மாலிக் பின் நபியின் பார்வையில் சமூக மாற்றம்

முஸ்லிம் உலகில் சமூகமாற்றம், சமூக புனர்நிர்மாணம் பற்றிய கருத்துக்கள், சிந்தனைகள், பத்தொன்பதாம் நூற்றாண் டின் இறுதிக் காலப் பிரிவிலும், இருப தாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்; பிரிவிலும் பல சிந்தனையாளர்களாலும், சீர்திருத்தவாதிகளாலும் முன்வைக்கப் பட்டன. இந்த விடயம் தொடர்பான ஆய்வுகள் இன்றுவரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதை நாம் காணமுடிகின்றது.

புத்திஜீவிகள், ஆய்வாளார்கள், பொதுவாக அரபு முஸ்லிம் சமூக முன்னேற்றம், சமூக மறுமலர்ச்சி பற்றிப் பேசும்போது ‘’தரக்கி’’ (முன்னேற்றம்) ‘’ததவ்வுர்’’ (அபிவிருத்தி) ‘’நஹ்ழா’’ (மறுமலர்ச்சி) போன்ற  பதங்களையே பயன்படுத்துவர். ஆனால் மாலிக் பின் நபி சமூகவாழ்வு, சமூக மாற்றம் பற்றிய அவரது விரிவான கோட்பாட்டைக் குறிப்பதற்கு ‘’ஹளாரா’’நாகரிகம்) என்ற பதத்தையே கையாண்டார். அவரது ‘’முஸக்கராதுல் ஷாஹித் அல் கர்ன்’’ என்னும் சுயசரிதை,  ‘’அள்-ளாஹிரா அல் குர்ஆனிய்யா’’ எனும் நூல் உட்பட அனைத்து  நூல்களும் ‘’முஷ்கிலத்துல் ஹளாரா’’ (நாகரிகத்தின் பிரச்சினை) என்ற உப தலைப்பைக் கொண்டிருந்தன.

ஒரு பொறியியலாளர் என்ற வகையில் அவர் பெற்றிருந்த பயிற்சி யானது கோட்பாடுகளை  வரைவிலக் கணப்படுத்துவதன்  அவசியத்தை அவருக்கு உணர்த்தியது.  பாகுபாடு செய்தல் (analysis), பாகுபாடு செய்தவற்றை  ஒட்டு மொத்தமாக தொகுத்தல் (Pymthesis) ஆகிய முறைமைகளை பயன்படுத்தியே அவர் ‘’ஹளாரா’’ என அவர் குறிப்பிடும் நாகரிகத்தை பின்வருமாறு விரிவான கருத்தைப் பொதிந்த வகையில்  வரைவிலக்கணப்படுத்தினார்.’’ஒரு சமூகத்தின் அங்கத்தவர்கள் ஒவ்வொரு வரும் முன்னேற்றமடைவதற்குத் துணைபுரியும் சடரீதியான, ஒழுக்க ரீதியான சாதனங்களின் ஒட்டுமொத்த மான தொகுப்பே நாகரிகமாகும்.’’ நாகரிகம் பற்றிய  மாலிக் பின் நபியின் இந்த வரைவிலக்கணம் வெறுமனே  பொருளாதார முன்னேற் றத்தைக்  குறிக்கவில்லை. மாறாக நாகரிகம் என்பது ஒழுக்க மாண்புகள் முன்னுரிமை பெறுகின்ற பல்வேறு அம்சங்களின் ஒட்டுமொத்தமான உருவாக்கம் என்பது அவரது கருத்தாகும்.

பின்னபியின் நோக்கில் ஒரு நாகரிகத்தின் தோற்றத்திற்கு அவசியமான முதல் அடிப்படையாக மதம் விளங்குகின்றது. நாகரிகம் இரண்டு தடவைகள் பிறக்கின்றது என அவர் குறிப்பிடுகிறார்கள். முதலாவதாக ஒரு மதத்தின் தோற்றத்தோடு நாகரிகம் பிறக்கின்றது. அந்த மதத்தின் போதனைகள் உள்ளங்களில் பதியப்பட்டு வரலாற்று நிகழ்வுகளோடு இணையும்போது இரண்டாவது தடவையாக நாகரிகம் தோற்றமெடுக் கின்றது. இஸ்லாமிய நாகரிகம் இந்த இரண்டு வகையான தோற்றங்களையும், ஏககாலப் பிரிவில்  கொண்டிருந்தது என்பது அவரது கருத்தாகும்.

சமூக மாற்றமே ஒரு நாகரிகத்தின் ஆரம்ப அடிப்படையாக உள்ளது. மாற்றம் தனிமனிதனாக (பர்த்- Indilvidue) விளங்குபவனின் உள்ளத்தி லிருந்து ஆரம்பமாகுதல் வேண்டும். இந்த மாற்றத்தின் மூலம் வெறுமனே தனிமனிதனாக இருந்த ஒருவன், அவனுக்கே உரிய  பண்புகளைப் பெற்ற ஒரு ஷக்ஸாக- Personality ஆக மாறுகின்றான். இந்த மாற்றம் மிகவும் அவசியமாகும். ஒரு தனி மனிதன் ஒரு  சந்ததியை உருவாக்குவான். மட்டுமன்றி அவன் ஒரு நாகரிகத்தை  உருவாக்கின்ற ஒரு சிக்கலான அமைப்பைக் கொண்ட ஒரு  சிருஷ்டியாகவும் உள்ளான். அவன் நாகரிகத்தை உருவாக்குவது மட்டுமன்றி ஏககாலப் பிரிவில் அந்த நாகரிகத்தால் உருவாக்கப்பட்டவனாகவும் உள்ளான்.

மனித இனம் பின்னபியின் சிந்தனையில், குறிப்பாக சமூக மாற்றம் பற்றிய அவரது கருத்துக்களில் மத்திய இடத்தைப் பெறுகின்றது. ஏனெனில் மனித இனமே அடிப்படையான சமூக இயக்கு சக்தியாகும். மனித இனம் அசைந்தால் சமூகமும் வரலாறும் அசையும். மனித இனம்  அசைவற்ற நிலையை அடைந்துவிட்டால் சமூகமும் வரலாறும் அசைவற்று நின்றுவிடும் என அவர் கூறுகின்றார்.

மனித இனத்திற்கு இரு அடையாளங்கள் உள்ளன என  அவர் குறிப்பிடுகின்றார். ஒன்று அல்லாஹ் வினால் கண்ணியப்படுத்தப்பட்ட ஒரு சிருஷ்டி என்ற வகையில், அந்த சிருஷ்டிக்குரிய இயற்கை அமைப்பைக் கொண்ட, வரலாற்றின் மாற்றங்களி னால் எத்தகைய தாக்கமும் பெற்றுப் பாதிப்புக்கு உட்படாத ஓர் அடையா ளம் அவனில் உள்ளது. இஸ்லாததின் நோக்கில் மனிதன் ஏனைய சிருஷ்டி களை விட, ஏன்? மலக்குகளையும் விடக் கூட மிக உயர்ந்த நிலையில் உள்ளான். இறைவன் வானம், பூமி, மலைகளுக்கு அமானிதத்தைச் சுமக்கும்படி பணித்தபோது அவை அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தன. ஆனால் அதனை மனிதன் ஏற்றுக் கொண்டான். இதன் மூலம் அல்லாஹ் வின் கலீபா என்ற உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டான். இது மனிதனின் ஓர் அடையாளமாகும். மனிதனின் இந்த  இயற்கைத் தன்மையின் அடையாளமானது, எத்தகைய மாற்றத் திற்கும் உட்படாததாகவும் வரலாற்றில் பாதிக்கப்படாததாகவும் உள்ளது. மனிதனின் இரண்டாவது அடையாள மானது  சமூக சூழ்நிலைகளாலும் வரலாற்றுத் தாக்கத்தினாலும் மாற்றமடையும் தன்மை படைத்தது. பின்னபி மனிதனின் முதலாவது அடையாளத்தைப் பொறுத்தளவில் மனிதனின் புறத் தோற்றத்தை தீர்மானிக் கின்ற அவனது  உடலமைப்பை கருது கின்றார். இரண்டாவது அடையாளமாக சமூக சூழல் வரலாற்று அனுபவங் களினால் உருவாக்கப்படுகின்ற அவனது  உளப் பண்புகளை அவர் குறிப்பிடு கின்றார். மனிதனின் இந்த சமூக, வரலாற்று அடையாளத்திற்கே பின்னபி முக்கியத்துவம் அளிக்கின்றார். மனிதனில் அமைந்துள்ள கை (யத்) இருதயம் (கல்ப்) உள்ளம் (அக்ல்) ஆகிய மூன்றினதும் செயல்பாடே, சமூக வரலாற்று செயற்பாடுகளாகும். ஒவ்வொரு சமூகச் செயல்பாடும், உள்ளத்தின் தூண்டுதல், இதயத்தின் நெறிப்படுத்தல்,  உறுப்புக்களின் இயக்கம், அசைவு ஆகியவற்றின் விளைவாகும்.

மனிதர்கள் (அஷ்காஸ்) கருத்துக்கள் (அப்கார்) பொருட்கள் (அஷ்யா) ஆகிய  மூன்றினதும் பரஸ்பர தொழிற்பாட்டின் மூலமே வரலாற்று நிகழ்வுகள் தோற்றம் பெறுகின்றன என பின்னபி கூறுகின்றார். இந்த வரலாற்று நிகழ்வுகள் தோற்றம் பெறுவதில் மனிதர்கள் முக்கிய இடத்தை வகித்தாலும், கருத்துக்ளே மிகமிக முக்கியமானவையாக அமைகின்றன. ஒரு சமூகத்தின்  செல்வமானது அதன் மக்கள் பெற்றுள்ள பொருட்களை வைத்து  அளவிடப்படுவதில்லை. மக்கள் பெற்றுள்ள கருத்துக்களை வைத்தே அது மதிப்பீடு செய்யப் படுகிறது. இந்த அடிப்படையிலேயே நாகரிகம் தான் பொருட்களை உருவாக்குகின்றது என்ற கருத்து பெறப்படுகின்றது. எனவே ஒரு நாகரிகம் உருவாக்கிய பொருட்களை விலைக்கு வாங்கி இன்னொரு நாகரிகத்தை உருவாக்குதல் முடியாது. எனெனில் ஒரு நாகரிகமானது அதன் கருத்துக்கள் விருப்புக்கள் புலன்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் போன்ற வற்றை விலைக்கு விற்றல் முடியாது. இது தொடர்பாக முஸ்லிம் நாடுகள், குறிப்பாக எண்ணை உற்பத்தி நாடுகள் இழைத்த தவறை பின்னபி குறிப்பிடு கின்றார். சுதந்திரம் பெற்ற பின்னர் அந்த நாடுகள் பொருட்களை ஒன்று குவித்தலின் அடிப்படையில் பொருட் கள் சார்ந்த ஒரு நாகரிகத்தை (ஹளாரா ஷய்யிஆ) (Thingniss Civlization) மேற்கிலிருந்து சில விடயங்களை உரிய முறையில் இரவல் பெற்றுக்கொள்வதன் மூலம்  அபிவிருத்திக்கான  தூண்டு தலைப் பெற்றுக்கொள்வதில் எத்தகைய தவறும் இல்லை என பின்னி கருதுகின்றார். ஏனெனில் நாகரிகம் என்பது ஏனைய மனித  அனுபவங்களி லிருந்து விடுபட்டு ஒரு சூனிய நிலையில் உருவாக்கப்படுதல் முடியாது.

இந்த வகையில் கிறிஸ்தவ நாகரிகம் இஸ்லாமிய நாகரிகத்திலிருந்து பயன் பெற்றது.இஸ்லாமிய நாகரிகமானது கிரேக்க, இந்திய  நாகரிகங்களினால் போஷிக்கப்பட்டு பயனடைந்தது. ஆனால் சமகால முஸ்லிம்கள், மேற் கத்திய நாகரிகத்தை எதிர்கொண்ட போது, உண்மையாகவே அவசியமான பொருட்களுக்கும் (real necessities) போலிப் பிரமையின் அடிப்படையில் அவர்கள் அவசியம் எனக் கருதிய பொருட்களுக்குமிடையில் (Forged necessites) வித்தியாசம் கண்டு பிரித்தரிவதற்கு தவறிவிட்டன. இதன் காரணமாக ஒரு சிக்கலும், மயக்கமும் தோன்றி, ஏற்கனவே நாம் நோக்கிய ஒரு  நாகரிகத்தை  உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற- மனிதர்களின் களம் கருத்துக்களின் களம் பாதிக்கப் பட்டு குழப்ப நிலையையும், நடத்தைப் பிறழ்வையும், தோற்றுவித்தது.

சமூக அரசியல் பின்னடைவை வெற்றிகொள்வதற்கான விருப்பத்திற் கும் பாதுகாப்பதற்குமான தேவைக்கு மிடையில் முஸ்லிம்களின் மனச்சாட்சி கூறுபோடப்பட்டு செயல்பட்டது.

சமூக மாற்றத்திற்கான பயணத்தில் மதம் ஒரு முக்கிய தூண்டுகோல் சக்தியாக செயல்படுவதன் அவசியத்தை பின்னபி  வலியுறுத்துகின்றார். இது தொடர்பாக உண்மையான பிரச்சினை

என்னவெனில்  முஸ்லிம்களுக்கு அவர்களது விசுவாசம், மத நம்பிக்கை பற்றிப் போதிப்பதற்கு மாறாக ஒரு முஸ்லிமின் விசுவாசம் இழந்துள்ள சக்தியையும் செயல்பாட்டையும் அந்த விசுவாசத்தின் சமூக தாக்கத்தையும் மீண்டும் பெறச் செய்வதாகும்.

சமூக மாற்றத்தில் மதம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது என்பது  பின்னபியின் மிக உறுதியான நம்பிக்கை யாகும். எனவே அவர் இஸ்லாத்தை வெறுமனே ஒரு தத்துவச்  சித்தாந்தமாக சமூக வாழ்வில் தொழிற்பாட்டிற்கான தூண்டுதலையும், இயக்கத்தையும்  வழங்கும் சக்தியாக  நோக்கினார். சமகால முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் மிகவும் பாரதூரமானன பிரச்சினை களுக்கான காரணம் முஸ்லிம் பாமர மக்கள் மத்தியில்  இஸ்லாம் சமூக செயல்பாட்டை இழந்துள்ளமையாகும் என அவர் கருதுகின்றார். மதத்தின் சமூகச் செயல்பாடு என்ற கருத்து அவரால் பல சந்தர்ப்பங்களில் மிக அழுத்தமாக வலியுறுத்தப்படுகின்றது.

சமூகத்தில் கலாசாரம் அல்லது பண்பாடு வகிக்கும் பங்கு பற்றி பின்னபி மிக அவதானம் செலுத்தினார்;. எனவே கலாசாரம் என்ற பொருள் பற்றி ஆராய்வதற்காக ‘’முஷ்கிலத்துல் ஸகாப்’’ (கலாசாரம்  தொடர்பான பிரச்சினை) முஷ்கிலதுல் அப்கார் பில் ஆலமில் இஸ்லாமி (இஸ்லாமிய உலகில் கருத்துக்கள் தொடர்பான பிரச்சினை) ஆகிய இரண்டு நூல்களை  எழுதினார்.

பின்னபி மிக அவதானத்துடன் கலாசாரத்திற்கும் (ஸகாபா) அறிவுக்கும் (மஃறிபா) இடையில் வித்தியாசம் காண்கின்றார். அவரைப் பொருத்தளவில் கலாசாரம் என்பது அறிவு போதனை யன்று(தஃலீம்)ஆனால் அது பண்பாட்டுப் பயிற்சியாகும்(தர்பியா) எனவே அது அறிவு, தகவல் என்பவற்றைவிட நடத்தையோடு(ஸுலூக்) தொடர்புடை யது ஒரு பண்பாடு வாழ்வு பற்றிய அதற்கே உரிய கருத்துக்களையும் வரலாற்று வளர்ச்சினைக் கொண்டுள் ளது. எனவே ஒரு பண்பாட்டை இறக்குமதி செய்தல்முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *