முஸ்லிம் சமூகத்தில் ஆய்வுக்கான அவசியமும் ஆய்வு பற்றிய இஸ்லாமிய நோக்கும்

இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘அபிவிருத்தி’, ‘மனிதவள அபிவிருத்தியே’ ஏனைய எல்லா அபிவிருத்திகளுக்கும் அடிப்படையாக அமைகின்றது என்ற கருத்து எல்லா மட்டங்களிலும் வலியுறுத்தப்படுகின்றது. மனிதவள அபிவிருத்தியின் அடிப்படையாக விளங்குவது கல்வியாகும். கல்வியின் மூலமாகவே மனிதவள அபிவிருத்தி சாத்தியமாகின்றது.

சமூகத்தில் கல்வியறிவைப் பெற்றசாரார் பலவகையாக உள்ளனர். அவர்கள் பொதுவாக அறிவாளிகள், புத்திஜீவிகள் என அழைக்கப்படுகின்றனர். அறிவாளிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் என்ற பதங்கள் பெரும்பாலும் ஒத்த கருத்துடையதாகப் பயன்படுத்தப்பட்டாலும், அறிவாளிகள் என்ற பதத்திற்கும், புத்திஜீவிகள் என்ற பதத்திற்குமிடையில் மிக நுட்பமான ஒரு வித்தியாசம் உள்ளது. புத்திஜீவிகள் என்போர் கல்வியைப் பெற்றோர் மட்டுமன்றி, கருத்தும் உடையவர்கள். ஒருவகையில் நோக்கும் போது சமூகத்தில் எல்லா மட்டத்திலும் உள்ள அறிவாளிகளும் கருத்துடையவர்கள். ஆனால், அவர்கள் புத்திஜீவிகளன்று. கருத்துக் களைத் தங்களுக்கே உரிய தனிப்பட்ட நோக்கில் அணுகி, அல்லது அக்கருத்துக்களுக்கு ஒரு புதுப்பரி மாணத்தை வழங்கி, கருத்துக்களைப் படைப்புத்திறனுடன் கையாளுபவனே புத்திஜீவி ஆவான்.

வரலாற்றில் புத்திஜீவிகள் எல்லாக்கால கட்டங்களிலும் மிக முக்கிய பங்கை வகித்துள்ளனர். அறிவியல், கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் போன்ற மனிதப் பண்பின் அறிவு சார்ந்த துறைகள் அனைத்தினதும் ஒட்டுமொத்தமான வளர்ச்சிகளுக்குக் காரணகர்த்தாக்களாக அமைந்தோர் புத்திஜீவிகளே. இத்தகைய புத்திஜீவிகளை வரலாற்றாய்வாளர் ஆர்னல்ட் டொய்ன்பீ ‘நாகரிகத்தின் சக்கரத்தைச் சுற்றிச் செல்லத் துணைபுரியும் படைப்புத் திறன் மிக்க சிறுபான்மையோர்’ என்று வர்ணிக்கின்றார்.

பொருளாதார சடரீதியான அம்சங்கள் மனித வாழ்வின் பௌதிகச் சூழலை நிர்ணயிக்க, கருத்துக்களும் சிந்தனைகளும் அச்சூழலின் அறைகூவலுக்கு மனிதன் ஈடுகொடுக்கும் வகையில் அவனை நெறிப்படுத்துகின்றன. இந்தக் கருத்துக்கள் சமூகத்திற்கு ஆற்றும் பணிக்கு ஏற்பவே அடிப்படையில், அக்கருத்துக்களோடு தொடர்புடைய புத்திஜீவியின் பணியும் அமையும்.

சமூகம் என்பது இயக்கமும், அசைவுமற்ற வெறும் சடமன்று. அது உயிர்வாழும் மனிதர்களை உள்ளடக்கிய, அசையும் இயக்கமும் உடைய, மாறுதலுக்கு உட்பட்ட உயிர்வாழும் ஓர் அமைப்பாகும். எனவே, ஒரு சமூகத்தில் வாழும் மக்கள் சமூக மாற்றங்களுக்கும் சமூகச் சூழலின் அறைகூவல்களுக்கும் ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஈடுகொடுக்கும் வகையில் சிந்தித்து, ஆராய்ந்து, வேறுபாடு செய்து, படைப்புத்திறன் மிக்க கருத்துக்களை சிந்தனைகளை வழங்குவதே புத்திஜீவிகளின் பணியாகும். சமூகநலனுக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் இத்தகைய புத்திஜீவிகளின் பணி இன்றியமையாததாகும்.

முஸ்லிம் சமூகத்தில் ஆய்வுக்கான அவசியம், ஆய்வுபற்றிய இஸ்லாமிய நோக்கு ஆகிய இரண்டு அம்சங்கள் இவ்வாய்வில் அடங்குகின்றன.

முஸ்லிம் சமூகத்தில் ஆய்வுக்கான அவசியம்:

முஸ்லிம் சமூகம் பல்வேறு துறைகளில் ஆய்வை வேண்டி நிற்கின்றது. வரலாறு, கல்வி, சமூக வாழ்வு, அரசியல், பொருளாதாரம், சன்மார்க்கத்துறை சார்ந்த விடயங்கள் பல ஆய்வை வேண்டி நிற்கின்றன.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய ஆய்வு முக்கிய கவனத்தைப் பெறவேண்டியுள்ளது. ‘ஆவணங்கள், தொல்பொருள் ரீதியான ஆதாரங்கள், அகழ்வாய்வுகளிடையே பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த நாட்டில் எமது பூர்வீகத்தன்மை வரலாற்று ரீதியாக நிறுவப்படல் வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய்வதற்கு மூலாதாரமான நூல்கள் அரபு, ஆங்கிலம், பாரசீகம், சீனம், சிங்களம், போர்த்துக்கேய, டச்சு ஆகிய மொழிகளில் உள்ளன. இலங்கை முஸ்லிம்களின் பொதுவான வரலாறு மிக ஆதாரபூர்வமான வகையில், விஞ்ஞான பூர்வமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. நளீமிய்யா இஸ்லாமிய ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள Muslims of Sri Lanka – Avenues to Antiquity என்ற நூல் இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியே. இந்நூல் இன்று ஆய்வாரள்களால் நாட்டில் மட்டுமன்றி சர்வதேசிய ரீதியாகவும் அங்கீகாரம் பெற்ற ஒரு நூலாக விளங்குகின்றது. ஆனால், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப் பொறுத்தவரை இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பல பகுதிகள் உள்ளன. இலங்கை முஸ்லிம்களின் பிரதேச ரீதியான வரலாறு விரிவாக ஆராயப்படல் வேண்டும். இத்துறையில் அண்மையில் வெளியிடப்பட்ட கலாநிதி லோனா தேவராஜாவின் Muslims of Sri Lanka – One thousand years of Ethnic Harmony என்ற நூல் மிகப் பாராட்டத்தக்க ஒரு முயற்சியாகும். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஆவணங்களின் ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது போன்று, தொல்பொருள் ரீதியான ஆதாரங்களின் அடிப்படையிலும் நிறுவப்படல் வேண்டும். இலங்கையில் இந்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பல்வேறு காலப்பிரிவுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரபுச் சிலாசனங்கள் பற்றிய ஆய்வு மிகவும் அவசியமாகும். (அரபுச் சிலாசனங்கள் பற்றிய இந்த ஆய்வு இக்கட்டுரை ஆசிரியரால் நடாத்தப்பட்டு, அதனை இலங்கைத் தொல்பொருள் இலாகா பிரசுரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது) இந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அரபு நாணயங்கள் இன்னும் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. இலங்கை முஸ்லிம்களுக்கும் தென் அரேபியாவுக்கும் குறிப்பாக, எமன் பிரதேசத்திற்கான தொடர்பு, அதன் கலாசாரத் தாக்கம், இலங்கையின் சாதுலிய்யாத் தரீக்காவின் அறிமுகமும் பரவலும் அவற்றின் பங்களிப்பு, இலங்கைக்கும் தென்னிந்திய முஸ்லிம்களுக்குமிடையிலான கலாசார பண்பாட்டு உறவுகள், அவற்றின் வரலாற்று விளைவுகள், அரபுத் தமிழின் தோற்றமும் வளர்ச்சியும், இலங்கையில் யூனானி மருத்துவம் போன்ற பல ஆழமான ஆய்வை வேண்டி நிற்கின்றன.

கல்வித்துறை

இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றை ஆராயும் முயற்சிகள் கணிசமான அளவு நடைபெற்றுள்ளன. ஆனால் கல்வித்துறை சார்ந்த செயற்பாட்டு ரீதியான, சமகாலப் பிரச்சினைகளும் தேவைகளும் உரிய முறையில் ஆராயப்படவில்லை என்று கூறுதல் வேண்டும். மாகாண, மாவட்ட ரீதியாக முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளை இனம் காணுதல், சில மாகாணங்களில் கல்வி வளர்ச்சிக்கு உந்துதல் சக்தியாக விளங்கிய காரணிகள், சில மாகாணங்களில் கல்விப் பின்னடைவுக்குக் காரணமாய் அமைந்தவை பற்றிய ஆய்வுகள் வரலாறு, சமூகவியல் காரணிகள், தரவுகள், புள்ளிவிபரங்கள், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயப்படல் வேண்டும். இந்த ஆய்வுகள் முஸ்லிம்களின் எதிர்காலக் கல்விக் கொள்கையை வகுக்கவும் அதற்கான திட்டமிடல்களுக்கும் பெரும் துணைபுரியும்.

இலங்கைத் தேசிய இனங்களின் ஒரு முக்கிய அங்கம் என்ற வகையில் இலங்கை முஸ்லிம் சமூகம் அரசியல் விழிப்புணர்வுடன் செயற்படுதல் மிக அவசியமாகும். காலத்திற்குக் காலம் ஏற்படும் அரசியல் நிகழ்வுகள், மாற்றங்கள் அவற்றின் அடியாக எழும் அறைகூவல்கள் பற்றிய அறிவும் தெளிவும் சமூக நலனுக்கும் மேம்பாட்டுக்கும் முக்கியமானவை. உதாரணமாக இன்று நாட்டில் அரசியல் சார்ந்த முக்கிய ஒரு விடயமாகப் பேசப்படுகின்ற அதிகாரப் பகிர்வை நாம் குறிப்பிடலாம். இது தொடர்பாக முஸ்லிம்களின் நிலை ப்பாட்டை விளக்குவதற்கு அதிகாரப் பகிர்வு தொடர்பான அறிவுபூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இலங்கை பல்லினங்கள் வாழும் நாடாக உள்ளது. பல்வேறு தேசிய இனங்களின் கூட்டுச் சேர்க்கையாகவுள்ள நாடுகள் அனைத்தும் எதிர்நோக்கும் இனங்கள் சார்ந்த பிரச்சினைகள் சில பொதுப் பண்புகளைக் கொண்டுள்ளன. இலங்கையில் இன்று கலாசாரப் பன்மைத்துவம் பற்றிய கோட்பாடு பற்றி அதிகம் வலியுறுத்தப்படுகின்றது. இத்தகைய கோட்பாடுக்ள பற்றிய அறிவும் தெளிவும் முஸ்லிம் ஆய்வாளர்களுக்கு அவசியமாக உள்ளது.

பல்லின நாடுகளில் பெரும்பான்மையினரின் மேலாதிக்கப் பண்பாட்டை (Dominant Culture) ஏனைய சிறுபான்மையினத்தின் மீது திணிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியின் முடிமூடியாக ‘தேசிய ஒருமைப்பாடு’ (National Inte) ‘தேசிய நீரோட்டத்தோடு இணைதல்’ போன்ற கோஷங்கள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. எனவே, தேசிய ஒருமைப்பாடு பற்றிய சிறுபான்மைச் சமூகத்தின் கண்ணோட்டம் தெளிவுபடுத்தப்படும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இவ்விடயத்தில் அமெரிக்காவை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். அமெரிக்கா பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு பல்லின நாடு. அமெரிக்காவில் வாழும் தேசிய இனங்களின் தனித்தனிக் கலாசாரங்கள், பண்பாடுகள் இரண்டறக் கலந்து ஒன்றாக இணையும் ‘கலாசாரங்களை வார்த்து வடிவமைக்கப்பட்ட ஒரு பாத்திரம்’ (Melting Pot) ஆக அமெரிக்கா விளங்குதல் வேண்டும் என்ற கருத்து ஒரு காலப்பிரிவில் வலியுறுத்தப்பட்டது. அமெரிக்க மயமாதல் என்ற பெயரில் இக்கோட்பாடு பிரபல்யப்படுத்தப்பட்டது. ஆனால் கால ஓட்டத்தில் இக்கருத்து வலுவிழந்து தனித்தனிக் கலாசாரங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்ட வார்ப்பாக அமெரிக்கா அமையாது, ஒவ்வொரு கலாசாரமும் பண்பாடும் தனது தனித்துவத்தைப் பேணி, அமெரிக்காவின் பொதுக் கலாசாரத்திற்கு அழகூட்டல் வேண்டும் என்ற கோட்பாடு வளர்ச்சியடைந்தது. அதாவது, அமெரிக்கா பல்வேறு கலாசாரங்களும் ஒன்றிணைந்து பல நிறத்துண்டுகளை உடைய ஓர் அழகிய சித்திர வேலைப்பாடாக விளங்குதல் வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. இத்தகைய கோட்பாடுகள், அரசியற் சித்தாந்தங்கள், சொற் பிரயோகங்கள் பற்றிய ஆய்வு சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த முஸ்லிம் ஆய்வாளர்களுக்கு அவசியமாகும்.

சமூக வாழ்வு     

நவீனத்துவம், நகர்மயமாதல் காரணமாகவும் பொருளாதார சமூகப் பிரச்சினைகள் காரணமாகவும் இலங்கை முஸ்லிம்கள இதுவரை பேணிப் பாதுகாத்து வந்த சமூகக் கட்டமைப்பு பல அச்சுறுத்தல்களுக்கு இலக்காயுள்ளது. முஸ்லிம்களின் குடும்ப அமைப்பு எதிர்நோக்கும் பிரச்சினைகள், பெருகிவரும் விவாக ரத்துக்கான காரணங்கள், சமூகத்தில் தகவல் தொடர்புசாதனங்களின் தாக்கம், முஸ்லிம் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முஸ்லிம்களின் வறியோர் விகிதாசாரமும் அவர்களின் பிரச்சினையும் ஆகியன தொடர்பாக ஆராய்வதற்கு விரிந்த ஒரு களம் முஸ்லிம் ஆய்வாளனுக்கு உள்ளது.

சன்மார்க்கத் துறை

ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் வாழும் சிறுபான்மை இனம் என்ற வகையில் இஸ்லாத்தின் போதனைகளையும் சட்டவிதிகளையும் சமூக வாழ்வில் செயற்படுத்துவதில் இலங்கை முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இது இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை மட்டுமன்றி பொதுவாக சிறுபான்மை முஸ்லிம் சமூகம் உலகளாவிய ரீதியில் எதிர்கொள்ளும் பிரச்சினையுமாகும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளின் சில சட்டத்தீர்ப்புக்களை சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தில் அதே அமைப்பில் செயற்படுத்த முடியாத நிலைமையுள்ளது. எனவே, முஸ்லிம் சிறுபான்மையினரின் நலன்களைக் கருத்திற் கொண்டு ‘பிக்ஹுல் அகல்லிய்யா’ என்ற சிறபான்மைச் சமூகத்திற்கான ஒரு பிக்ஹ் வகுக்கப்படல் வேண்டும் என சமகால சட்ட அறிஞர்கள் பலர் கருதுகின்றனர். இந்த வகையில் இஸ்லாமிய சன்மார்க்கத்துறை சார்ந்தவர்கள் இலங்கையில் பிக்ஹுல் அகல்லிய்யா தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளல் வேண்டும். நவீன பொருளாதார நிறுவனங்களுடனான தொடர்பு, நவீன பொருளாதார அமைப்புக்கள், அவற்றிலான முதலீடுகள், வங்கிமுறை, வட்டியில்லா வங்கி, காப்புறுதி, பங்குச் சந்தை, ஸக்காத்தின் விதிகளை சிறுபான்மைச் சமூகத்தில் செயற்படுத்தல் ஆகிய துறைகளில் ஆய்வுகள் நடத்தப்படல் அவசியமாகிறது. இலங்கை முஸ்லிம் சமூகம் இத்துறைகளில் தெளிவான வழிகாட்டல் இன்றி, அவை தொடர்பான தெளிவற்ற, மயக்க நிலையில் உள்ளது.

இலங்கையில் முஸ்லிம்கள் பௌத்தம், கிறிஸ்தவம் போன்ற மதங்களைப் பின்பற்றுபவர்களுடன் இரண்டறக் கலந்து வாழ்கின்றனர். இத்தகைய ஒரு சமூகச் சூழலில் பரஸ்பர புரிந்துணர்வுக்கும், சில விடயங்கள் தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டை ஏனைய மதங்களின் கருத்துக்களோடு ஒப்பீட்டு ரீதியில் ஆராய்ந்து விளக்கவும் பிற மதங்கள் பற்றிய ஒப்பீட்டாய்வு அவசியமாகின்றது. பல்வேறு மதங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு மதங்களிடையே கருத்துப் பரிமாற்றம் நடத்துவது இன்று உலகளாவிய அளவில் நடைபெற்று வருகின்றது. இதுபோன்றே நவீன பிரச்சினைகளில் மதங்களின் நிலைப்பாட்டை விளக்கும் பல்வேறு மதங்களின் ஒன்று கூடல்கள், கருத்தரங்குகள் இன்று பரவலாக நடைபெறுகின்றன. உதாரணமாக ‘அபிவிருத்தி பற்றிய மதங்களின் கண்ணோட்டம்’, ‘மதங்களும் மனித உரிமைகளும்’ போன்ற தலைப்புக்களில் நடைபெறும் கருத்தரங்குகளுக்கு இஸ்லாமிய கண்ணோட்டத்தை விளக்க முஸ்லிம் புத்திஜீவிகள் அழைக்கப்படும் போது இஸ்லாத்தின் நிலைப்பாட்டை ஏனைய மதங்களுக்கு ஒப்பிட்டு விளக்கும் ஆற்றலை அவர்கள் பெற்றிருத்தல் வேண்டும். இதற்கு மதங்கள் பற்றிய ஒப்பீட்டாய்வு அறிவு மிக அவசியமாகும். எனவே, இத்துறையிலும் முஸ்லிம் ஆய்வாளர்கள் கவனஞ்செலுத்துதல் அவசியமாகும்.

முஸ்லிம் ஆய்வாளன் பெற்றிருக்க வேண்டிய அறிவுப் பின்னணி

ஓர் ஆய்வாளன் அவனது ஆய்வை முலாதாரங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்கின்றான். எனவே, ஆய்வை மேற்கொள்ளவும் துறைசார்ந்த நூல்கள், சஞ்சிகைகளை வாசித்தறியவும் மொழியாற்றலை அவன் பெற்றிருத்தல் வேண்டும். இந்தவகையில் முஸ்லிம் ஆய்வாளன் அரபு, ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளில் போதிய அறிவைப் பெற்றிருத்தல் வேண்டும். இஸ்லாமிய ஆய்வுத் துறையைப் பொறுத்தளவில் அரபுமொழி அறிவு மிக அடிப்படையாக உள்ளது. அரபுமொழி, இஸ்லாமிய கலைகள், வரலாறு பற்றிய எத்தகைய பின்னணியுமின்றி இஸ்லாத்தின் தத்துவங்களையோ வரலாற்றையோ ஆராய்தல் எந்தவகையிலும் சாத்தியமன்று. இத்தகைய ஆய்வு இஸ்லாமிய கருத்துக்களைத் தவறாகப் புரிந்துகொள்ளும் நிலையைத் தோற்றுவிக்கும்.

ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து இலங்கை முஸ்லிம் சமூகம் ஆய்வுத்துறையில் மிகப் பின்னடைந்துள்ள இன்றைய சூழலில் முஸ்லிம் இளம்பட்டதாரிகள் ஆய்வுத்துறையில் ஆர்வமூட்டப்படுவதும், ஆய்வின் அவசியம் வலியுறுத்தப்படுவதும், ஆய்வுத்துறையில் வழிகாட்டி நெறிப்படுத்துவதும் மிக அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *