கவிஞர் ஏ. இக்பால் எழுதிய “மௌலானா ரூமியின் சிந்தனைகள்“ நூலுக்கு கலாநிதி. எம்.ஏ.எம் சுக்ரி எழுதிய முன்னுரை

இஸ்லாம் அதன் அரசியல் வரலாற்றின் மிக இருள் சூழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தலை சிறந்த சிந்தனையாளார்களையும், தத்துவ ஞானிகளையும் ஈன்றெடுத்துள்ளது என்பதை இஸ்லாமிய வரலாறு எமக்குணர்த்தி நிற்கின்றது.

இஸ்லாமிய வரலாற்றினை அணுகி ஆராய்ந்த இஸ்லாமிய அறிஞரும், கீழைத்தேய ஆராய்ச்சியாளரும் இப்பண்பினை இஸ்லாமிய வரலாற்றின் ஒரு தனிச்சிறப்பெனக் கருதுவர்.

கி.பி. 1258ஆம் ஆண்டு நிகழ்ந்த மங்கோலியத் தாத்தாரியரின் படையெடுப்பானது இஸ்லாத்தின் அரசியல் சக்தியை ஆட்டங்காணச் செய்தது. பல நூற்றாண்டுகால உழைப்பின் பயனாய் விளங்கிய விலைமதிக்கமுடியாத கலைச் செல்வங்களையும், பண்பாட்டுப் பெருமையினையும் அழித்து நிர்மூலமாக்கிவிட்டது.

மங்கோலியப்படையெடுப்பு இஸ்லாத்தின் அரசியல் சக்தியை சீர்குலையச் செய்தபோதிலும் அதன் ஆத்மீக அடிப்படையை பலமிழக்கச் செய்யமுடியவில்லை. அரசியல் துறையில் முஸ்லிம் உலகம் தளர்ச்சியுற்ற நிலையில் அதன் ஆன்மீக அடிப்படை ஒரு புத்துணர்வைப் பெற்று முஸ்லிம் உலகை உயிர்நிலையாக நின்று இயக்குவிப்பதைக் காண்கிறோம். இந்தச் சூழ்நிலையிலேயே மங்கோலியப் படையெடுப்பின் அரசியல் விளைவுகளை ஈடுகொடுக்கத் தோன்றிய ஆன்மீக இயக்கத்தின் பிரதிநிதிகளாக பாரசிகம் இரு மெஞ்ஞான செல்வர்களை வழங்குகின்றது: அவர்கள்தான் மௌலானா ரூமியும், மகான் ஷெய்கு ஸாஅதியும் ஆவார்.

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் ஹிஜ்ரி 604 கி.பி. 1207 இல் பல்க் நாட்டில் பிறந்தார்கள். ரூமியின் பிறப்புக்குச் சிலநாட்களின் பின் அவரது தந்தைக்கும் பல்க் நாட்டின் மன்னருக்குமிடையில் சில அரசியல் தகராறுகள் காரணாமாக சில மனக் கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பல்க் நாட்டைவிட்டு ஜலாலுத்தீனின் தந்தை குடிபெயர்ந்து சென்றார். இவ்வாறு பல்வேறு இடங்களுக்கும் அலைந்து சென்ற ரூமியின் குடும்பத்தினர் இறுதியில் சின்னாசியாவிலுள்ள (Asia minor) கோன்யா என்னும் ஊரில் குடியேறினர். அரபு மொழியில் சின்னாசியப் பிரதேசம் ரூம் என அழைக்கப்பட்டது. இதிலிருந்தே ஜலாலுத்தீனுக்கு `ரூமி` என்ற காரணப்பெயர் வழங்கப்படலாயிற்று. ஜலாலுத்தீன் பிரபல சூபிக் கவிஞரான பர்உத்தீன் அத்தாரை நீஸாபூரில் சந்தித்தாரென்றும் ரூமியின் பண்புகளால் கவரப்பட்ட அத்தார் தனது `அஸரார் நாமா` என்ற மெஞ்ஞான தத்துவங்கள் அடங்கிய நூலை ரூமிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தாரென்றும் சிலர் கூறுவர். ஆனால், இத்தொடர்பு நீடித்ததைப்பற்றியதற்கான குறிப்புக்களோ, ரூமியின் கருத்துக்களில் அத்தாரின் சிந்தனையின் செல்வாக்குக் காணப்படுவதற்கான ஆதாரங்களோ இல்லை.

ஜலாலுத்தீன் ரூமி ஆரம்பகாலத்தில் சட்டம், தர்க்கம், தத்துவம் முதலிய தர்க்கரீதியான கலைகளிலேயே (Exact sagacious) ஆர்வம் செலுத்தினார். ஆனால் ரூமியின் ஆன்மீகத் தாகத்தையும், மெஞ்ஞான அறிவு பற்றிய வேட்கையினையும் இக்கலைகளினால் தீர்க்க முடியவில்லை. எனவே ரூமியின் ஆர்வம் மெஞ்ஞானக் கலையின்பால் சென்றது. புர்ஹானுத்தீன் திர்மதீ, ஷம்ஸ் தப்ரீஸி போன்ற மெஞ்ஞானச் செல்வர்களோடு தொடர்புகொண்டு `தஸவ்வுப்` பற்றிய அறிவினை அவர் பெற்றார். ஷம்ஸ் தப்ரீஸி ரூமியோடு பல்லாண்டுகள் தங்கி அவர்மீது தனது செல்வாக்கினை ஆழப் பதித்துவிட்டார். ரூமியின் கவிதைத் தொகுதியொன்றிற்கு `தீவானே ஷம்ஸே தப்ரீஸி` எனப் பெயரிடப்பட்டதே ரூமியின்மீது அவரது செல்வாக்கைக் குறித்து நிற்கின்றது. கி.பி. 1247இல் ஷம்ஸ் தப்ரீஸ் மரணித்த போது ரூமியை ஆறாத் துயரம் ஆட்கொண்டது. தனது மெஞ்ஞான குருவின் நினைவாக `மௌலவியா` என்னும் தரீக்காவை ரூமி நிறுவினார்.

மௌலானா ரூமி இஸ்லாமிய உலகம் ஈன்றெடுத்த இணையற்ற மெஞ்ஞானச் செல்வர். பாரசீக இலக்கியம் கண்ட தலைசிறந்த மெஞ்ஞானக் கவிஞர். ரூமி எண்ணற்ற பல `ருபய்யாத்கள்`, `கஸல்கள்` என்பனவற்றை உள்ளடக்கிய பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். அவரது `தீவான்` என்னும் தொகை நூலில் இடம்பெற்றுள்ளன. தனது மெஞ்ஞானப் போதகரும், ஞான குருவுமான ஷம்ஸ் தப்ரீஸிக்கு நன்றிக் கடனாக அதற்கு `தீவானே ஷம்ஸே தப்ரீஸ்` எனப் பெயரிட்டார்.அவரது புகழ் பரவக் காரணமாய் அமைந்த பெருநூல் `மஸ்னவி` ஆகும். `பாரசீக மொழியின் குர் ஆன்` என இந்நூல் புகழப்படும் பான்மையே அதன் சிறப்பிற்குச் சிறந்த சான்றாய் அமைகின்றது.

சூபித்துவம், அதன் மரபுவழி உண்மைகள், நெறிமுறைகள் என்பனவற்றை உவமான உவமேயங்களைக் கொண்டும், பல உருவகக் கதைகளைக் கொண்டும் மௌலானா ரூமி விளக்கியுள்ளார். உருவகக் கதைகளின் துணைகொண்டு மெஞ்ஞானத் தத்துவங்களை விளக்குத்தல் பாரசீக இலக்கிய மரபாக இருந்து வந்துள்ளது. இத்துறையில் பரீஉத்தின் அத்தார் என்ற பாரசீக சூபிக் கவிஞர் இயற்றிய `மந்திக் – தாஇர்` (பறவைகளின் பாராளுமன்றம்) என்ற நூல் பாரசீக இலக்கியத் துறையில் சிறப்பிடம் வகிக்கின்றது. இந்த  மரபை அடியொற்றியே மௌலானா ரூமி இப்பெருநூலை இயற்றியுள்ளார். மாபெரும் ஆன்மீக உண்மைகள், மெஞ்ஞானத் தத்துவங்கள் என்பன சிறிய உருவகக் கதைகளின் துணைகொண்டு விளக்கப்படுகின்றன. மனிதனுக்கும் இறைவனுக்குமிடையேயுள்ள ஆன்மீக உறவினை விளக்குவதும், தனது மூலஸ்தானத்திலிருந்து பிரிந்த மனித ஆத்மா அந்த மூலப் பொருளை அடைவதன் மூலமே அமைதி பெறமுடிகின்றது என்ற உண்மையும் மஸ்னவியில் விளக்கப்படுகின்றது. மஸ்னவியின் ஆரம்பக் கவிதை இதனை சூட்சகமாக உணர்த்தி நிற்கின்றது.

 

“ சோகக் குரலெழுப்பும் புல்லாங்குழல்

என்ன கதையைக் கூறுகின்றது எனக் கேளுங்கள்

அது தனது பிரிவின் துயரைப்பற்றிக் கூறுகின்றது. அதன் மூலஸ்தானமான மூங்கிற் புதரிலிருந்து

தன்னைப் பிரித்துவிட்டார்கள் எனத்

துயரக் குரலெழுப்பி முறையிடுகின்றது…. “

 

மஸ்னவி ஷரீபின் இந்த ஆரம்பக் கவிதையில் மனித ஆத்மாவைப் புல்லாங்குழலுக்கும், புல்லாங் குழலை செய்வதற்கான மூங்கில் வெட்டி எடுக்கப்படும் மூங்கிற் புதரை அந்த ஆன்மாவின் மூலஸ்தானமான இறைவனின் சன்னிதானத்திற்கும் உவமிக்கப்பட்டுள்ளது. எனவே புனித ஆன்மா அதன் மூலஸ்தானத்தைச் சென்றடையும் வரையில் நிம்மதியடைவதில்லை என்ற சூபித் தத்துவத்தை மிக எளிய சாதாரண உவமையின் துணை கொண்டு ரூமி விளக்கியுள்ளார். மஸ்னவியின் இந்த ஆரம்பக் கவிதையைப் பேராசிரியர் பால்மர் (Professor Palmer) ‘Song of the Read’ ‘புல்லாங்குழலின் கவிதை` என அழைக்கின்றார். இந்த ஆரம்பக் கவிதையில் கூறப்படும் தத்துவமே மஸ்னவியில் விரித்துரைக்கப்படுகின்றது. மஸ்னவிக்கு மௌலானா ரூமி அரபு மொழியில் எழுதியுள்ள முன்னுரையில் அது பாரசீக மொழியிலுள்ள குர்ஆனென்றும், உன்னதமான அறிவுரைகளையும், ஞானங்களையும் உள்ளடக்கிய பெருநூலென்றும் குறிப்பிடுகின்றார். ரூமியின் `தீவானே ஷம்ஸே தப்ரீஸி`, `மஸ்னவி` ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் நிக்கல்ஸன் ரூமியின் மொழி நடை பாரசீகக் கவிஞர்களுள் ஒருவரான ஹாபிஸின் நடையின் கவர்ச்சியையும், ஒழுங்கையும் பெறவில்லை எனக் கருதுகின்றார். ஆனால் ஒரு கவிஞர் என்ற முறையில் தனது சூபிக் கருத்துக்களை அவற்றின் உயர்த்தன்மை மாறாமல் கவிதை உருவில் வெளியிடுவதில் மகத்தான வெற்றி கண்டார் என்றும் குறிப்பிடுகின்றார்.

பொதுவாக இஸ்லாமிய வரலாற்றிலும், சிறப்பாக சூபி தத்துவத்தின் வளர்ச்சியிலும் மௌலானா ரூமியின் செல்வாக்கு ஆழப் பதிந்துள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.

ரூமியின் வரலாறு என்பது இஸ்லாமிய தத்துவத்தின் வரலாறு எனக் கூறக்கூடிய அளவிற்கு ரூமியின் இலக்கியப் பணியும், இஸ்லாமியப் பணியும் விளங்கும் பான்மையினை கலாநிதி கலிபா அப்துல் ஹகீம் என்பவர் தனது ‘The metaphysics of Rumi’ என்ற ஆராய்ச்சி நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

The Study of Rumi is interesting not. Because he is the greatest mystic poet of Islam but because of the fact that in him we find a man who has left no problem of Philosophical and religious life untouched. In him we find not the creation of problems but the rethinking in the light of Personal experience of all that had gone before him so in one way the study of Rumi is the study of the best achievements of Philosophical and religious life in Islam. (The Metaphysics of Rumi – P.3)

“ரூமியைப் பற்றிய ஆராய்ச்சி மிக இன்பம் பயப்பதாகும். அது அவர் இஸ்லாத்தின் தலை சிறந்த மெஞ்ஞானக் கவிஞர் என்ற காரணம் பற்றியன்று. ஆனால் வாழ்க்கையின் மத அடிப்படையிலும் தத்துவ அடிப்படையிலும் எழுந்த எல்லாப் பிரச்சினைகளையும் தொட்டுச் சென்றவர் என்ற முறையிலேயே ரூமி பற்றிய ஆய்வு இன்பம் பயப்பதாக அமைகின்றது. ரூமி பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவிலை. ஆனால் அவருக்கு முன்னெழுந்த பிரச்சினைகள்பற்றித் தனது சொந்த அனுபவத்தின் பிரச்சினைகள் பற்றித் தனது சொந்த அனுபவத்தின் துணைகொண்டு ஆய்வு நிகழ்த்தினார். எனவே ஒருவகையில் பார்க்கப்போனால் ரூமியைப் பற்றிய ஆராய்ச்சியானது இஸ்லாத்தின் மதத்துறையிலும், தத்துவத் துறையிலும் சாதிக்கப்பட்ட சாதனைகள் பற்றிய ஆராய்ச்சியாகவே அமையும்.

ரூமியைப் பற்றிய ஆராய்ச்சி அவரது மஸ்னவியை மையமாகக் கொண்டே நிகழ்த்தப்படல் வேண்டும். ஆனால் இது அவ்வளவு இலகுவான செயலன்று. ஏனெனில் மஸ்னவியின் அமைப்பு முறை மிகச் சிக்கலானது. பல்வேறு வர்ணங்கொண்ட நூலிழைகள் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டு இழைக்கப்பட்ட ஆடைபோன்று மஸ்னவி விளங்குகின்றது. அதனை பிரித்துணர ஆழ்ந்த பொறுமை வேண்டும். ஒரு சாதாரண எளிய கதையினூடே சிக்கலான தத்துவத்தைப் பின்னிச் செல்லும் பண்பு மஸ்னவியில் உண்டு. ஒரு அறிவுரை, அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த பெருந்தத்துவம், திடீரென மெஞ்ஞானக் கிளர்ச்சியின (ECTACY)டியாக எழும் ஒரு கருத்துரை, அதனைத் தொடர்ந்து ஒரு சிறு உருவகத்தை, என ஒழுங்கற்று, ஒன்றோடொன்று பின்னப்பட்டும், அதே நேரத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பற்றும் விடயங்கள் விளக்கப்படுகின்றன. எனவே மஸ்னவியின் முத்துக்கள் ஆங்காங்கு சிதறிக்கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து ஒன்றாக இணைத்துவிட்டால் ரூமியின் சிந்தனையின் ஒருமைப்பாட்டையும், தத்துவத்தின் சாயலையும், மெஞ்ஞான அறிவுரைகளின் முத்திரையினையும் நாம் அறிந்து இன்ங்கண்டுகொள்ள முடியும்.

மௌலானா ரூமியின் தலையாய நோக்கம் மஸ்னவி மூலமாக மனித இனத்திற்கு மெஞ்ஞான நெறிமுறைகளை விளக்குவதாகும். இஸ்லாமிய வரலாற்றில் மூன்று வகையான சிந்தனைகள் பூரண வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்திலேயே மௌலானா ரூமி தோன்றினார். தஸவ்வுப் (Mysticism), காலம் (Scholasticism), பல்ஸபா (Philosophy) ஆகிய மூன்றுமே அவையாகும்.

ரூமி ஹிஜ்ரி  604 – கி.பி. 1207 இல் பிறந்தார். அவரது தோற்றத்திற்கு சற்று முன்னர் இபுனுருஷ்தின் (ஹி. 520-595 கி.பி. 1126-1198) சிந்தனைகளில் கிரேக்கத் தத்துவக் கருத்துக்கள் இஸ்லாமிய சிந்தனையின் சாயலில் விளக்கப்பட்டு கிரேக்கத் தத்துவங்களில் செல்வாக்கு உச்ச நிலையடைந்திருந்தது. ஹி.150 – கி.பி. 767 இல் மரணித்த பிரபல மெஞ்ஞானி அபூஹாஷீம் முதற்கொண்டு ரூமியின் உடனிகழ்காலத்தவரான இபுனுல் அரபி வரை சூபித்தத்துவம் பூரண வளர்ச்சியடைந்திருந்தது. ரூமிக்கு முன்பாக இமாம் கஸ்ஸாலி (கி.பி 1058 – 1111) காலம், பலாஸபா, தஸவ்வப், ஆகிய மூன்று அடிப்படைகளையும் இணைத்துப் பொதுவான ஒரு தத்துவத்தை வகுத்தார். எனவே மௌலானா ரூமி இந்த சிந்தனைகளை, தத்துவங்கள், மெஞ்ஞான நெறிமுறைகள், ஆன்மீக விளக்கங்கள் அனைத்துக்கும் வாரிசாகவே தோன்றினார். அவருக்கு முன் வளர்ந்திருந்த அத்தனை தத்துவங்களையும் இணைத்து ஒரு பூரணாமான, பொதுவான தத்துவமொன்றை அவர் உருவாக்கினார்.

அவரது தத்துவங்களில் முக்கிய அடிப்படையாக விளங்குவது பரிணாமவாதம் பற்றிய தத்துவமாகும். இந்தத் தத்துவத்தை முதலில் சிந்தித்துணர்த்திய முஸ்லிம் அறிஞர் இபுனு மிஸ்கவை (ஹி. 421 மரணம்) ஆவார். ஆனால் ரூமியின் பரிணாமவாதம் பற்றிய தத்துவம் நவீன விஞ்ஞானிகளின் பரிணாமத் தத்துவத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. டார்வின் போன்ற நவீன சிந்தனையாளர் மனித இனத்தின் மூலத் தோற்றம் பற்றி விளக்கவே இத்தத்துவத்தைக் கையாண்டனர். மரணத்திற்குப் பிறகு நிகழும் வளர்ச்சிபற்றி அவர்கள் அக்கறை செலுத்தவில்லை. ஆனால் ரூமி வேறு ஒரு கோணத்திலிருந்து பரிணாம தத்துவத்தை விளக்குகின்றார். ” மனிதன் ஆத்மா அதன் மூலப் பொருளிலிருந்து பிரிக்கப்பட்டது. எப்படி? யாரால்? என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது. இவ்வாறு பிரிவுண்ட ஆன்மா அதன் மூலஸ்தானத்தை நோக்கி மீளுவதற்கு முயற்சிக்கின்றது. எனவே வாழ்க்கை என்பது அது தன் மூலஸ்தானத்திற்கு மீளுவதற்கான முயற்சியேயாகும். அது எங்கிருந்து வந்ததோ அந்த இடத்தை நோக்கி படிப்படியாக மீளுவதற்கு பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அது முயலுகின்றது. வாழ்வின் அடிப்படையான ஆன்மா சடலத்திலிருந்து தனது பிரயாணத்தை ஆரம்பித்து மேலெழுந்து வளர்ந்து செல்ல விழைகின்றாது~ மனிதனின் பரிணாம வளர்ச்சி உடலோடு முடிவதில்லை.  மரணத்தோடு முற்றுப்பெறுவதில்லை. அது சூழலின் நிர்ப்பந்தத்தால் ஏற்படுகின்றதுமன்று. ஒரு பொதுவான ஒழுங்கிற்கும், சட்டத்திற்கும், உட்பட்டே இந்தப் பரிணாம வளர்ச்சி நிகழ்கின்றது. அத்தோடு ஒரு அடிப்படை நோக்கத்தோடேயே இந்தப் பரிணாம வளர்ச்சி நிகழ்கின்றது. அதுவே மூலஸ்தானத்திலிருந்து பிரிந்த மனித ஆத்மா தனது மூலத்தை நோக்கிச் செல்ல முனையும் நோக்கமாகும். மௌலானா ரூமியின் இந்தத் தத்துவம் டார்வினின் பரிணாம தத்துவத்திற்கு முற்றிலும் மாறுபட்டு நிற்பதை நாம் ஈண்டு காணமுடிகின்றது.

மனித ஆத்மா தனது மூலத்திற்கு மீழும் பொருட்டு எடுக்கும் இம்முயற்சியில் ஒவ்வொரு பொருளையும் தனது நிலையிலிருந்து உயர்ச்சியடைந்து செல்லத் தூண்டுவது `அன்பு` என்ற சக்தியாகும். வாழ்வின் தோற்றம், வளார்ச்சி, வெளிப்பாடு, பிணைப்பு அத்தனையும் அன்பின் பிரதிபலிப்பாகும்.இலட்சியத்தை அடைய முயல்வதென்பது அன்பு அழகை அடையச் செய்யும் பிரயத்தனமாகும். வாழ்க்கையின் அனைத்து பொருட்களும் அன்பின் சக்தியினாலேயே இயக்குவிக்கப்படுகின்றன. அன்பின்றேல் வாழ்வினசைவில்லை, ஓட்டமில்லை.

அன்பைப் பற்றிய ரூமியின் தத்துவத்தைப் போன்றே அறிவு பற்றிய அவரது விளக்கமும் அமைந்துள்ளது. பிரபஞ்சம், மனித வாழ்வு, ஆன்மா, மரணம் என்பனவற்றைப் பற்றிய உணர்வைப் பெற புலன்களின் வழியாகப் பெறப்படும் பகுத்தறிவு என்றும் துணை நிற்கமுடியாது என்ற கருத்தினை இமாம் கஸ்ஸாலி அவர்கள் தங்களது `முன்கித் மின் ழழால்` என்ற நூலில் விளக்கியுள்ளார்கள். மௌலானா ரூமியும் இந்தத் தத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றார். எனவே, யதார்த்தத்தை அறிய அன்பு ஒன்றுதான் துணைபுரியமுடியும் எனக் கருதும் ரூமி அன்பு பற்றிய விளக்கத்தை அளிக்கவில்லை.

அன்பை விளக்கும் வகையில் நான் எதைச் சொன்னாலும் அன்பைப் பற்றிச் சொல்ல நான் தயங்குகிறேன். அன்பின் விளக்கத்தை அன்பு ஒன்றுதான் அளிக்க முடியும். சூரியனுக்கு ஆதாரம் சூரியனே! வார்த்தைகளினால் நீங்கள் ஒன்றை விளக்க முனைந்தால் நீங்கள் உண்மைக்கு மேலால் இன்னொரு திரை போடுகின்றீர்கள்!

எனவே மதத்தின் ஆன்மீக ரகசியங்களை அறிய `இஷ்க்` என்னும் பேரின்பக்காதலே துணை புரிய முடியும். மௌலானா ரூமியின் இக்கருத்துக்களின் செல்வாக்கினை இக்பாலின் சிந்தனைகளில் நம் அவதானிக்க முடிகின்றது.

ரூமியின் தத்துவத்தின் இன்னொரு முக்கிய பண்பு வாழ்க்கையைப் பற்றிய உணர்வுரீதியான விளக்கமாகும். மனிதனைப் பற்றிய உயர்ந்த கோட்பாடாகும். மனிதன் அவனது விதியைத் தானாகவே உருவாக்குவதாக ரூமி கருதுகின்றார். பாவம் என ஒன்று இல்லையெனில் நன்மையும் இல்லை என்பது ரூமியின் தத்துவமாகும். உலகில் பாவமும், தீமையும் இருக்கின்றன. அந்த தீமைக்கு எதிராகப் போராடுவதன் மூலமே மனிதன் உயர்ச்சியடைய முடியும் என்கின்றார். இந்தத் தத்துவத்தைப் பின்வருமாறு அழகாக விளக்குகின்றார்.

 

உண்மையின்றி பொய் தோன்றுவதில்லை

தங்கக்காசு என நினைத்து செல்லாக்காசை ஒரு மூடன் வாங்கினான்

நியாயமாக அனுமதிக்கப்பட்ட பணமில்லாவிடில்

செல்லாக்காசு எங்கிருந்து வர முடியும்.?

தவறான பொருட்கள் உலகில் இல்லாவிட்டால்

எல்லோருமே நுட்பமான வணிகர்களாக இருப்பர்

தவறு என ஒன்று இல்லையெனில்

தகுதியானதையும், தகுதியற்றதையும் பிரித்தறிவதெப்படி?

எல்லாவற்றிலும் தவறிருந்தால் அறிவுக்கு வேலை ஏது?

எல்லாம் ஒரேவகையான மரமென்றால்

சந்தணமரம் எங்குமே இருக்காது.

அனைத்தும் நன்மையே எனச் சொல்பவன் மூடன்

அனைத்தும் தீமையே என்பவனும் அறிவிலியே!

 

எனவே உலகில் தீமை, நன்மை என இரு சக்திகள் இருப்பதால் வாழ்வு பூரணத்துவம்பெறுகின்றது. இதன் காரணமாகவே வாழ்வில் அசைவும், ஓட்டமும் பிறக்கின்றது. இந்தத் தத்துவத்தை ரூமி பின்வருமாறு விளக்குகின்றார்.

 

”பகைவரில்லையெனில் புனித யுத்தம் நிகழ முடியாது.

ஆசையும், உணர்களும் இல்லையெனில்

இறைவனுக்கு அடிபணிதல் என்பது இருக்கமுடியாது.

ஆசையில்லையெனில் மனக்காட்டுப்பாடும் இல்லை.

எனவே ஆசைகளைத் துறந்த துறவியாகாதே!

கற்பும், ஒழுக்கமும் ஆசையிலிருந்துதான் தோன்றுகின்றன.

 

ரூமியின் இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே இக்பால் தனது `குதி` (KHUDI) பற்றிய தத்துவத்தை உருவாக்கியுள்ளார்.

தனது மூலஸ்தானத்திலிருந்து பிரிந்த மனித ஆத்மா தனது மூலத்தை நோக்கிச் செல்ல ஒரு மாபெரும் போராட்டத்தில் சிக்குகின்றது. உலகிலுள்ள ஒன்றுக்கொன்று முரண்பட்ட சக்திகளுக்கிடையில்  சிக்கும் இப்போராட்டம் அதனை வளர்ச்சியடையச் செய்கின்றது. அன்பென்னும் சக்தியை உயர்நிலையாகக் கொண்டு, போராட்டத்தினால் உரம்பெற்று தனது இறுதி இலட்சியமான பூரண அழகை, நித்திய அழகை, மூலத்தை நோக்கி மனிதன் பிரயாணம் செய்கின்றான். அந்த உயர் லட்சியத்தை அடைந்தவனே ` இன்ஸானுல் காமில்` பூரண மனிதன் என ரூமி குறிப்பிடுகின்றார்.

`இன்ஸானுல் காமில்` என்னும் பூரண மனிதனைப் பற்றிய தத்துவத்தை ரூமிக்கு முன் பல அறிஞர்கள் விளக்கியுள்ளனர். இமாம் கஸ்ஸாலி தங்களது `மீக்காதுல் அன்வார்` என்ற நூலில் இத்தத்துவத்தை விளக்கியுள்ளார். ரூமியின் உடனிகழ்காலத்தவரான இபுனுல் அரபியும் இதுபற்றி ஆராய்ந்துள்ளார். பிற்காலத்தில் அப்துல் கரீம் ஜீலி என்பார் `இன்ஸானுல் காமில்` என்ற பெயரில் ஒரு தனி நூலையே இயற்றியுள்ளார். மௌலானா ரூமியும் இவர்களின் வழிநின்று இந்தத் தத்துவத்தை ஆராய்கின்றார். `இன்ஸானுல் காமில்` என்னும் பதம் வாழ்வின் லட்சியத்தை அடைந்துவிட்ட தனது மூலத்திற்கு மீண்டு விட்ட மனித ஆன்மாவின் பூரண வளர்ச்சி நிலையைக் குறிக்கின்றது. இது மனிதன் இறைவனாகும் நிலையன்று என்பதை ரூமி கண்டிப்பாக வற்புறுத்தி விளக்குகின்றார். பகலில் நட்சத்திரங்கள் சூரியனின் பேரொளியில் தம் ஒளியை இழப்பதுபோல நெருப்பிலிடப்பட்ட இரும்பு நெருப்பின் தன்மையைப் பெறுவதுபோல மனிதன் இந்நிலையில் இறைவனின் பண்புகளைப் பெறுகின்றான். ஆனால் அது மனிதன் இறைவனாகும் நிலையன்று!

பொதுவாக இஸ்லாமிய வரலாற்றிலும், சிறப்பாக சூபித் தத்துவத்தின் வரலாற்றிலும் ரூமிக்கு சிறப்பிடமுண்டு. இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பல சிந்தனைகளையும், தத்துவங்களையும் ஒன்றாய் இணைத்து ஒரு பொதுவான தத்துவத்தை அவர் உருவாக்கினார். இஸ்லாமிய வரலாற்றில் ரூமியின் செல்வாக்கு ஆழப்பதிந்துள்ளது. இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக் கவிஞரும், சிந்தனையாளருமான அல்லாமா இக்பால் தமது தத்துவத்தினை ரூமியின் சிந்தனையின் அடிப்படையிலேயே அமைத்தார். `பீரே ரூம்` `ரூம் நாட்டின் கிழவன்` என ரூமியை வர்ணிக்கும் இக்பால் `ஜாவிது நாமாவில்` ரூமியைத் தனக்குக் கிரகங்களுக்கு வழிகாட்டும் வழிகாட்டியாகக் கொள்கின்றார். இக்பாலின் `குதி` பற்றிய தத்துவமும், அறிவுபற்றிய கோட்பாடும், ரூமியின் சிந்தனையின் அடிப்படிப்படையில் எழுந்தவையாகும்.

மௌலானா ஜலாலுத்தீன் ரூமியைப் பற்றிய விரிவான விளக்கம் கொண்ட நூல்கள் தமிழ் மொழியில் இல்லாமை பெருங் குறையாகும். ஆங்காங்கு மஸ்னவியின் கவிதைகள் தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன.

நண்பர் ஏ. இக்பால் அவர்கள் மஸ்னவியின் பாடல்களின் கருத்துக்களைத் தழுவி சில கவிதைகளைத் தமிழில் படைப்பதன் மூலம் ரூமியின் சிந்தனைகளை தமிழ்கூறு உலகிற்கு அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்க முயற்சியாகும்.

இக்கவிதைகளில் சிலவற்றை `அல்-மதீனா` என்ற சஞ்சிகையில் படித்த உணர்வு எனக்குண்டு. அப்பொழுதே இந்தப் பணியினை நான் மனமாரப் பாராட்டினேன்.எனவே நண்பர் இக்பால் அவர்கள் அவரது நூலிற்கு மௌலானா ரூமியைப் பற்றிய விளக்கவுரையொன்றினை எழுதிக்கேட்ட போழுது அதனைப் பெரும் பேறாகவே கருதினேன். பல்கலைக் கழகத்தில் பாரசிக மொழிப்பாடத்திற்கு மஸ்னவியின் சில பாடல்களை படித்தபொழுதேயே பரீட்சை நோக்கத்தை மறந்து மஸ்னவி பற்றிய தத்துவ விசாரணையில் இறங்கியது இன்னும் உள்ளத்துள் பசுமையாக இருக்கின்றது. நண்பர் இக்பாலைத் தமிழிலக்கிய உலகம் நன்கறியும். சிறுகதைத் துறையிலும், கவிதைத் துறையிலும் தனக்கென தனியொரு பாதை வகுத்துக்கொண்டு எழுதும் எழுத்தாளர். அவரோடு தொடர்புகொண்டு உரையாடிய பல சந்தர்ப்பங்களில் அவரது இஸ்லாமியப் பற்றையும், உணர்வையும் உணர முடிந்தது. முஸ்லிம்களின் இலக்கியப் பணியில் இஸ்லாமிய முத்திரை இருத்தல் வேண்டும் என்ற கொள்கையுடையவர்.

இந்நூலில் ரூமியின் சிந்தனைகள் பலவற்றைத் தமிழிலக்கிய உலகிற்கு வழங்க எடுத்துள்ள முயற்சியில் நண்பர் இக்பால் வெற்றிபெற்றாரென்றே கூற வேண்டும். மஸ்னவியில் விலை மதிக்கவொண்ணா முத்துக்கள் ஆங்காங்கே சிதறிக் காணப்படுகின்றனவென்றும், அவற்றினைத் தேடிக் கண்டுபிடித்தலே ஆராய்ச்சியாளனின் பணி என்றும் நான் ஏற்கனவே என் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். நண்பர் இக்பால் மஸ்னவியின் இணையற்ற முத்துக்கள் பலவற்றை இந்நூலில் கவிதையுருவில் தந்துள்ளார். அத்தனைக் கவிதைகளினதுமடியாக ரூமியின் பொதுவான அடிப்படைச் சிந்தனை அடிச்சரடாக வருவதை நாம் காணமுடிகின்றது. இந்த அடிப்படையில் சிந்தனையை இனங்கண்டுகொண்டதில் தான் நண்பர் இக்பாலின் வெற்றி தங்கியிருக்கிறது. இம் முயற்சியினை தமிழ்கூறு நல்லுலகமும் பெருமனத்தோடு வரவேற்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.

 

எம்.ஏ.எம். சுக்ரி B.A. (Hons)

அரபு விரிவுரையாளர்

இலங்கைப் பல்கலைக்கழகம்

கொழும்பு.

25.12.1969

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *