எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற கட்டடக் கலைஞர்கள்தான் நல்ல ஆசிரியர்கள்

சமகால இஸ்லாமிய அறிவு ஜீவிகளில் முக்கியமானவராக கருதப்படும் கலாநிதி, எம். ஏ. எம். சுக்ரிஅவர்கள் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக ஜாமிஆ நளீமிய்யா என்ற சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றுகிறார். வரலாறு, இலக்கியம், திறனாய்வு, கல்வி, தத்துவம், இஸ்லாம், தொல்லியல் ஆராய்ச்சி என்று இவரது எழுத்துலகம் விரிந்தது. பன்மொழி ஆளுமை பெற்ற இவர் பன்முக அறிவுப் புலமைமிக்கவர் என்பதை அவரது எழுத்துப் படைப்புகள் சான்று சொல்லும். மற்றும் பன்நாட்டு சர்வதேச அரங்குகளில் இவர் பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடனான செவ்வி ஜாமியா நளீமிய்யா வளாகத்தில் கலாநிதி அவர்களின் விடுதியில் 03.04.2003 வியாழன் அன்று எடுக்கப்பட்டது.

உங்களது காலப்பிரிவில் இருந்த Liberal Arts ற்கும் தற்போதைய கல்வி முறைக்கும் இடையிலான வேறுபாடு என்ன? அது வீழ்ச்சியைக் காட்டுகிறதா? அல்லது அறிவு நிலையில் ஒரு வளர்ச்சியா?

முதலில் Liberal என்ற பதத்தால் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்பதை நான் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது சுதந்திரமாக கற்கின்ற நிலை உங்கள் காலத்தில் காணப்பட்டது. உதாரணமாக மருத்துவத் துறையைச் சார்ந்தவர் வேறு துறையையும் கொண்டவராக இருந்தார். ஆனால் தற்போது துறை சார்ந்து மட்டும் கற்கின்றவராகக் காணப்படுகின்றார். வேறு துறைகள் குறித்த அறிவு அங்கு அவருக்கு கிடைப்பதில்லை.

ஆம், உண்மையில் இந்த விடயம் எங்களுடைய காலததிலே நீங்கள் கூறுவதுபோல, ஒரு துறை சார்ந்தவர் வேறு துறைகளைப் பற்றிப் படிப்பதற்கான வாய்ப்புக்கள் அவ்வளவு இருக்கவில்லை. ஆனால், வாய்ப்புக்கள் இருந்தது. அது கல்வி முறையின் அங்கமாக இருக்கவில்லை, உதாரணமாக மருத்துவத் துறையைச் சார்ந்தவர் மருத்துவத் துறையைத்தான் படித்தார். கலைத் துறையைச் சார்ந்தவர் அதைத்தான் படித்தார். இதுதான் நிலவக் கூடிய கல்வி முறை. ஆனால் ஒரு முக்கிய பண்பு காணப்பட்டது. எந்தத்துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் வேறு துறையைப் பற்றிய அறிவைப் பெற ஆர்வம் காட்டினர். அதற்கான வாய்ப்பும் இருந்தது. உதாரணமாக பொருளியல் துறையைச் சார்ந்தவர் இலக்கியத் துறையில் ஆர்வம் காட்டினார். இலக்கியத் துறை சார்ந்த பலர் அறிவியல் பற்றிய பல அறிவையும் பெற்றிருந்தார்கள். இது அக்காலங்களிலே பல்கலைக்கழகங்களில் நடந்த கருத்தரங்குகளிலே, விவாதங்களிலே மிகச் சிறப்பாகப் பிரதிபலித்தது. ஒரு துறையைச் சார்ந்தவர் வேறொரு துறைபற்றி பேசுவதற்கும் கருத்துக்கள் பரிமாறுவதற்கும் ஆற்றல் பெற்றவராக இருந்தார்.

நான் நினைக்கின்றேன் அண்மையில் நிலவிய ஆங்கில மொழிமூலமான கல்வியும் அதே நேரத்தில் வாசிப்பதற்கான வாய்ப்புக்களை அதிகமாகப் பெற்றதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. ஒரு துறை சார்ந்தவர் அந்த துறையிலே கற்க வேண்டிய நிலை இருக்கின்றது. Specialization என்று கூறக்கூடிய பல விசேட துறைகள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. எனவே, ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் தங்களது துறையோடு தங்களை சுருக்கிக் கொள்கின்றார்கள். மட்டுமல்ல நான் நினைக்கின்றேன் பெரும்பான்மை துறைகளுக்கான இந்தக் கல்வி தேசிய மொழியில் போதிக்கப்படுவதனாலும் அந்த கல்வியைப் பெறுபவர்களுக்கு ஆங்கில கல்வித்தரம் இல்லாததனாலும் அவர்கள் வேறு துறையைப் பற்றி அறிய முடிந்தாலும் அது தடையாக இருக்கின்றது. இன்று அந்த வகையில் வித்தியாசம் காணப்படுகின்றது. ஒவ்வொரு துறையும் முற்றிலும் தனிப்பட்ட துறையாக வளர்ந்து செல்கின்ற தன்மையும் ஒரு துறையைச் சார்ந்தவர் ஏனைய துறைகள் பற்றிய பரிச்சயம் இல்லாத தன்மையும் மிகப்பரவலாக காணப்படுகின்றது.

எமது கலாசாரம், பண்பாட்டு பாரம்பரிய புரிதலை, அதன் வளர்ச்சியை மேற்கொள்ள தாய்மொழிக் கல்வியே பொருத்தம் என்ற கருத்து வலுவடைந்த காலத்தில் ‘இரட்டை மொழிக் கற்றல்’ குறித்த கருத்தை எப்படிக் பார்க்கிறீர்கள்?

உண்மையில், தாய்மொழி மூலமாக கல்வியைப் பெறுவதுதான் பொருத்தமானதென கல்விமான்கள், ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். ஏனெனில், தாய்மொழி மூலமாகத்தான் சிந்திப்பான். அவனது மூல சிந்தனை தாய்மொழி மூலம்தான் உருவாகின்றது என்று நினைத்து அவர்கள் கூறுகின்றார்கள். அது உண்மை என்றாலும் இரட்டை மொழி மூலமாக நீங்கள் கருதுவது என்ன?

அதாவது மொழி பன்மைத்துவத்தினூடாக அவனைக் கற்பித்தல்

அது சாத்தியம். ஏனென்றால், இரு மொழிகள் அல்ல பல மொழிக்கூடாகக் கற்கக்கூடிய வாய்ப்பு இன்னும் இருக்கின்றது. மொழிப்புலமை பெறுவது என்பது அவ்வளவு பிரச்சினையல்ல. ஒரு காலத்திலே சிலர் நினைத்தார்கள் பல்வேறு மொழிகளை மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் திணிப்பது அவ்வளவு பொருத்தமற்றது என்று. ஆனால், இந்தக் கருத்து மாறிவிட்டது. மொழியைப் படிப்பதிலும் போதிப்பதிலும் பல புதிய உத்திகள் காணப்படுகின்றன பல புதிய தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன. எனவே, இன்றைய காலகட்டத்தில் நாம் பார்க்கிறோம் ஒரு மாணவன் பல மொழிகளைக் கற்று புலமை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அது அவனுக்கு நல்லது. ஒரே நேரத்தில் ஓரிரு மொழிகளை கற்று அந்த ஓரிரு மொழிகள் மூலமாக இருக்கின்ற அறிவைப் பெற்றுக் கொள்வது பொருத்தமானது. அதில் எந்தவொரு முரண்பாட்டையும் காணவில்லை. இன்று பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். நடைமுறை சாத்தியமாகவும் அதை நாம் பார்க்கின்றோம்.

ஆங்கில யன்னல் வழியாகவே உலகைப் பார்க்கும் அபாயமும் இருக்கிறது. ஏனென்றால் மொழி + பண்பாடு = மொழியதிகாரம். ஆக, கடைசியில் நவ காலனித்துவத்திற்கு அவை இட்டுச் செல்லுமல்லவா?

இது மொழியை எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப் பொருத்தது. ஒரு மொழியை நாங்கள் படிக்கும் போது இயற்கையாக அம்மொழியோடிணைந்த கலாசாரத்தையும் பண்பாட்டையும் நாங்கள் படிக்கின்றோம் என்பது உண்மை. ஆனால், ஆங்கில மொழியைப் பொருத்தவரையில் இன்று அது குறிப்பிட்ட கலாசாரத்தை, பண்பாட்டை குறிக்கின்ற மொழியாக அல்லாமல் உலகளாவிய ரீதியில் நவீன அறிவியலை தொழில்நுட்பத்தை, நவீன கலைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கருவியாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஆங்கில மொழி என்பது ஏகாதிபத்தியவாதிகளின் மொழி, காலனித்துவவாதிகளின் மொழி. அந்த மொழியைப் போதிப்பதன் மூலம் அவர்கள் தங்களது கலாசாரத்தை, பண்பாட்டை கல்வி முறையின் மூலம் மக்களை சிந்தித்தார்கள். சிந்தித்து மேற்கத்திய ரீதியாக சிந்திக்கக் கூடிய பரம்பரையையே உருவாக்கினார்கள்.

இவ்வாறு மேற்கத்திய ரீதியான பரம்பரையை உருவாக்கியதே அந்த ஆங்கிலமொழி மூலமாகத்தான். ஏனென்றால், அன்று ஆங்கில மொழி என்பது மேற்கத்திய கலாசாரத்தோடும் கிறிஸ்தவ கலாசாரத்தோடும் இணைந்து காணப்பட்டது. இதன் காரணமாகத்தான் ஆரம்பகாலகட்டத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் கூட ஆங்கிலக் கல்வியைப் புறக்கணித்தார்கள். அவர்கள் நிதர்சனமாகக் கண்டார்கள். ஆங்கிலக் கல்வி என்பது மிசன் பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றது. அந்த கல்வியினூடாக மறைமுகமாக மேற்கத்தைய மதம், கலாசாரம், சிந்தனை திணிக்கப்படுகின்றது. இதன் காரணமாக இந்த நாட்டைச் சேர்ந்த பிற இனத்தவர்கள் கலாசார ரீதியாக, மதரீதியாக மாற்றம் அடைந்து கொள்வதை முஸ்லிம் சமூகம் நிராகரித்தது. எனவேதான் ஆங்கிலம் படிப்பது ‘ஹராம்’ என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ஆங்கில மொழியைப் பொருத்தமட்டில் மிகப் பொருத்தமான, யதார்த்தமான தீர்வு தனது கலாசார பண்பாட்டு தனித்துவத்தை பேணவிரும்புகின்ற இனம் நிச்சயமாக அந்த முடிவுக்குத்தான் வந்திருக்க வேண்டும். அது நியாயமானது.

ஆனால், சித்திலெப்பை போன்றவர்கள் அதற்கு மாற்று வழிகளையும் கண்டுபிடித்தார்கள். இன்று ஆங்கில மொழியின் தன்மை மாறிவிட்டது. அது சர்வதேச மொழி, அது மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் மொழியல்ல. இன்று யப்பானிலும் ஆங்கிலம் படிக்கின்றார்கள். பிரான்ஸியர்களும் ஆங்கிலம் படிக்கின்றார்கள். சீனர்களும் ஆங்கிலம் படிக்கின்றார்கள். அவர்கள் மேற்கத்திய பண்பாட்டை, கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளாது விட்டாலும்கூட அந்த மொழியென்பது சர்வதேச ரீதியாக அறிவியலை, தொழில்நுட்பத்தை பொதிந்துள்ள மொழியென்ற வகையில் நவீன அறிவைப் பெறுவதற்கான ஊடகமாக நீங்கள் பார்ப்பது போன்று உலகை பார்ப்பதற்கு ஒரு யன்னலாக ஆங்கில மொழி இன்று மாறியிருக்கின்றது.

இந்த இடத்தில் ஆங்கிலத்தினூடாக கற்கின்றோம் என்ற உளம் சார்ந்த பிரமை இருக்கிறதல்லவா? அது ஒரு மாயைதானே?

சிலவேளை அது இருக்கலாம். ஏனென்றால் ஆங்கிலம் கற்றுவிட்டோம் என்ற பெருமிதம் அடுத்தவர் களிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்திப் பார்க்கின்ற ஒரு மனப்பான்மையும் அவனிடம் தோன்றலாம். இது அவர்களுடைய உளப்பண்பைப் பொருத்தது. அந்த மொழியின் பிழையல்ல. (சிரித்துக் கொண்டு) ஏனென்றால் சிலர் அப்படியிருக்கிறார்கள். ஆங்கிலம் கற்றவர்கள் மட்டுமல்ல, உதாரணமாக வைத்தியத்தைக் கற்றவர்கள் அவர்களுக்கு ஒரு இறுமாப்பு வருகின்றது. கலைத்துறை சார்ந்தவர்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். இப்படியொரு பண்பும் இருக்கிறது.

Computer கற்ற ஒரு மாணவன் அந்த அறிவைப் பெறாத ஒருவனை ஓரளவு குறைந்த நிலையில் பார்ப்பான். இது அந்த கலையின் தவறு அல்ல. அது மொழியின் தவறும் அல்ல. இது அவர்களுடைய உளப்பண்பைப் பொருத்தது. அந்தவகையில் ஆங்கில அறிவைப் பெறவேண்டும் நாளாந்தம் வளர்ந்து வருகின்ற அறிவுத்துறைகளோடு பரிச்சயம் இருக்க வேண்டுமென்றால் ஆங்கிலமொழி அறிவு அவசியம். நீங்கள் நினைப்பது போல ஆங்கிலம் கற்பதில் பரவலான சூழ்நிலை வந்தால் இப்படி ஒரு சிலர் அதனை ஏகபோகமாக வரித்துக்கொண்டு பெருமை பாராட்டக் கூடிய சூழ்நிலை தோன்றாது. ஆங்கிலம் ஜனரஞ்சகப்படுத்தப்படல் வேண்டும். ஆங்கில மொழியை ஜனரஞ்சகப்படுத்துவதன் மூலம் ஆங்கில பிரமைத்துவ கோட்பாட்டிலிருந்து விடுதலை பெறலாம்.

பண்பாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபடும் நோக்கோடு முஸ்லிம்கள் தமக்கான மொழியாக இரண்டு நூற்றாண்டுகளாக அறபுத்தமிழை வைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அது காலாவதியாகிவிட்டது. இந்த இடத்தில் முஸ்லிம்கள் தங்களது பண்பாட்டு தளங்களில் கையாளும் பேச்சு மொழியை எழுத்து வகைமைப்படுத்துவது சாத்தியமா?

உண்மையில் அறபுத் தமிழின் தோற்றத்தை நாங்கள் பார்க்கும் போது ஒரு காலத்தில் முஸ்லிம்களுடைய கலாசார பண்பாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கு உருவாக்கப்பட்ட மொழி. முஸ்லிம்கள் எப்போதும் சுதந்திரமாக சிந்தித்தார்கள். எவ்வளவு Creative ஆக இருந்தார்கள் என்பதற்கு மிகவும் உறுதியான ஆதாரம். எங்கள் மூதாதையருடைய Creative thinking. அதே நேரத்தில் கலாசார உணர்வு (Cultural Conservatational)  எவ்வாறு தொழிற்பட்டது என்பதை அது அப்படியே பிரதிபலிக்கின்றது. ஏனென்றால் தமிழ் மொழியை அவர்கள் பேசினார்கள். தமிழ் மொழியில் பரிச்சயம் கொண்டார்கள். அதேநேரத்தில் அந்த மொழி இஸ்லாத்திற்கு முரணான பல அம்சங்களை மொழி ரீதியாக சொற்கள் ரீதியாகக் கொண்டிருப்பதை அவதானித்தார்கள். எனவே, அந்த மொழியை இஸ்லாமிய மயப்படுத்தி அதிலே இஸ்லாமிய கருத்துக்களைப் புகுத்தி அதைஅறபு மயப்படுத்தி ஒரு மொழி பிரயோகத்தை உருவாக்கினார்கள். இதுதான் அறபுத் தமிழ். இத் தோற்றம் பற்றி நிறைய கருத்துக்கள் இருக்கின்றது. எப்போது முஸ்லிம்கள் அறபு எழுத்தை (லிபியை) புனிதமாக கருதினார்கள். தமிழ் மொழியை அறபு லிபியில் எழுதுவதற்காக அறபு மொழியைக் கண்டுபிடித்தார்கள் என்ற ஒரு கருத்துண்டு. ஆனால், அதைவிட தமிழ் மொழியென்பது இந்து சைவ கலாசாரத்தோடு இணைந்த ஒரு மொழியாக இருப்பதால் அந்த கலாசார பண்பாட்டுத் தாக்கம் முஸ்லிம்களுடைய வாழ்க்கையில் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக தமிழ் மொழியையும் வரித்துக் கொண்டு அதேநேரத்தில் அறபு இஸ்லாமிய மயப்படுத்தி ஒரு புதிய மொழிமரபை தோற்றுவித்தார்கள். உண்மையில் அவர்களுடைய பெரிய பங்களிப்பு நீங்கள் கூறுவது போல இன்றைய பேச்சுவழக்கு தமிழ் என்பது தமிழ். நாங்கள் இங்கு பேசுவது தமிழ். அறபு மொழி இங்கு வழக்கிழந்து விட்டது. அதற்கான பல காரணங்கள் இருக்கின்றன.

முஸ்லிம்களுடைய பேச்சுகளில், வட்டார வழக்கில் அறபு கலந்திருக்கிறது தானே! இவற்றை வைத்து ஏன் சாத்தியப்படுத்த முடியாது?

நான் நினைக்கவில்லை அது ஒரு சிரம சாத்தியமான செயலென்று. பொதுவாக சாத்தியம் என்றுகூட நினைக்கவில்லை. முஸ்லிம்கள் எந்த மொழியைப் பேசினாலும் அவர்களுடைய மொழியிலே அறபு மொழியின் செல்வாக்கு காணப்படுகின்றது. முஸ்லிம்களுடைய பேச்சிலே ஆங்காங்கு அறபுச் சொற்கள் விரவிக் காணப்படுவதாலும் அல்லது அறபு மொழிப் பிரயோகங்கள் மலிந்து காணப்படுவதாலும் அதனை ஒரு தனிமொழியாக அமைத்து அதனைப் பிரித்து வளர்த்தெடுப்பதென்பது இன்றை காலகட்டத்தில் சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை.

கற்றல் கற்பித்தலில் கிளைமொழி ஏற்பு அணுகுமுறை பற்றி தங்கள் கருத்து யாது?

Vernacular என்று சொல்வார்கள். மொழி, கிளைமொழி என்று ஒரு மொழியை பேசுகின்ற சமூகம் எல்லா இடங்களிலும் இருந்தாலும் பிரதேசவாரியாக சில வித்தியாசங்கள் காணப்படும். அதனை கிளைமொழி என்று சொல்கிறோம். ;. Provincial Dialogue, District Dialogue என்று நிறையக் காணப்படுகின்றது. முஸ்லிம்களை பொருத்தமட்டில் வித்தியாசமான உச்சரிப்புமுறை தனிப்பட்ட பிரயோகங்களில் கூட சிலரது குறிப்பிட்ட பிரதேசத்துக்குரிய மொழிப்பிரயோகங்கள் இருக்கும். இவற்றையெல்லாம் இணைத்து ஒரு பொது மொழியாக ஆக்குவது சாத்தியமானதல்ல. அதேநேரத்தில் பத்திரிகையில் படிக்கின்ற மொழிக்கும் இலக்கியத்தில் பிரயோகிக்கின்ற மொழிக்கும் வித்தியாசம் இருக்கின்றது. எனவே, மொழியைப் படிக்கின்றவருக்கு சில பிரதேச வழக்கை அறிமுகப்படுத்துவதற்காக இதனை கையாளலாம். இப்படியாக தமிழ் மொழியென்பது கிழக்கு மாகாணத்தில் இவ்வாறாகவும் மேற்கு ஏனைய மாகாணங்களில் இவ்வாறும் உள்ளது. ஒவ்வொரு மாகாணத்திலும் உரிய பதப்பிரயோகம் இருக்கின்றது என்று இந்த கிளைமொழிகளைப் பற்றிய பரிச்சயத்தை ஏற்படுத்த இது ஓரளவு துணை புரியலாம்.

இலங்கை முஸ்லிம்களுக்கான சிந்தனை மரபு என்று ஒன்று இருக்கிறதா? அது சித்திலெப்பை, ஒராபிபாஷா, மாப்பிள்ளை லெப்பை ஆலிம், உமர் அலி ஹஸ்ரத், ஏ. எம். ஏ. அஸீஸ் போன்றோரின் மரபுத் தொடர்ச்சியாக உங்களை கொள்ளலாமா?

நீங்கள் என்னை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. இவர்கள் வரிசையில் எந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. இவர்கள் வரிசையில் நான் சித்திலெப்பைக்கும், ஏ. எம். ஏ. அஸீஸுக்கும் நெருங்கியவன் என்றுதான் கூறுவேன். ஏனென்றால் நீங்கள் கூறிய வரிசையிலே பல துறையைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்டது போல இலங்கை முஸ்லிம்களுக்கென்று ஒரு சிந்தனை மரபு இல்லை. இது மிகவும் கடினமான ஒரு கேள்வி. இதனால் நாங்கள் என்ன கருதுகிறோம். இலங்கை முஸ்லிம்களுடைய சிந்தனையே குழம்பியிருக்கின்ற காலகட்டம். பல்வேறு சிந்தனைக் கூறுகள், பல்வேறு கருத்துப் பிரிவுகள், பல்வேறு தத்துவப் பிரிவுகள் இப்படியாக இருக்கின்ற நேரத்திலே பொதுவான சிந்தனை மரபு பற்றி சிந்திப்பது அது ஒரு மிகவும் பயங்கரமான பரிசோதனையாக இருக்கும். எனவே, அது இன்றைய காலகட்டத்தில் எப்படிப்போனாலும் இலங்கை முஸ்லிம்களுக்கென்று ஒரு பொதுவான சிந்தனை மரபு ஒன்றை இனங்காணுவது மிகவும் கஷ;டம். பொதுவாக நாங்கள் பார்த்தால் இலங்கை முஸ்லிம்கள் பாரம்பரியமாக ‘அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ’ என்ற சிந்தனைப் பிரிவை சார்ந்தவர்கள். ‘ஷீஆ’ சிந்தனைப் பிரிவு இல்லை.

இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ‘ஷாபி’ மத்ஹபைச் சார்ந்தவர்கள். இது ஒரு முக்கியமான அம்சம். இன்று மத்ஹப் அவசியமா, இல்லையா என்ற காலகட்டத்தில் இதைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் வரலாற்றை, யதார்த்தத்தை நாங்கள் கூறியாக வேண்டும். இலங்கையில் வியாபார, திருமண சட்டங்கள் இருக்கிறது என்றால் அது ஷாபி மத்ஹபையொட்டி உருவாக்கப்பட்டது. எனவே, பாரம்பரியமாக இலங்கை முஸ்லிம்கள் கலாசாரத்தின் கூறுகளைப் பார்த்தால் அஹ்லுஸ் ஸுன்னா ஷாபி மத்ஹபைச் சார்ந்த ஆத்மீக செல்வாக்கின் ஆழமான தாக்கத்துக்குள்ளாகிய ஒரு சிந்தனை மரபு.

அறிவை இஸ்லாமிய மயப்படுத்தலின் அவசியத்தை உணர்ந்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக அதிலொரு செயலாளியாக இருக்கும் நீங்கள் தற்கால இலங்கை கல்விமுறையை எவ்வாறு இஸ்லாமிய மயப்ப டுத்தலாம்?

இது ஒரு கஷ்டமான கேள்வி. ஆனால் பொருத்தமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில் சிந்திக்க வேண்டிய கேள்வி. உண்மையில் அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற கோட்பாடு இஸ்லாமிய உலகில் பரவலாகப் பேசப்படுகிறது. அது தொடர்பான பணிகள் நடைபெறுகின்றது. அதனுடைய கருத்து என்னவென்றால் உண்மையில் உலகில் அறிவு என்று பேசப்படுவது மேற்கத்திய அறிவு. கல்வி என்று அறிமுகப்படுத்துவதும் மேற்கத்திய கல்வி (What is knowledge in Western knowledge, what is patern in Western Education) மேற்கத்திய வரலாற்று சிந்தனையில் உருவாகிய சடவாத சிந்தனைக்குட்பட்ட லோகாயத கல்விக்கு ஆட்பட் ஆத்மீகத்தைப் புறக்கணிக்கின்ற, மனித ஆளுமையை மொத்தமாகப் புறக்கணிக்கின்ற, ஒரு கல்வி முறைதான் நவீன கல்வி முறை. இந்த கல்வி முறை மனிதனின் மூளையை வளர்க்கின்றது. உள்ளத்தை வளர்க்கவில்லை. ஆத்மாவை முற்றிலும் புறக்கணிக்கின்றது. Totel Personality of man பூரணத்துவமான ஆளுமை கொண்ட மனிதனுடைய பூரணமான வளர்ச்சிஅங்கு சிதைக்கப்படுகிறது. அதேநேரத்தில் மூளையில் தகவல்களைத் திரட்டுகின்ற கல்வியாக இருக்கின்றதே தவிர மனிதனுடைய உள்ளத்தைப் பண்படுத்துகின்ற கல்வியாக இல்லை. இந்த கல்வியின் விளைவுகளைத்தான் இன்று பார்க்கின்றோம். பல்கலைக்கழகங்கள், உயர்கல்விப் பீடங்களில் காணப்படுகின்ற செயல்கள் வன்முறைகள், ஒழுக்கக்கேடான செயல்கள் இவை எவற்றைப் பிரதிபலிக்கின்றது என்றால் இவர்கள் தகவல்களை மூளையில் சேமித்தவர்களே தவிர, அந்த அறிவை தனக்குள் உள்வாங்கி அதனால் உள்ளம் ஒளிபெற்ற ஆன்மா வளர்ச்சிபெற்ற மனிதர்கள் அல்ல. இவர்கள் அறிவில், தகவல்களில் இமயங்கள், பண்பாட்டில் குள்ளர்கள் என்ற தன்மையை நாங்கள் பார்க்கிறோம். இஸ்லாத்துக்கென்று ஓர் அறிவுக்கோட்பாடு இருக்கின்றது. அது அறிவை It is an art a Prideful Responsibility. அது ஒரு பெருமைக்குரிய கலைகளில் பொறுப்பாக கருதப்படுகின்றது.

அறிவு என்பது வெறுமனே மூளையை வளர்ப்பது அல்ல. அது மனிதனுடைய பண்பாட்டை, ஒழுக்கத்தை வளர்ப்பது. இதற்கு இஸ்லாமிய அறிவு கோட்பாடு பற்றிய விரிவுரைக்கே செல்ல வேண்டும். இந்தவகையில் மேற்கத்திய அறிவியலாக இருந்தாலும் சரி மேற்கத்தைய கலைகளாக இருந்தாலும் சரி, அது சமூகவியலாக இருக்கலாம்;, வரலாறாக இருக்கலாம், பொருளியலாக இருக்கலாம். எந்தத் துறைசார்ந்த கல்வியாக இருந்தாலும் அந்த கலைகளினூடே மேற்கத்திய சிந்தனையில் அது அப்படியே இழையோடிச் செல்வதை நாங்கள் பார்க்கிறோம். இந்தக் கலையைப் படிக்கின்ற மாணவன் இயற்கையாகவே மேற்கத்திய சிந்தனைக்கு ஆளாகின்றான். அந்தத் தாக்கம் அதிலே காணப்படுகின்றது.

இஸ்லாம் என்றவகையில் சொன்னால் இந்த நாட்டில் தேசிய கல்வியின் ஓர் அங்கம். நாங்கள் சிறுபான்மைச் சமூகத்தவர்கள். விரும்பியோ விரும்பாமலோ நாட்டின் தேசிய கல்வியோடு இணைந்துதான் செல்ல வேண்டும். பொது நீரோட்டத்தில் நீந்திச் செல்ல வேண்டும். தேசிய கொள்கையில் எத்தகைய செல்வாக்கையும் ஏற்படுத்தக் கூடிய சக்தி எங்களுக்கில்லை. ஆனால், அதேநேரத்தில் இந்தக் கலைகளினால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கக்கூடிய அறிவை முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கலாம். அதன் மூலமாக நாங்கள் இஸ்லாமிய மயமாக்கலாம்.

உதாரணமாக வரலாறு பற்றி இஸ்லாமிய கண்ணோட்டம், புவியியல் பற்றி இஸ்லாமிய கண்ணோட்டம், சமூகவியல் பற்றி இஸ்லாமிய கண்ணோட்டம், பௌதீகவியல் பற்றி இஸ்லாமிய கண்ணோட்டம், சர்வதேச உறவுகள் பற்றி இஸ்லாமிய கண்ணோட்டம், அறிவியல் தொழில்நுட்பம் பற்றி இஸ்லாமிய கண்ணோட்டம், அவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்கள் பெறுகின்ற கல்வியை இஸ்லாம் என்ற கட்டுக்கோப்புக்குள் இணைத்து நோக்குவதற்கு அவர்களின் சிந்தனை செயல்படும். இதுதான் இந்த நாட்டில் இஸ்லாமிய மயப்படுத்தல் பற்றி நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு முயற்சி.

சமூகநலக் கருவியாக தொழிற்பட்டு வந்த அரசு இன்று அனைத்து துறைகளையும் தனியார் மயப்படுத்திக்கொண்டு வரும் உலகமயமாதல் (Globalization)சூழலில் எமது கல்வித்துறை பாதிப்படையும் எனக்கருதுகிறீர்களா?

நிச்சயமாக. இங்கு நாங்கள் கல்வி பற்றிய நவீன கோட்பாட்டுக்கு வருகின்றோம். கல்வி என்பது வெறுமனே உற்பத்திச் சாதனம் என்று கூறக்கூடிய உலமயமாக்களில் இன்று அனைத்துமே வியாபார சரக்காக மாறியிருக்கின்றது. வணிகப் பொருளாக மாறியிருக்கின்றது. அறிவும் இங்கு விலை பேசப்படுகின்றது. மனிதனுக்குப் பயனுள்ள அறிவு எதுவென்றால் வாழ்க்கையில் சாதிக்கக்கூடிய ஒன்று வந்திருக்கின்றது. இந்த நீர்ச்சுழியில் நிறையப்பேர் சிக்கி இருக்கின்றோம். இது தவிர்க்க முடியாத ஒன்று. உலமயமாதல் என்ற பாதிப்புக்கு அனைவருமே ஆளாகியிருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் என்றவகையில் இந்த பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்கின்ற சில முயற்சிகளை நாங்கள் எடுக்க வேண்டும். கல்விகூட அந்த தூய்மையான நோக்கத்தை இழந்து அதனுடைய சமூகப் பணியை, பங்களிப்பை இழந்து இன்று அது வெறும் நுகர்வுப் பொருளாக மாறியிருக்கின்றது. கல்வி என்பது வெறுமனே Consumerity யாக சுப்பர் மார்க்கட்டிலே வாங்கக் கூடிய பொருளாக காணப்படுகின்றது. கல்வி இன்று விலை பேசப்படுகின்றது. ஆனால் இஸ்லாம் அவ்வாறு நோக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் கல்வி பற்றிய இஸ்லாமிய நோக்கினைப் புரிந்துகொண்டு எந்த கல்வியை நாங்கள் கற்றாலும் இஸ்லாமிய இணைப்பை கொடுக்கலாம்.

இன்றைய சமூக விஞ்ஞானத்துறைகளை இஸ்லாமிய மயப்படுத்தும் போது எதிர்கொள்ளும் இடர்பாடுகளை எவ்வாறு நீக்கலாம்?

இதில் இடர்பாடுகள் எதுவுமில்லை. இன்று உலகைப் பொருத்தவரையில் Islamization of knowledge பற்றி பல ஆய்வாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். பல மாநாடுகள் நடத்தியிருக்கிறார்கள். எனவே, Islamizatgion of social science என்று ஒரு நூலை எழுதியிருக்கிறார்கள். அதற்கான வழிகாட்டலையும் அவர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த இலட்சியத்தை, குறிக்கோளை இன்றும் நாங்கள் அடையவில்லை. இந்த சிந்தனை தூண்டப்பட்டு அதற்கான முயற்சி செய்யப்படுகின்றது. உண்மையில் நீங்கள் கூறியது போல எதிர்காலத் தடைகள் இருக்கின்றன. உதாரணமாக சமூகவியலை இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற பணியில் ஈடுபடுகின்ற ஒருவன் அல்லது ஒரு குழுவில் சமூகவியலை ஆழமாகக் கற்றவர்கள் இருக்க வேண்டும். இஸ்லாத்தை ஆழமாகக் கற்றவர்கள் இருக்க வேண்டும். (சமூகவியல் என்பது இங்கு எல்லாத் துறைகளையும் உள்ளடக்கி நிற்கிறது எனலாம்)

‘தஜ்தீத்’ என்ற இஸ்லாமிய கருத்தாக்கத்தையும் இன்றைய முஸ்லிம் ஆசிரியர்களோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாமா? விளக்க முடியுமா?

தஜ்தீத் என்பது புத்துணர்ச்சி என்று பொருள்கொள்ளப்படும். இந்தப் பணியைச் செய்பவர் ‘முஜத்தித்’ என்று அழைக்கப்படுவார்கள். இது எதைக் குறிப்பிடுகிறது என்றால் இஸ்லாம் என்பது எங்குமே என்றுமே தேக்க நிலையில் இருக்காது. இஸ்லாம் என்பது கால வளர்ச்சியோடு அதன் உள்ளார்ந்த சக்தியை அமைத்தி ருக்கிறது. இந்தவகையில் பார்க்கும் போது கூட முஸ்லிம் ஆசிரியர்கள் என்றவகையில் அவர்கள் புதுமையாக சிந்திப்பது புதிய கண்ணோட்டங்களை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்வது புதிய சிந்தனைகளை வரித்துக் கொண்டு தங்களுடைய பணியைச் செய்வது மிகவும் அவசியமாகும்.

தமிழ் நிலைப்பட்ட இஸ்லாமிய உளவியலை உருவாக்குவதற்கான தங்களது முயற்சிகள்?

நான் இந்த துறையில் ஆர்வம் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் உளவியல் என்று பேசப்படுவது மேற்கத்திய உளவியலைத்தான். ‘சிக்மன் பிரைடின்’ கோட்பாடுதான் பேசப்படுகிறது. மட்டுமல்ல மனிதன் சமூக பிராணியாக நோக்கப்பட்டுத்தான் மேற்கின் உளவியல் கோட்பாடு அமைந்திருக்கிறது. இதற்கான ஆத்மீக பரிமாணத்தை இஸ்லாமிய உளவியல் வழங்குகின்றது. இஸ்லாமிய உளவியலை கட்டியெழுப்புவதிலே சூபிக்கள் பெரும் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். அதன் சுவையை உணர்ந்ததனால் இமாம் கஸ்ஸாலி, இமாம் ஹாரிசி போன்றவர்கள் பெரும் இஸ்லாமிய உளவியல் பாரம்பரியத்தை கட்டியெழுப்பினார்கள். இஸ்லாமிய ஆத்மீக உளவியல் Islamic Spiritual – Psychology நவீன உளவியலை இந்த சடவாத ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்து மனித சமூகம் பயனடைவதற்கும் இஸ்லாமிய உளவியல் ஆய்வு மிகவும் அவசியம்தான். அதற்கான முழு முயற்சியிலும் நான் இப்பொழுது ஆர்வம் காட்டி வருகின்றேன்.

சமகாலத்தில் அத்தகைய நூல்கள் தமிழில் இருக்கின்றனவா?

தமிழிலே அத்தகைய நூல்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆங்கிலத்திலே நிறைய வந்திருக்கின்றன. Modern Islamic Psychology என்ற அழகான கட்டுரையை பேராசிரியர் பத்ரி அவர்கள் ஆங்கிலத்திலே எழுதியிருக்கிறார். ‘இஸ்லாமிக் சைக்கோலொஜி’ என்று அரபியில் நிறைய நூல்கள் வந்திருக்கின்றன. தமிழிலே துரதிஷ்டவசமாக எதுவுமே வரவில்லை.

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து

இது மிகவும் கஷ்டமான ஒரு வினா. புதிய கல்வி சீர்திருத்தம் என்று எதைக் கூறுவது என எனக்குத் தெரியாது. ஆரம்பத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு, விவாதிக்கப்பட்டு பல சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த காலத்திலே ஆசிரியர் மையக்கல்வி என்று பேசப்பட்டது. இப்போது மாணவர் மையக்கல்வி என்று இருக்கின்றது. ஆனால், நான் கூறுவேன் இது பெற்றோர் மையக்கல்வி. ஏனென்றால் மாணவர்களுடைய வேலைகளை வீட்டில் பெற்றோர்கள் செய்கின்றார்கள். இதுவெல்லாம் சித்தாந்த ரீதியாக அழகான சொற்கள். கருத்தரங்குகள் நடாத்துவதற்கு, விவாதிப்பதற்கு மிகவும் பிரயோசனமான தலைப்புக்கள். ஆனால் எங்கள் நாட்டில் வெற்றிகரமாக நடத்துவதற்கு வளம் தேவை.

இதில் முதலாளித்துவம், நுகர்வு கலாசார சமூகத்தை கட்டமைக்கிறது என்று கருதலாமா?

ஓரளவு நாம் கருதலாம். ஏனென்றால் இந்த கோட்பாடுகளின் பின்னால் இருப்பது மேற்கத்திய கல்விக் கோட்பாடு. மேற்கத்திய கல்விக் கோட்பாடே மனிதனை இயந்திரப் பிராணியாக நோக்குவதுதான். அவர்கள் கூறுகிறார்கள், மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றலை வளர்ப்பது, அவர்களுடைய திறமைகளை அவர்களாகவே இனங்கண்டு வெளிக்கொணரச் செய்வது, அதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருப்பது. மாணவர்களே தாங்களாகச் செய்வது. அவர்களின் மூளையில் திணிப்பது அல்ல என்றெல்லாம் கூறுகின்றார்கள். இவை எவ்வளவு தூரம் நடைபெறுகின்றன. இவற்றை சிறப்பாகச் செய்வதற்குரிய வளங்கள் வகுப்பறையிலே காணப்படுகின்றனவா? பெற்றோர்கள் அந்த அறிவுத்தரங்களை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்பதெல்லாம் கேள்விக்குறிதான். இவையெல்லாம் காலத்துக்கு காலம் மாணவர்களை வைத்துச் செய்யப்படுகின்றன கல்விப் பரிசோதனைகள். இவர்கள் பலிகடாக்களாக மாறுகின்றார்கள்.

அவர்கள் நாட்டில் தோல்வியடையும் கல்விச் சீர்திருத்தங்களை கீழைத்தேய நாடுகளில் அறிமுகப்படுத்து கிறார்கள் அல்லவா?

ஆம், அமெரிக்கா தாங்கள் கண்டுபிடித்த ஆயுதங்களை அறபு நாடுகளில் பரிசோதிப்பதற்கு ஒரு யுத்தத்தை ஆரம்பிப்பது போல. அதுதான் இந்த வளைகுடா ஈராக் போரும்.

இன மோதுகைக்கு (Historio Graphic) வரலாற்று எழுதுகையை முக்கிய காரணியாக குறிப்பிடும் நிலைக்கு Lional Sarath போன்ற சிங்கள புலமைத்துவ வாதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். Muslim of Sri Lanka வின் ஆசிரியர் என்ற வகையில் நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?

உண்மையில் Muslim of Sri Lanka வின் தொகுப்பாசிரியர் நான். நீண்ட அறிமுக உரையை எழுதியிருக் கிறேன். ஓரளவு நாங்கள் நோக்கினால் இந்த நாடடின் வரலாறு என்பது திரித்தும் மறைத்தும் சிதைத்தும் சிலரால் எழுதப்பட்டிருக்கின்றது. அது இனங்களுக்கிடையே ஓர் இடைவெளியை ஏற்படுத்துவதற்கும் ஒரு முக்கிய காரணம். அடுத்து இன வெறியைத் தூண்டுவதற்கும், இன உணர்வை அதிகரிக்கச் செய்வதற்கும் இத்தகைய இன ரீதியான வரலாற்று அணுகுதல் நிலை கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இதனையும் தாண்டி தேசிய ரீதியாக வரலாற்றை நோக்கியவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

ஆனால், நீங்கள் கூறிய இந்த வரலாற்று அணுகுமுறை இந்த நாட்டில் பல ஆபத்துக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. Muslim of Sri Lanka வை பொருத்தவரை எங்களுடைய முக்கியமான நோக்கம் இலங்கை முஸ்லிம்களுடைய வரலாற்றை பதிவு செய்வது, ஆவணப்படுத்துவது. ஏனென்றால் முக்கியமான காலகட்டத்தில் தொகுக்கப்பட்ட நூல் மட்டுமல்ல, ஆய்வுக் கட்டுரைகள் கருத்தரங்கினூடாக சமர்ப்பிக்கப்பட்ட நூல் அந்தக் காலத்திலே அடிக்கடி மேடைகளில் பத்திரிகையில் பேசப்பட்டது. முஸ்லிம்கள் என்பவர் கள் இந்தியாவில் இருந்து மிக அண்மைக் காலத்தில் குடியேறியவர்கள். பலரும் பலமாதிரி பேசினார்கள். இந்தக் காலகட்டத்தில்தான் இலங்கை முஸ்லிம்களுடைய வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும்.

அறிவியல் ரீதியாக வெறுமனே கதை சொல்பவனாக இல்லாமல் இந்த நாட்டின் ஒவ்வொரு துறைசார்ந்த வரலாற்று ஆய்வாளர்களை அழைத்து அவர்களுடைய துறைசார்ந்தவர்களிடம் ஆய்வுக்கட்டுரைகளை எடுத்து கருத்தரங்களை நடாத்த வேண்டுமென்று நடாத்தினோம். சிங்கள வரலாற்iறாசிரியர், பேராசிரியர்கள் உதாரணமாக ‘போர்த்துக்கேயர் காலத்தில் முஸ்லிம்கள்’ என்று எழுதியவர் போர்த்துக்கேய வரலாறு பற்றிய துறைசார்ந்தவர். டச்சுக் காலத்தைய வரலாற்றை எழுதியவர் பேராசிரியர் கார்ல் குணவர்த்ன. (Dr. Karl W Goonewardene) இந்த நாட்டில் அக்கால அறிவு பற்றிய (Authority) ஒத்தோரொட்டியாக கருதப்படுபவர். இத்தகையவர்களைக் கொண்டுதான் அறிவுபூர்வமாக தொகுத்து விமர்சன ரீதியாக ஒரு நூலை வெளியிட்டோம். உண்மையில் இது ஒரு பெரும் வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறது. அந்த நூலைப் படிக்கும் எவரும் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஆயிரம் வருட வரலாறு இருந்திருக்கிறது என்று ஆவண ரீதியாக உணர்வார்கள்.

அதை தமிழில் பெயர்ப்பதற்கான முயற்சிகள் எடுத்திருக்கிறார்களா?

நீங்கள் கேட்டது மிகவும் பொருத்தமான கேள்வி. நான் இன்னும் பல முக்கியமான விடயங்களை இணைத்து தமிழிலே அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இலங்கை முஸ்லிம்களுடைய வரலாறு தமிழிலேயும் சிங்கள மொழியிலேயும் வரவேண்டிய முக்கியமான ஒரு காலகட்டம் இது.

வரலாற்று புலமைத்துவம் மிக்க (அதாவது சிங்கள பேராசிரியர்களினால்) பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அக்கட்டுரையில் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி அவர்கள் மனோநிலை எப்படி இழையோடுகின்றன.

அதிலே நிறையக் கட்டுரைகள் நியாயமான முறையில் அக விறுப்பு வெறுப்பற்ற முறையில் எழுதப்பட்ட கட்டுரைகள். சில கட்டுரைகளிலே ஆங்காங்கு சில கருத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் எனது அறிமுகக் குறிப்பிலே மிகவும் தெளிவுபடுத்தியிருக்கிறேன். ஆனால், பாரதூரமான கருத்துக்கள் எதுவும் அதிலே காணப்படவில்லை. சிறிய சில கருத்துக்கள்தான் காணப்படுகின்றது. பொதுவாக அத்தனைபேரும் கட்டுரைகளை நிதானமாக எழுதியிருக்கிறார்கள். நடுநிலை நின்று எழுதியிருக்கிறார்கள்.

இறுதியாக ஆசிரியர் சமூகத்துக்கு எதைச் சொல்ல விரும்புகிறீர்கள்?

ஆசிரியர் சமூகத்துக்கு சொல்ல நிறைய இருக்கிறது. ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதிலே ஆசிரியரின் பங்கு மகத்தானது. எதிர்காலத்தைக் கட்டியெழுப்பப் போகிற சிறார்கள் அவர்கள் கையில்தான் ஒப்படைக்கப்படுகிறார்கள். எனவே, ஒரு மாணவன் ஆசிரியரிடமிருந்து வெறும் அறிவையல்ல, ஆசிரியனை உள்வாங்க வேண்டும். அந்த ஆசிரியன் மாணவனில் வாழ வேண்டும். உண்மையில் எனது வாழ்க்கையில் எப்பொழுதுமே நன்றி உணர்வோடு எனது ஆசிரியர்களை நினைவு கூர்வேன். எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் நல்ல ஆசிரியர்களை நான் பெற்றது. மாத்தறை சென் தோமஸ் கல்லூரியிலே படித்துக் கொண்டிருக்கின்ற காலத்திலே கந்தையா மாஸ்டர் போன்ற தமிழ் ஆசிரியர்கள், கிறிஸ்தவ ஆசிரியர்கள் எல்லாம் அந்தக் காலத்திலே எங்களுடைய ஆற்றல்களை இனங்கண்டு வளர்த்தார்கள்.

இதேபோன்று ஸாஹிராக் கல்லூரியிலே பேராசிரியர் சிவத்தம்பி, ஏம். எம். ஏ. அஸீஸ்  போன்றவர்கள் பல்கலைக்கழக வாழ்க்கையிலே பேராசிரியர் கைலாசபதி போன்றவர்கள் விரிவுரை நிகழ்த்துபவர்களாக, வெறுமனே பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துபவராக இருக்கவில்லை. எங்களோடு கருத்துப் பரிமாற்றம் நடாத்தி, காரசாரமாக விவாதித்து எங்களுடைய உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொண்டு வந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக என்னை உருவாக்கிய பேராசிரியர் இமாம் அவர்களை நன்றியோடு நினைவு கூர்கின்றேன். ஏனென்றால் இன்றும் ‘இமாம்’ வாழ்கின்றார் என்பதுதான் எனது எண்ணம். அந்தளவு என்னுடைய ஆளுமையில் அவர் பாதிப்பு ஏற்படுத்தினார். எனக்கு அறபு மொழியையும் இஸ்லாமிய கலாஞானங்களையும் மட்டும் அவர் கற்றுத்தரவில்லை. நிறையக் கற்றுத்தந்தார். இஸ்லாமிய பாரம்பரியங்களைக் கட்டியெழுப்பிய மூதாதையர்களை எப்படி மதிப்பது, எனக்கு இப்பொழுதும் நினைவிருக்கின்றது. (இதை ஏன் கூறுகின்றேன் என்றால் ஆசிரியருடைய பொறுப்பை உணர்த்துவதற்காக) அவர் வகுப்பறையில் விரிவுரை நிகழ்த்துவார். விரிவுரை நிகழ்த்திவிட்டு அல்பிரூனி என்பவரைப் பற்றி சொல்லிவிட்டு அவர்கள் ‘கிதாபுல் ஹிந்தி’ என்ற நூலின் சிறப்பைப் பற்றிச் சொன்னார். பின்னர் பேராதனை அறபு துறை நூல் நியைத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு தூசு படிந்திருந்த தடித்த புத்தகத்தை எடுத்து எனது கைக்குத் தந்தார். தந்துவிட்டுச் சொன்னார், ‘அல்பிரூனியினுடைய நூலை விளங்கக் கூடிய ஆற்றல் இன்னும் உங்களுக்கு வரவில்லை. ஆனால், ஒரு காலப்பிரிவிலே கல்விக்கும் பெரும் பங்களிப்பைச் செய்த ஒரு சிந்தனையாளரின் புத்தகத்தை வாங்கினீர்கள் என்ற உணர்வோடு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்’ என்று சொல்லிவிட்டு ‘நானும் நீங்களும் பேராதனையிலே இந்த ரம்மியமான சூழ்நிலையிலே அழகான சூழலிலே வசதியோடு கல்வியைப் படிக்கின்றோம், பேசுகின்றோம். ஆனால் அல்பிரூனியுடைய காலத்திலே இந்த வசதிகள் இருக்கவில்லை. இந்த மின்சாரம் இருக்கவில்லை. இந்தப் பேனா இருக்கவில்லை. இந்தத் தாள் இருக்கவில்லை. அவர்களெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நூலை ஆக்கினார்கள். எப்பொழுதுமே எமது பண்பாட்டை, பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பிய முன்னோர்களை மதியுங்கள்’ என்று சொன்னார்.

இதுதான் ஆசிரியனுடைய பங்கு. ஆசிரியன் வெறுமனே (இல்மை மட்டுமல்ல அஹ்லாக்கை வழங்குவது) அறிவை மட்டுமல்ல, பண்பாட்டு ஒழுக்க நெறிமுறைகளை படித்துத் தருவது, இங்கு இருக்கின்ற முஸ்லிம் ஆசிரியர்கள், முஸ்லிம் பாடசாலைகள் என்று கிடைத்திருப்பதே ஒரு வரப்பிரசாதம். அந்தச் சூழலில் இஸ்லாமிய நெறிமுறைகளை வழங்க வேண்டும். வெறுமனே தகவல்களை மட்டுமல்லாது இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை வளர்த்தெடுக்கின்ற பங்களிப்பை அவர்கள் செய்து வந்தால் அவர்களின் பணி பெரிதாக அமைய முடியும். ஆசிரியர் தனது கல்வியின் அடிப்படையில் அவர் வாழ்தல் வேண்டும். மாணவருக்கு முன்மாதிரியாய் அமைதல் வேண்டும். இத்தகைய நல்லாசிரியருடைய பணியின் மூலமாக நல்ல சமூகத்தையே கட்டியெழுப்பலாம். எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற கட்டடக் கலைஞர்கள்தான் நல்ல ஆசிரியர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *