நூல் மதிப்புரை: தஸவ்வுப்: இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்: பேராசிரியர்.எஸ்.எம்.எம்.மஸாஹிர்
இஸ்லாமிய மெய்ஞானக்கலை என அழைக்கப்படுகின்ற தஸவ்வுப் தொடர்பாக எழுதப்பட்டுள்ள இந்நூலுக்கு ‘தஸவ்வுப் – இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய ஒரு நூலுக்கு பெயரிடும் போது ‘ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம், இஸ்லாமிய நோக்கு, இஸ்லாமியப் பார்வை’ என்பன போன்ற பெயர்கள் தான் மனதில் தோன்றும். ஆனால் இந்நூலின் உள்ளடக்கத்துக்கேற்ப ‘இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்’ என இந்நூல் மிகப் பொருத்தமாகப் பெயரிடப்பட்டுள்ளது. ஏனெனில் இப்புத்தகம் வெறுமனே இஸ்லாத்தின் கண்ணோட்டத்தை மாத்திரம் உள்ளடக்காமல் அதனோடு தொடர்பான பல்வேறு விடயங்கள் உட்பொதிந்ததாகக் காணப்படுகின்றது.
இந்நூல் ஒன்பது பிரதான தலைப்புக்களில் எழுதப்பட்டுள்ளது. ‘தஸவ்வுபின் தோற்றம்’ என்ற தலைப்பில் ஆரம்பித்து, ‘தஸவ்வுப் பற்றிய வரைவிலக்கணங்கள்’, ‘ஆத்மீக நிலைகளும் படித்தரங்களும்’, ‘சூபித் தரீக்காக்களின் தோற்றமும் வளர்ச்சியும்’, ‘தஸவ்வுபினதும் சூபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப் பணிகளும்’, ‘ஆத்மஞானிகளும் அறப்போராட்டங்களும்’, ‘இப்னு தைமியா (ரஹ்)வின் தஸவ்வுப் பற்றிய கோட்பாடு’, ‘மேற்குலகில் தஸவ்வுப்’ எனத் தொடர்ந்து சென்று ‘மேற்கத்தேய உளவியலும் இஸ்லாமிய ஆத்மீக உளவியலும்’ என்ற தலைப்போடு முடிவடைகின்றது. இந்த ஒன்பது தலைப்புக்களும் 126 பக்கங்களுக்குள் கனகச்சிதமாக, தேவையான அளவு விளக்கங்களோடு அமையப் பெற்றுள்ளன. மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களுக்கே உரித்தான ஆற்றொழுக்கான வசனங்களும் வசீகரமான சொற்களும் அறிவியல்பூர்வமான எழுத்துமுறைமையும் (Academic Writing) அவரது ஏனைய நூல்கள் போலவே இந்நூலிலும் அமையப் பெற்றுள்ளன.
தஸவ்வுபின் தோற்றம் பற்றிய பகுதியில் இரு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
முதலாவது, தஸவ்வுப் சிந்தனையின் தோற்றம் தொடர்பிலானது. பிறசமயங்களின் மெய்ஞானக் கோட்பாடுகளை அடியாகக் கொண்டு அது உருவானது என நிறுவ சிலர் முயன்றாலும் அடிப்படையில் அது அல்குர்ஆனையும் சுன்னாவையும் கருவாகக் கொண்டமைந்தது என்பதை நூலாசிரியர் உறுதிப்படுத்துகின்றார். அதற்கு தஸவ்வுப் என்பதன் உண்மையான அர்த்தத்தை அவர் இவ்வாறு கூறுகின்றார்.
“தஸவ்வுப் என்ற பதத்தின் மூலம் நாடப்படுவது ஒருவன் முற்றிலும் இறைவனுக்கு அடிபணிந்த மனோநிலையை உருவாக்குவது, பற்றற்ற உளநிலையை தன்னில் ஏற்படுத்திக் கொள்ளல், கட்டாயக் கடமைகளை பூரண மன ஒருமைப்பாடுடன் பக்திபூர்வமாக நிறைவேற்றுதல், இறைவனால் தடுக்கப்பட்ட விடயங்களை முற்றிலும் தவிர்த்து உளத்தூய்மை பெறல் ஆகிய பண்புகளை தன்னில் வளர்த்துக் கொள்வதாகும்.” (ப.😎
இதன் மூலம் இஸ்லாம் என்பதன் பொருளான உண்மையாக அல்லாஹ்வுக்கு சரணாகதி அடைதல், ஸுஹ்த் என்ற பற்றற்ற வாழ்வு, கடமைகளை முறையாக நிறைவேற்றுவதோடு ஹராமானவற்றை முற்றாகத் தவிர்க்கும் மனப்பான்மை என்பவை இங்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன. இவை இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்தக் கருத்தை மேலும் நிறுவுவதற்கு ஹதீஸ் ஜிப்ரீல் எனப்படுகின்ற மிகப் பிரபல்யமான ஹதீஸை கலாநிதி அவர்கள் ஆதாரமாகக் கொண்டு வந்துள்ளார்கள். ஈமான், இஸ்லாம் மற்றும் இஹ்ஸான் பற்றி விளக்குகின்ற இந்த ஹதீஸில் இஹ்ஸான் என்பது ஒருவன் இறைவனைப் பார்ப்பது போன்ற உணர்வோடும் மனநிலையோடும் இறைவனை வணங்குவதைக் குறிக்கும். இதன் மூலம் தஸவ்வுப் என்பது வஹியின் அடிப்படையில் தோன்றிய கலை என்ற தெளிவை நாம் பெறலாம்.
இரண்டாவது, தஸவ்வுப் ஒரு கலையாக எப்போது தோற்றம் பெற்றது பற்றியது. இஸ்லாத்தின் பரவலோடு பல இனத்தவர்களும் பல கலாசாரங்களைச் சார்ந்தவர்களும் இஸ்லாத்தில் நுழைந்தனர். அதனைத் தொடர்ந்து அறிவின் வட்டம் வளர்ச்சியடைந்து பல்வேறு கலைகள் தோற்றம் பெற்றன. ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டில் அறபு இலக்கணத்தின் பின்னர் பிக்ஹ் என்னும் சட்டக்கலை, ஹதீஸ் கலை, உஸூலுத்தீன், தப்ஸீர், மன்திக், முஸ்தலஹுல் ஹதீஸ், அல்மீராஸ் ஆகிய கலைகள் தோன்றின. (ப.😎 இந்தப் பின்னணியில் தான் தஸவ்வுப் என்பதும் ஒரு கலையாக உருவாகி வளர்ந்தது என்பதை நூலாசிரியர் விளக்குகின்றார்.
தஸவ்வுப் பற்றிய வரைவிலக்கணங்கள் என்ற இரண்டாவது தலைப்பு அதற்கான வரைவிலக்கணங்களைப் பற்றிப் பேசுகின்றது. அதனை வரைவிலக்கணப்படுத்துவதில் உள்ள சிரமத்தை அப்பகுதியின் முதல் பந்தி விளக்குகின்றது.
“தஸவ்வுப் உள்ளத்தோடும் அதன் ஆழமான உணர்வுகளான இறைநேசம், பக்தி போன்ற உளநிலைகளோடும் தொடர்புற்றதாக அமைவதால் அதனை வார்த்தைகளால் வரைவிலக்கணப்படுத்துவது மிகச் சிரமமானதாகும்.” (ப. 12). தொடர்ந்து ஜூனைத் அல் பக்தாதி, அப்துல் காதிர் ஜீலானி, துன்னூன் அல் மிஸ்ரி, சஹ்ல் அல் துஸ்தரி, இமாம் கஸ்ஸாலி, அபுல் ஹஸன் ஷாதுலி, பிஷ்ருல் ஹாபி (ரஹ்) ஆகியோரின் வரைவிலக்கணங்களை கலாநிதியவர்கள் எழுதியுள்ளார்கள்.
அந்த எல்லா வரைவிலக்கணங்களின் சாராம்சமாக அல்குர்ஆனையும் நபியவர்களது சுன்னாவையும் பின்பற்றுவதனூடாக அகமும் புறமும் பரிசுத்தமடைதல் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
இறுதியாக மனப்பரிசுத்தம், உளத்தூய்மையை உருவாக்கிக் கொண்டு நற்குணங்கள் மூலம் ‘இஹ்ஸான்’ என அழைக்கப்படும் உயர்ந்த ஆத்மீகப் படித்தரத்தை அடைவதாகும் என அப்பகுதி முடிவடைகின்றது. தஸவ்வுபின் இறுதி இலக்கு இதுவேயாகும்.
ஆத்மீக நிலைகளும் படித்தரங்களும் என்பது மூன்றாவது தலைப்பாகும். அதில் ‘அஹ்வால்’ (Spiritual Stages) மற்றும் ‘மகாமாத்’ (Spiritualization) என்ற இரு சொற்பிரயோகங்களும் அவற்றுக்கிடையிலான வித்தியாசமும் விளக்கப்பட்டுள்ளன. ஆத்மீகப் பயிற்சிகள், செயற்பாடுகள் மூலமாக ஒருவர் அடையும் படித்தரங்கள் ‘மகாமாத்’ எனவும் ஆத்மீகப் பாதையில் இறைவனின் புறத்தால் அவருக்கு வழங்கப்படும் ஓர் அருளாக ‘அஹ்வால்;’ என்னும் ஆத்மீக நிலைகளும் கொள்ளப்படுகின்றன. (ப. 16)
கலாநிதி முஹம்மத் பஹ்ர் முஹம்மத் ஹஸன் என்ற ஆய்வாளர் தனது அல் மகாமாத் வல் அஹ்வால் இந்தஸ் ஸூபிய்யா என்ற ஆய்வுக் கட்டுரையில் ‘அஹ்வால்’ என்பதை ஷரீஅத்தில் அங்கீகரிக்கப்பட்ட திக்ர்கள் மூலமாக அல்லாஹ்வை நெருங்குவதன் மூலம் ஏற்படும் உளத்தூய்மை, மனஅமைதி, உளத்திருப்தி என்பவை எனக் குறிக்கின்றார். (مجلة الشريعة والدراسات الإسلامية)
மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்கள் இப்பகுதியில் சில மகாமாத்களை உதாரணத்திற்காகக் குறிப்பிட்டுள்ளார்கள். மகாமுத் தௌபா – பாவமன்னிப்பு, மகாமுஸ் ஸுஹ்த் – பற்றற்ற வாழ்வு, மகாமுஸ் ஸப்ர் – பொறுமை, மகாமுஷ் ஷுக்ர் – நன்றி பாராட்டல், மகாமுர் ரஜா – எதிர்பார்க்கை. இவை பற்றிய முக்கியமான தகவல்கள் இப்பகுதியில் உள்ளடங்கியுள்ளன.
ஆனால் அஹ்வால் பற்றிய விபரங்கள் இப்பகுதியில் உள்வாங்கப்படாமை வாசகர்களுக்குக் குறையாகத் தென்படலாம். அவற்றுள் சிலவற்றை இன்னும் விபரித்திருக்கலாம்.
சூபித் தரீக்காக்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்பது இந்நூலின் நான்காவது அத்தியாயமாகும். இதற்கான பின்னணியை மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்கள் விளக்கும் போது “குர்ஆனினதும் சுன்னாவினதும் அடியாகத் தோன்றி ஓர் ஆத்மீகக் கோட்பாடாக வளர்ச்சியடைந்த தஸவ்வுபின் வரலாற்றில் பல முக்கிய கட்டங்களையும் படித்தரங்களையும் நாம் அவதானிக்க முடிகின்றது. கால வளர்ச்சியில் தஸவ்வுப், பிக்ஹ் கலையைப் போன்றே அதற்கேயுரிய கலைச் சொற்களைக் கொண்ட ஒரு தனிப்பட்ட கலையாகப் பரிணாமம் பெற்றது. அதன் அடுத்த வளர்ச்சிப்படியாக தஸவ்வுப் பற்றிய கோட்பாடு, சித்தாந்தங்கள், நடைமுறைகளை விளக்கும் நூல்கள் தொகுக்கப்பட்டன. தஸவ்வுபின் வளர்ச்சியில் மூன்றாவது கட்டமே ஹி. 6ஆம் (கி.பி. 12ஆம்) நூற்றாண்டளவில் தோற்றமெடுத்த தரீக்காக்கள் எனும் ஆத்மீக மரபுகளாகும்.” (ப. 24)
தஸவ்வுப் தனிப்பட்ட கலையாத் தோற்றமெடுத்து, அது பற்றிய நூல்கள் தொகுக்கப்பட்டு, பின்னர் தரீக்காக்கள் உருவானமையின் படிமுறை வளர்ச்சியை கலாநிதி அவர்கள் இங்கு விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
தொடர்ந்து முக்கியமான பல தரீக்காக்கள் பற்றிய விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. காதிரிய்யா, சுஹ்ரவர்திய்யா, ரிபாஇய்யா, ஷாதுலிய்யா, ஜிஷ்தியா, தீஜானிய்யா, நக்ஷபந்தியா ஆகிய தரீக்காக்களின் தோற்றம், பரவல், செல்வாக்கு மற்றும் சேவைகளும் பங்களிப்புகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
ஐந்தாவது மற்றும் ஆறாவது அத்தியாயங்கள் தஸவ்வுப், சூபிகள் பற்றி பரவலாகக் காணப்படும் ஒரு பிழையான சிந்தனையைக் களையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தஸவ்வுப் என்பது ஒரு துறவறக் கோட்பாடு எனவும் சூபிகள் என்போர் உலக வாழ்வைப் பொறுத்தளவில் பற்றற்ற மனோநிலையைக் கடைபிடித்து சமூக வாழ்விலிருந்து ஒதுங்கி வாழ்வோர் எனவும் சூபிகள் போதித்த துறவறத்தால் இஸ்லாமிய வரலாற்றின் இயக்க சக்தி பாதிக்கும் அளவுக்கு பிற்போக்குத்தனம் மிக்கவர்கள் எனவும் ஒரு கருத்து உண்டு. இக்கருத்து உண்மையானதன்று என்பதை இவ்விரு பகுதிகளிலும் நுலாசிரியர் மிக விரிவாக, ஆதாரபூர்வமாக விளக்குகின்றார்.
அதனை மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்களின் வார்த்தைகளிலேயே சொல்வதாயின், “தஸவ்வுபின் வரலாறு பற்றி உரிய முறையில் தெரியாதவர்களே இத்தகைய கருத்தைக் கொண்டிருப்பர். சூபிகள் வாழ்க்கையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதும் இயங்குவதும் ‘ஸுஹ்த்’ எனும் பற்றற்ற வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதினர். ஏனெனில் ஸுஹ்த் என்பது அவர்களைப் பொறுத்தளவில் உள்ளத்தின் கீழான உணர்வுகளிலிருந்தும் சடத்தின் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறுவதாகும். மாறாக வாழ்க்கையின் விவகாரங்களிலிருந்து ஒதுங்கி, தனித்து செயலற்று இருப்பதை ஸுஹ்த் குறிக்கவில்லை.” (ப. 45)
மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்கள் இந்த வரலாற்றுண்மையை பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து நிருவுகின்றார்கள். சூபிகள் ஹலாலான வழியில் தமது வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டமை, மக்களோடு கலந்திருந்து அவர்களுக்கு விளங்கும் மொழியில் சன்மார்க்கப் போதனைகளை விளக்கியமை, அறிவியற் துறைகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தமை, அறிவுப் பரம்பலுக்குப் பங்களிப்புச் செய்தமை, அநீதிகளுக்கு எதிராகப் போராடியமை, சமூகநீதியை உருவாக்க உழைத்தமை போன்ற விடயங்களில் அவர்கள் கடுமையான ஈடுபாடு காட்டியமை சூபிகள் சமூகத்தை விட்டும் ஒதுங்கி வாழவில்லை என்பதை சான்றுப்படுத்துகின்றன.
சூபிகள் கீழான உணர்வுகளுக்கும் இச்சைகளுக்கும் எதிராக மேற்கொள்ளும் ‘உளப்போர்’ எனப்படும் போராட்டத்தில் கூடுதலான கவனம் செலுத்திய போதிலும் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அதற்கான முயற்சிகளிலும் மிக ஈடுபாடு காட்டியதை வரலாறு நிரூபிக்கின்றது. இதனை மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்கள் இந்நூலில் பக்கம் 53-78 வரையான பக்கங்களில் அழகாக விளக்கியுள்ளார்கள். ஆரம்ப காலங்களிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற சோவியத் ரஷ்யா-ஆப்கானிஸ்தான் போராட்டம் வரை அதற்கான ஆதாரங்கள் அவரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நூலின் ஏழாவது அத்தியாயம் இந்நூலுக்கு மகுடம் வைத்தாற் போல் அமைந்துள்ளது. தஸவ்வுப் பற்றி எழுதப்படுகின்ற நூலில் தஸவ்வுப் என்ற சிந்தனைக்கு மிகவும் எதிரானவராகவும் கடுமையான விமர்சகராகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் பற்றிய ஓர் அத்தியாயத்தை இணைப்பதற்கு வலுமையான தைரியமும் மனோவலிமையும் ஆழ்ந்த புலமையும் தேவை. அவற்றை மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்கள் பெற்றிருந்தார்கள் என்பதற்கு இது நல்லதொரு சான்றாகும்.
மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்கள் அறிஞர்களை கண்ணியப்படுத்தும் அளவை, வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு இந்நூலின் 79ஆம் பக்கம் வாசித்துப் பார்க்கலாம். அத்தோடு இமாம் இப்னு தைமியாவின் தஸவ்வுப் பற்றிய போட்பாடு என்ற தலைப்பை இப்புத்தகத்தில் உள்ளடக்கியதற்கான காரணத்தை நூலாசிரியர் குறிப்பிடும் போது “இப்னு தைமியா (ரஹ்) பற்றி தவறாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு துறையைப் பற்றி, அவரது நூல்களில் காணப்படும் கருத்துக்களின் வெளிச்சத்தில் விளக்க முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பொதுவாக இப்னு தைமியா (ரஹ்) ஆத்மஞானிகளான சூபிகளை மிக வன்மையாக விமர்சித்தவரென்றும் தஸவ்வுப் என்ற ஆத்மஞானக் கோட்பாடு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணானது என்ற கருத்தை கொண்டவரென்றும் ஒரு கருத்து நிலவுகின்றது. ஆனால் தஸவ்வுப் பற்றிய அவரது கருத்துக்களை நாம் ஆழமாக நோக்கும் பொழுது இக்கருத்து முற்றிலும் பிழையானது என்ற உண்மையை உணர முடிகின்றது.” (ப. 80) இதனை நிருவுவதற்காக நூலாசிரியர் இமாம் இப்னு தைமியா அவர்களால் எழுதப்பட்ட நூல்களையே ஆதாரமாகக் கொண்டுள்ளார். அதற்காக கிட்டத்தட்ட 15 பக்கங்களை ஒதுக்கியுள்ளார்கள்.
எட்டாவது மற்றும் ஒன்பதாவது அத்தியாயங்களும் மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்களுக்கே உரித்தான தலைப்புகளாகும்.
பொதுவாக தஸவ்வுப் பற்றி எழுதப்படுகின்ற நூல்களில் மேற்குலகோடு தொடர்புபடுத்திய தலைப்புகளை உள்வாங்குவது மிக அரிதாகும்.
தஸவ்வுபின் ஆதிக்கம் ஆசியா, ஆபிரிக்கா கண்டங்களில் மாத்திரமே காணப்படுகின்றது என நினைப்பவர்களுக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதனது செல்வாக்கை விளக்குவதாக ‘மேற்குலகில் தஸவ்வுப்’ என்ற எட்டாவது தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அவ்விரு கண்டங்களிலும் தஸவ்வுபின் பரவல் பற்றி இந்தப் பகுதி விளக்குவது மாத்திரமின்றி பிரான்ஸிலும் இங்கிலாந்திலும் சுவிட்ஸர்லாந்திலும் அமெரிக்காவிலும் அதற்காகப் பாடுபட்ட அறிஞர்கள், ஆத்மஞானிகள் பற்றிய விபரங்களையும் இந்நூல் தருகின்றது.
மேற்கத்தேய உளவியலும் இஸ்லாமிய ஆத்மீக உளவியலும் என்ற இறுதித் தலைப்பு விசித்திரமான இன்னுமொரு தலைப்பாகும். இதில் மேற்கத்தேய உளவியலின் அடிப்படைகளான சடவாதம் (Materialism) மதச் சார்பின்மை (Secularism) ஆகியவற்றின் பலவீனங்களை விளக்கி, இவற்றினடியாக மேற்கத்தேய உளவியலைக் கட்டியெழுப்பிய சிக்மன் புரொய்ட் (Sigmund Freud), J.B.வட்ஸன் போன்றவர்களின் கருத்துக்களை விமர்சித்து, இஸ்லாம் அக்கருத்துக்களை எவ்வாறு அணுகுகின்றது என்பதையும் அழகாக மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
மொத்தத்தில் இந்த நூல் ஆத்மஞானிகளின் புகழாரங்களையும் அவர்களது கனவுகளையும் கதைகளையும் தேடுபவர்களுக்கு உதவியாக அமையாது. அதேபோல் தஸவ்வுபை முற்று முழுதாகப் புறக்கணிக்கும் வகையிலும் விமர்சிக்கும் வகையிலும் இந்நூல் அமைந்திருக்கும் என நினைப்பவர்களுக்கும் துணையாக அமையாது. மாறாக தஸவ்வுபின் உண்மைத் தன்மையை அறிவுபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் நடுநிலையோடும் விளங்கிக் கொள்ள முயல்பவர்களுக்கு இந்த நூல் மிகப் பெரிய பயன்பாட்டைக் கொடுக்கும் என்று துணிந்து கூறலாம்.
மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்களின் வாழ்வைப் போலவே இந்நூலும் அமைந்திருப்பதாகத் தோன்றுகின்றது. அவரை வெளிரங்கத்தில் பார்க்கும் போது அவர் ஆத்மீக ஆளுமை கொண்டவர் என்பதற்கான தோற்றப்பாடு கொண்டவரல்லர். ஆனால் அவரோடு நெருங்கிப் பழகிப் பார்க்கும் போது அவரது ஆன்மீக வலிமை நன்கு தெரியும். அவரது இரவு நேரத் தொழுகைகள், ஜமாஅத்தோடு முதலாவது ஸப்பில் தொழுவதற்கான முனைப்பு, பொறுமை, பணிவு, புன்முறுவல், பிறரை மதித்தல் போன்ற நற்குணங்கள் என்பன அவரை ஒரு சிறந்த ஆன்மீகப் பக்குவமுள்ள இறைவிசுவாசி என்பதனைக் காட்டுகின்ற அடையாளங்களாகும். இந்நூலின் உள்ளே நுழைந்து பார்க்கின்ற போது நூலாசிரியரின் விடயதானத்திலுள்ள பாண்டித்தியம், அறிவு முதிர்ச்சி, ஆன்மீகப் பக்குவம், நடுநிலைப் போக்கு, அறிஞர்கள்பாலுள்ள கௌரவம், மொழியாற்றல் என்பன பிரத்தியட்சமாக விளங்குகின்றன.
1990 ஆம் ஆண்டளவில், ஜாமிஆவில் ‘தஸவ்வுப்’ என்ற தலைப்பில் ஒரு கல்வி முகாம் இடம்பெற்றது. நான் அப்போது ஜாமிஆவில் உதவி விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தேன். அந்த நிகழ்வில் தஸவ்வுப் என்ற பதத்தை ஆய்வுக்குட்படுத்தி விளக்குவது எனக்குத் தரப்பட்டிருந்த தலைப்பு. அந்த ஆய்வை முன்வைத்து அதன் முடிவுரையாக நான் இப்படிச் சொன்னதாக ஞாபகம் இருக்
கிறது.
“தஸவ்வுப் என்ற பதம் சூப், ஸபா, சோபியா போன்ற சொற்களுள் எதிலிருந்து உருவாகியது என முடிந்த முடிவாக எதனையும் எமக்குச் சொல்ல முடியாதிருக்கிறது. ஆனால் கம்பளி போன்ற மிக எளிமையான ஆடையணிந்து, வறுமையின் அகோரத்தை வரவழைத்துக் கொண்டவராக ஓர் ஆத்மஞானி இருக்க வேண்டும் என்பதில்லை. அவர் Court Suit போட்ட ஒரு நபராகவும் இருக்க முடியும்.”
இக்கருத்தை நான் மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்களை மனதில் வைத்துக் கொண்டே சொல்லியிருந்தேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவர்களைப் பொருந்திக் கொண்டு, அவரது இந்த நூலினூடாகவும் ஏனைய நூல்களினூடாகவும் முஸ்லிம் சமூகத்திற்குக் கிடைக்கும் அறிவுப் பங்களிப்பினால் ஸதகா ஜாரியாவாக அவற்றை ஏற்று, தொடர்தேர்ச்சியான நன்மைகளை வழங்குவானாக!
(மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களால் எழுதப்பட்டு நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தால் வெளியிடப்பட்ட ‘தஸவ்வுப்: இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்’ என்னும் நூல் 13.06.2022 அன்று உத்தியோகபூர்வமாக நிகழ்நிலை வழியாக வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூல் மதிப்புரை வழங்கிய இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.மஸாஹிர் அவர்களின் உரை)