கல்வியும் மனித வள விருத்தியும்: தென்னிலங்கை முஸ்லிம் கல்வி பற்றிய சில அவதானங்கள். கலாநிதி. எம்.ஏ.எம் சுக்ரி
ஒரு சமூகத்தின் உறுதிப்பாடு, பொருளாதார பலம், அரசியல் விழிப்புணர்ச்சி அனைத்துக்கும் அடிப்படையாக அமைவது அச்சமூகத்தின் மனிதவள அபிவிருத்தியாகும். ஒரு சமூகத்தின் பலமும், உறுதியும் அதன் மனித வளத்தில் தங்கியுள்ளது. மனித வளம் என்பது ஒரு சமூகம் பெற்றுள்ள பௌதீக வளத்தை விட மிக முக்கியமானது. ஏனெனில் ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் பௌதீக வளங்கள் அழிக்கப்பட்டாலும் அதன் மனித வளத்தை விருத்தி செய்வதன் மூலம் அந்த இழப்பை ஈடு செய்து அது எழுச்சி பெறும் சாத்தியம் உள்ளது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பான் நாடு கண்ட துரித வளர்ச்சி ஆகும். உலகப்போரில் ஜப்பான் நாட்டின் அத்தனை பௌதீக வளங்களும் அழிக்கப்பட்டன. ஆனால் எஞ்சியிருந்த பௌதீக மனித வளத்தை, கல்வியை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி செய்வதன் மூலம் அந்நாடு மிகக் குறுகிய காலத்தில் மிக வளர்ச்சி கண்டு இன்று தொழில்நுட்பத் துறையில் ஒரு முன்னணி நாடாக திகழ்கின்றது .
மனித வள அபிவிருத்திக்கு கல்வியே அடிப்படையாக உள்ளது. கல்வியின் மூலம் ஒரு சமூகத்தின் அறிவுத் தரமும், சிந்தனையாற்றலும் வளர்ச்சியடைகின்றது. அச்சமூகத்தின் தனிநபர்களில் மறைந்துள்ள, புதைந்துள்ள உள்ளார்ந்த ஆற்றல்களும், திறமைகளும் வெளிப்படுத்தப்பட்டு உரிய முறையில் தொழிற்பட ஆரம்பிக்கின்றன. இதன் அடிப்படையில் அச்சமூகம் சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் பலம்மிக்க, செல்வாக்குப் படைத்த ஒரு சமூகமாக மாற்றமடைகின்றது. அமெரிக்காவின் சனத்தொகையில் யூதர்கள் மிகச் சிறுபான்மையோராவர். ஆனால் அவர்கள் பெற்றுள்ள கல்வித் தகைமைகள் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரத்திலும், அரசியலிலும், ஊடகத் துறையிலும் மிகச் செல்வாக்குச் செலுத்தி அந்நாட்டின் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளையே தீர்மானிக்கும் பலத்தைப் பெற்றுள்ளனர் .
இஸ்லாம் அறிவுத் தேடலையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் மிக வலியுறுத்துகின்றது. அறிவு தேடுதலைத் தூண்டும், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இயற்கையின் அற்புதங்களை அவதானித்து ஆராயும் படி பணிக்கும் அல்குர்ஆனின் எண்ணற்ற திரு வசனங்களும், நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் காணப்படுகின்றனர். இந்த அறிவுத் தூண்டுதலினால் உந்தப்பட்ட ஆரம்பகால முஸ்லிம்கள் உலகின் எட்டுத்திக்கும் சென்று, கிரேக்க, பாரசீக, சீன, இந்திய நாகரிகங்களில் காணப்பட்ட கலைகளை அரபு மொழியில் பெயர்த்து ஒரு மகத்தான அறிவு பாரம்பரியத்தைக் கட்டி எழுப்பி, ஒப்பற்ற ஒரு நாகரீக வளர்ச்சிக்கு அடிகோலினர். ஆட்சிப் பலம்மிக்க வணிக, பொருளாதார மேம்பாடுமிக்க நாகரிக பண்பாட்டு வளர்ச்சி கண்ட ஒரு சமூகமாக விளங்கினர். கால ஓட்டத்தில் அறிவு தேடும் இந்த வேட்கையில் ஏற்பட்ட பலவீனம் அச்சமூகத்தின் மனித வளத்தின் பலவீனத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கல்வித்துறையில் பரவலாக ஒரு எழுச்சி காணப்படுவதையும், உயர் கல்வித் துறையில் படிப்படியான ஒரு முன்னேற்றம் காணப்படுவதையும் ஓர் ஆரோக்கியமான அறிகுறியாக நாம் காணலாம்.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மத்தியாகக் கொண்டும், மத்திய மாகாணத்தில் மாவனல்லையை மத்தியாகக் கொண்டும் ஏற்பட்டுள்ள இந்த கல்வி மறுமலர்ச்சியின் பாதிப்பை நாம் தென் மாகாணத்தில் ஏன் காணமுடியவில்லை என்பது மிக விரிவாகவும் ஆழமாகவும் ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஒரு சமூகத்தில் பரந்த அளவில் ஒரு படித்த மத்தியதர வர்க்கம் தோன்றும்போது, அச்சமூகத்தின் சிந்திக்கும், திட்டமிடும் ஆற்றல் படைத்த, தூரநோக்குக் கொண்ட ஒரு பிரிவினர் உருவாகின்றனர். ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் உள்ளடக்கிய இந்த மத்திய தர வர்க்கம், அவர்களது குழந்தைகளின் எதிர்கால கல்வியில், அதிலும் தாம் இழந்த வாய்ப்பினை உயர் கல்வியில் ஈடுபாடு காட்டுகள் இயற்கையாகும். இந்த வகையில் இந்த படித்த மத்தியதர வர்க்கத்தினரின் பிள்ளைகளே இன்று மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, கணக்காளர்ரரளாக, தொழிலதிபர்களாக காணப்படுகின்றனர். கிழக்கு மாகாணம், மத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் காணப்படும் சமூக பரிமாணத்தின் பின்னால் உள்ள சமூகவியல் காரணியாக இதனை நாம் குறிப்பிடலாம்.
தென்னிலங்கையில் கல்வித்துறையில் முன்னேற்றம் அடைந்த இந்த படித்த மத்தியதர வர்க்கம் பரவலாகத் தோன்றவில்லை என்பது ஓர் உண்மையாகும். ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள் என ஒவ்வொரு கிராமத்திலும் சிலர் காணப்பட்டாலும் இது சமூகத்தில் பரவலான ஒரு பிரதிபலிப்பாக அமையவில்லை. எனவே கல்விக்கான ஒரு உரிய சமூகச் சூழல் தென் மாகாணத்தில் பரவலாகக் காணப்படவில்லை என்றே கூறுதல் வேண்டும். உயர்கல்வியில் தென் மாகாணத்தின் பின்னடைவுக்கு, அறிவு வளர்ச்சியற்ற பெற்றோர்களின் ஆர்வமின்மை முக்கிய காரணியாக அமைகின்றது. தமது குழந்தைகள் கல்வி பெறும் பாடசாலைகளின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டாமைக்கும், சிலபோது அதன் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் வகையில் குறுகிய அரசியல் இலாபம் தேட முனையும் அரசியல்வாதிகளின் கையில் கைப்பொம்மைகளாக அவர்கள் மாறுவதற்கும் இது ஒரு காரணமாக அமைகின்றது.
தென் மாகாண முஸ்லிம் கல்வி வளர்ச்சிக்கான ஒரு ஒழுங்கான, விரிவான திட்டம் மேற்கொள்ளப்படுதல் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமாகும். முஸ்லிம் வீடுகளிலும், ஊர்களிலும் ஒரு கல்விச் சூழல் ஏற்படுத்தப்பட அவசியமாகும். குத்பா பிரசங்கங்கள் மூலம் இச்செய்தி பொதுமக்களுக்கு விடுக்கப்படல் வேண்டும். கல்விப் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வரங்குகள் நடாத்தப்பட வேண்டும். கல்வி கற்க வசதியற்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு வழிவகைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இந்த வகையில் மாத்தறை PARAGON நிறுவனம் போன்ற அமைப்புக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சமூகம் பரவலான ஆதரவைப் வழங்குதல் வேண்டும். முஸ்லிம் பாடசாலைகள் அரசியல் தலையீடுகள், தனிநபர் தலையீடுகளின்றி அதிபர்களும், ஆசிரியர்களும் சுதந்திரமாகச் செயல்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
கல்வித் துறையில் மிக வேகமாக முன்னேறி பொருளாதார, அரசியல் துறையில் பலம் பெற்று விளங்கும் பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் கல்வியில் பின்னடைந்து, பொருளாதார பலமற்று, அரசியல் விழிப்புணர்ச்சியற்று வாழும் தென்னிலங்கை முஸ்லிம்கள், இத்துறையில் மிக அவசரமாக திட்டமிட்டு தூரநோக்கோடு செயல்படுதல் மிக அவசியமாகும்.
இங்கு ஒரு கருத்தை மிக வலியுறுத்துதல் வேண்டும். ஆத்மீக, ஒழுக்க, பண்பாட்டுப் பின்னணியற்ற கல்வி ஒரு சமூகத்துக்கு நன்மைக்குப் பதிலாக பாதிப்புகளையே உருவாக்கும். எனவே முஸ்லிம் மாணவர்களின் சன்மார்க்க, கல்வி, இஸ்லாமிய ஆளுமை வளர்ச்சி, ஒழுக்க மாண்புகளில் முக்கிய கவனம் செலுத்துதல் வேண்டும். உடலும், மூளையும் வளர்ச்சி அடைந்து, ஆனால் உள்ளம் கறைபிடித்து, ஆத்மாக்கள் இருளடைந்த நபர்களை இஸ்லாமியக் கல்வி நோக்கமாகக் கொள்ளவில்லை. இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் கல்வியின் நோக்கம், உடல், உள்ளம், ஆத்மா ஆகிய மூன்றும் வளர்ச்சி கண்ட சமநிலையான ஆளுமை படைத்தவர்களை உருவாக்குவதாகும்.
பொதுவாக நோக்குமிடத்து தென் மாகாண முஸ்லிம் கல்வியில் மிகக் கூடுதலான ஈடுபாடும், கரிசனையும் செலுத்தப்படல் மிக அவசியமாக வேண்டப்படுகின்ற ஒரு காலகட்டமாக இது உள்ளது. இத்துறையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை சார்ந்தோர், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றுபட்டு உணர்தல் அவசியமாகும். சமூக மாற்றத்தையும் காலத்தின் சவால்களையும் மிகத் தெளிவாக உணர்ந்து திட்டமிட்டு தூர நோக்குடன் செயல்படுவதிலேயே ஒரு சமூகத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. வரலாறு எவருக்காகவும் காத்திருப்பதில்லை.
நன்றி: வெலிகம அறபா தேசிய பாடசாலையின் 115 ஆம் ஆண்டு சிறப்பு மலர் (2004)