மதங்களுக்கிடையில் மோதல் அல்ல, உரையாடலே தேவை

சந்திப்பு:  இன்ஸாப் ஸலாஹுதீன்

கலாநிதி சுக்ரி அவர்கள் இலங்கையில் இலங்கைக்கு வெளியிலும் நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞர். முஸ்லிம் சமூகத்தின் புலமைச் சொத்தாக விளங்குபவர். அவர் கடந்த பெப்ரவரி 20, 21 ஆம் திகதிகளில் இந்தியத் தலைநகரான புதுடில்லியில் அமைந்துள்ள ஜாமிஆ மில்லிய்யாவில் நடைபெற்ற ‘இஸ்லாத்திற்கும் கீழைத்தேய மதங்களுக்குமிடையிலான உரையாடல்’ (Dialogue between Islam and Oriental Religions) என்ற மாநாட்டில் கலந்துகொண்டதோடு முஸ்லிம் பௌத்த உரையாடல் பற்றிய  ஒரு நோக்கு என்ற ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்பித்தார். மாநாடு குறித்து கலாநிதி சுக்ரி அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

* அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற மாநாடு குறித்த அறிமுகத்தை வழங்க முடியுமா?

இன்று பொதுவாக மதங்களுக் கிடையிலான உரையாடல் உலகில் நடைபெற்று வருகின்றது. சாமு வேல் ஹன்டிங்டன் (Clash of Civilization) அதாவது நாகரிகங்க ளுக்கிடையிலான மோதல் என்ற ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்கா உலகில் ஒரு பிரமையை ஏற்படுத்தப் பார்க் கின்றது. விசேடமாக அது செப்டம்பர் 11 தாக்குதலின் பிறகு எதிர்காலத்தில் நாகரிகங்களுக்கிடையில், அதாவது மதங்களுக்கிடையில் மோதல் நடைபெறும் என்பதாகும்.

கிறிஸ்தவ உலகத்திற்கும் இஸ்லாமிய உலகிற்கும் கன்பூஷிய (சீன) உலகத்திற்கும், மதங்களுக் கும் இடையில் மோதல் நடை பெறும் எனும் கருத்தை எழுத்து, பேச்சு, ஆய்வுகள் மூலமாக பரப்பினார்கள். அதனைத்தான் Clash of Civilization என அழைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து உலகத்தில் இன்னொரு கருத்து வந்தது. அதாவது இன்று உலகில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, மனித இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்குத் தேவை உரையாடல்தான். மாறாக மோதலல்ல. அந்த வகையில் உலகில் மதங் களுக்கிடையில், நாகரிகங்களுக் கிடையில் உரையாடல் நடைபெற வேண்டும். (Dialogue between Religion/Civilization) என்ற கருத்து வலுப் பெற்றது. அதனைத் தொடர்ந்து உலகின் பல இடங்களில் பல கருத்தரங்குகள் நடை பெற்றன.

மேற்குலகத்திலும் அறபு உல கத்திலும் யூதர்களுக்கும்-முஸ்லிம் களுக்கும், முஸ்லிம்களுக்கும்- கிறிஸ்தவர்களுக்கும் இடையி லான உரையாடல் என நடைபெற் றன. குறிப்பாக ராபிதா நிறுவனம் பல சர்வதேச மாநாடுகளை ஏற்பாடு செய்தது. அதேபோல கடாரில்  Dhoha Centre for Interfaith Dialogue (DCID) எனும் அமைப்பு நிறுவப் பட்டு அதுபோன்ற பல மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் இதுவரையில் இஸ்லாத்திற்கும் மேற்கிற்கும், இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும், இஸ்லாத்திற்கும் யூத மதத்திற்கும் இடையில்தான் உரையா டல்கள் நடைபெற்று வந்துள்ளன. ஆனால் தென்கிழக்காசியாவில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. தென்கிழக்காசியா வில் பௌத்தம், இந்து, சீக்கியம் என பல மதங்கள் இருக்கின்றன. இந்த மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் இடையில் எந்த உரையாடலும் நடைபெற வில்லை. எனவே, இன்றைய கால கட்டத்தில் இந்த மதங்களுக்கிடையில் ஒரு நல்லுறவை, பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பது அவசியம் என்ற ஒரு கருத்துடன்தான் இந்த மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது.

இஸ்லாத்திற்கும் கீழைத்தேய மதங்களுக்கும் இடையிலான உரையாடல் (Dialogue between Islam and Oriental Religions) என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை ஷெய்க் யூஸுப் அல்-கர்ளாவியின் தலைமையில் இயங்கும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் அமைப்பும், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்துதான் ஏற்பாடு செய்திருந்தது.

புதுடில்லியின் ஜாமிஆ மில்லிய்யாவில் இந்த மாநாடு பெப்ர வரி 20, 21ம் திகதிகளில் நடைபெற்றது. இந்தியாவின் உப ஜனாதிபதி ஹமீத் அன்ஸாரி அவர்கள் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்கள்.

* மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பற்றிச் சொல்லுங்கள்…

மாநாட்டில் மொத்தம் 58 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன. நீதவான் ஜீ.ஏ. அப்துல் கபூர் என்பவர் ‘இஸ்லாத்திற்கும் ஏனைய மதங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பிற்கான ஒரு களம்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.

Dr. ஜாவித் ஜமீல் ‘உலகமய மாதலின் காலாசார, பண்பாட்டுத் தாக்கங்களுக்கு எதிராக மதங்கள் இணைந்து செயற்படுவதன் அவ சியம்’ எனும் தலைப்பில் தனது ஆய்வை முன்வைத்தார்.

முஹம்மத் ஸிராஜ் இப்றாஹீம் ஸைத் என்பவர், உலக மதங்களோடு தொடர்புபடுத்தி இஸ்லாத்தில் சகிப்புத்தன்மை பற்றிய ஒரு நோக்கை முன்வைத்தார்.

அதுபோல் ‘இஸ்லாத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையிலான உரையாடலின் சில அடிப்படைகள்’ எனும் தலைப்பில் ஜகத் குரு சங்கராச்சாரிய என்பவர் பேசினார்.

பேராசிரியர் ஷிவ வரன் ஷுக்ரா இஸ்லாத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையிலான உரையாடலின் அவசியம் பற்றிப் பேசினார்.

அத்தோடு ஜைன மதம் பற்றிய அமர்வு நடைபெற்றது. பேராசிரியர் அனைக் காண்ட்குமார் ‘இஸ்லாமும் ஜைன மதமும் ஓர் ஒப்பு நோக்கு’ என்ற ஆய்வை முன்வைத்தார்.

பௌத்த மதம் சம்பந்தமாக பீ. சிறி வலிதேரோ, ‘இஸ்லாத்திற்கும் கீழைத்தேய மதங்களுக்கும் இடையிலான உரையாடல்களில் சில கருத்துக்கள்’ தொடர்பாக தனது ஆய்வை முன்வைத்தார். ஸீ.டி நாய்க் என்பவர் ‘மனித சிந்த னைக்கு இஸ்லாத்தினதும் பௌத் தத்தினதும் பங்களிப்பு’ என்ற ஆய்வை முன்வைத்தார். ‘முஸ்லிம் -பௌத்த உரையாடல் பற்றிய ஒரு நோக்கு’ என்ற தலைப்பில் எனது ஆய்வை முன்வைத்தேன்.

* உங்களது ஆய்வுக் கட்டுரை குறித்து சுருக்கமாகச் சொல்லுங்கள்…

இஸ்லாத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையில் ஏறக்குறைய 1000 ஆண்டு காலமாக கலாசாரப் பண்பாட்டு தொடர்புகள் இருந்திருக்கின்றன. உமையாக்களின் ஆட்சி யில் மத்திய ஆசியா கைப்பற்றப் பட்டதோடு இஸ்லாத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. முஸ்லிம்கள் ஏற்கனவே சிந்து பிரதேசத்தை கைப்பற்றியிருந்தார்கள். அங்கு இந்து மதத்தை இஸ்லாம் எதிர் கொண்டது.

பிறகு மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சிப் பரவலோடு பௌத்தர்களை எதிர்கொண்டார்கள். உமரின் காலத்தில் முஸ்லிம்கள் பௌத்த மதத்தைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு உமர் பின் அல் அஸ்ரக் அல் கர்மானியுடைய எழுத்துக்கள் ஆதாரமாக அமைகின்றன. இவர் தனது நூலில் பௌத்த மதம் பற்றியும் அதனது கோட்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கிறார். அதே நேரம் மத்திய ஆசியாவில் இருந்த ‘நவ விகார’ என்ற ஒரு பௌத்த மடாலயம் குறித்தும் மிக அழகான ஒரு விளக்கத்தை அதில் கொடுக் கின்றார்.

அதேபோல அப்பாஸிய காலத் தில் கலீபா மன்ஸூர் பைதுல் ஹிக்மாவை நிறுவியபோது அங்கு சமஸ்கிருத நூல்கள் அறபியில் மொழிபெயர்க்கப்பட் டன. மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் மஹாயீன பௌத்தத்தைச் சேர்ந்த சில சூத்திரங்களும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அதேபோல யஹ்யா பின் பர்மக் சில பௌத்த நூல்களை அறபியில் மொழிபெயர்ப்பதற்கு நவ விகாரையிலிருந்து சில பௌத்தர்களை அழைத்து வந்தார்.

இப்படியாக பல்வேறு தொடர் புகளை ஆய்வில் குறிப்பிட்டுள் ளேன். இவை வரலாற்றுத் தொடர்புகள். இஸ்லாத்திற்கும் பௌத்தத் திற்கும் இடையில் ஏற்பட்ட கலாசாரத் தொடர்புகள், முஸ்லிம்கள் எப்படி சகிப்புத் தன்மையோடும் புரிந்துணர்வுடனும் அடுத்த மதங்க ளோடு நடந்து கொண்டார்கள் என்பதைக் காட்டுகின்றது. மத சகிப்புத் தன்மை என்பது, மதங்களுக்கிடையில் உரையாடல் என்பது ஒவ்வொரு மதமும் அதனுடைய கொள்கையை, அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுவிடுவதல்ல. அவரவர்களது மதத் தனித்துவத்தை, மதக் கோட்பாடுகளை பாதுகாத்துக் கொண்டு, ஏனைய மதங்களின் அடிப்படைகளை புரிந்துகொண்டு நல்லுறவை வளர்ப்பதாகும்.

அந்த வகையில் இஸ்லாத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையில் சில பொதுவான ஒழுக்கக் கோட்பாடுகள் இருக்கின்றன. கருணை, அன்பு, உயிரினங்கள் மீது அன்பு காட்டுதல், பொறுமை, மன்னிப்பு, சகிப்புத் தன்மை, தாராளத்தன்மை போன்றவை, இஸ்லாம், பௌத்தம், இந்து என்பவற்றுக்கிடையிலுள்ள பொதுவான ஒருமைப்பாடுகள்.

எனவே இந்த அம்சங்களில் நாம் ஒன்றுபடலாம் என்பதை ஆய்வில் வலி யுறுத்தியுள்ளதோடு புரிந்துணர்வு, வேற்றுமையில் ஒற்றுமை காணுதல் எனும் பண்பு களை மதப் போதனைகளில் இருந்து நாங்கள் அடிப்படையாகப் பெற்று புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதுதான் அவசியம் என்ற கருத்தை ஆய்வின் இறுதியில் கூறியுள்ளேன்.

* ஏனைய மாநாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த மாநாடு பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

இஸ்லாத்திற்கும் கீழைத்தேய மதங்களுக்கும் இடையில் உரையாடல் நடைபெற வேண்டும் என்பதில் எடுக்கப்பட்ட முதல் முயற்சி இதுவாகும். இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இஸ்லாம், இந்து, பௌத்தம், சீக்கியம், ஜைனம் ஆகிய மதங்களைப் பின் பற்றுபவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, ஜப்பான், தாய் லாந்து, வியட்நாம், கம்போடியா, பர்மா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் வாழ்கிறார்கள்.

இந்த நாடுகளின் சனத்தொகை உலக சனத்தொகையின் அரைவாசி. பெருந்தொகை மக்கள் வாழும் பகுதியாக இது காணப்படுவதோடு, முக்கியமான மதங்களும் பின்பற்றப்படுகின்றன. எனவே இந்த மதங்களுக்கிடையில் உரையாடல் நடை பெறுவது இன்றைய காலத் தில் மிகவும் முக்கியம். ஏனெ னில் இன்று வன் செயல்களும் பயங்கரவாதமும் அதிகரித்து வருகின்றது.

எனவே மதங்களுக்கிடை யில் வெறுப்புணர்வு, காழ்ப்புணர்ச்சி, பிளவுகள் ஏற்படு கின்ற காலத்தில் மதங்களுக்கிடையில் காணப்படுகின்ற ஒருமையான பண்புகளை வைத்து உரையாடல் நடை பெற இந்த மாநாடு சந்தர்ப்பமளித்தது. இதனை அந்த மாநாட்டின் முக்கிய பண்பாகக் கருதுகின்றேன்.

* மாநாட்டில் கலந்துரை யாடப்பட்ட முக்கிய விடயங்கள் குறித்து…

# இஸ்லாத்திற்கும் கீழைத்தேய மதங்களுக்கும் இடையிலான உரையாட லுக்கான அடிப்படைகள்

# இஸ்லாத்திற்கும் கீழைத்தேய மதங்களுக்கும் இடையிலான சில பொதுப் பெறுமானங்கள்.

# முஸ்லிம்களுக்கும் ஏனைய கீழைத்தேய மதங்களை விசுவாசிப்பவர் களுக்கும் இடையில் ஒருமைப்பாடு காணக் கூடிய பொதுப் புள்ளிகள்.

# இஸ்லாத்திற்கும் கீழைத்தேய மதங்களுக்கும் இடையில் காணப்படக் கூடிய பொதுவான சில நம்பிக்கைகள், பெறுமானங்கள் என்பவற்றை இனங்காணல் என் பன மாநாட்டில் முக்கிய விடயங்களாகக் கலந்துரையாடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *