புனர் நிர்மாணம் பற்றிய இக்பாலின் கருத்துக்கள் சில அவதானங்கள்
சமூக மாற்றம் என்பது சமூக வளர்ச்சியின் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகும். அது சமூக பரிணாமத்தின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாகும். இஸ்லாம் மனித சமூகத்தின் நேர்வழிக்கான இறுதி வழிகாட்டுதலைப் பொதிந்த ஒரு மார்க்கம் என்ற வகையில் சமூக வளர்ச்சியையும், சமூக மாற்றத்தையும் அங்கீகரிக்கின்றது. சமூக வளர்ச்சி, மாற்றத்திற்கேற்ப தோன்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு சமூக மாற்றத் திற்கேற்ப இசைவாக்கம் பெறும் தன்மையை “இஜ்திஹாத்” இஸ்லாமிய சட்டத்திற்கு வழங்குகின்றது. சமூக மாற்றம், வளர்ச்சிக்கு ஏற்ப சட்டம் மட்டுமன்றி, கருத்துகளும் சிந்தனைகளும் இசைவாக்கம் பெறுதல் அவசியமாகும். இதன் மூலம் இஸ்லாமிய சட்டம் இயக்க சக்தியை (dynamism) பெறுவது போன்று இஸ்லாமிய சிந்தனையும் இயக்க சக்தியைப் பெறுகின்றது.
இஸ்லாமிய கலைகளின்- குறிப்பாக சன்மார்க்க கலைகளின் புனர் நிர்மாணத்திற்கு மிகப் பெரும் பங்களிப்புச் செய்தவராக இமாம் கஸ்ஸாலி (றஹ்) விளங்குகின்றார்கள். அவர்களது “இஹ்யா உலூமுத்தீன்” (சன்மார்க்கக் கலைகளின் புத்துயிர்ப்பு) என்னும் நூல் இஸ்லாமிய சன்மார்க்கக் கலைகளை, கால வளர்ச்சி, மாற்றங்களின் பகைப்புலனில் அணுகி விளக்கி, அக்கலைகளுக்கு மறுவிளக்கம் அளிக்கும் ஒரு காத்திரமான முயற்சியாகும்.
இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் இஸ்லாமிய கலைகளுக்குப் புத்துயிரளிக்கும் முயற்சியில் ஈடுபட்டது போன்றே, நவீன காலப் பிரிவில் அல்லாமா இக்பால் இஸ்லாமிய சிந்தனையை காலவளர்ச்சி, மாற்றங்களின் பகைப்புலனில் புனர்நிர்மாணம் செய்தல் பற்றி சிந்தித்தார்.
இக்பால் கவிதை, தத்துவம் ஆகிய துறைகளுக்கு ஆற்றிய பங்களிப்பு போன்று இஸ்லாமிய மார்க்க சிந்தனைக்கும் மிகக் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளார். இஸ்லாமிய சிந்தனைத்துறையில் மிக முக்கியமான ஓர் இடத்தை அவர் வகிக்க இது காரணமாக விளங்குகின்றது.
இக்பால் மத்ராஸ், ஹைதராபாத், அலிகார் ஆகிய இடங்களில் ஒரு விரிவுரைத் தொடரை நிகழ்த்துவதற்காக அழைக்கப்பட்டார். அவர் ஆற்றிய இந்த விரிவுரைகளில் இஸ்லாமிய மார்க்க சிந்தனையைப் புனர் நிர்மாணம் செய்தல் பற்றிய அவரது மிக ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்தினார். இந்த விரிவுரைத் தொடர். ‘The Reconstruction of Religious Thought in Islam’ ‘இஸ்லாத்தில் மதச் சிந்தனையின் புனர் நிர்மாணம்’ என்ற பெயரில் நூலுருவில் வெளியிடப்பட்டது. இந்த விரிவுரைகளில் இஸ்லாத்தின் கோட்பாடுகளை நவீன சிந்தனையினதும் அறிவியல் அறிவினதும் அடிப்படையில் விளக்கும் முயற்சியை மேற்கொண்டார்.
இக்பால் பின்வருமாறு கூறுகிறார்:
நவீன முஸ்லிமின் முன்னால் உள்ள பணி மிகப் பெரியது. கடந்த காலத்துடன் துண்டித்துக் கொள்ளாமல் இஸ்லாத்தின் அமைப்பு முழுவதை யும் மீள் சிந்தனை செய்யும் பணி அவனுக்கு உள்ளது. இஸ்லாத்தைப் பொறுத்தளவில் அது வேண்டி நிற்கும் இந்த புதிய உயிரோட்டத்தை உணர்ந்த முதல் முஸ்லிம் ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி ஆவர். இந்தப் பணியின் முக்கியத்துவத்தை மிகச் சிறந்த முறையில் ஜமாலுத்தீன் ஆப்கானி விளங்கியிருந்தார். இஸ்லாமிய சிந்தனை வரலாற்றின் உள்ளார்ந்த கருத்து பற்றிய அவரது ஆழமான அறிவும், புரிதலும், மக்களுடனும் மனித விவகாரங்களோடும் உறவாடி அவர் பெற்ற அனுபங்களும், அவரது பரந்த நோக்கோடும், கண்ணோட்டத்தோடும் இணைந்து முஸ்லிம் சமூகத்தின் கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்குமிடையில் மிகப் பொருத்தமான இணைப்பைக் காணக்கூடிய ஒருவராக அவர்(ஆப்கானி) ஆகியிருப்பார். அவரது மாபெரும் சக்தியும், ஆற்றலும் இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாடு, நடைமுறை பற்றிய விடயங்களில் முழுமையாக செலுத்தப்பட்டிருந்தால், இஸ்லாமிய உலகு அறிவு ரீதியாக இன்று மிக உறுதியான நிலையைப் பெற்றிருக்கும். ஆனால் அவரது ஆற்றலும், திறமையும், சக்தியும், உத்வேகமும் துடிப்பும் இத்துறையில் ஒருமுகப்படுத்தப்படாமல் வேறு பல துறைகளில் சிதறடிக்கப்பட்ட நிலையில் செயல்பட்டதால் இது சாத்தியமாக வில்லை.(1)
எங்களுக்கு இன்றுள்ள ஒரே வழி நவீன அறிவை மதித்து, ஆனால் அதே நேரத்தில் அதனைச் சுதந்திரமாக அணுகி- இஸ்லாமியப் போதனைகளை அந்த அறிவின் வெளிச்சத்தில் அணுகுவதாகும். சிலபோது இது எங்களுக்கு முன் வாழ்ந்தவர்களிலிருந்து வித்தியாசமான வகையில் எங்களை சிந்திக்க வைக்கலாம்.(2)
நவீன வரலாற்றில் இஸ்லாத்தில் மேற்கின் செல்வாக்கு, தாக்கம் பற்றி இக்பால் பின்வருமாறு விளக்குகின்றார்: “நவீன வரலாற்றில் நாம் அவதானிக்கக்கூடிய மிகக் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், இஸ்லாமிய உலகு மிக வேகமாக மேற்கை நோக்கி நகரும் போக்காகும். இதில் எத்தகைய தவறும் இல்லை. ஏனெனில் ஐரோப்பியப் பண்பாடும் நாகரிகமும் அதன் அறிவுத்துறையைப் பொறுத்தளவில் இஸ்லாமி யரது பண்பாட்டின் வளர்ச்சிப் படிவத்தின் ஒரு முக்கிய வளர்ச்சிக் கட்டங்களினடியாகத் தோன்றிய ஒரு வளர்ச்சியாகும். ஆனால் இது தொடர்பாக ஏற்படும் அச்சமும் பயமும் என்னவெனில், ஐரோப்பிய கலாசாரத்தின் வெளிக் கவர்ச்சியானது மேற்கின் அறிவியல் பாரம்பரியத்தை நோக்கி நகரும் முஸ்லிம் உலகின் இயக்கத்தைத் தடைசெய்து, மேற்கின் அறிவுப் பாரம்பர்யத்தின் உள்ளார்ந்த தன்மையை நாங்கள் அடைய முடியாமல் போகலாம் என்பதாகும்.(3)
கடந்த பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் உலகம் அறிவுத்துறையில் தேக்க நிலையடைந்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. முஸ்லிம்களின் வரலாற்றின் அறிவியல் வளர்ச்சி மிகச் சிறப்பாகக் காணப்பட்ட காலகட்டத்தில், முஸ்லிம் தத்துவஞானிகள், அறிவியலாளர்கள் ஆர்வங்காட்டிய அறிவுரீதியான, ஆய்வு ரீதியான விடயங்கள் குறித்து, இந்த காலகட்டத்தில் ஐரோப்பா மிகத் தீவிரமாக ஈடுபாடு காட்டவும், சிந்திக்கவும் ஆரம்பித்தது. முஸ்லிம்கள் அறிவு நிலையில் தேக்க நிலையடைந்த காலம் முதல், ஐரோப்பா அறிவுத்துறையில் காட்டிய ஆர்வம் காரணமாக, மனித சிந்தனையிலும், அனுபவத் திலும் வியத்தகு, விசாலமான வளர்ச்சி காணப்பட்டது. இயற்கையின் மீது மனிதன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்ததானது அவனுக்கு ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியதோடு, அவனது பௌதீகச் சூழலை மிகைத்து நிற்கும் ஓர் உயர்வு மனப்பான்மையை அவனில் தோற்றுவித்தது. புதிய கண்ணோட் டங்கள் அணுகுமுறைகள் உருவாகின. புதிய அனுபவங்களின் வெளிச்சத்தில் பழைய பிரச்சினைகள் மீள் வாசிப்புக்கு உட்படுத்தப் பட்டன. இவற்றோடு புதிய பிரச்சினைகளும் தோன்றின. மனித அறிவானது அதன் அடிப்படைப் பரிமாணங்களான நேரம் (Time)இ இடம் (Space),காரண-காரியம்(Causualty) ஆகியவற்றைக் கடந்த நிலையில் வளர்ச்சி யடையும் நிலை தோன்றுவது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது. நேரம், இடம் ஆகியவற்றோடு தொடர்புடைய ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு (Theory of Relativity) பிரபஞ்சத்தை ஒரு புதிய நோக்கில் அணுகும் தன்மையையும், மதத்திற்கும் தத்துவத்திற்கும் பொதுவான பிரச்சினைகளை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலையையும் உருவாக்கியது. இச் சூழ்நிலையில் ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் வாழும் முஸ்லிம் இளைஞர்கள் அவர்களது மதக் கோட்பாடுகள் பற்றிய ஒரு புதிய நோக்கை, கண்ணோட்டத்தை வேண்டி நிற்பதில் எத்தகைய ஆச்சரியமும் இல்லை.(4)
எனவே இஸ்லாத்தின் மீள் எழுச்சியோடு நாங்கள் ஐரோப்பிய சிந்தனையையும், அதன் அறிவு வளர்ச்சியால் அது பெற்றுள்ள முடிவு களையும், சுதந்திரமான கண்ணோட்டத்தில் அணுகுவதும் அவை எவ்வளவு தூரம் எங்களது மதச் சிந்தனையை புனர்நிர்மாணம் செய்ய துணைபுரிய முடியும் என்பதனைப் பற்றிச் சிந்தித்தலும், ஆராய்தலும் அவசியமாகும்.(5)
இஸ்லாமிய உலகம் அறிவுத் துறையில் தேக்க நிலையிலிருந்த காலப் பிரிவில், முஸ்லிம் ஸ்பெயின் மூலமாக ஐரோப்பா பெற்றுக்கொண்ட முஸ்லிம்களது அறிவியல் பாரம்பரியம் காரண மாக ஐரோப்பாவில் மகத்தான அறிவு வளர்ச்சி ஏற்பட்டது. அதன் காரணமாக பிரபஞ்சம், காலம், இடம் ஆகியவற்றைப் புதிய அறிவியல் நோக்கில் அணுகும் நிலை தோன்றியது. புதிய வினாக்கள் எழுப்பப்பட்டு புதிய விடைகள் பெறப்பட்டன. மனித சிந்தனை வளர்ச்சியில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன. முஸ்லிம்கள் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது பாரம்பரிய சிந்தனையை, தங்களது தனித்துவத்தைப் பேணிய நிலையில் புனர்நிர்மாணம் செய்தல் வேண்டும் என்ற கருத்தையே இக்பாலின் மேற்குறிப்பிட்ட கருத்து விளக்குகின்றது.
மதச் சிந்தனையின் புனர்நிர்மாணம் தொடர்பான இக்பால் தனது விரிவுரைத் தொடரில் குறிப்பிடும் கருத்துகள் மிக ஆழமானவை மதம், தத்துவம், அறிவியல் ஆகிய மூன்றையும் ஊடறுத்துச் செல்பவை மனித சிந்தனையின் பல்வேறு பரிமாணங் களோடு தொடர்புடையவை. இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தின் முக்கிய அங்கங்களான ‘இல்முல் கலாம்’, ‘தஸவ்வுப்’, ‘பல்ஸபா’ ஆகியன பற்றி ஆழமான விசாரணைகளை அது உள்ளடக்கியுள்ளது. இமாம் கஸ்ஸாலி, இப்னு ருஷ்த், இப்னு தைமியா, ஷாஹ் வலியுள்ளாஹ் போன்ற முஸ்லிம் சிந்தனையாளர்களின் கருத்துகள், கான்ட்(Kant), பெர்க்ஸன் (Bergson), வைட் ஹெட் (White head) போன்ற மேற்கத்திய தத்துவ ஞானிகளின் கோட்பாடுகளின் ஆழம், அகலத்தை மிக நுட்பமாக அவர் விளக்கு கின்றார். எனவே, இக் கட்டுரையில் மதச்சிந்த னையின் புனர்நிர்மாணம் பற்றிய இக்பாலின் அத்துணை கருத்துகளையும் விளக்குவது சாத்தியமன்று. இது தொடர்பான சில முக்கிய கருத்துகளே இங்கு விளக்குவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
அல் குர்ஆனின் முக்கிய நோக்கம் பிரபஞ் சத்துடனும் இறைவனுடனுமான மனிதனின் தொடர்பைப் பொறுத்தளவில் அவனது உணர் வினை விழிப்படையச் செய்வதாகும் என இக்பால் குறிப்பிடுகின்றார். நாம் வாழும் இப்பிர பஞ்சமானது வீணுக்காகவோ, விளையாட்டுக் காகவோ படைக்கப்படவில்லை எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“வானங்களையும் பூமியையும், அவ்விரண்டுக்கு மத்தியிலுள்ளவைகளையும் விளையாடுவோராய் நாம் படைக்க வில்லை. (நிச்சயமாக) அவ்விரண்டையும் உண்மையைக் கொண்டே தவிர- நாம் படைக்கவில்லை எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள்” (அத்துகான:் 38:39)
“வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்”(ஆலு இம்ரான்: 189)
“நிச்சயமாக, வானங்கள், மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடை யோர்க்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன (அறிவுடைய) அத்தகையோர், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், தங்கள் விலாப் புறங்களின் மீது (சாய்ந்து)ம் அல்லாஹ்வையே நினைத்து, வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை நீ மிகத் தூயவன் (நரக) நெருப்பின் வேதனை யிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!” (என்று கூறுவார்கள்) (ஆலு இம்ரான் :190-191)
எனவே இப் பிரபஞ்சத்தில் ஒரு நோக்கும் குறிக்கோளும் பொதிந்துள்ளது என்ற உண்மையை இத்திருவசனங்கள் குறிப்பிடு கின்றன. இது தவிர இப் பிரபஞ்சமானது விரிவுகளுக்கும் வளர்ச்சிக்கும் இடமளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அல் குர்ஆன் கூறுகின்றது.
“அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். அவன் வானங்களையும், பூமியையும் ஆரம்பமாகப் படைத்தவன் இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்நான்கும் இறக்கை களுடைய மலக்குகளைத் தூதர்களாக ஆக்கியவன் அவன் நாடியதை(த் தன்) படைப்பில் (பின்னும்) அதிகப்படுத்துவான் நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையோன்” (அல் குர்ஆன் 35:1)
இக்பாலின் நோக்கில், இப்பிரபஞ்சத்தின் சூட்சுமமான அசைவும், ஓசையோ, இரைச்சலோ அற்ற காலத்தின் (time) நீச்சலும், மனிதர்களின் பிரத்தியட்சப் பார்வைக்கு இரவும் பகலும் மாறி மாறி வரும் ஓர் அசைவாக, இயக்கமாகத் தோற்றமளிக்கின்றது. இதனை குர்ஆன் இறைவனின் மகத்தான அத்தாட்சிகளில் ஒன்றாகக் கருதுகின்றது.
“இரவையும் பகலையும் அல்லாஹ்வே (திருப்பித் திருப்பி) மாற்றிக்கொண்டு இருக்கிறான். பார்வைகள் உடையோருக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை உண்டு” (அல் குர்ஆன் 24:44)
இதன் காரணமாகவே றஸூல் (ஸல்) அவர்கள் “காலத்தைச் சபிக்காதீர்கள். நான் காலமாக உள்ளேன்!்” என இறைவன் கூறுவதாகக் குறிப்பிட்டார்கள். இந்த பிரமாண்ட மான இடமும் (Space), காலமும் (time)) மனிதனுக்கு இப் பிரபஞ்சத்தை பூரணமாகத் தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் வாக்குறுதி யைச் சுமந்துள்ளது. எனவே பிரபஞ்சத்தில் இறைவனின் அத்தாட்சிகள் பற்றிச் சிந்தித்து, இயற்கையை எதிர்கொள்வதற்கான வழிகளைக் கண்டறிந்து, அதனை யதார்த்தமாக்கல் மனிதனின் கடமையாகும்.(6)
பிரபஞ்சத்தின் இயற்கைத் தன்மையும், அது மனிதனுக்கு பொதிந்துள்ள வாக்குறுதியும் இதுவெனில், சுற்றிலும் இயற்கையினால் சூழப்பட்டுள்ள மனிதனின் நிலை என்ன? என வினா எழுப்பும் இக்பால் மனித ஆளுமையின் மகத்துவம் பற்றி பின்வருமாறு விளக்குகின்றார்: “மனிதன் பலவீனமானவன் ஆனால் அவனது அனைத்துப் பலவீனங்களுக்கு மத்தியிலும், அவன் இயற்கையை மிகைத்த ஆளுமை உடையவன். ஏனெனில் வானங்கள், பூமி, மலைகள் சுமக்கத் தயங்கி மறுத்த பொறுப்பை அவன் சுமந்துள்ளான்.
“நிச்சயமாக நாம் அமானிதத்தை வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச் சுமந்துகொள்ளுமாறு) எடுத்துக் காட்டினோம் அப்போது அதைச் சுமந்து கொள்வதிலிருந்து அவை விலகிக் கொண்டன இன்னும், அ(தைச் சுமப்ப) திலிருந்து அவை பயந்தன (ஆனால்) மனிதனோ அதனைச் சுமந்துகொண்டான் நிச்சயமாக அவன் (அமானிதத்தை நிறைவேற்றும் விஷயத்தில்) பெரும் அநியாயக்காரனாக (அதன் கடமையை) அறியாதவனாக இருக்கிறான்.” (அல் குர்ஆன் 33:72)
அவனைச் சூழஉள்ள சக்திகளினால் மனிதன் கவரப்படும்போது அவற்றை நெறிப்படுத்தும் ஆற்றல் அவனுக்கு உள்ளது. சில சக்திகள் அவனை தடுக்கும்போது, அவன் காணும் புற உலகை விட மிக விசாலமான ஒரு உலகை அவனுக்குள் படைக்கும் ஆற்றலும் மனிதனுக்கு உண்டு. மனிதனின் முன்னால் உள்ள பணி கஷ்டமும் சிரமமும் நிறைந்தது. அவன் ஒரு ரோஜா இதழைப் போன்று பலவீனமானவன். ஆனால் அதே நேரத்தில் மனிதனின் ஆத்மாவைப் போன்று பலம் மிக்க, அழகான, உணர்வூட்டும் எதுவும் இல்லை. குர்ஆனின் நோக்கில் மனிதன் இயக்கமுடையவன் படைப்பாற்றல் பெற்றவன் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு உயர்ந்து முன்னேறிச் செல்பவன்.(7)
” சந்திரன் மீதும்- அது பூரணமாகி விட்ட போது(ம் சத்தியம் செய்கிறேன்)”
“(ஒரு நிலையிலிருந்து மற்றோரு நிலைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படி யாக ஏறிச் செல்வீர்கள்.” (அல்குர்ஆன் 84: 18-19)
மனிதன் அவனது ஆற்றல்கள், சக்தி களைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தின் சக்திகளை அவனது நோக்கத்தை அடையப் பயன்படுத்தல் வேண்டும். இந்த முன்னேற்றத்திற்கான முயற்சி யில், மனிதன் அவனது முயற்சியை ஆரம்பித் தால் இறைவன் அவனுடன் இணைந்து செயல் படுகின்றான் எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது:
மனிதன் இந்த முயற்சியை ஆரம்பிக்கா விட்டாலோ, அவனில் உள்ளார்ந்து அமைந் துள்ள ஆற்றல்களை வளர்க்க முற்படா விட்டாலோ, அல்லது அவனை முன்னேறிச் செல்லத் தூண்டும் உந்துதல் சக்தியை இழந்து விட்டாலோ, அவனுள் உள்ளார்ந்து அமைந் துள்ள ஆத்மா ஒரு வன்மையான கல்போன்று மாற்றமடைந்து, அவன் வெறுமனே இறந்த இயக்கமற்ற ஒரு சடமாக ஆகிவிடுவான்.
மனிதனின் வாழ்வும் அவனது உயர்ச்சியும் அவனைச் சூழ்ந்துள்ள உலகோடு அவன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதில் தங்கி யுள்ளது. இந்தத் தொடர்பை அவன் ஏற்படுத்திக் கொள்ள அறிவே அவனுக்குத் துணைபுரி கின்றது. அறிவு என்பது புலன்களைப் பயன் படுத்தலும், அவ்வாறு புலன்கள் மூலம் பெற்ற அறிவை, பகுத்தறிவைப் பயன்படுத்தி விரிவுபடுத்திக் கொள்ளலும்:
“(மனிதர்களே!) அல்லாஹ்வை எவ்வாறு நீங்கள் நிராகரிக்கிறீர்கள்? நீங்களோ உயிரற்றவர்களாக இருந்தீர் கள் பின்னர் உங்களை அவன் உயிர்ப் பித்தான் பின்னும் அவனே உங்களை மரணிக்கச் செய்வான் பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். (அதன்) பின்னும் நீங்கள் (உங்கள் வினையின் பலனை அடைவதற்காக) அவன் பக்கமே மீட்கப்படு வீர்கள்.”
“அவன் எத்தகையவனென்றால், பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காக அவன் படைத்தான் பின்னர் அவன் வானத்தின்பால் நாட்டங்கொண்டான் (அவ்வாறு நாடிய அவன்) அவைகளை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். மேலும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிவான்.”
“(நபியே!) இன்னும் உமதிரட்சகன் மலக்குகளிடம், ‘நான் பூமியில் (என்னு டைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சய மாக ஆக்கப் போகிறேன்’, எனக் கூறிய சமயத்தில் அ(தற்கு)வர்கள், ‘(இரட்சகா!) அதில் விஷமம் செய்து இரத்தம் சிந்தக் கூடியவரையா நீ ஆக்கப் போகிறாய்? நாங்களோ உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைத் துதிக்கின்றோம் உன்னுடைய பரிசுத்தத் தன்மையைப் போற்றுகிறோம்’ எனக் கூறினர் (அதற்கு) நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் நன்கறிகிறேன்’ என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான் (என்பதை நினைவு கூர்வீராக!)”
“(ஆதமைப் படைத்து) ஆதமுக்கு (பொருட்களின்) பெயர்களை- அவை அனைத்தையும் கற்றுக் கொடுத்து, பின்னர் அவற்றை (அந்த) வானவர்களின் மீது எடுத்துக் காட்டினான் அப்பால் “(வானவர்களே! உங்களது கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், இவற்றின் பெயர்களை நீங்கள் எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கூறினான்.” “்(அல் குர்ஆன் 2: 28-31)
இந்த திருவசனம் மனிதன் ஒவ்வொரு பொருளையும் இனம் கண்டு அடையாளப் படுத்தும் ஒரு ஆற்றலைப் பெற்றுள்ளான் என்பதை விளக்குகின்றது. அதாவது ஒவ்வொரு பொருளையும் பற்றி ஒரு கருத்தை உருவாக்கும் ஆற்றல் அவனுக்கு உள்ளது. மனிதனின் அறிவின் பண்பு அது கருத்தியல் சார்ந்த தன்மையை (conceptual) பெற்றிருப்பதாகும். இந்த கருத்து சார்ந்த அறிவு என்னும் ஆயுதத்தை தாங்கிய மனிதன் அவனைச் சூழ உள்ள பிரத்தியட்ச உலகை அணுகுகின்றான். குர்ஆனின் சிறப்பம்சங்களில் ஒன்றாகக் காணப்படுவது என்னவெனில், அது மனிதனின் புறக் கண்களுக்குப் புலப்படும் யதார்த்த உலகு பற்றி அவனது அவதானத்தைச் செலுத்துவ தாகும். பின்வரும் குர்ஆனின் திருவசனங்கள் இதனைச் சிறப்பாக விளக்குகின்றன:
“தெளிவான அத்தாட்சிகளிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் நாம் இறக்கி வைத் துள்ளதை- அதனை நாம் மனிதர்களுக்காக வேதத்தில் விளக்கிய பின்னர், நிச்சயமாக மறைக்கின்றார்களே அத்தகையோர் – அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். (மனித இனம், ஜின், மலக்குகள் ஆகியோரில்) சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றனர்” (அல் குர்ஆன் 2: 159)
“இன்னும் அவன் எத்தகையவனென் றால், அவனே உங்களை ஓர் ஆத்மாவி லிருந்து உண்டாக்கினான் பின்னர் (மனிதர்களே! ஒவ்வொருவருக்கும் தாயின் வயிற்றில்) தங்குமிடமும் (கப்ரில்) ஒப்ப டைக்கப்படும் இடமும் உண்டு விளங்கிக் கொள்கிற சமூகத்தினருக்கு, (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக விவரிக் கின்றோம்.”
” மேலும் அவன் எத்தகையவனென் றால், வானத்திலிருந்து மழையை அவன் இறக்கி வைக்கின்றான் பின்னர் அதைக் கொண்டே ஒவ்வொரு பொருளின் புற்பூண்டுகளையும் நாம் (முளைக்க வைத்து,) வெளிப்படுத்தினோம். பின்னர் அதிலிருந்து பசுமையான (பயிர்கள் உள்ள)தை நாம் வெளிப்படுத்தினோம் பின்னர் அதிலிருந்து ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள (கதிர்களைப் போன்று) வித்துக்களை வெளிப்படுத்து கிறோம். பேரீச்ச மரத்திலிருந்து- அதன் பாளையிலிருந்து (பறிப்பவர்களுக்கு வளைந்து) அருகில் தொங்கும் பழக் குலைகளுமிருக்கின்றன (அவற்றையும் நாமே வெளிப்படுத்துகின்றோம்.) திராட் சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலும் (ரசனையில்) வெவ்வேறாக வும் உள்ள ஜைதூன்(-ஒலிவம்) மாதுளை, ஆகியவற்றையும் நாமே (வெளிப்படுத்து கின்றோம்,) அவற்றின் கனிகளை – அவை (பூத்துக்) காய்க்கும் போதும், பின்னர் அது கனிந்து பழமாகும் விதத்தையும் நோக்கு வீர்களாக! விசுவாசங்கொள்ளும் சமூகத் தினர்க்கு, நிச்சயமாக இவற்றில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன”
“இன்னும் அவர்கள், ஜின்களில் (பலரை) அல்லாஹ்வுக்கு இணையாளர் களாக ஆக்குகின்றனர். (ஜின்களான) அவர்களையும் அவனே சிருஷ்டித்திருக் கின்றான் இன்னும் அவர்கள் எவ்வித அறிவுமின்றி ஆண் மக்களையும், பெண் மக்களையும் அவனுக்கு (இணையாளர் களாகக்) கற்பனை செய்துவிட்டார்கள் அவன் (மகா) தூயவன் அவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவைகளை விட்டும் அவன் பரிசுத்தமடைந்துவிட்டான்.” (அல் குர்ஆன் 6: 98-100)
” (நபியே!) உம் இரட்சகனின் பக்கம் – நிழலை அவன் எவ்வாறு நீட்டுகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதனை நிலைபெற்ற தாகவும் ஆக்கிவிடுவான் சூரியனை (நிழலாகிய) அதற்கு ஆதாரமாக நாம் ஆக்கினோம்.”
” பின்னர், நாம் அதனைச் சிறுகச் சிறுகக் குறைத்து நம்மளவில் அதைக் கைப்பற்றிக் கொள்கிறோம்.” (அல் குர்ஆன் 25 : 45-46)
“(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பை யும், கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தார்க்கு இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிக ளிருக்கின்றன.” (அல் குர்ஆன் 30 : :21)
இவ்வாறு அல் குர்ஆன் மனிதனைச் சூழ உள்ள, அவனது புலன்களுக்குப் பிரத்தியட்ச மாகப் புலப்படும் உலகை நோக்கி மனிதனின் அவதானத்தைச் செலுத்தியதே அதன் போதனைகளைப் பின்பற்றிய முஸ்லிம்களை நவீன அறிவியலின் முன்னோடிகளாக ஆக்கியது. இறைவனைப் பற்றி அறிய முனையும் பாதையில் பிரத்தியட்ச உலகிற்கு எத்தகைய பெறுமானத்தையும் வழங்காத ஒரு காலப் பிரிவில் அல் குர்ஆன் பிரத்தியட்ச உலகை நோக்கி மனிதனின் அவதானத்தையும் சிந்தனையையும் செலுத்தத் தூண்டியமை மிகப் புரட்சிகரமானதாகும்.
குர்ஆன் எங்களது கண்களை பொதுப் புலன்களுக்குப் புலப்படும் உலகை நோக்கி அகல விரிக்கச் செய்கின்றது. இந்த உலகை விளங்கி, அதனை மனிதனின் ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதன் மூலமாகவே நிலையான ஒரு நாகரிகத்தைக் கட்டி எழுப்ப முடியும்.(8)
குர்ஆனின் நோக்கில் மனிதன் அவனது சூழ உள்ள இயற்கை உலகோடு தொடர்புடை யவன். இந்தத் தொடர்பும், அவன் பிரபஞ்சம் பற்றி பெறும் அறிவும் வெறுமனே அதில் ஆதிக்கம் செலுத்துவதற்கன்றி அவனது ஆத்மீக வாழ்வின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படல் வேண்டும். எனவே மனிதன் புலன்கள் மூலம் பெறும் அறிவு குர்ஆன் குறிப்பிடும் “புஆத்” அல்லது “கல்ப்” மூலம் பெறப்படும் அறிவோடு இனைதல் வேண்டும்.
” (அவன்) எத்தகையவனென்றால், எதனை அவன் படைத்தானோ அந்த ஒவ்வொரு பொருளையும், (அதன் வடிவ மைப்பையும்) மிக்க அழகாக்கி வைத்தான் மேலும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.”
“பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (இந்திரியத்தில்) இருந்து அவனுடைய சந்ததியை (உருவகித்து) உண்டாக்கினான்.”
” பின்னர், அதனைச் சரியாக உருவாக்கி, தன்னுடைய ‘ரூஹ்’ (ஆன்மா) விலிருந்து அதில் ஊதி (மனிதனை உண்டாக்கி)னான் இன்னும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வை(ப் புலன்) களையும், இதயங்களையும் அவனே அமைத்தான். (இவற்றிலிருந்தும்) நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்து கின்றீர்கள்” (அல் குர்ஆன் 32: 7-9)
“கல்ப்” அல்லது உள்ளம் என்பது மனிதனை, அவனது புலன்களுக்கு உட்படாத உண்மைகளோடு தொடர்புபடுத்துகின்றது.
இஸ்லாமிய வரலாற்றில் கிரேக்க சிந்தனை ஒரு சக்தியாக விளங்கியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கிரேக்க சிந்தனை யின் தாக்கத்தின் தூண்டுதல் காரணமாக இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சிந்தனைப் பிரிவுகள் ஓர் உண்மையை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அதாவது கிரேக்க தத்துவம் முஸ்லிம் சிந்தனையாளர்களின் கண்ணோட்டத்தை விரிவடையச் செய்தாலும் ஒட்டு மொத்தமாக நோக்குமிடத்து அது குர்ஆனிய பார்வையை மழுங்கச் செய்தது. கிரேக்கத் தத்துவஞானி சோக்ரடீஸ் அவரது அவதானத்தை மனிதனின் உலகத்தை நோக்கி மட்டும் செலுத்தினார். அவரைப் பொறுத்தளவில் மனிதனைப் பற்றிப் படிப்பதற்குப் பொருத்த மானவன் மனிதன் மட்டுமே. தாவரங்கள், ஏனைய உயிரினங்கள், நட்சத்திரங்கள் போன்ற இயற்கையின் படைப்பினங்கள் இதற்குத் துணைபுரிய முடியாது என அவர் கருதினார். இது குர்ஆனின் நோக்கத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. குர்ஆன் ஓர் அற்பத் தேனியில் கூட இறைவனிடமிருந்து உள்ளுணர் வைப் பெறக்கூடிய அற்புதத் தன்மையைக் காண்கின்றது. அல்குர்ஆன் நிரந்தரமாக மாறி மாறி வீசும் காற்றுக்கள், இரவு பகல் மாறி மாறி வருதல், மேகங்கள், நட்சத்திரங்கள், பொலிவுற்றுப் பிரகாசிக்கும் வான் வெளி, அதில் நீந்திச் செல்லும் கிரகங்கள் ஆகிய படைப்புகளை நோக்கி மனிதனின் அவதானத்தையும் கவனத்தையும் செலுத்துகின்றது. சோக்ரடீஸின் மாணவனான பிளேட்டோ புலன்களால் பெறப்படும் அறிவை வெறுத்தார். அவரைப் பொறுத்தளவில் புலன்கள் வெறுமனே கருத்துக்களை வழங்குவனவேயன்றி, அறிவை வழங்கவில்லை. இது குர்ஆனியப் பார்வைக்கு முற்றிலும் எதிரானது. ஏனெனில் குர்ஆன் “பார்வை(பஸர்), கேள்வி (ஸம்உ) ஆகிய புலன்களை மிகப்பெரும் தெய்வீக அருள்களாக வும், அதன் செயல்பாட்டிற்காக மனிதன் மறுமையில் இறைவனுக்குப் பதில் சொல்லும் பொறுப்பு உள்ளது எனவும் கூறுகின்றது. கிரேக்க சிந்தனையின் ஆதிக்கத் திற்கு உட்பட்ட ஆரம்பகால முஸ்லிம்கள் குர்ஆனின் இந்தப் பார்வையை முற்றிலும் இழந்தனர். குர்ஆனின் ஆத்மா முற்றிலும் கிரேக்க சிந்தனையின் போக்கிற்கு எதிரானது என்ற உண்மையை அவர்கள் உணர 200 ஆண்டுகள் சென்றன. இந்த தெளிவும், உணர்வும் ஓர் அறிவுப் புரட்சியாக வெளிப்பட்டது. இந்த அறிவுப் புரட்சியின் முக்கிய பிரதிநிதியாக கிரேக்கத் தத்துவத்திற்கு எதிராக குரல் எழுப்பிய இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் விளங்கினார்கள் என அல்லாமா இக்பால் குறிப்பிடுகின்றார்.(9)
உசாத்துணைகள்
- ALLAMA IQBAL : THE RECONSTRUCTION OF RELIGiOUS THOUGHT IN ISLAM – LAHORE 1977.
- Ibid : P- 92
- Ibid : P- 07
- Ibid : P- 08
- Ibid : P- 07
- Ibid : P- 13
- Ibid : P- 13
- Ibid : P- 14
- Ibid : P- 04
