வரலாற்றுப் பாரம்பரியம் – கலாநிதி. எம். ஏ. எம். சுக்ரி

இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பரந்து வாழ்கின்றனர். சில மாவட்டங்களில் அவர்களது குடியேற்றம் செறிந்தும் வேறு சில மாவட்டங்களில் பரந்தும் காணப்படுகின்றது. முஸ்லிம்களின் இத்தகைய குடிசனப் பரம்பலுக்கும் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த அவர்களது வணிகக் குடியேற்றங்கள், சில வரலாற்றுக் காரணங்களால் நிகழ்ந்த குடிபெயர்ப்புகள் ஆகியவற்றுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

கீழைத்தேய நாடுகளுக்கும் மேற்குலகிற்கும் இடையில் பாரசீக வளைகுடாவினூடாக இந்து சமுத்திரத்தை மையமாக வைத்து நடைபெற்ற வணிகத்துள், இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே, ஆரம்பத்தில் பாரசீகரும், அவர்களைத் தொடர்ந்து அராபியரும் முக்கிய இடத்தை வகித்தனர். பாரசீக வளைகுடாவிற்கும், சீனாவிற்குமிடையில் அமைந்திருந்த இந்த வணிகப் பாதையில் துறைமுகங்கள் வணிக மத்திய தலங்களாக விளங்கின. இந்த வணிக மத்திய நிலையங்களின் அமைப்பு, முக்கியத்துவம் என்பவற்றை இந்து சமுத்திரத்தின் காற்றுவீசும் முறையே ( Wind System ) நிர்ணயித்தது. உதாரணமாக, பாரசீக வளைகுடாவிலிருந்து சுமாத்ராவிற்கு ஒரு காற்றைப் பயன்படுத்திப் பயணத்தை மேற்கொள்வது சாத்தியமற்றதாகக் காணப்பட்டது. எனவே, இக்கப்பல்கள் தென் இந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளிலுள்ள துறைமுகங்களிலோ அல்லது இலங்கைக் கரையிலுள்ள துறைமுகங்களிலோ தரித்துச் செல்ல வேண்டிய அவசிய நிலை காணப்பட்டது. இத்துறைமுகப் பிரதேசங்களில் வணிகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை, பாதுகாப்பான துறைமுகங்களாக இவை காணப்பட்டமை, உணவும், குடிநீரும் காணப்பட்டமை, கப்பல்களைப் பழுதுபார்ப்பதற்கான வசதிகள் ஆகியன இத்துறைமுகங்கள் தெரிவு செய்யப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. பாரசீகர், அராபியர், சீனர் ஆகியோர் பங்குபற்றிய இந்து சமுத்திர வணிகத்தில் இலங்கையின் வடகிழக்கு, மேற்கு, தெற்குக் கரையோரங்களில் காணப்பட்ட துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை வகித்தன. திருகோணமலை, மன்னார், புத்தளம், கற்பிட்டி, கொழும்பு, பேருவளை, காலி, வெலிகாமம், மாத்தறை போன்ற துறைமுக நகரங்கள் கால வளர்ச்சியில் கணிசமான முஸ்லிம் வணிகக் குடியேற்ற நகரங்களாக வளர்ச்சியடைந்தன. இலங்கையில் தெற்குக் கரையோரப் பகுதியானது காலி போன்ற இயற்கை துறைமுகங்களை மட்டுமன்றி பல பாதுகாப்பான குடாக்களையும் ( Sheltered Bays ) கடல்சார்ந்த உட்பிரதேசங்களையும் ( Inlets ) கொண்டுள்ளது. இந்த அமைப்பைப் பெற்றிருந்த தெற்குக் கரையிலுள்ள “ நில்வளாதித்த “ என சிங்கள இதிகாச வரலாற்று நூல்களில் அழைக்கப்பட்ட மாத்தறை, “ வலுகாம் “ என அழைக்கப்பட்ட வெலிகாமம், “ பீமாதித்த “ எனப் பெயர் பெற்ற பெந்தொட்ட ஆகிய பிரதேசங்கள் முக்கிய துறைமுகக் குடியேற்ற நகரங்களாக ( Port Settlements ) விளங்கின.

இலங்கையில் கி. பி. ஏழாம் நூற்றாண்டளவில் கணிசமான அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டதை வரலாற்றாசிரியர் அல் – பலாஸூரியின் குறிப்புக்கள் உட்பட பல வரலாற்று ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இக்குடியேற்றங்கள் கரையோரப் பகுதிகளில் குறிப்பாக துறைமுகங்களை அணித்தாகக் கொண்டே அமைந்திருந்தன. இந்த கரையோரத் துறைமுகங்களைப் பொறுத்தளவில் ஆரம்பகாலப் பிரிவில் மாந்தை, திருகோணமலை போன்ற துறைமுகங்களும் கொழும்பு, பேருவளை போன்ற மேற்குக் கரையோரத் துறைமுகங்களும்  முக்கிய இடத்தை வகித்தமையை வரலாற்று ஆவணங்களும் சிலாசனக் குறிப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் தென் மாகாணத்தைப் பொறுத்தளவில் குறிப்பாக மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஆரம்பக் குடியேற்றங்கள் எக்காலப்பிரிவில் இடம்பெற்றன என உறுதியாக நிச்சயித்துக் கூறுவதற்கான வரலாற்று ஆவணங்களோ, சிலாசன ஆதாரங்களோ காணப்படாமை, இம்மாவட்டத்தின் வரலாற்றை ஆராயும் போது ஒரு வரலாற்று ஆய்வாளன் எதிர்நோக்கும் முதலாவது இடர்பாடாகும். இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அரபுச் சிலாசனங்கள் அனைத்தும் காலியில் 1926ல் கண்டுபிடிக்கப்பட்ட மும்மொழிச் சிலாசனத்தைத் தவிர, வடமேல், வடகீழ், மத்திய மாகாணத்திலும்,  கொழும்பிலும் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். கி. பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் கொண்ட ஆவணங்களை நாம் பெறக் கூடியதாக உள்ளது. மாத்தறை, தேவந்துறை, வெலிகாமம் துறைமுகப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இம்மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு பற்றிய, ஆரம்பக் குடியிருப்புக்கள் பற்றிய பல உண்மைகளைத் தெரியப்படுத்தும் வரலாற்றுத் தகவல்களை நாம் பெறக் கூடியதாக இருக்கும். இலங்கையின் ஏனைய மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அரபுச் சிலாசனங்கள் கூட திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலமாகவன்றி, சிலரால் அவ்வப்போது யதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டவையாகும் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை வரலாற்றின் அநுராதபுர காலப் பிரிவிலேயே ஏனைய துறைமுக நகரங்களைப் போன்று தென் மாகாண துறைமுக நகரங்களான காலி, வெலிகாமம், மாத்தறை போன்ற இடங்களில் இஸ்லாத்துக்கு முந்தைய அரபுக் குடியேற்றங்கள் இடம்பெற்றிருத்தல் வேண்டும் என நாம் அனுமானித்தல் தவறன்று. ஆனால் இந்தக் குடியேற்றங்கள் அக்காலப் பிரிவில் மாந்தை, திருகோணமலை, கொழும்பு போன்று தேசிய துறைமுகங்களாக வளர்ச்சியடையவில்லை. அரபு வணிகர்கள் இலங்கையிலிருந்து பெற்றுக் கொண்ட வணிகப் பொருட்களில் “ கறுவா “ மிக முக்கிய இடம் பெற்றதை அல் – இஸ்தக்ரி, இப்னு ஷஹ்ரயார் போன்ற அரபுப் புவியியலாளர்களின் குறிப்புக்கள் உணர்த்துகின்றன. மாத்தறை மாவட்டம் கறுவா விளைச்சலுக்கு மிகப் பெயர் பெற்று விளங்கிய பிரதேசங்களுள் ஒன்றாகும். எனவே, கறுவா, பாக்கு போன்றவற்றை முக்கிய துறைமுகங்களுக்கு ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களாக இவை விளங்கியிருக்கலாம் என நாம் அனுமானிக்க இடமுண்டு.

கி. பி. 10, 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கை அராபிய வணிகத்தில் வடமேற்கு, வடகிழக்கு, மேற்குக் கரையைச் சேர்ந்த துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை வகித்தன. 13 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பொலன்னறுவ ராஜதானியின் வீழ்ச்சியோடு இலங்கையின் அரசியல் தலைநகரம் தீவின் தென்மேற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இந்த மாற்றத்துடன் கடல் வணிகத்தின் மத்திய நிலையும் வங்காள விரிகுடாவிலிருந்து அராபியக் கடல் பிரதேசத்தை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவே 13 ஆம் நூற்றாண்டளவில் இலங்கையின் அரசர்கள் தென்மேற்குப் பிரதேசத்தைச் சார்ந்த துறைமுகங்களால் கவரப்படலாயினர். இக்காலப் பிரிவிலேயே காலி, வெலிகாமம், மாத்தறை போன்ற தென் மாகாணக் கடல் துறைமுக நகரங்களில் ( Sea Ports ) அரபு வணிகர்கள் பெருமளவு குடியேற ஆரம்பித்தனர். இக்காலப்பிரிவில் சீனாவிலிருந்து பாரசீக வளைகுடா வரை பயணம் செய்த புகழ் பெற்ற பயணி மார்க்கோபோலோ இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெருமளவு அரபு வணிகர்கள் காணப்பட்டதாக குறிப்பிடுகின்றார். தென் மாகாணத்தின் முக்கிய துறைமுகமான காலித் துறைமுகத்துடன் இணைந்த துறைமுக நகரங்களாக வெலிகாமம், மாத்தறை, தெவுந்தறை, போன்ற சிறு துறைமுகங்கள் விளங்கியிருத்தல் வேண்டும். உண்மையில் நோக்கும்போது மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு என்பது காலி மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் ஆராயப்படுதல் எவ்வகையிலும் சாத்தியமன்று. ஏனெனில் தென்னிலங்கையின் துறைமுக நகரங்கள் ஒன்றோடொன்று இணைந்த நிலையிலேயே செயல்பட்டன. காலியில் காணப்பட்ட மிகச் செறிந்த முஸ்லிம் குடியேற்றத்திலிருந்து அவ்வப்போது பெயர்ந்து, நகர்ந்த மக்களின் குடியேற்றங்களாகவே வெலிகாமம், மாத்தறை ஆகிய குடியேற்றங்களை நாம் நோக்குதல் வேண்டும். பொதுவாக மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு, தென் மாகாண முஸ்லிம்களின் வரலாற்றின் பின்னனியில் நோக்கப்படுவதே அர்த்தபூர்வமானதும், தர்க்கரீதியானதும், வரலாற்று ரீதியாக நோக்குமிடத்து சாத்தியமானதுமாகும்.

ஏற்கனவே குறிப்பிடப்பட்டவாறு, 13 ஆம் நூற்றாண்டளவிலேயே மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு பற்றிய ஆதாரபூர்வமான ஆவண ரீதியான குறிப்புக்களை நாம் பெற முடிகின்றது. 1344 ல் இலங்கையைத் தரிசித்த இப்னு பதூதாவின் பிரயாணக் குறிப்புக்கள் இவ்விடயத்தில் மிக முக்கிய வரலாற்று மூலாதாரங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இப்னு பதூதாவின் குறிப்புகள் தெவிநுவர என அழைக்கப்படும் தேவந்துறை முஸ்லிம்களின் மிக முக்கிய வணிகக் குடியேற்றமாக விளங்கியதை உணர்த்துகின்றன. தேவந்துறையை “தீனார்” எனக் குறிப்பிடும் இப்னு பதூதா அங்கு அரபு வணிகர்கள் நிறையக் காணப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். காலித் துறைமுகத்திலும் முஸ்லிம்களின் வணிகக் கப்பல்கள் நிறையக் காணப்பட்டதாகவும் காலியில்தான் இப்றாஹீம் என்னும் பெயருடைய கப்பல் தலைவரொருவரைச் சந்தித்ததாகவும் அவரது விருந்தினராகத் தான் தங்கியதாகவும் இப்னு பதூதா மேலும் குறிப்பிடுகின்றார். தனது பிரயாண நூலில் காலியைப் பற்றிக் குறிப்பிடும் இப்னு பதூதா அதனைத் தொடர்ந்து ஒரு முக்கிய வணிகத் துறைமுகமாக தேவந்துறையைக் குறிப்பிடுவதுடன், அவரது பிரயாணக் குறிப்புக்களில் வெலிகாமம், மாத்தறை பற்றி எதையும் குறிப்பிடவில்லை. அவரின் குறிப்புக்கள் மூலம் காலிக்கு அடுத்து மாத்தறை

வெலிகாமத்தை விட மிக முக்கிய துறைமுக நகராக தேவந்துறை விளங்கியதாக நாம் அனுமானிக்க முடிகிறது. அத்துடன் இப்னு பதூதா தேவந்துறை மிகப் பெரிய நகர் (”மதீன அளீம்”) எனக் குறிப்பிடுவதிலிருந்து, தேவந்துறையானது கிழக்கில் மாத்தறையையும், மேற்கில் தற்போதைய திக்குவல்லைப் பிரதேசத்தையும் உள்ளடக்கிய ஒரு விசாலமான அரபுக் குடியேற்றமாக விளங்கியிருக்கலாம் என நாம் கருத இடமுள்ளது. தேவந்துறையில் வாவுஹ என்னுமிடத்தில் ஒருகாலப் பிரிவில் முஸ்லிம்களின் மையவாடி ஒன்று அமைந்திருந்ததற்கான ஆதாரங்கள் இன்றும் காணப்படுகின்றன. முற்றிலும் சிங்களக் குடியேற்றமாக இன்று உள்ள வாவுஹ கிராமத்தில் ஒரு வயலுக்கு அண்மையில் இரண்டு மீஸான்களை இன்னும் காணக்கூடியதாக உள்ளது. இம்மீஸான் கற்கள் முற்றிலும் மண்ணில் புதையுண்டு, மிகச் சிறிய பகுதியே வெளிக்குப் புலப்படுவதால், அவற்றின் காலப்பிரிவை நிர்ணயிக்கத் துணை புரியும் வகையில் அதில் ஏதாவது குறிப்புக்கள் பதியப்பட்டுள்ளனவா என நிச்சயிக்க முடியாமல் உள்ளது. தேவந்துறை விஷ்ணு தேவாலயத்தில் ஒரு பகுதியில் அடித்தளங்களை சீர்படுத்தும் அகழ்வுப் பணிகளின் போது ஓமான் நாட்டைச் சேர்ந்த சில அரபு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அப்போது புதைபொருள் ஆய்வாளர் நாயகமாக விளங்கிய பேராசிரியர் பரண விதானவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த நாணயங்கள் அனுராதபுரத்திலுள்ள தொல்பொருள் நூதனசாலையில் உள்ளன. ஆனால் இந்நாணயங்கள் பற்றிய ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படாததால் இவற்றின் காலப்பிரிவை நிர்ணயிக்க முடியாதுள்ளது. ஆனால் ஓமான் பிரதேசத்துடனான வணிகம் இத்துறைமுகத்தினூடே நடைபெற்றதற்கான சான்றாக இது விளங்குகின்றது. மாந்தைத் துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற திட்டமிடப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் தேவந்துறை, வெலிகாமம், காலி ஆகிய துறைமுகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டால் அரபுச் சிலாசங்கள், நாணயங்கள், மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்த மட்பாண்டங்களைக் கண்டுபிடிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. மாந்தை துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களுக்கும் பாரசீக வளைகுடாப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களுக்குமிடையில் ஒருமைப்பாடுகள் காணப்படுவதை அடிப்படையாக வைத்து மாந்தையின் பாரசீக வளைகுடாத் தொடர்பு ஆர்தர் பிரிகட் ( Arther Prickatt )  போன்றா ஆய்வாளர்களால் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது போன்று மாத்தறை மாவட்ட துறைமுகங்களில் கண்டுபிடிக்கப்படும் அகழ்வாய்வு ஆதாரங்களின் அடிப்படையில் இத்துறைமுகங்களுக்கும் செங்கடல் பிரதேச துறை முகங்களான யெமன், ஏடன் போன்ற துறைமுகங்களுக்குமிடையிலான வணிகத்தொடர்பை உறுதிப்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளன.

மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றை, தென் மாகாண முஸ்லிம்களின் வரலாற்றின் பின்னணியில் ஆராய்வதற்கும், 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் இப்பிரதேச வணிக நிலை, அதன் தன்மை பற்றி விளங்குவதற்கும் துணைபுரியும் முக்கிய மூலாதாரங்களுள் ஒன்று 1911 ஆம் ஆண்டு காலியில் கண்டுபிடிக்கப்பட்ட மும்மொழிச் சிலாசனமாகும். 1410 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து வந்த கப்பல் தளபதியான செங்ஹோ ( Cheng Ho ) வினால் பொருத்தப்பட்ட இச்சிலாசனம் பாரசீகம், தமிழ், சீனம் ஆகிய மூன்று மொழிகளிலும் அமைந்துள்ளது. இந்து சமுத்திர வணிகத்தில் விஜய ஆட்சியாளர்களின் எழுச்சி ஏற்பட்ட இக்காலப் பிரிவில் சோழ மண்டலக் கரையை ( Coromendal Coast ) ஒட்டி நடைபெற்ற வணிகத்தில் தமிழ் மொழி மிகமுக்கிய இடம்பெற்றதை இச்சிலாசனம் உறுதிப்படுத்துகின்றது. இச்சிலாசனத்தில் காணப்படும் “ தேனா வரை – நயினார் “ என்னும் பதம் தேவிந்துறைக் கடவுளைக் (God of Devinuwara ) குறிப்பிடுவதாக பேராசிரியர் பரணவிதான அபிப்பிராயப்படுகிறார். சீனாவரை பரந்திருந்த விஜய வணிக ஆதிபத்தியத்தில் தமிழ்மொழி வகித்த முக்கிய இடம் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கும் சோழ மண்டலக் கரையிலுள்ள “ மஃபர் ” பிரதேச முஸ்லிம்களுக்கும் இடையில் காணப்பட்ட வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் ஆகியனவே மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள், பொதுவாகக் கூறின் சிங்களப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேச்சு மொழியாகவும், கலாசாரப் பண்பாட்டு மொழியாவும் கொள்ளும் வரலாற்றுச் சூழ்நிலையை உருவாக்கியது. இந்து சமுத்திர வணிகச் சொற்களில் கணிசமான அரபு, பாரசீக சொற்கள் இடம்பெற்றன. சிங்கள மொழியில் புடவையைக் குறிக்கும் “ ரெதி “ என்னும் சொல் “ ரிதா “ என்னும் அரபுச் சொல்லின் திரிபாக இருக்கலாம். சிங்கள மொழியில் பாரம்பரியமாக “ வஸ்தா “ என்ற சொல்லே ஆடையைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. சட்டையைக் குறிக்கும் “ கமிஸ “ என்னும் சொல் “ கமீஸ் “ என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். தென்மாகாணத்தில் குறிப்பாக மாத்தறை மாவட்டத்தில் மிகப் பரவலாக வழக்கிலுள்ள சிங்களப் பெயர்களில் ஒன்றான “ ஸஹபந்து “ என்னும் சிங்களப் பெயர் “ ஷாஹ் பந்தர் “ என்னும் பாரசீகப்பெயரிநன் திரிபாகும் என்ற விடயமும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். பாரசீக மொழியில் அரசன் அல்லது தலைவன் எனப் பொருள்படும், “ பந்தர் “ என்ற பதம் துறைமுகத்தைக் குறிக்கும். எனவே, “ ஷாஹ் பந்தர் “ எனில் துறைமுகத் தலைவன் என்பது கருத்தாகும். இது ஆரம்பத்தில் இப்பிரதேசங்களில் துறைமுகத்திற்குப் பொறுப்பாயுள்ள அதிகாரிகளைக் குறிக்கப்பயன்பட்ட ஒரு சொல்லாக வழக்கிலிருந்து, பிற்காலத்தில் அதனோடு தொடர்புடைய சிங்கள அதிகாரிகளைக் குறிக்கப் பயன்பட்டிருக்கலாம்.

கி. பி. 15 ஆம் நூற்றாண்டளவில் மாத்தறை மாவட்டத்தில் குறிப்பாக வெலிகாமம் பகுதியில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பராக்கிரமபாகு மன்னனின் காலப்பிரிவில் ( 1440 – 14450 ) இயற்றப்பட்ட “ ஸந்தேஸ காவிய “ என்னும் தூது இலக்கியங்களில் காணப்படுகின்றன. “ கோகில ஸந்தேஸிய “ “ கிரா ஸந்தேஸிய “ ஆகிய சிங்களத் தூதுப் பிரபந்தங்கள் “ யொன்வியா “ என்னும் சோனகப் பெண்கள் பற்றியும், “ மஹா வெலிகம “ ( வெலிகாமம் ) முஸ்லிம் குடியேற்றம் பற்றியும் குறிப்பிடுகின்றன.

மாத்தறை மாவட்ட முஸ்லிம்களுக்கும், கீழக்கரை, காயல்பட்டணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தென்னிந்திய முஸ்லிம்களுக்குமிடையில் வணிக ரீதியாகவும், கலாசார பண்பாட்டு ரீதியாகவும் நிலவிய தொடர்புகளும், அதனடியாக ஏற்பட்ட கலாசார பண்பாட்டுத் தாக்கமும் மிக ஆழமான ஆய்வினை வேண்டி நிற்கும் ஒரு துறையாகும். இந்து சமுத்திரத்தில் இலங்கையில் அரபுக் குடியேற்றங்கள் தோன்றிய காலப் பிரிவிலேயே தென் இந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதியான மலபார் பிரதேசத்திலும், கிழக்குக் கரையான மஃபர் பிரதேசத்திலும் அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டன. இப்பிரதேசத்தின் பிரதான அரபு வணிகக் குடியேற்றமாக காயல்பட்டணம் விளங்கியது. சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் தமிழகத்தில் முஸ்லிம்களின் முக்கிய வணிக மத்திய தளமாக காயல்பட்டணம் வளர்ச்சியடைந்தது. பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தென் இந்தியா முஸ்லிம் வணிகர்கள் இந்து சமுத்திர வணிகத்தில் முக்கிய இடம் வகித்தனர். கி. பி. 1505 ஆம் ஆண்டு நிகழ்ந்த போர்த்துகேயரின் வருகையோடு இலங்கை முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய உலகுக்குமிடையிலான கலாசார, பண்பாட்டுத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கும், தென் இந்திய முஸ்லிம்களுக்குமிடையிலான இறுக்கமான கலாசார, பண்பாட்டுத் தொடர்பே இலங்கை முஸ்லிம்களை கலாசார சூன்ய நிலையிலிருந்து பாதுகாத்தது.

கி. பி. 1505 ஆம் நூற்றாண்டு போர்த்துகேயரின் வருகை நிகழ்ந்த காலப்பிரிவில் இலங்கையின் தென், தென்மேற்குக் கரைப்பகுதிகளில் கொழும்பு, களுத்துறை, பேருவளை, அளுத்கமை, காலி, வெலிகமை, மாத்தறை ஆகிய பகுதிகளில் முஸ்லிம் குடியேற்றங்கள் பரவலாகக் காணப்பட்டதை போத்துகேய வரலாற்று ஆவணங்கள் மூலமாக நாம் அறிய முடிவதை கலாநிதி டீ.பீ. அபயசிங்ஹ “ போர்த்துகேயர் காலப் பிரிவில் இலங்கை முஸ்லிம்கள் “ என்ற தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகின்றார். 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளீல் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய முனையும் ஒருவர் இரண்டு முக்கிய இடர்பாடுகளை எதிர்நோக்குவதாக கலாநிதி அபயசிங்ஹ கருதுகின்றார். சிங்களவர்களுக்கு “ மஹாவம்ச “ “ சூலவம்ச “ராஜவலிய “ போன்ற வரலாற்று இதிகாச நூல்கள் காணப்படுகின்றன. தமிழர்களின் வரலாற்றை அறியத் துணை புரியும் “ யாழ்ப்பாண வைபவ மாலை “ தமிழ் மக்களுக்கு உள்ளது. ஆனால் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புடைய இத்தகைய ஒரு வரலாற்று இதிகாஸ நூல் காணப்படவில்லை. அடுத்து இக்காலப் பிரிவு முஸ்லிம்களின் வரலாறு பற்றி அறிவதற்கு அவர்களின் பரம வைரிகளாக விளங்கிய போர்த்துகேயர்களின் ஆவணங்களிலேயே நாம் தங்கியிருக்க வேண்டியுள்ளது. இது மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றுக்கும் பொருந்தும் ஓர் உண்மையாகும். கி. பி. 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளில் தென் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியமுஸ்லிம்கள் காரணமாக முஸ்லிம்களின் எண்ணிக்கை தெற்குப் பிரதேசத்தில் குறிப்பாக பேருவளை, அளுத்கமை, காலி, வெலிகம, மாத்தறைப் பகுதிகளில் அதிகரித்ததாகவும், இப்பகுதிகளில் கணிசமான முஸ்லிம் குடியேற்றங்கள் செறிந்து காணப்பட்டதையும் போர்த்துகேய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இக்காலப்பிரிவிலேயே முஸ்லிம்களை கடல் வணிகத்தோடு தொடர்புபடுத்தும் “ மரக்கல “ “ ஹம்பயோ “ போன்ற பதங்கள் சிங்களப் பிரதேசங்களில் குறிப்பாக, மாத்தறை மாவட்டத்தில் பரவலாகப் பயன்பட்டிருத்தல் வேண்டும் என நாம் அணனுமானிக்கலாம். சார்ல்ஸ் கார்டர் ( Charles Carter ) தனது சிங்கள – ஆங்கில அகராதியில் “ ஹம்பங்காரய ” என்ற பதம் சிங்கள பிரதேசங்களில் குடியேறிய தென்னிந்திய முஸ்லிம்களைக் குறிக்கப் பயன்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். ஹம்பயோ என்ற பதம் “ ஹம்பன் “ என்ற சொல்லினடியாகப் பெறப்பட்டதாகும். “ ஹம்பன் “ அல்லது “ சம்பன் “ ( Champana ) என்பது சிறு கப்பலைக் குறித்து. ஸோரத தேரர் தனது “ ஸுமங்கல ஸப்தகோஷய “ ( Sumangala Sapdhakoshaya ) என்னும் அகராதியில் “ மரக்கல “ என்ற பதம் மாலுமியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். மாத்தறை மாவட்டத்தில் ஒரு காலப் பிரிவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட “ மரைக்காயர் “ என்ற பதமும் இங்கு கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளில் மாத்தறை மாவட்டத்தில் பலம்பெற்று விளங்கிய முஸ்லிம்கள் வெலிகமவில் தங்களுக்கென உரிய விதிகளைக் கொண்டிருந்ததாகவும், மாத்தறை நகரில் அவர்கள் செறிந்து வாழ்ந்ததாகவும் குவாய்ரோஸ் பாதிரியார் தனது Temporal and Spiritual Conquest Of Ceylon என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.  இக்காலப் பிரிவில் மன்னார்ப் பகுதியில் தென்னிந்திய முஸ்லிம்கள் முத்து வியாபாரத்தில் ஈடுபட்டதற்கான வரலாற்றாதாரங்கள் உள்ளன. இந்தத் தென்னிந்திய வியாபாரிகள் தென்மேற்குப் பிரதேச முஸ்லிம்களுடன் தொடர்புகொண்டு செயல்பட்டிருத்தல் வேண்டும் என்ற அனுமானத்திற்கு இடமுள்ளது. போர்த்துகேயர் காலப் பிரிவில் ஆரம்பத்தில் கரையோரப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் உள்நாட்டு வியாபாரத்திலும் ஈடுபட்டனர். இவர்கள் மாடுகளைப் பயன்படுத்தி அவற்றில் கரை நாட்டின் விளைபொருட்களை உள்நாட்டு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று அப்பகுதியில் காணப்படும் விளைபொருட்களுடன் பண்டமாற்றுச் செய்தனர். கரை நாட்டின் உப்பு, கருவாடு ஆகிய பொருட்களை எடுத்துச் சென்று உள்நாட்டிலிருந்து வெற்றிலை, அரிசி, வாசனைத் திரவியங்கள், பாக்கு ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டனர். போர்த்துகேய ஆட்சியின் ஆரம்ப காலப் பிரிவில் மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வனிக முறை பற்றிய இக்குறிப்புக்கள், போர்த்துகேய ஆவணங்களான “தோம்பு”களில் காணப்படுகின்றன. துறைமுக நகரங்களான மாத்தறை, வெலிகாமம், தேவந்துறை போன்ற பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் விவசாய நிலங்களை பெற்றிருந்ததற்கான வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படவில்லை. ஆனால் உள்நாட்டுப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. போர்த்துகேய ஆட்சியின் ஆரம்பத்தில் அவர்கள் தங்களது ஆட்சியை இந்து சமுத்திரத்தில் பலப்படுத்திக் கொள்ளும் வரை முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கடுமையான போக்கைக் கடைபிடிக்கவில்லை. ஆனால், 1517 ஆம் ஆண்டளவில் அவர்களது அதிகாரம் பலமடைந்ததைத் தொடர்ந்து முஸ்லிம்கள் போர்த்துகேயரின் அடக்குமுறைகளுக்கு ஆளாகினர். பொதுவாக நோக்குமிடத்து போர்த்துகேயரின் 150 வருட கால ஆட்சியில் முஸ்லிம்களைப் பொறுத்தளவில், அவர்கள் கடைபிடித்த கொள்கை காலத்துக்குக் காலம் பல மாற்றங்களைக் கண்டது. முஸ்லிம்கள பல சந்தர்ப்பங்கலில் பல பகுதிகளிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதுடன், பல இம்சைக்கும் ஆளாக்கப்பட்டனர். ஆனால், இந்த அபாயம் நீங்கியதும் அவர்கள் போர்த்துகேய ஆதிக்கம் நிலவிய பகுதிகலில் மீண்டும் வந்து குடியேறி தங்களது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டனர். இவ்வாறு மாத்தறையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பிரிவொன்று, மீண்டும் குடியமர்ந்து 1642 ஆம் ஆண்டளவில் போர்த்துகேயருக்கு எதிராக டச்சுக்காரரின் உதவியைக் கோரும் அளவிற்கு சக்திபெற்றிருந்ததாக கெய்ரோஸ் குறிப்பிடுகின்றார். கி. பி. 1658 ஆம் ஆண்டு இலங்கை டச்சுக்காரரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. முஸ்லிம்களைப் பொறுத்தளவில், போர்த்துகேயரின் கொள்கையையே டச்சுக்காரரும் பின்பற்றினர். வணிகத் துறையில் முஸ்லிம்களின் செல்வாக்கை முறியடிப்பதே அவர்களின் நோக்கமாக அமைந்தது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் வணிகம் முஸ்லிம்களின் பிரதான தொழில் முயற்சியாக விளங்கியது. 17 ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய துறைமுகங்களுக்கும் இலங்கைக்குமிடையில் கணிசமான வணிகத் தொடர்புகள் காணப்பட்டன. தென்னிந்தியாவில் ராமநாத புரத்தில் வாழ்ந்த பெரிய தம்பிமரிக்கார், சீதக்காதி மரைக்காயர் ஆகியோர் முக்கிய தமிழக வணிகர்களாக விளங்கினர். இலங்கையிலும், செங்கடல் துறைமுகங்களிலும் சீதக்காதி மரைக்காயர் பல வர்த்தக காரியாலயங்களை நிறுவினார். அவரது மரக்கலங்கள் கீழக்கரையிலிருந்து புறப்பட்டுத் தொண்டி, பாசிப் பட்டணம் முதலிய துறைகளைக் கடந்து இலங்கையை வந்தடைந்த்து. மாத்தறை மாவட்டத்தில் குறிப்பாக வெலிகாமம் பிரதேசத்தில் தமிழக் கீழக்கரைப் பண்பாட்டின் தாக்கம் ஏற்பட ஆரம்பித்த காலகட்டமாக இக்காலப்பிரிவை நாம் கருதலாம்.

கண்டி வணிகத்தில் முஸ்லிம்களது நிலை பற்றியும், இவ்வணிகத்தில் மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றியும் ஆராய இது பொருத்தமான காலகட்டமாகும். கண்டியின் சிங்கள மன்னர்கள், 17 ஆம் நூற்றாண்டளவில் அவர்களது அரசியல் பலம் அதிகரித்து, வலுப்பெற்ற காலப்பிரிவில் அவர்களது மலைப்பகுதியில் ஒடுங்கியிருக்க விரும்பவில்லை. அவர்கள் தங்களது வணிகத்தைத் தொடர்ந்து நடாத்தவும், வெளியுலகத் தொடர்பைத் தொடரவும் விரும்பினர். 1658 ஆம் ஆண்டு டச்சுக்காரரின் ஆட்சி இலங்கையின் கரையோரப் பகுதியில் ஏற்பட்டபோது கற்பிட்டி, திருகோணமலை, கொட்டியாரம் போன்ற துறை முகங்களின் வணிகத்தில் கண்டியர்களின் செல்வாக்குக் காணப்பட்டது. கொட்டியாரத்திலிருந்து மகாவலி கங்கை தீரத்தோடு இணைந்து கண்டி வரையிலான தரைமார்க்கப் பாதை ஒன்று காணப்பட்டது. இந்த தரைப்பாதையைப் பயன்படுத்தி முஸ்லிம் வணிகர்கள் மூலம் கண்டி மன்னர்களின் கரையோரத் துறைமுகங்களுடனான வணிகம் நடைபெற்றது. இக்காலப் பிரிவில் தெற்குப் பகுதியிலும், தென்மேற்குப் பகுதியிலும் டச்சுக்கார்ரின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்து வந்ததால், இப்பகுதியிலுள்ள துறை முகங்களுடன் நேரடியாக வணிகத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு முஸ்லிம்களுக்குத் தடைபட்டது. எனவே, முஸ்லிம்கள் தங்களது “ தவளம் “ வணிகத்தை ருவன்வல்ல, ஸ்தாவக்க, கடுவன போன்ற எல்லை நகரங்களில் நடாத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மாத்தறைமாவட்டத்திலுள்ள கட்டுவன ஒரு பிரதான வணிக எல்லை நகரமாக இக்காலப் பிரிவில் விளங்கியது. தவளம் மூலம் முஸ்லிம் வணிகர்கள் பொருட்களைச் சுமந்து சென்று வியாபாரம் செய்த ஒரு முக்கிய நகராக அக்காலப்பிரிவில் கட்டுவன அமைந்தது. இங்கு “தவளம்”என்னும் பதம் பற்றிய ஒரு தெளிவு எங்களுக்கு அவசியமாகின்றது. உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் அங்கு அவர்கள் பெற்றுக்கொண்ட வணிகப் பொருட்களை கரையோரத் துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும், கரையோரத் துறை முகத்திலிருந்து பெற்றுக்கொண்ட வியாபாரப் பொருட்களை உள்நாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கும் தவளத்தைப் பயன்படுத்தினர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வியாபார பொருட்களைச் சுமந்து செல்ல முஸ்லிம்கள் மாடுகளைப் பயன்படுத்தினர். வணிக பொருட்களை சுமந்து செல்லும் மாடுகள் பிணைக்கப்பட்ட ஒரு மாட்டுக் கூட்டம் “தவளம்” என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நடைபெற்ற வணிகம் “தவள வணிகம்” ( Tavalam Trade ) எனப் பெயர் பெற்றது. தவள வணிக முறையை முஸ்லிம்களே  அறிமுகப்படுத்தினர். இம்முறை மத்திய கண்டி ராச்சியப் பகுதியில் மட்டுமன்றி, தென்மேற்கு, தெற்குக் கரையோரப் பகுதியின் வணிகப் பொருட்களை உள்நாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. இதற்கு மிகச் சிறந்த ஆதாரமாக மாத்தறை நகருக்கு மிக அண்மித்ததாயுள்ள “மடிகே” என்னும் இடம் விளங்குகின்றது. மடிகே என்பது அரசாங்கத்தின் பொருட்களை எடுத்துச் செல்லும் ஒழுங்கை மேற்கொள்ள கண்டி ஆட்சியாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு இலாகாவாகும். அரசாங்கத்திற்குரிய தானியங்களையும், ஏனைய பொருட்களையும் விளைச்சல் நிலங்களிலிருந்து களஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்ல தவளங்களுக்கான மாடுகளை ஒழுங்கு செய்வது மடிகே இலாகாவின் பொறுப்பாக இருந்தது. இந்த மடிகேகளுக்குப் பொறுப்பாக முஸ்லிம்களே விளங்கினர். “மடிகே பத்த” ( Madige Badde ) என்னும் இந்த இலாகாவுக்கு பொறுப்பான “மடிகே பத்த நிலமே” இருந்தார். கீர்த்தி சிறீ ராஜசிங்ஹ மன்னனின் காலப்பிரிவில் (1747 – 81 ) ஷெய்க் ஆலிம் என்பார் மடிகே பத்த நிலமேயாகப் பணிபுரிந்தார். கண்டி ராச்சியத்தில் மட்டுமன்றி, கரைநாட்டுப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் தவளம் முறையிலான வணிகத்தில் ஈடுபட்டமைக்கும்,”மடிகே பத்த” அமைப்பு முறை காணப்பட்டதற்கும் மாத்தறையை அணித்துள்ள, இன்றும் “மடிகே” என அழைக்கப்படும் கிராமம் மிகச் சிறந்த ஆதாரமாகும். இன்று மடிகே என அழைக்கப்படும் இந்த இடம் ஒரு காலப்பிரிவில் மடிகே அமைந்திருந்த இடமாக இருந்திருக்கலாம். இந்த மடிகே கடற்கரைப் பிரதேசத்தை அணித்து அமைந்திருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். எனவே, துறைமுகத்திலிருந்து பொருட்களை உள்நாட்டு பிரதேசங்களுக்குஎடுத்துச் செல்வதற்கும் உள்நாட்டுப் பொருட்களைத் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் தவளங்களை ஒழுங்குபடுத்தும் இலாகா தற்போதைய மடிகேயில் ஒரு காலப்பிரிவில் அமைந்திருக்கலாம்.

காலி, வெலிகாமம், மாத்தறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கல் நெல், பாக்கு முதலிய பொருட்களை மத்திய மலைநாட்டுப் பகுதிக்கு, கண்டி ராச்சியப் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் உள்நாட்டு வியாபார சரக்குகளை வாங்குவதைத் தடுக்கும் முயற்சிகளை டச்சு ஆட்சியாளர் மேற்கொண்டனர். வெலிகாமம், மாத்தறையைச் சேர்ந்த முஸ்லிம்கள் நகர எல்லையை விட்டு வியாபாரத்திற்காக வெளியேறுவதைத் தடுக்கும் ஒரு கட்டளை 1659 ஆம் ஆண்டு டச்சு ஆட்சியாளர்களால் பிறப்பிக்கப்பட்டது. வணிகத்துறையில் மட்டுமன்றி, மத விவகாரங்களைப் பொறுத்தளவிலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் டச்சுக்காரரின் கீழ் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினர். டச்சு அதிகாரியான மட்ஸியுகெர் ( Matsuyeker ) “ முஹம்மதிய “ சமயத்தை ஒழித்துக்கட்டி கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதைத் தனது முக்கிய கொள்கையாகப் பிரகடனப்படுத்தினர். இந்த பிரகடனத்திற்கேற்ப டச்சு அதிகாரியான வான் கொயன்ஸ் ( Van Goens ) மாத்தறை முஸ்லிம்களை அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்ற அனுமதியளிக்க வேண்டாமென்றும், நகரத்திற்குட்பட்ட பிரதேசத்திலோ அல்லது வெளிப்பிரதேசங்களிலோ முஸ்லிம் மதத் தலைவர்களுக்கு இடமளிக்க வேண்டாமென்றும், தனக்குக் கீழ் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கும் கட்டளை பிறப்பித்தார். ஆனால் காலப்போக்கில் நாட்டின் யதார்த்த நிலையை உணர்ந்த டச்சுக்காரர்கள் அவர்களது பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்துவதில் முஸ்லிம்களைப் புறக்கணித்தல் முடியாது என்ற உண்மையை உணர்ந்தனர். எனவே, முஸ்லிம் சமூகத்துடன் தங்களது உறவை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கோடு சில முயற்சிகளில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில், முஸ்லிம் கிராமத் தலைவர்கள் ( Head Men ) நியமித்தல் இந்நோக்கை அடைய அவர்கள் கையாண்ட ஒரு முறையாக அமைந்தது. கி. பி. 1762 ஆம் ஆண்டு கொழும்பில் முஸ்லிம் அதிகாரியாக உதுமான்கண்டு மேஸ்திரி அய்துருஸ் சீதக்காலெப்பை மாத்தறை முஸ்லிம்களின் கிராம அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வான் இம்ஹோப் ( Van Imhobb ) என்னும் டச்சு அதிகாரி 1733 இல் மாத்தறையில் முஸ்லிம் கமிஷனர்களை நியமித்தார். இவர்கள் ( Moor Commissioners ) என அழைக்கப்பட்டனர். இலங்கையில் டச்சுக்காரர்களின் வரலாற்றோடும், மலாயர்களின் வரலாற்றோடும் தொடர்புடைய ஓர் இடமாக மாத்தறை நகரிலிருந்து ஐந்து மைல் தூரத்திலுள்ள “ஸுல்தான்கொட” என்னும் கிராமம் உள்ளது. டச்சுக்காரர் மொலுகஸ், இந்தோனேஷியா போன்ற தங்களது ஆதிக்கத்தின் கீழிருந்த கிழக்கிந்தியத் தீவுகளில் தங்களது ஆட்சிக்கெதிரகக் கிளர்ச்சி செய்த அரச பரம்பரையினர்களையும், பிரதானிகளையும்தென்னாபிரிக்காவின் கேப் பிரதேசத்திற்கும், இலங்கைக்கும் நாடு கடத்தினர். கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் ஜாவா பிரதேசத்தின் இளவரசர்கள் பலர் இவ்வாறு டச்சுக்காரர்களால் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். கி. பி. 1709 இல் இவ்வாறு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ஜாவா ஸுல்தான் தடுத்து வைக்கப்பட்ட இடமே ஸுல்தானகொட எனப் பெயர்பெற்றது.

மாத்தறை மாவட்டத்திலுள்ள குடிசனப் பரம்பல் பற்றி நோக்குமிடத்து, இம்மாவட்டத்தின் உள்நாட்டுப் பகுதியில் காணப்படும் கிரிந்தை, மீயல்லை, யக்கஸ்முல்லை, கொடபிடிய போன்ற கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவற்றுள் சில கிராமங்கள் மாத்தறை மாவட்டத்துள் அடங்காவிட்டாலும் மாத்தறை மாவட்ட வரலாற்றோடு தொடர்புடைய கிராமங்களாக உள்ளன. இந்தக் கிராமங்களின் தோற்றம் இரு வகையில் ஏற்பட்டிருக்கலாம். போர்த்துகேயராலும், டச்சுக்காரர்ராலும் மாத்தறை நகரில் வாழ்ந்த முஸ்லிம்கள் கொடுமைக்கும் இம்சைக்கும் ஆளாக்கப்பட்டனர். மாத்தறைப் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த போர்த்துகேய தளபதி அண்டோனியா டி அமரல் டி மெனஸிஸ் ( Anotonio De Amaral De Menezis ) மாத்தறை முஸ்லிம்கள் மீது பயங்கரமான கொடுமைகளை  இழைத்தான். 1643 ஆம் ஆண்டு மாத்தறை முஸ்லிம்கள் வாழும் 200 க்கும் 300 க்கும் இடைப்பட்ட முஸ்லிம் ஆண்களையும், இளைஞர்களையும் வெட்டிக் கொலை செய்ததோடு, பெண்களையும், குழந்தைகளையும் கொழும்புக்கு அடிமைகளாக அனுப்பி வைத்தான். இத்தகைய பயங்கரச் செயல்களால் அச்சமடைந்த முஸ்லிம்கள் சிலர் உள்நாட்டில் சென்று தஞ்சம் புகுந்து, அப்பிரதேசங்களில் குடியேறியிருக்கலாம்.இந்த வகையிலேயே இக்கிராமங்களின் தோற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்பது பொதுவான கருத்தாகும்.

இந்தக் கிராமங்களின் தோற்றத்தினைக் கண்டி ராச்சியத்தில் அதன் உள்நாட்டுப் பகுதியிலிருந்து, கரையோரத் துறைமுகங்கள் வரை அமைந்திருந்த வணிகப் பாதையில் தோன்றிய கிராமங்களோடு நாம் ஒப்பிட்டு நோக்கலாம். போக்குவரத்து வசதிகள் மிகவும் கஷ்டமான நிலையிலிருந்த அக்காலப் பிரிவில் “ தவளங்கள் “ பயணம் செய்வதற்கு பல நாட்கல் எடுத்தன. எனவே, சில இடங்களில் தங்கி இரவைக் கழித்து மறுநாள் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த தங்குமிடங்கள் கால வளர்ச்சியில் முஸ்லிம் குடியேற்றங்களாக மாறின. மாத்தறை மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களான கிரிந்தை, மீயல்லை, யக்கஸ்முல்ல, கொடபிடிய, ஹொரகொட போன்ற கிராமங்கள் இந்த அடிப்படையில் தோன்றியிருக்கலாம். ஏற்கனவே குறிப்பிட்டவாறு திக்குவல்லை அக்காலப்பிரிவில் தேவந்துறையின் வனிக மத்தியதலத்தின் தொடர்ச்சியாக விளங்கியிருக்கலாம். அல்லது போர்த்துகேயர் காலப்பிரிவில் முஸ்லிம்கள் மாத்தறைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட போது பாதுகாவல் கருதி குடிபெயர்ந்து அப்பிரதேசத்தை நோக்கிச் சென்றிருக்கலாம். இக்கிராமங்களின் தோற்றம், பூர்வீகம் பற்றி நாம் இத்தகைய அனுமானங்களுக்கு வர முடிகின்றதேயன்றி ஆவண ரீதியான சான்றுகளுடன் உறுதியான முடிவுகளுக்கு வருதல் இன்றைய நிலையில் சாத்தியமன்று. இக்கிராமங்களின் தோற்றம், பூர்வீகம் பற்றி உரிய முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும். இந்த ஆய்வு மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு பற்றிய இன்னும் பயனுள்ள உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள துணைபுரியும்.

மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றோடு இணைந்து காணப்படுவது அவர்களின் கலாசாரப் பாரம்பரியமாகும். கிழக்காபிரிக்காவில் பண்டுமொழி ( Bantu ) பேசும் மக்களினதும், அறபு வணிகர்களினதும் இணைப்பால் உருவான பண்பாட்டை “ஹஸ்ரமி கலாசாரம் எனப் பேராசிரியர் டிர்மிங்ஹம் (Tirmingham ) தனது Islam in East Africa என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். கிழக்காபிரிக்கப் பிரதேசத்தில் யெமனைச் சேர்ந்த ஹஸ்ரமி வணிகர்கள், ஸூபிகளின் தாக்கத்தினால் தோன்றியதே இந்தப் பண்பாடாகும். மாத்தறை மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்தளவில், குறிப்பாக வெலிகாமத்தில் இத்தகைய கலாசாரப் பண்புகள் காணப்படுகின்றன. தென்னிலங்கையுடனான வணிகத்தில் மலபார், காயல் பட்டணம், கீழக்கரை போன்ற தமிழகத்தில் முக்கிய வணிக, பண்பாட்டு மத்திய தலங்கள் முக்கிய இடம் வகித்தன. இப்பிரதேசங்களுக்கும் செங்கடல் பிரதேசத்திற்குமிடையில் நிலவிய வணிகத் தொடர்பு காரணமாக யெமன் நாட்டின் ஹஸ்ரமி கலாசாரத்தின் தாக்கம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் பரம்பரையான “அஹ்லுல் பைத்”கள் வெலிகாமத்தில் கணிசமான அளவு குடியேறினர். இம்மாவட்டத்தின் இன்னொரு சிறப்பம்சம் ஸூபி தரீக்காக்காளின் செல்வாக்காகும். யெமன் நாட்டைச் சேர்ந்த ஸூபி மகான்களின் வருகையும் காயல்பட்டண, கீழக்கரை, மலபார் தொடர்பும் ஸூபித் தரீக்காக்களின் செல்வாக்கிற்குக் காரணமாக விளங்கின. ஷெய்க் இஸ்மாயீல் இஸ்ஸதீன் யமானி என்னும் ஸூபிமார்கள் யெமனிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தார். அவரது புதல்வர் ஷெய்க் யெஹ்யா அல் – யமானி மாத்தறையில் வாழ்ந்து, சன்மார்க்கப் பணிபுரிந்தார். கீழக்கரையிலிருந்து வருகை தந்த ஸெய்யித் முஹம்மத் மாப்பிள்ளை ஆலிம் அவர்களின் சன்மார்க்கப் பணி மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் மத, கலாசார பணியின் உயர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைப் புரிந்தது. அவர்கள் கீழக்கரையில் ஏற்கனவே நிறுவியிருந்த மத்ரஸதுல் அரூஸியாவின் அமைப்பில் 1884 ஆம் ஆண்டு வெலிகாமத்தில் “ மத்ரஸதுல் பாரி” என்னும் பெயரில் ஓர் அறபு மத்ரஸாவை நிறுவினார்கள். இதுவே இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மத்ரஸாவாகும். மாத்தறையில் மன்ஹருல் ஸலாஹ், மஆலுல் ஹைராத் என்னும் பெயரில் இரண்டு தைக்காக்களையும் அவர்கள் கட்டியெழுப்பினார். கந்தறை, திக்குவல்லை போன்ற கிராமங்களையும் அவர்களது சன்மார்க்கப்பணி உள்ளடக்கியது.

மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் பெரும்பாலும் வணிகத்தையே முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.1882 இல் ஒராபி பாஷாவின் வருகை, 1882 க்கும் 1887 க்குமிடையில் ‘முஸ்லிம் நேசன்’ பத்திரிகை மூலம் சித்திலெவ்வை மேற்கொண்ட சமூக சீர்திருத்தப்பணி போன்றவை மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும். முஸ்லிம் நேசனில் மாத்தறையைச் சார்ந்த அய்துரூஸ் லெவ்வை மரிக்கார், மீராகண்டு மரிக்கார் போன்றோர் எழுதியுள்ள ஆசிரியர் கடிதங்கள் மூலம் சமூக விவகாரங்களோடு தொடர்புடைய ஒரு சிந்திக்கும் வர்க்கம், அது எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருப்பினும், மாத்தறை மாவட்ட முஸ்லிம்களிடையே காணப்பட்டதை நாம் அறிய முடிகின்றது. 1904 ஆண்டு ஐ.எல். எம். அப்துல் அஸீஸ் அவர்கள் கொழும்பில் துருக்கித் தொப்பி விவகாரம் தொடர்பாக நடாத்திய கூட்டத்திற்கு ஒவ்வொரு பிரதான முஸ்லிம் ஊர்களிலிருந்தும் இரண்டு பிரதிநிதிகளை அனுப்பும்படி வேண்டியிருந்தார். இதில் மாத்தறை மாவட்டத்திலிருந்து பங்குபற்றியவர்கள் பற்றிய விவரமும் சரியாகத் தெரியவில்லை. 1925 ஆம் ஆண்டு மாத்தறை முஸ்லிம்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் தோற்றுவிக்கப்பட்டது பற்றிய குறிப்புக்கள் உள்ளன. 1945 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் கல்வியின் மூலம் எழுச்சி பெற்ற ஒரு மத்திய தர வர்க்கத்தின் தோற்றத்தை நாம் அவதானிக்க முடிகின்றது. சட்டத்துறை, ஆசிரியத்தொழில் ஆகிய இரண்டு தொழில்களையும் தழுவியே இந்தப் படித்த மத்தியதர வர்க்கம் இயங்கியது. கால வளர்ச்சியில் ஏனைய துறைகளையும் தழுவி இந்தப் படித்த மத்தியதர வர்க்கம் சமூகத்தின் புத்திஜீவிகளின்  இடத்தைப் பெற்றது. இந்தப் புத்தி ஜீவிகளின் தோற்றத்தினடியாக மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாம் அவதானிக்க முடிகின்றது. பாரம்பரியமாக வணிகத்தையே தனது பொருளாதார அடிப்படையாகக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம், காலத்தின் மாற்றங்களை உணர்ந்து செயற்படுவதிலேயே அதன் எதிர்காலம் தங்கியுள்ளது.

மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் பெருமைப்படத்தக்க வரலாற்றுப் பாரம்பரியத்தை உடையவர்கள். போர்த்துகேயரினதும், டச்சுக்காரரினதும் அடக்கு முறை, கொடுமைகளை எதிர்கொண்டு தங்களது தனித்துவத்தை அவர்கள் பாதுகாத்துக் கொண்ட வரலாறு, அவர்களது இஸ்லாமியப் பற்றுக்கும், சமூக ஒருமைப்பாட்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பான்மைச் சிங்களவர் மத்தியில் வாழும் மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் தங்களது மத, கலாசார, பாரம்பரியத்தைப் பேணிவாழும் அதே நேரத்தில் பெரும்பான்மை இனத்தவர்களுடன் புரிந்துணர்வுடனும், இணக்க மனப்பான்மையுடனும் இணைந்து வாழ்வதும் அவர்களது வரலாற்றினதும், பாரம்பரியத்தினதும் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

”ஒவ்வொரு சமூகமும் தனது வரலாற்றுச் சுமையை முதுகில் சுமந்து கொண்டே எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்கின்றது” என அல்லாமா இக்பால் குறிப்பிட்டது போன்று மாத்தறை மாவட்ட முஸ்லிம் சமூகம் கடந்த கால வரலாற்றில் காலூன்றி எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச்செல்ல அவர்களது வரலாறு ஒரு தூண்டுதலாக அமைதல் வேண்டும். இதுவே சமூகங்களைப் பொறுத்தளவில் வரலாற்றின் பணியாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *