனையிலும் ஆத்மீகத்திலும் உயர் நிலையில் உள்ளவர்களுக்கு உரியது என்பதை அவர்கள் இருவரினதும் அனுபவம் உணர்த்தியது.

மத்தியகாலப் பிரிவில் தோன்றிய மிகச் சிறந்த நூல்களுள் ஒன்றாகக் கருதப்படும்  இப்னு துபைலின் ஹய் இப்னு யக்ளான் பல்வேறு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளது. கி.பி. 1349ல் மோஸஸ் பென் ஜோஷுஆ அதனை ஹிப்ரூ மொழியில்  பெயர்த்து விரிவுரையும் எழுதினார். 1671ல் எட்வட் பொகொக் அதனை லத்தீன் மொழியில் பெயர்த்தார். அதனைத் தொடர்ந்து இந்நூல் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டது. 1672ல் டச்சு மொழியிலும் 1920ல் ரஷ்ய மொழியிலும் 1934ல் ஸ்பானிய மொழியிலும் அது பெயர்க்கப்பட்டது. 1634இ , 1686, 1708 ஆகிய காலப் பிரிவுகளில் மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.
ஐரோப்பிய தத்துவ வளர்ச்சியில் இந்நூல் கணிசமான செல்வாக்கைச் செலுத் தியதாக பொதுவாகக் கருதப்படுகின்றது. புகழ்பெற்ற ஜெர்மனிய தத்து வஞானியான லிப்னிஸ் (1646-1716) இப்னு துபைலின் நூலை லத்தீன் மொழியில் படித்ததுடன் இப்னு துபைலின் தத்துவக் கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்டார். டனியல் டபோவின் ரொபின் ஸன்  குரூஸோ என்னும் நாவலிற்கான முக்கிய கருப்பொருளை அவர் இப்னு துபைலின் நாவலிலிருந்து  பெற்றுக் கொண்டதாக இது தொடர்பான  ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன.
இப்னு துபைலின் நாவலையும் அவரின் பாத்திரப் படைப்புக்களையும்  விளங்குவதற்கு அது எழுதப்பட்ட  காலப் பிரிவில் முஸ்லிம் உலகில் நிலவிய முக்கிய கருத்துக்கள், தத்துவ சிந்தனைகளை நாம் ஓரளவு  தெரிந்திருத்தல் அவசியமாகும். இப்னு துபைலின் காலப்பிரிவு இஸ்லாமிய சிந்தனைத் துறையில் ஒரு முக்கிய காலகட்டமாக விளங்கியது. இக்காலப் பிரிவில் முஸ்லிம் உலகில் மூன்று வகையான சிந்தனைப் பிரிவுகளிடையே முரண்பாடு நிலவியது. இஸ்லாமிய சன்மார்க்கக் கோட்பாடுகளை குர்ஆனினதும் ஸுன்னாவினதும் அடிப்படையில் விளக்க முனைந்த மார்க்க அறிஞர்கள் ஒரு பிரிவினராகக் காணப்பட்டனர். இவர்கள் நம்பிக்கைக் கோட்பாடுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு முழுக்க அதனைப் பின்பற்றினர். அவற்றை அவர்கள்  எத்தகைய விசாரணைக்கும் உட்படுத்தவில்லை.
இன்னொரு பக்கம் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த இறைதூதிற்கும், பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த தத்துவஞானத்திற்கும் இடையில் இணைப்பைக் காண முற்பட்ட தத்துவஞானிகள் காணப்பட்டனர். இவர்கள் பகுத்தறிவுக்கும், சிந்தனைக்கும், பகுப்பாய்வுக்கும் முன்னுரிமை  அளித்தனர். மூன்றாவதாக ஒருவன் தனது உள்ளத்தைத்த் தூய்மைப்படுத்தி  அதனடிப் படையில் அடையும் தெய்வீக உள்ளொளியின்  அடியாகப் பெறும் ஆத்மீக அறிவியலில் நம்பிக்கை கொண்ட  ஸூபிகள் என்னும்; ஆத்ம ஞானிகளாக இருந்தனர். வெளிப்படையாகவும், மேலெழுந்த வாரியாகவும் நோக்குமிடத்து ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும் இந்த மூன்று சிந்தனைப் போக்குகளிடையே ஒருமைப்பாட்டைக் காணும் முயற்சியே இப்னு துபைலின் ஹய் இப்னு யக்ளான் என்னும் தத்துவநூலாகும்.
ஒன்றுக்கொன்று அடுத்தாகவுள்ள இரு தீவுகளில் நிகழும் சம்பவங்களை வைத்து மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி நிகழும் சம்பவங்களைத் தழுவி, குறிப்பாக ‘ஹய்’என்னும் பாத்திரத்தினூடாக அவரது தத்துவக் கருத்துக்களைப் புலப்படுத்தும் வகையில் இப்னு துபைல்  இந்நாவலை அமைத்துள்ளார். இந்த  நாவலின் முக்கிய கதாபாத்திரங்களாக ‘ஹய்’ விளங்குகின்றார். ஏனைய கதாபாத்திரங்களாக ‘அப்ஸலும் ஸல்மானும்| விளங்குகின்றனர்.
அவதானம், சிந்தனை, பகுப்பாய்வைப் பயன்படுத்தி, பற்றற்ற வாழ்வைக்  கடைப் பிடித்து, இறைவனின் புறத்திலிருந்து  மனத் தெளிவையும், அறிவையும் பெறும் தத்துவ ஞானியை ஹய் பிரதிநிதித்துவப்படுகின்றார். அவர் படிப்படியாக ஆத்மீக வளர்ச்சிகண்டு,  இறை சிந்தனையிலும், தியானத்திலும்  ஆழ்ந்து அதில் அமைதியும், ஆத்மீகக் களிப்பும்  பேரானந்தமும்  அடைகின்றார். ஹய்யின் இந்த ஆளுமை வளர்ச்சியை இப்னு துபைல் விளக்கும் பாங்கு மேலே விளக்கப்பட்டது.
அடுத்தவர் தான்  ‘அப்ஸல்’ பகுத்தறிவு வெளிச்சத்தில் குர்ஆனின் உருவகரீதியான திருவசனங்களை விளக்க முனையும் மார்க்க  அறிஞராக அறிமுகப்படுத்தப்படுகின்றார்.
தத்துவத்தாலும் பகுத்தறிவு ரீதியாக சன்மார்க்கக் கருத்துக்களை விளக்க முற்படும்  சிந்தனைப் பாங்காலும் முற்றிலும்  விடுபட்டு சன்மார்க்கத்தின் கோட்பாடுகளை எத்தகைய விசாரணையுமின்றி பூரணமாக விசுவாசித்து, பாரம்பரிய மத  நம்பிக்கையை அப்படியே முற்றிலும் ஏற்றுக் கொண்டு ஒழுகும் சிந்தனைப் போக்குடையவராக அண்மையிலுள்ள தீவின் இளவரசனான ஸல்மான்  விளங்கினார். இம்மூன்று கதாபாத்திரங்கள் மூலமாக இப்னு துபைலின் கருத்துக்கள் வெளிப்படுகின்றன.
மதம்,தத்துவஞானம், ஆன்மீகவியல் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று முரணானவை அன்று என்ற கருத்து தத்துவ ஞானத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹய், ஆத்மஞானியான அப்ஸல், மார்க்க அறிஞரான ஸல்மான் ஆகிய மூன்று பாத்திரங்களினூடாக மிக ஆழமாக விளக்கப்பட்டுள்ளது. மதம், தத்துவம், மெஞ்ஞானம், ஆகிய மூன்றும் அறிவினதும், ஆத்மீக அனுபவத்தினதும் மூன்று நிலைகளைப் பிரதிபலிக்கின்றது. மனிதர்கள் வித்தியாசமான அறிவுத்தரமும் சிந்தனைப் பாங்கும் உள்ளவர்களாவர். இத்தகைய சிந்தனையில் வித்தியாசமான படித்தரங்களில் உள்ளவர்கள் அனைவரின் தேவையையும் இறைவன் பூர்த்திசெய்கிறான் என்பதே இப்னு துபைல் அவரது தத்துவ நாவல் மூலம்  விடுக்கும் செய்தியாகும். சமூகத்தில் சிலர் மேலோட்டமான அறிவோடு திருப்தியடைகின்றனர். அவர்களது இயற்கைத்; தன்மை அதுவாக விளங்குகின்றது. இதனை இந்நூலில் இப்னு துபைல் ‘ஸல்மான்| என்ற பாத்திரத்தின் மூலம் விளக்குகின்றார். தனது அவதானம்,பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலம் ஹய் பெற்ற அறிவையும் அப்ஸல் தனது ஆத்மீக அனுபவத்தின் மூலம் பெற்ற அறிவையும் பிறருக்கு வழங்கி அவர்களது அறிவு, ஆத்மீக நிலையை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இருவரும் அண்மையிலுள்ள தீவுக்குப் பயணிக்கின்றனர்.
ஆனால் அந்த நாட்டின் ஆட்சியாளரான ஸல்மானும் அவரது மக்களும் இவர்களது தத்துவார்த்தத்தின் ஆத்மீக ரீதியான விளக்கங்களைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் தங்களது  மேலோட்டமான விசுவாசத்தின் அடிப்படையில் சன்மார்க்கக் கடமைகளைப் பேணி வாழ்வதில் திருப்தி யடைந்தனர். அவர்களது அறிவுத் தராதரத்திற்கும்; சிந்தனை நிலைகளுக்கும் அப்பாற்பட்ட கருத்துக்களை அவர்கள் மீது திணித்து அவர்களது சிந்தனையையும் அமைதியான வாழ்க்கையையும் குழப்பிச் சீர்குலைத்து சன்மார்க்கத்தில் நம்பிக்கை இழக்கும் நிலையைத் தோற்றுவிப்பதை ஹய்யும் அப்ஸலும்  விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் அவரவர்களது இயற்கை நிலைக்கேற்ப அறிவையே வழங்குகிறான். எனவே அந்த இயற்கை நிலை யில் அவர்களைச் செயற்பட விட்டுவிடுவதே சிறந்தது என்ற உணர்வுடன்,ஹய்யும் ஸல்மானும் அத்தீவிலிருந்து திரும்புகின்றனர். இந்த வகையில் மதம்,தத்துவம், ஆத்மஞானம் ஆகிய மூன்றிற்கு மிடையில் சமரசம் காணும் ஓர் சிந்தனைப் பாங்கை தனது தத்துவ நாவலின் மூலம் இப்னு துபைல் புலப்படுத்துகின்றார்.
ஆய்வாளர்கள் ஹய் இப்னு யக்ளானை பல்வேறு கண்ணோட்டங்களில் அணுகி ஆராய்ந்துள்ளனர். இப்னு துபைல் தனது நாவலின் முக்கிய  கதாபாத்திரமான ஹய்யின் ஆளுமை வளர்ச்சியை விளக்குவதன் மூலம் மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியின் பல்வேறு படித்தரங்களை விளக்குவதாக கலாநிதி அஹ்மத் ரஷாத் கலீபா ‘இப்னு துபைல் அப்காருஹுல் இஜ்திமாஈய்யா வல் இக்திஸாதிய்யா  வ தவ்ருஹு பி நஷ்ஆதில் மன்ஹஜில் இல்மியில் ஹதீஸ்| – ‘இப்னு துபைல் – அவரது சமூக பொருளாதார சிந்தனையும், நவீன அறிவியல் ஆய்வு முறையின் தோற்றத்திற்கு அவரது பங்களிப்பும்|| என்ற ஆய்வு நூலில்  குறிப்பிடுகிறார். இப்னு துபைலின்  ஆக்கம் வெறுமனே ஒரு தத்துவ நூலாகக் கொள்ளப்படல்  பொருத்தமானதன்று என்பது அவரது கருத்தாகும். அது இப்னு துபைலின் சமூக, பொருளாதார சிந்தனையை மிகச் சிறப்பாக விளக்கும் நூலாகக் கொள்ளப்படல் வேண்டும். மனித  நாகரிக வளர்ச்சியின் படித்தரங்களை நாம் நோக்கும்போது நாடோடி வாழ்வில் மரங்களிலிருந்து  பழங்களைப் பறித்து அவற்றை உணவாகக் கொண்டு  உயிர் வாழும் நிலையை அடுத்துஇ மிருகங்களை வேட்டையாடி உயிர்வாழும் நிலை, அதனைத் தொடர்ந்து மிருக வேளான்மை, விவசாயம் ஆகிய படித்தரங்களை நாம் அவதானிக்க முடிகின்றது. இத்தகைய சடரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் மனிதனுக்கு ஓய்வும் கிடைத்த நிலையிலே அவன் தனது சிந்தனையைச் செலுத்தி தனது சூழல் பற்றி சிந்திக்க  ஆரம்பிக்கின்றான். அதனைத் தொடர்ந்து அவனது அவதானம், பரிசீலனை, பகுப்பாய்வு பரிசோதனையைப்  பயன்படுத்துகிறான. அதன் விளைவாகவே அறிவியல் கலைகள் தோற்றம் பெறுகின்றன. ஹய் என்னும் பாத்திரத்தின் வளர்ச்சியை நோக்கும்போது,ஹய்யின்  குழந்தைப் பருவம், மனித இனத்தின் குழந்தைப் பருவத்தைப் பிரதிபலிக்கும் உணவு,பானம், உறையுள் ஆகிய  வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப்  பூர்த்தி செய்வதே மனித நாகரிகத்தின் ஆரம்ப வளர்ச்சிப் படிவத்தில் அடிப்படை நோக்காக விளங்கியது.
ஹய் ஆரம்பத்தில் மரங்களிலிருந்து விழுந்த பழங்களைப் பொறுக்கி அதனை உண்டு உயிர்வாழ்கிறார். அதனைத் தொடர்ந்து வேட்டையாடுதல்,கால்நடைகளை வளர்த்தல், நெருப்பைக் கண்டுபிடித்தல், விவசாயம், உபகரணங்கள் பயன்படுத்தல் என அவரது பொருளாதார தேவைகளைப் பூர்த்திசெய்யும் முயற்சிகள் விரி வடைகின்றன.
இந்த தேவைகள் பூர்த்திசெய்யப் பட்டதைத் தொடர்ந்து அவரது  அவதானமும் சிந்தனையும் பரிசீலனையும் இயற்கைச் சுற்றாடலில் செலுத்தப்படுகின்றது. பிரபஞ்சத்தில், விரிந்த வான்வெளி,இரவு பகல் மாற்றம், கிரகங்களின் இயக்கம், தாவர உலகம், மிருக உலகம், அவற்றின் செயற்பாடு அவற்றைப் பிணைத்துள்ள மாறாப் பெருநியதியான இயற்கை விதிகள் அனைத்தும் அதன் பின்னால் ஒரு மாபெரும் சக்தி செயல் படுவதை அவருக்கு உணர்த்தியது. இவ்வாறு அவரது அவதானத்தினதும், அறிவினதும் களம் படிப்படியாக விரிவடைந்து இறைவனின் தன்மைகள், பண்புகள் ஆகியன குறித்து  அவரைச் சிந்திக்க வைக்கின்றது. அவர் தனது வாழ்க்கைக்கு சில ஒழுக்க வரம்புகளை  ஏற்படுத்திக்கொண்டு அமைதியாக தியானத்தில் ஈடுபட்டு தனது காலத்தைக் கழிக்கும் நிலையில் உள்ளொளியைப் பெற்று ஆத்மஞான அறிவைப் பெறுகின்றார். அவரது  ஆளுமையின் வளர்ச்சியிலும் செயல்பாட்டிலும்  தத்துவ ஞானமும், ஆத்மவியலும் இணைகின்றது.

உசாத்துணைகள்

  1. Sartn, Introduction to History of Scilence, Lon- don,                Vol ii, P 354
  2. Dr. M. Ghalla, Ibn Tufail ,Majallatul Azhar Egypt        1942
  3. Dr. Abdul Haleem Mahmud, Falsafatu Ibn Tufail Wa risalatuhu Haayy Ibn Yakzan
  4. Ahmad Rashid Musa, Ibn Tufail Wa Afkarubul Ijtimaiyya   Cairo- 1998 , P: 10

Encyclopaedia of Islam , Ibn. Tufail

M.M. Sharif , A History of Muslim     Philosophy, Karaichi, 1983.

Majid al- Takhri, a History of Islamic   Philosophy. Londan. 1970

Dr. Ahmad Rishad Musa, Ibn Truail, afkarulul Ijthimaiyya wal Iqthisadiya, Cairo, 1998.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *