என்னை உருவாக்கிய ஆசிரியர்களை நான் நன்றியுணர்வுடன் பார்க்கிறேன்
கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி என்ற பெயர் இலங்கை முஸ்லிம்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று. அரபு-இஸ்லாமிய உலகில் மிகவும் அறியப்பட்ட இலங்கை அறிஞர் அவர்தான் என்று துணிந்து கூற முடியும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற ஆய்வரங்குகளில், மாநாடுகளில் அவரது புலமைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
தெளிந்த சிந்தனை, ஆற்றொழுக்கான நடை, எல்லோரையும் கவரும் நாவன்மை என்பன ஒருங்கே சேரப் பெற்றவர். பல்துறை ஆற்றல் வாய்ந்தவர். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பல பொறுப்புகளை, பதவிகளை வகித்தவர். பன்னூலாசிரியர். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். தற்போது ஜாமிஆ நளீமியாவின் பணிப்பாளராக உள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் ஒரு பெரும் புலமைச் சொத்தாக -அறிஞராக மதிக்கின்ற அவருடன் வைகறை ஒரு இளம் காலைப் பொழுதில் உரையாடியது. அவரது கல்வி வாழ்க்கை தொடர்பான அதன் முதற் பகுதியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
உங்களது ஆரம்ப கால வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்
தென் மாகாணத்தைச் சேர்ந்த மாத்தறை மாவட்டத் தில் 1940 ஜூன் 24ல் பிறந்தேன். எனது குடும்பம் வணிகப் பின்னணி கொண்டது. நான் ஆரம்பக் கல்வியை சென் தோமஸில் கற்றேன். அது ஒரு கிறிஸ்தவப் பாடசாலை. எனவே ஒழுக்கக் கட்டுப்பாடு அங்கு நிறையவே இருந்தது.
அடுத்து அங்கு பல மொழி சார்ந்தோரும் கல்வி கற்றனர். எல்லோரையும் இணைக்கும் மொழியாக அங்கு ஆங்கிலம் காணப்பட்டது. பிறகு மொழிமாற் றக் கொள்கை காரணமாக சிங்கள மொழி யாக்கப்பட்ட பின்னர் ஆங்கில மொழி மூலம் கற்க தர்கா நகர் அல் ஹம்றா விற்குச் சேன்றேன்.
அது அன்று இலங்கையில் இருந்த மிகப் பிரபல்யமான பாடசாலை. அங்கு விடுதி வசதிகள் எல்லாம் காணப்பட்டது. நான் ஆங்கில மொழி மூலம் கற்க கம்பளை ஸாஹிராவுக்குப் போக இருந்து, பின்னர் அல் ஹம்ராவிற்குச் சென்றேன். அங்கு 1956 வரையில் கற்றேன். அங்குதான் SSC (Senior School Certificate)) எழுதினேன். பின்னர் HSC (Higher School Certificate) கற்பதற்காக கொழும்பு ஸாஹிராவுக்கு வந்தேன். ஸாஹிரா மூலம்தான் 1960இல் இலங்கைப் பல்கலைக்கழகப் பிரவேசம் பெற்றேன்.
சென்தோமஸ் கல்லூரியில் நான் படிக்கின்ற காலத்தில்தான் தமிழ் மொழியி லும் இலக்கியத்திலும் எனக்கு நிறைய ஈடுபாடு ஏற்பட்டது. அங்கு கந்தையா மாஸ்டர் என்று ஒரு மாஸ்டர் இருந்தார். அவர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் வாசிக்கத் தூண்டினார். அல் ஹம்ராவிற்கு வந்ததன் பின்னர் எனது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள அது ஒரு களமாக அமைந்தது. அங்கு விவாத மன்றங்கள் நடைபெற்றன. மாணவர் மன்றங்கள் இடம் பெற்றன. விடுதியில் கூட விவாத அரங்குகள் நடந்தன.
உங்களது ஆசிரியர்கள் உங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என அறிகிறோம். அது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
ஒரு மாணவருடைய வாழ்க்கையிலே ஆசிரியர்கள் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள் என்பதை எனது சொந்த வாழ்க்கையின் அனுப வத்தின் அடியாக நான் கண்டு கொண்டேன்.
நான் எப்பொழுதும் கூறுவதுபோன்று ஒரு ஆசிரியனுடைய பணி வெறுமனே மாணவனை பரீட்சைக்காக ஆயத்தப்படுத்துவதல்ல -ஒவ்வொரு மாணவனி லும் மறைந்திருக்கின்ற ஆற்றல்களை, திறமைகைளை இனங்கண்டு அதை வளர்ப்பதற்கு வழி செய்வது -அதைத் தூண்டிவிடுவது. அவனுடைய எதிர் காலத்தை தீர்மானிப்பதில் இது ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது.
அழுத்கமையில் நான் படிக்கும் காலத்தில் ஹரீஸ் ஆசிரியர் என்றொரு ஆசிரியர் இருந்தார். அவரது விசேட ஆற்றல் மாணவர்களது திறமையைத் தூண்டிவிடுவது. அவர் எமது விடுதி ஆசிரியராகவும் இருந்தார். அல் ஹம்ரா வில் நடந்த மாணவர் மன்றங்களில் கலந்து கொள்வதில் நான் தயக்கம் காட்டினேன்.
நான் மன்றம் நடக்கும்போது கடைசி வரிசையில்தான் அமர்வேன். இதனை அவதா னித்த அவர் என்னை அழைத்து, ‘நீங்கள் மன்றங்களில் கடைசி வரிசையில் அமர்வதை நான் காண்கிறேன். இதன் பின்னர் நீங்கள் முன் வரிசையில் அமர வேண்டும்’ என கண்டிப்பான தொனியில் குறிப்பிட்டார்.
பிறகு ஓரிரு வாரங்கள் சென்ற பின் என்னை அழைத்து, ‘உங்களுக்கு நான் ஒரு பேச்சை எழுதித் தருகிறேன். அதனை நீங்கள் மன்றத்தில் பேச வேண் டும்’ என்றார். அதனை நான் பேசினேன். இப்படியாக எனது பேச்சாற்றலை அவர் வளர்த்தார்.
பின்னர் அக்காலத்தில் காலியில் Galle Muslim Cultural Society என்றொரு நிறுவனம் இருந்தது. அவர்கள் அகில இலங்கை ரீதியில் ஒரு மீலாத் விழாவை நடாத்தினார்கள். அதில் நடந்த பேச்சுப் போட்டிக்காக ஹரீஸ் ஆசிரியர் பேச்சு எழுதித் தந்து, என்னைப் பயிற்றுவித்து, அங்கு அழைத்துச் சென்று, அவரது வீட்டில் தங்க வைத்து அதில் கலந்து கொள்ளவும் வைத்தார். அதில் எனக்கு முதற் பரிசு கிடைத்தது. அது எனக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து அப்போது மணிவிளக்கு ஆசிரியராக இருந்த ஆ.கா. அப்துஸ் ஸமத் இலங்கை வந்த நேரம் அவருக்கு வரவேற்புரை நிகழ்த்துவ தற்காக என்னை அழைத்துச் சென்றார். பின்நாளில் நான் இந்தியாவிற்குச் சேன்றபோது இதனை அப்துஸ் ஸமத் ஞாபகப்படுத்தினார்.
பின்னர் ஸாஹிரா வாழ்வு எனக்கு ஒரு பெரும் களமாக அமைந்தது. முஹம் மத் சமீம், எம்.எம், மஹ்ரூப், பேராசிரியர் சிவத்தம்பி போன்றோர் அங்கு ஆசிரியர்களாக இருந்தார்கள். அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ்தான் அதிபராக இருந் தார். நான், எஸ்.எச்.எம். ஜெமீல், கலாநிதி அமீர் அலி போன்றோர் எல்லாம் ஒன்றாகப் படித்தவர்கள்.
அக்காலம் ஸாஹிராவின் பொற்காலமாக இருந்தது. அக்காலத்தில் ஸாஹிரா விற்கும் ஏனைய கல்லூரிகளுக்குமிடையில் விவாதப் போட்டிகள் இடம் பெறும். பேராசிரியர் சிவத்தம்பி அதற்காகப் பயிற்றுவித்து எம்மை அழைத்துச் செல்வார். ஸாஹிராவில் ஒரு சிறந்த நூல் நிலையம் இருந்தது. அதில் சிவத் தம்பி அவர்கள் எம்மை வாசிக்கத் தூண்டுவார்.
அதே நேரத்தில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் ஸாஹிராவில் காலைக் கூட்டம் நடக்கும். ஏ.எம்.ஏ அஸீஸ் அவர்கள் பட்டதாரிகளுடைய உடைய ணிந்து வந்து கம்பீரமாக நின்ற நிலையில் அதில் உரையாற்றுவார். அங்கு மௌலவி ஸுபைர் அழகிய தொனியிலே குர்ஆனை ஓதுவார். அவர் ஒரு அல் அஸ்ஹர் பட்டதாரி. ஏ.எம்.ஏ அஸீஸ் அவர்கள் யூசுப் அலியின் தப்ஸீரி லிருந்து அந்த வசனங்களை ஆங்கிலத்திலே மொழிபெயர்த்து ஓரளவு அதனை விளக்குவார்கள். இந்த காலைக் கூட்டங்கள் உண்மையில் மாணவர் களுக்கு ஒரு உத்வேகத்தையும் மிகுந்த சுறுசுறுப்பையும் அளித்தது. மட்டு மன்றி மிகுந்த ஆளுமை படைத்தவர்களையும் அவர்களது செயற்பாடுகளை யும் அவதானிக்கும் வாப்பையும் அது கொடுத்தது.
இந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. நான் ஸாஹிராவினுள் நுழைந்த ஆரம்ப நாள் அறிவித்தல் பலகையிலே அல்லாமா இக்பால் நினைவுச் சொற் பொழிவு என்றொரு அறிவித்தலைப் பார்த்தேன். இக்பால் என்பது எனக்கொரு புதிய பெயராக இருந்தது. அதுவும் இக்பால் மண்டபத்தில் நடைபெறுவ தாக இருந்தது. நான் மாலையிலே சொற்பொழிவைக் கேட்பதற்காக அங்கு சென்றேன்.
அப்போது பாகிஸ்தானின் இலங்கைத் தூதுவராக இருந்தவர் ஹாஜி அப்துல் லாஹ் சத்தார் ஷெக் அவர்கள். அவர் ஒரு சிறந்த கல்விமான். இக்பால் பற்றி ஓர் உரை நிகழ்ததினார். எனக்கு எதுவுமே விளங்கவில்லை. ஏனெனில் கடினமான ஆங்கிலத்தில் அவர் உரை நிகழ்த்தினார். என்றாலும் ஏதோ ஒரு வகையில் இக்பால் என்ற பெயர் என்னைக் கவர்ந்தது. பின்னர் நான் வாசிகசாலைக்குச் சேன்றேன். இக்பால் பற்றிய நூல்கள் இருக்கின்றதா என்று அங்கு தேடிப் பார்த்தேன். அப்போது ஜே.எம். சாலி எழுதிய இக்பால் யார்? கரீம் கனி எழுதிய மகாகவி இக்பால் போன்ற நூல்கள் எனக்குக் கிடைத்தன. இதுதான் நான் இக்பால் பற்றி அறிந்து கொண்ட ஆரம்ப சந்தர்ப்பம். அதிலிலி ருந்து அவர் பற்றி இன்னும் அறிய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்து.
பல்கலைக்கழகத்திற்குச் சென்றபின் பேராசியர் இமாமிடம் இக்பால் பற்றி நிறையப் படித்தேன். எடின் பரோ பல்கலைக்கழகம் சென்ற பின்னரும் அங்கு பாகிஸ் தானிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டு இக்பால் பற்றி நிறைய அறிந்து கொண்டேன்.
இதனை நான் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், ஆரம்ப கால மாணவப் பருவத்தில் ஆசிரியர்களின் வழிகாட்டல் மிகவும் முக்கியமானது. அந்த வழிகாட் டல்தான் அவனை சிறந்த ஒரு மனிதனாக உருவாக்கி விடுகிறது. எனவே என்னை உருவாக்கிய இந்த ஆசிரியர்களை நான் நன்றியுணர்வுடன் பார்க்கிறேன்.
உங்களது பல்கலைக்கழக வாழ்க்கை பற்றி…
அறிஞர் எம்.ஏ.எம். அஸீஸ் அவர்கள்தான் என்னை அரபு மொழியை விஷேட துறையாகத் தேர்ந்தெடுக்குமாறு வழிகாட்டினார். அரபு மொழித் துறை இலங்கையில் 1943இல் தொடங்கிவிட்டது. அப்போது பல்கலைக்கழகக் கல்லூரியாக இருந்த கொழும்பு பல்கலைக் கழகத்தில்தான் முதலில் இது ஆரம்பிக்கப்பட்டது. நான் பேராதனை செல்கின்ற காலப்பகுதியில் பேராசிரியர் இமாம் அவர்கள்தான் அங்கு இருந்தார்கள். இதற்கு முன்னர் பேராசிரியர் எஸ்.எம். யூசுப் போன்றோரும் அங்கு பணியாற்றி இருக்கின்றார்கள்.
அங்கு பேராசிரியர் இமாம் அவர்களிடம் மூன்று வருடங்கள் முழு நேர மாணவனாகப் பயிலும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர் என்னிலே மிகவும் அன்பு வைத்திருந்தார். அறபு மொழியில் சிறப்பாக புலமை பெற வேண்டும் என்பதற்காக அவர் சில நேரங்களில் மாலை வரை -இரவு நேரங்கள் வரை வகுப்புக்களை நடாத்தினார்.
எங்களுடைய பாடத்திட்டம் ஒன்றாக இருந்தது. பாடம் இன்னொன்றாக இருந்தது. அதனைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. பாடத்திட்டத்தை நாம் Tutorial மூலமாகவே முடிப்போம். அதனை விட்டு விட்டு வெளியில் நாம் நிறையப் படிக்க வேண்டும் என்று அவர் சொல்வார்.
திடீரென என்னை அழைப்பார், அவர் என்னிடம் கேட்பார் do you know about Shah Waliullah? (உங்களுக்கு ஷாஹ் வலியுல்லாஹ் பற்றித் தெரியுமா?). பின்னர் அவர் பற்றி, அவரது ஆளுமை பற்றி, பங்களிப் புப் பற்றி, அவரது நூல்கள் பற்றி நிறையப் பேசுவார். ஷாஹ் வலியுல்லாஹ்வுக்கும் பாடத்திட்டத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது.
பிறகு முஸ்லிம்கள் வரலாற்றுக்கு ஆற்றிய பங்களிப்பு பற்றியும் இப்னு கல்தூன் பற்றியும் பேசுவார். இப்படி அவரிடம் படித்து நான் எடுத்த குறிப்புக்கள் பக்கம் பக்கமாக இருக்கின்றது. அதேபோன்று எனது அறிவும் விசாலமாகியது. பொதுவாக அறபு மொழியில் உள்ள மூலாதார நூல்கள் பற்றிய ஒரு பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. பாரசீக இலக்கியம் பற்றி அறி முகப்படுத்தினார். அந்த மொழியைக் கற்பித்தார். கீழைத்தேய அறிஞர்களைப் பற்றிப் பேசுவார். அவர் கள் இஸ்லாத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்களை சொல் வார். அறபு -அறபல்லாத அறிஞர்கள் இஸ்லாத்துக்கு ஆற்றிய பணிகள் பற்றியெல்லாம் பேசுவார். உண்மையில் எனது பட்டப்படிப்பு வாழ்வு ஒரு பட்டப் படிப் பாக மட்டு மல்லாது ஒரு ஆய்வாகவும் அமைந்தது.
இக்காலப் பகுதி பேராதனை பல்கலைக்கழகத் திலே இலக்கியத்தில் ஒரு பொற்காலமாக இருந்தது. பேராசிரியர் சரச்சந்திர அங்கு மனமே நாடகத்தை அரங்கேற்றினார். பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் வித்தியானந்தன் போன்றோர் தமிழ்த் துறையில் இருந்தனர். அங்கு முற்போக்கு இலக்கியம், நற்போக்கு இலக்கியம் என இலக்கியத்தில் இரு முகாம்கள் காணப்பட்டன.
மௌனகுரு, செங்கை ஆழியான், நான் -எல்லோரும் ஒன்றாகக் கற்றோம். மௌனகுரு போன்றவர்கள் முற்போக்கு முகாம். நாம் அதற்கு மாற்றமாக நற் போக்கு முகாமில் இருந்தோம். பேராசிரியர் கைலாசபதி எம்மைத் தூண்டி விடுவார். இன்னொருவரின் கருத்து வித்தியாசம் என்பதற்காக அவரை நாம் வெறுக்கக் கூடாது என்று அவர் சொல்வார்.
நான் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டிய காலத்தில் எனது முதலாவது சிறு கதை கலைப் பூங்கா என்ற போராதனைப் பல்கலைக்கழக சஞ்சிகையில் வெளியானது. பின்னர் ஸுபைர் இளங்கீரன் ‘கவனத்திற்குரியர்’ என்றொரு பகுதியில் என்னைப் பற்றி எழுதியிருந்தார். அதில் கலாநிதி சுக்ரி இலக்கியத் துறையில் ஈடுபட்டிருந்தால் பெரும் இலக்கியவாதியாக இருந்திருப்பார் என்று எழுதியிருந்தார்.
அடுத்து எனது வாழ்வில் முக்கிய தீர்மானங்கள் எடுப்பதாயின், ஏ.எம்.ஏ அஸீ ஸிடம் கலந்தாலோசிப்பேன். நான் அரபு மொழியை சிறப்புத் தேர்ச்சிக்காகத் தேர்ந்தெடுத்தமையும் அவரின் ஆலேசனைப்படியே. இமாமிற்கு பிறகு அரபு மொழிக்கு ஒருவர் தேவை. எனவே என்னை பல்கலைக்கழக கல்வி முடித்த பின்னர் அங்கே சேருமாறு சொன்னார். நான் CAS (Ceylon Administrative Service) Exam இற்கு விண்ணப்பித்திருந்தேன். அப்போது பல்கலைக் கழகப் பெறுபேறு பத்திரி கையில் வரும். அதனைப் பார்த்து விட்டு அஸீஸ் எனக்குத் தந்தி அடித்து வரச் சொல்லி, நீங்கள் நிர்வாக சேவைக்குப் போக வேண்டாம். நீங்கள் கல்வித் துறையில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
உங்களது கலாநிதிப் பட்ட ஆய்வு தொடர்பான பின்னணியை சற்று விளக்குவீர்களா?
நான் போராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமை யாற்றியபோது பேராசிரியர் இமாம் அவர்கள் என்னை ஒரு மேற்குப் பல்கலைக்கழகத்திற்குச் செல்லுமாறு தூண்டிக் கொண்டிருந்தார். நாம் அது தொடர்பில் அப்போது எகிப்திய தூதுவராலயத்தில் இருந்த கலீபா அப்துல் அஸீஸ் முஸ்தபாவை அடிக்கடி சந்திக்கச் செல்வோம். அவர் எமக்கு அறபு நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றிற்கு செல்லுமாறு உபதேசித்துக் கொண்டிருந் தார். கடைசியில் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு போவதாக முடிவாகியது. போவதற்கு எல்லாம் தயாராக இருக்கும் நிலையில்தான் பொதுநலவாய நாடுகளின் புலமைப் பரிசிலிற்கு விண்ணப்பம் கோரப்பட்டது. பின்னர் பதியுத்தீன் மஹ்மூதை சந்தித்து அவரின் உதவியுடன் நாம் எடின்பரோ பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தோம். அங்கு அல்லாஹ்வின் அருளால் அனுமதி கிடைத்தது.
எடின்பரோ பல்கலைக்கழகத்தில் எனது பேராசியராக பேராசிரியர் மொன்ட் கொமரி வொட் அவர்கள் இருந்தார்கள். நான் ஆரம்பத்தில் அவருடன் தொடர்பு கொண்டபோது ‘நவீன கால இஸ்லாமிய சிந்தனைக்கு ஷாஹ் வலியுல்லாஹ்வின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்யப் போவதாகக் கூறினேன். அதற்கு பாரசீக அறிவு தேவையெனவும் அவ்வறிவு எனக்குக் குறைவு என்றும் அது தொடர்பான நூல்கள் அப்பல் கலைக்கழக வாசிகசாலையில் குறைவு, என்றும் இந்தியா தொடர்பாக வாசிப்பதாயின் அடிக்கடி லண்டன் பல்கலைக் கழகத்திற்கு சேல்ல வேண்டி ஏற்படும் எனவும், அது சிரமாக இருக்கும் என்பதால் வேறு ஒரு தலைப்பைத் தெரிவு செய்யுமாறும் ஆலோசனை கூறினார்.
நான் எடின்பரோ சென்ற பின்னர் எனக்கு தலைப்பு தெரிவு செய்வதற்கான காலம் தரப்பட்டது. அங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகளின் பட்டியலைப் புரட்டித் தேடினேன். ஒரு தலைப்பும் படவில்லை. ஒரு நாள் நான் வாசிகசாலையில் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கையில், அபூதாலிப் அல் மக்கீயின் ‘கூத் துல் குலூப்’ என்ற நூல் எனக்குக் கிடைத்தது. அப்போது எனக்கு பேராசிரியர் இமாம் அவர்கள் இது பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது.
ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு தஸவ்வுபின் பொற்காலம். அதில் வெளிவந்த முக்கியமான நூல்கள்தான் கூத்துல் குலூப், கிதாபுர் ரிஆயா, கிதாபுத் தஅர்ருப், கிதாபுல் லும்ஆ என்பன. இதில் ‘கிதாபுர் ரிஆயா’வை கலாநிதி அல்துல் ஹலிம் மஹ்மூதும், ‘கிதாபுத் தஅர் ருப்’ஐ பேராசிரியர் ஆபரியும் ‘கிதாபுல் லும்ஆ’வை பேராசிரியர் நிகல்ஸனும் ஆய்வு செய்திருக்கிறார்கள். இதில் மீதமிருந்தது கூத்துல் குலூப் மாத்திரமே என பேராசிரியர் இமாம் அவர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
எனவே நான் இந்த நூலை ஆய்வுக்காகத் தெரிவு செய்தேன். பிறகு எனக்கு அதற்குரிய மூல நூல்களைப் பெறுவதற்காக ஆறு மாத காலம் தரப்பட்டது. எனினும் எனக்கு ஏற்கனவே மூல நூல்களுடன் பரிச்சயம் காணப்பட்டதால் ஒரு மாதத்திற்குள்ளால் முடித்துவிட்டேன். இதைப் பார்த்த பேராசிரியர் மொன்ட் கொமரி வொட் ஆச்சரியப்பட்டார். பின்னர் மூல நுல்களைப் பற்றி விசாரித்து அவற்றைத் தெரிவு செய்தமைக்கான காரணங்களையும் கேட்டார். நான் தெளிவாகப் பதில் சொல்லவே அவர் எனக்கு இதில் பரிச்சயம் ஏற்பட் டது எப்படி எனக் கேட்டார்.
அப்போது நான் பேராசிரியர் இமாம் அவர்கள் எனக்கு இவை தொடர்பில் பரிச்சயம் பெற உதவி யமை பற்றிச் சொன்னேன். அவர் பெரிதும் மகிழ்ந்தார். அவர் சொன்னார் 90 வீதம் உங்களது பிரச்சினை முடிந்துவிட்டது. இனி நீங்கள் ஆவை செய்வதுதான் மீதமாக உள்ளது.
உண்மையில் நான் பேராசிரியர் இமாமின் வழி காட்டலைப் பின்பற்றியமை தான் இதற்குக் காரணம்.
எனக்கு உருவாக்குவது பற்றி நம்பிக்கையில்லை வழிகாட்டுவது பற்றியும் அதனைப் பின்பற்றுவது பற்றியுமே நான் நம்பியுள்ளேன்.
அடுத்து பேராசிரியர் இமாம் அவர்கள் என்னில் வளர்த்த ஓர் உணர்வுதான் ஸலபுஸ் ஸாலிஹீன்களை, அறிஞர்களை மதிக்க வேண்டும் என்ற உயரிய பண்பாடு. இஸ்லாமியப் பாரம்பரியங்களுக்கு பங்களிப்பு செய்தவர்களை நாம் மதிக்க வேண்டும். அவர்களது குறைகளைப் பொருட்படுத்தக் கூடாது. அவர் களைக் கண்ணியப்படுத்த வேண்டும் என அவர் அடிக்கடி சொல்வார்.
பின்பு இதனை உண்மைப்படுத்தும் வகையில் ஒருமுறை பேராசிரியர் இமாம் அவர்கள் திடீரென வந்து வாசிகசாலையின் மூன்றாவது மாடிக்கு அழைத்துச் சென்று, தூசு படிந்த ஒரு நூலை எடுக்கச் சொல்லி அதனை எனது கைக்குட்டையால் துடைக்கச் சோல்லி கண்ணியத்துடன் கையில் எடுக்கச் சொல்லிவிட்டு –‘நான் உங்களிம் ஒரு கேள்வி கேட்கிறேன்’ என்றார்.
‘இது என்ன?’ என்று கேட்டார். பின்னர் அவரே சோன்னார்: ‘இது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது மாடி. இங்கு மின்விசிறி சுழன்று கொண்டி ருக்கிறது. நீங்கள் வெளியே பாருங்கள். நல்ல சூழல்; அழகிய காட்சிகள். உங்களிடம் அழகிய பேனை உள்ளது; அழகிய தாள் உள்ளது. இதுவெல்லாம் அல்பிரூனி இந்த நூலை எழுதுகின்ற வேளை அவரிடம் இருந்தனவா?’
‘நீங்கள் ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டுக்குச் சொல்லுங்கள். மத்திய ஆசியாவைப் பாருங்கள். மாரி காலத்தில் கடும் குளிர் கோடை காலத்தில் கடும் வெப்பம். எழுதுவதற்கு பேப்பர் இருக்கவில்லை. தொட்டுத் தொட்டு எழுதும் ‘கலம்’ எனும் உபகரணம்தான் இருந்தது. இந்நிலையில் தான் அவர்கள் தமது பங்களிப்பை செய்திருக்கிறார்கள். அதனைத்தான் நாம் இன்று பார்க்கிறோம். எனவே நீங்கள் எல்லா கண்ணியமிக்க இமாம்களையும் மதிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய அந்தஸ்தைக் கொடுக்க வேண்டும்’ என்றார். நான் மெசிலிர்த்துப் போனேன்.
நான் அன்றிலிருந்து இமாம்களை மதிக்கக் கற்றுக் கொண்டேன். இமாம் ஷாபிஈ, அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் மாலிக், அபூ ஹனீபா போன்றவர் கள் இஸ்லாமியப் பாரம்பரியத்திற்கு பணி சேதவர்கள். அடுத்து வந்த காலப் பகுதிகளில் இன்னும் பல்வேறு துறைகளுக்குப் பங்களிப்புச் செய்தவர்களும் உள்ளனர். இவர்களை நாம் மதிக்க வேண்டும். கண்ணியப்படுத்த வேண்டும். இஸ்லாமியப் பாரம்பரியத்திற்குப் பங்களிப்புச் செய்தோரை மதிப்பது, கற்றுத் தந்த ஆசிரியர்களை நன்றியுணர்வுடன் நோக்குவது- இவை எனது ஆசிரியர் கள் என்னில் வளர்த்த பண்புகள்.
அடுத்து அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் யார் எனது பாதையில் முயற் சிக்கின்றாரோ அவருக்கு நாம் எமது வழியைக் காட்டுவோம் என்று. அறிவைத் தேடுபவர்கள் அவனது பாதையில் உள்ளனர். அந்த வகையில் எனதுவாழ்வில் அப்படியான இறை உதவிகளைப் பெற்றிருக்கிறேன்.
எனது ஆய்வில் பேராசிரியர் மொன்ட் கொமரி வொட், அபூதாலிப் அல் மக்கி யின் இன்னொரு நூலை அறிமுகப்படுத்துமாறு என்னைக் கேட்டிருந்தார். நான் பலமுறை முயற்சித்தும் அது கிடைக்கவில்லை. ஒரு முறை நான் ஒரு பாகிஸ்தான் கடைக்கு ஹலால் இறைச்சி வாங்கச் சென்று திரும்பிக் கொண் டிருந்தேன். அப்போது பனி பெய்ய ஆரம்பித்தது. நான் உடனே பாதையில் இருந்த வாசிகசாலைக்குச் சென்று எழுமாறாக நூல்களின் எழுத்துப் படிவங்கள் தொடர்பான ஏடுகளைப் புரட்டினேன்.
அதில் ஸ்பெயினிலுள்ள எஸ்கேரியா நூலகத்தில் இலக்கம் 322ல் அபூதாலிப் மக்கியின் ‘பயானுஷ் ஷிபா’ என்ற நூல் இருப்பதாகத் தகவல் இருந்தது. பின்னர் பேராசிரியரிடம் அதனைக் கூறினேன். அவர் அதனை எடுப்பதற்கான வசதிகளை செய்து தந்தார். ஏன் நான் இதனைச் சொல்கிறேன் என்றால் அல்லாஹ்வின் உதவி இப்படியான ஆய்வுப் பயணத்தில் காணப்படும் என்ப தைக் காட்டத்தான்.