தோல்வி மனப்பான்மையைத் தவிர்த்து சவால்களை வெற்றிகொள்வோம்

இன்று குத்பா உரைகளிலும் சொற்பொழிவுகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான ‘யஹூதி-நஸாராக்களின் சதி’ பற்றிப் பரவலாகப் பேசப்படுகின்றது. எமது பலவீனங்கள், பின்னடைவுகள் , தேக்க நிலை ஆகிய அனைத்திற்கும் யஹூதி நஸாராக்களின் சதியே காரணம் என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் உருவாக்கப்படுகின்றது. இது உண்மையில் எமது பலவீனங்கள், இயலாமைக்கான காரணங்கள் என்பவற்றை சுயவிசாரணை செய்து அவற்றுக்கான தீர்வுகளைக் காணும் முயற்சியிலிருந்து விடுபட்டு மண்ணுக்குள் தலையைப் புதைத்துக்கொள்ளும் தீக்கோழி மனப்பான்மையாகும். இது எமது அறிவுச் சோம்பலின் ஒரு பாரதூரமான விளைவும் கூட.

முஸ்லிம் உலகில் தோன்றியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் , முஸ்லிம் உலகின் பின்னடைவுக்கும் தேக்க நிலைக்கும் காலனித்துவவாதிகளே காரணமாக அமைந்தனர் என்ற சிந்தனைப் பாங்கும் கருத்தோட்டமும் அரபு-இஸ்லாமிய உலகில் தோன்றிய காலப் பிரிவில் அல்ஜீரிய சிந்தனையாளர் மாலிக் பின் நபி மிகப் புரட்சிகரமான சமூக விமர்சனக் கோட்பாட்டை முஸ்லிம் உலகிற்கு சமர்ப்பித்தார். இதனை அவர் ‘காபிலிய்யா லில் இஸ்திஃமார்’ காலனித்துவத்திற்கு அடிமையாகிப் பலியாகும் பலவீன நிலையை அடைந்திருத்தல் – என குறிப்பிடுகிறார். அதாவது முஸ்லிம் உலகத்தின் பலவீனங்களுக்கும் பின்னடைவுக்கும் காலனித்துவ வாதிகளைக் குறைகூறாது, காலனித்துவவாதிகள் தன்னை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு அது எவ்வாறு பலவீனமடைந்தது? ஏன் பலவீனமடைந்தது? என முஸ்லிம்கள் தங்களுக்குள் சுய விசாரணை செய்வதே மிகப் பயனளிப்பது என முஸ்லிம் சமூகத்தின் அவதானத்தை தமக்குள் செலுத்துவதன் அவசியத்தை அவர் மிகப் பலமாக வலியுறுத்தினார். முஸ்லிம் உலகில்,குறிப்பாக புத்திஜீவிகள் மத்தியில் மாலிக் பின நபியின் இந்த சமூக விமர்சனப் பார்வை மிக ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தியது. இலங்கையில் அண்மைக் காலமாக குத்பா உரைகளிலும் பொதுச் சொற்பொழிவுகளிலும் ‘யஹூதி நஸாராக்களின் சதி’ என்ற வார்த்தைகளைக் கேடகும்போது மாலிக் பிந் நபியின் இந்தக் கோட்பாட்டைப் பற்றி நான் சிந்திப்பதுண்டு.

இஸ்லாத்திற்கு எதிரான சதிகளும், சூழ்ச்சிகளும் இன்று நேற்று ஆரம்பித்தவையல்ல . நபி (ஸல்) அவர்களின் தூதின் ஆரம்பத்திலிருந்தே இதனை இஸ்லாம் எதிர்கொண்டுள்ளது. போலி நபிமார்களின் தோற்றம், இஸ்ராயிலிய்யாத் புராணக் கதைகள் தப்ஸீரில் ஊடுருவல், புனைந்துரைக்கப்பட்ட ஹதீஸ்கள்,பாதினீக்களின் சதிகள் ஆகியன முதல் இன்றுவரை சங்கிலித் தொடர்போல் பல சூழ்ச்சிகள் இஸ்லாத்தின் தூய்மையை மாசுபடுத்தும் வகையில் தோன்றின. இஸ்லாம் அவை அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டது.

சமகால உலகிலும் இஸ்லாத்திற்கு எதிரான சதிகள்,சூழ்ச்சிகள் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த சூழ்ச்சிகள், சதிகள்தாம் எமது பலவீனத்திற்கும் பின்னடைவிற்கும் காரணம் என கற்பிக்கும் தோல்வி மனப்பான்மையை விடுத்து, எமது பலவீனங்கள், பின்னடைவு, தோல்விகளுக்கான காரணங்களைச் சுயவிசாரணை செய்து அறிவுரீதியான,ராணுவரீதியான, கலாசார – பண்பாட்டு ரீதியான சவால்களை,அறைகூவல்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் தைரியத்தையும் உளச்சக்தியையும் அறிவுப் பலத்தையும் சமூகத்தில் எல்லா மட்டங்களிலும்- குறிப்பாக சமூகத்தின் எதிர்காலத்தை சுமக்கப்போகும் இளைஞர்கள் மத்தியில் உருவாக்குவதே இன்றைய காலத்தின் தேவையாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *