ஷரீஆவைச் செயல்படுத்துவதில் இலங்கை முஸ்லிம் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

ஷரீஆ என்பது ஒரு முஸ்லிமின் தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்வின் அனைத்து துறைகளிலும் வழிகாட்டி நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்காக, இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ்வினால் அருளப்பட்ட சட்டமாகும். முஸ்லிம்கள் தங்களது வாழ்வின் அனைத்து செயற்பாடுகளையும் முற்றிலும் அல்லாஹ்வையும் அவனது தூதரும் அவர்களுக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள், வரையறைகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளல் வேண்டும் என்பதை அல்குர்ஆன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிக அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது. ‘எனினும் மெய்யாகவே விசுவாசம் கொண்டவர்களோ அவர்களுக்கிடையில் தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால் அதற்கவர்கள் ‘நாங்கள் செவிசாய்த்தோம் நாங்கள் வழிப்பட்டோம்’ என்று கூறுவதைத் தவிர வேறொன்றும் கூறுவதில்லை. இத்தகையோர் தாம் முற்றிலும் சித்தியடைந்தவர்கள்’ (அந்நூர்: 51)

‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விடயத்தைப் பற்றியும் கட்டளையிட்ட பின்னர் அவ்விடயத்தில் அதற்கு மாறாக வேறு அபிப்பிராயங் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. அதில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்’ (அல் – அஹ்ஸாப்: 36)

‘விசுவாசிகளே நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடவுங்கள். அவ்வாறே அல்லாஹ்வுடைய தூதருக்கும், நீங்கள் வழிப்பட்டு நடப்பீராக! (அந்-நிஸா: 59)

இவ்வாறு அல்குர்ஆன் விசுவாசிகள் தங்களது அனைத்து விடயங்களிலும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடத்தல் வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) அவர்கள் இதனை மிக அழகாகவும், சுருக்கமாகவும் பின்வரும் வகையில் விளக்கினார்கள்.

‘நிச்சயமாக அல்லாஹ் சில வரம்புகளை ஏற்படுத்தியுள்ளான். அதனை மீறாதீர்கள். அவன் சிலவற்றை கடமையாக்கியுள்ளான். அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். சிலவற்றை விலக்கியுள்ளான். அவற்றைத் தவிர்த்துவிடுங்கள். சில விடயங்களைப் பொறுத்தளவில், உங்கள் மீதுள்ள கருணையினால் மௌனமாக இருந்துள்ளான். ஆனால், அவன் மறக்கவில்லை. எனவே, அவற்றைப் பற்றி நீங்கள் துருவித்துருவி ஆராயாதீர்கள்.’

அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் கட்டளைகளிலிருந்தே இஸ்லாமிய ஷரீஆ தோற்றம் பெறுகின்றது. ஷரீஆவின் இந்தக் கட்டளைகளை கால மாற்றங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவகையில் விளங்கவும், விளக்கவும் அது இடமளிக்கின்றது. இவ்வாறு குர்ஆனினதும், நபி (ஸல்) அவர்களினதும் பொதுவான கடமைகள், பிரமாணங்களை உள்ளடக்கிய ஷரீஆவை அடைய முனையும் குறிக்கோள்களும், நோக்கங்களும் ‘மகாஸிதுஷ் ஷரீஆ’ என அழைக்கப்படுகின்றது. இந்த குறிக்கோள்களின் அடிப்படையில், புதிய சட்டவிதிகளை அறிஞர்கள் உருவாக்கியுள்ளனர். இஸ்லாமிய ஷரீஆ கால வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் ஏற்பவும், பல்வேறு சூழல்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நெகிழ்ந்துகொடுத்து இசைவாக்கம் பெற்று வளர்ச்சியடையவும் இது துணைபுரிகின்றது. இந்த சட்ட விளக்க முயற்சியே ‘இஜ்திஹாத்’ என அழைக்கப்படுகின்றது. இந்த சட்ட விளக்க உத்தியே இஸ்லாமிய சட்டத்திற்கு ‘அல்-முறூனா’ என்னும் நெகிழ்ச்சித் தன்மையையும், இயக்க சக்தியையும் வழங்குகின்றது. இந்த அடிப்படையில் இஸ்லாமிய சட்ட அறிஞர்களான ‘புகஹாக்கள்’ இஸ்லாமிய சட்ட விளக்கத்திற்கு மிகத் காத்திரமான ஒரு பங்களிப்பைச் செய்து ஒரு பெருமதிமிக்க சட்டப் பாரம்பரியத்தை கட்டியெழுப்பியுள்ளனர்.

ஷரீஆவின் விதிகளும், பிரமாணங்களும் அனைத்து முஸ்லிம்களுக்கும் – அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் – பொதுவானவையாகக் கொள்ளப்படல் வேண்டும். இந்நிலையில் சிறுபான்மை முஸ்லிம்கள் ஷரீஆவின் செயல்பாடு தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் ஏன் வித்தியாசப்படுத்தி நோக்கப்படல் வேண்டும்? அதற்கான நியாயம், தேவை என்ற கருத்துமயக்கம் இது தொடர்பாக தோன்றுவதற்கு இடமுள்ளது. கால, சமூக மாற்றம் என்பது வரலாற்றின் ஒரு முக்கிய நியதியாகும். இந்த காலமாற்றத்தை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.

‘இவையெல்லாம் காலத்தின் மாற்றங்களாகும். இவற்றை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய் கின்றோம்’  ஆல இம்ரான்: 140

வரலாற்று மாற்றங்களோடு மனிதனின் சமூக அமைப்பிலும், வாழ்விலும், நிறுவனங்களிலும் மாற்றங்கள் ஏற்படுவதும் தவிர்க்கமுடியாத நியதியாகும். இந்த மாற்றமுடியாத சமூக, வரலாற்று விதிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு காலப்பிரிவும், அதற்கே உரிய தேவைகள், பிரச்சினைகளைக் கொண்டுள்ளன. இவை அதற்கு முன்னர் வாழ்ந்த சமூகங்களின் தேவைகள், பிரச்சினைகளைவிட முற்றிலும் வித்தியாசமானவையாகக் காணப்படுவது தவிர்க்க முடியாததாகும். எனவே, அவற்றிற்கான தீர்வுகளும் வித்தியாசமான வகையில் அமைதல் தவிர்க்க முடியாததாகும்.

சமகால உலகும், சமூக பொருளாதார அமைப்பும், பாரம்பரிய இஸ்லாமிய உலகின் சமூக, பொருளாதார, அரசியல் அமைப்பிலிருந்து முற்றிலும் வித்தியாசமான தன்மைகளைக் கொண்டுள்ளன. பாரம்பரிய இஸ்லாமிய உலகில் காணப்பட்டது போலல்லாது முஸ்லிம்கள் சமகால உலகில் பல்வேறு நாடுகளில் சிறுபான்மையோராக வாழ்வதானது எமது காலப்பிரிவில் நாம் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய யதார்த்தமாகும். பல்லின சமூகங்களுக்கு மத்தியில், நவீன சமூக அமைப்பில், சிறுபான்மையோராக வாழுகின்ற முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முற்றிலும் முஸ்லிம்களை உள்ளடக்கிய, அல்லது அவர்களைப் பெரும்பான் மையோராகக் கொண்ட சமூகங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. எனவே, வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முஸ்லிம் பெரும்பான்மை குறித்து சட்டத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தொகுக்கப்பட்ட பாரம்பரிய பிக்ஹானது அது சிறுபான்மை முஸ்லிம்கள் நவீன காலப்பிரிவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கப் போதுமானதாக இல்லை என்பதே யதார்த்தமாகும்.

இத்தகைய ஒரு சூழலிலேயே இச்சிறுபான்மை முஸ்லிம்கள் தங்களது வாழ்வில் ஷரீஆவைச் செயல்படுத்துவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் முஸ்லிம் சிறுபான்மை சட்ட மரபு ஒன்று உருவாக்கப்படல் அவசியம் என்ற கருத்து அண்மைக் காலங்களில் தோற்றம் பெற்றது.

இக்கருத்து ஏறக்குறைய கடந்த நான்கு தசாப்தங்களாக தோன்றி, மிக அண்மைக் காலப்பிரிவில் மிக வலியுறுத்தப்பட்டது. சிறுபான்மை முஸ்லிம்களின் சட்டத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய சிறுபான்மைச் சட்டம் இன்று பரவலாகப் பேசப்படுவதற்கும், அதற்கான அவசியம் உணரப்படுவதற்கும் பல காரணங்கள் உள்ளன. ‘ஸஹ்வா இஸ்லாமிய்யா’ என்ற இஸ்லாமிய எழுச்சியின் தாக்கம், முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் மட்டுமன்றி, முஸ்லிம்கள் சிறுபான்மை நாடுகளிலும் சமூகங்களிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனடியாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஷரீஆ செயல்படுத்தப்படல் வேண்டும் என்ற தேவையும், ஆர்வமும் ஆழமாகத் தோன்றியுள்ளது போன்றே, பல்லின சமூகங்களில் வாழ்கின்ற முஸ்லிம்கள் சிறுபான்மை மத்தியிலும் தங்களது சமூகவாழ்வு, குடும்பவாழ்வு, கல்விசார் செயல்பாடுகள், வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் பிற சமூகங்களுடனான தொடர்புகள் ஆகிய விடயங்களில் ஷரீஆ தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இப்பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றிற்கான தீர்வைக் காணுதல் பின்வரும் மூன்று அடிப்படைக் காரணங்களுக்காக அவசியமாகின்றது.

  1.   பல்லின சமூகத்தில் முஸ்லிமல்லாத பெரும்பான்மைச் சூழலில், தனிப்பட்ட  வாழ்விலும், சமூக வாழ்  விலும்  ஷரீஆ விதிகளைப் பேணி  அதன் அடிப்படையில் செயல்பட  இது வழிவகுக்கும்.
  2. முஸ்லிம்களின் மத, கலாசாரத் தனித்துவத்தைப் பேணத் துணைபுரியும்
  3. பல்லின சமூகத்தில், பிற இனத்தவருடன் கலந்து உறவாடும் நிலையில், இஸ்லாமிய ஷரீஆ    விதிகளைப் பேணி தனது தனித்துவத்தைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் பிறருடன் நல்லுறவுடன் செயல்படவும் இது இடமளிக்கும்

எமது சமகாலப் பிரிவில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் முஸ்லிம் சிறுபான்மையினரின் எண்ணிக்கை பல காரணங்களால் மிகக் கணிசமான அளவு அதிகரித்தது. இஸ்லாமிய உலகில் மிகப் பிரபலமாக ஏற்பட்ட இஸ்லாமிய எழுச்சியின் அடியாக, மேற்குலகின் இச்சிறுபான்மை முஸ்லிம்கள் தங்களது வாழ்வில் ஷரீஆவை செயல்படுத்தும் ஆர்வத்தால் துண்டாடப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும், பொருளாதார நடவடிக்கைகளிலும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இப்பிரச்சினைகள் சமகால இஸ்லாமிய அறிஞர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் பல்லின நாடுகளில் வாழ்கின்ற சிறுபான்மை முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தனிப்பட்ட சட்ட மரபு – ‘பிக்ஹுல் அகல்லியாத்’ உருவாக்கப்பட்டது.

மேற்குலகில் முஸ்லிம் சிறுபான்மையோர் எதிர்நோக்கும் சட்டப் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக பல மாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாடுகளில் இத்துறையில் ஈடுபாடுகாட்டிய சட்டத்துறை அறிஞர்களான முஸ்தபா ஸர்கா, ஷெய்க் அப்துல் பத்தாஹ் அபூகுத்தா, ஷெய்க்பய்ஸல் மௌலவி, கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி, கலாநிதி தாஹா ஜாபிர் அல்வானீ ஆகியோர் கலந்துகொண்டு, மேற்குலக நாடுகளில் சிறுபான்மையோராக வாழுகின்ற முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டு தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கான பல நிறுவனங்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அமைக்கப்பட்டன. இது தொடர்பாக European Fiqh Council நிறுவனம் மிகச்சிறப்பான ஒரு பங்களிப்பைச் செய்துவருகின்றது.

சிறுபான்மை முஸ்லிம்களுக்கான பிக்ஹ் என்ற பொருள் பற்றி இன்று பரவலாகப் பேசப்பட்டு அதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டாலும் இது ஒரு புதிய கோட்பாடன்று. இஸ்லாமிய சட்ட வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்கள் சில வரலாற்றுக் காரணங்களால் சிறுபான்மையோராக மாறியதைத் தொடர்ந்து, அவர்களுக்கான உரிய சட்ட மரபை அக்கால சட்ட அறிஞர்கள் உருவாக்கினர். முஸ்லிம்களின் ஆட்சியின் கீழிருந்த ஸ்பெய்ன் கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அங்கு முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்ற நிலையை அடைந்ததும் அவர்கள் அச்சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முயற்சியாக ‘பிக்ஹுந் நவாஸில்’ என்னும் சட்ட மரபு உருவாக்கப்பட்டது. சிலபோது ஸ்பெய்னின் ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் வித்தியாசமாகக் காணப்பட்டதால் அவ்வப் பிரதேசத்திற்கே உரிய தீர்ப்புகள் வழங்கப்பட்டன. உதாரணமாக ஸ்பெய்னின் ஒரு முக்கிய மாகாணமான குர்துபாவில் வாழ்ந்த முஸ்லிம்களைப் பொறுத்தளவில் வழங்கப்பட்ட மார்க்கத் தீர்ப்புகளைக் கொண்ட தொகுப்பு ‘நவாஸில் குர்துபா’ என அழைக்கப்பட்டது. இவ்வாறு வேறு பிரதேசங்களுக்கும் உரிய நவாஸில் தொகுப்புகள் காணப்பட்டன. டியுனிஸியா, மொரோக்கோ போன்ற நாடுகளில் வழங்கப்பட்ட அக்காலப்பிரிவில் வாழ்ந்த முஸ்லிம் சிறுபான்மையினருக்கான சட்டத் தீர்ப்புகள் மாலிக் மத்ஹபைச் சேர்ந்த அஹ்மத் அல் வன்ஷிரிஸின் ‘அல் மிஃயாருல் முக்ரிப் அன் பதாவா உலமாக இப்ரீகிய்யா வல் அந்தலுஸ் வல் மக்ரிப்’ போன்ற நூல்களில் காணப்படுகின்றது. சிறுபான்மை முஸ்லிம்களது சட்டப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பொறுத்தளவில் ஹனபி பிக்ஹ் மிக வளமுடையது என ஆய்வா ளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில், ஹனபி சட்ட மரபு இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளில், அப்பாஸிய, உஸ்மானிய காலப்பிரிவு உட்பட செல்வாக்குப் பெற்ற சட்ட மரபாக இது விளங்கியது. எனவே, இம்மத்ஹபைச் சார்ந்த சட்ட அறிஞர்கள் பல்வேறு நாடுகளில் வித்தியாசமான சூழல்களை அனுசரித்து தீர்ப்புகள் வழங்கினர். ‘பதாவா ஹிந்திய்யா’ என்ற சட்டத்தீர்ப்புத் தொகுப்பு நூல் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

முஸ்லிம் சிறுபான்மையினருக்கான சட்டத் தீர்ப்புக்களின் தோற்றத்திற்கான இந்த வரலாற்றுப் பின்னணியில் இலங்கை முஸ்லிம் சிறுபான்மையோர்களும் ஷரீஆ தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி நோக்குவோம்.

உலகெங்கும் பரந்து வாழும் முஸ்லிம் சிறுபான்மையோர் ஷரீஆவை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஒவ்வொரு நாட்டினதும் சமூக, கலாசார, பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப வித்தியாசப்படுகின்றன. உதாரணமாக மேற்கில் வாழும் முஸ்லிம்கள் பெரும்பான்மை கிறிஸ்தவ சூழலில் சிறுபான்மையோராக உள்ளனர். இந்தியாவில் இந்துக்களான பெரும்பான்மையோர் மத்தியில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்றனர். இலங்கையில் பெரும்பான்மை பௌத்தர்களைக் கொண்ட சூழலில் சிறுபான்மையினராக உள்ளனர். எனவே, முஸ்லிம்கள் ஷரீஆ ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராயும் போது அவர்களுக்கே உரிய இந்த தனிப்பட்ட பண்புகள் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். மேற்கில் முஸ்லிம்கள் ‘அஹ்லுல் கிதாப்கள்’ மத்தியில் சிறுபான்மையோராக இருக்க, அந்நாட்டில் வித்தியாசமான நிலை காணப்படுகிறது.

இலங்கையில் முஸ்லிம் சிறுபான்மையோர் தங்களது வாழ்வை ஷரீஆவில் இணைந்த வகையில் அமைத்துக் கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி இங்கு பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட உள்ளன. இவை அனைத்தும் ஒரு பொதுப் பின்னணியாக இது தொடர்பான பொது அம்சங்களைத் தொட்டுக் காட்டுவதே எனது உரையின் நோக்கம்.

இலங்கை முஸ்லிம் சிறுபான்மைச் சமூகம், தனிவாழ்வு, குடும்பவாழ்வு, சமூக வாழ்வு, வணிகப் பொருளாதார தொடர்புகள், கல்வி கலாசாரத்துறை சார்ந்த செயற்பாடுகளைப் பொறுத்தளவில் ஷரீஆ ரீதியான பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கினர். இப்பிரச்சினைகள் இனங்காணப்படுதலும், அதற்கான தீர்வுகளை காண்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படலும் அவசியமாகும். தனி மனிதர்கள் என்றவகையில் மாணவர்கள், தொழில்புரிவோர், பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். பிற மத பாடசாலைகளில் சிறுபான்மைப் பிரிவினராக கல்வி பயில்கின்ற மாணவர்கள், ஏனைய மத விழாக்களில் கலந்துகொள்ளல், மதச் செயல்பாடுகளுக்காக நன்கொடை வழங்கல், கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடல், கைகூப்பி வணக்கம் கூறுதல், தேசிய கீதத்தின் போது எழுந்து நிற்றல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சிலபோது அரசாங்க, தனியர் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லிம்கள் பிற மத வணக்கஸ்தலங்களை நிறுவுவதற்காக நன்கொடை வழங்கும் நிர்ப்ந்த நிலைக்கு ஆளாவதும் உண்டு. வங்கிகளில் தொழில்புரிதல், மதுபானம் பரிமாறப்படும் ஹோட்டல்களில் பணிபுரிதல் போன்றவையும் தனிமனிதர்கள் எதிர்நோக்கும் ஷரீஆ ரீதியான பிரச்சினைகளில் சிலவாகும்.

குடும்ப வாழ்வைப் பொறுத்தளவிலும் சமூக வாழ்விலும் சிறுபான்மை முஸ்லிம்கள் ஷரீஆ தொடர்பான பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். முஸ்லிமல்லாத அயல் வீட்டாருடன் பழகுதல் தொடர்பாக இப்பிரச்சினைகள் உள்ளன. கணவன் இஸ்லாத்தைத் தழுவிய நிலையில், மனைவி தொடர்ந்து முஸ்லிமல்லாத நிலையில் இருப்பது, அல்லது இதற்கு நேர்மாறாக மனைவி இஸ்லாத்தைத் ஏற்ற நிலையில் கணவன் தொடர்ந்து முஸ்லிமல்லாதவராக விளங்குவதும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். சமூக வாழ்வில் ஏற்கனவே தனிநபர் பிரச்சினை தொடர்பாக குறிப்பிட்ட விடயங்களை அவதானத்தில் கொள்ளலாம். பிற மதத்தவருக்கு ‘ஸலாம்’ கூறலாமா என்பது ஒரு சாதாரண பிரச்சினையாக இருப்பினும், அது சிலபோது இஸ்லாத்தைத் தவறாகப் புரிய இடமளிப்பதுண்டு. சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் நிர்ப்பந்த நிலையும் இப்பிரச்சினையோடு தொடர்புடையதாகும்.

கல்வி கலாசாரத்துறையில் சிறுபான்மை முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நேர்க்குகின்றனர். இலங்கையில் சில முஸ்லிம் பாடசாலைகளில் கூட்டுக்கல்வி நடைபெறுகின்றது. முஸ்லிமல்லாத பாடசாலைகளிலும் இத்தகைய சூழலில் முஸ்லிம் மாணவர்கள் பலர் கற்கின்றனர். அழகியல் கல்வியைப் பொறுத்தவரையில் நடனம் போன்ற கலைத்துறைகள் தொடர்பாக முஸ்லிம்களின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. முஸ்லிம் மாணவர்கள், வட்டியின் அடிப்படையில் அமைந்துள்ள மஹபொல புலமைப்பரிசிலை பெறலாமா? அப்படியில்லாத பட்சத்தில் வசதியற்ற மாணவர்கள் அந்த வாய்ப்பைப் பெறாது கல்வியை இழப்பதா? என்பதும் ஒரு கேள்வியாக சிலபோது எழும்புவதுண்டு. சில முஸ்லிம் நிறுவனங்கள் பணத்தை வங்கியில் சேமிப்புக் கணக்கில் வைத்து அதன் மூலம் பெறப்படும் வட்டிப் பணத்தின் மூலம் புலமைப் பரிசில்களை வழங்குகின்றனர்.

கொடுக்கல், வாங்கல், பொருளாதார செயற்பாடுகளைப் பொறுத்தளவில் வங்கி காப்புறுதித் துறை போன்ற துறைகளில் முஸ்லிம் சிறுபான்மையோர் சில அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். சிறு வணிகர்கள் வங்கியிலிருந்து கடன் பெற்றே தமது வியாபார முயற்சிகளை மேற்கொள்கின்றனர். முச்சக்கர வண்டிகள் வாங்குவதற்காக பெரும்பாலோர் வங்கிகள் மூலம் கன் பெறுவதையே ஒரே வழியாகக் கொள்கின்றனர். வீடுகட்டக் கடன் பெறுதல் இதில் ஒரு முக்கிய விடயமாகும். இவ்வாறு வட்டியமைப்பில் செயல்படும் வழிகளிலிருந்து கடன் பெறுதல் ஷரீஆ ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளதா? முஸ்லிம்கள் வங்கிகளில் தொழில் புரியலாமா? வட்டியுடன் தொடர்பற்ற Current Account போன்றன ஷரீஆ ரீதியான முக்கியமான பிரச்சினைகளாகும்.

 

National Conference

Minority Muslims in a Plurel society- 2004-march 12-15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *