துருக்கிய இஸ்லாமிய எழுச்சியின் முன்னோடி பதீஉஸ்ஸமான் ஸஇத் நூர்ஸி

பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி நவீன இஸ்லாமிய மறுமலர்ச்சியின் முக்கிமான முன்னோடிகளில் ஒருவராகக் கணிக்கப்படுகின்றார். துருக்கியில் மதச் சார்பின்மைக் கோட்பாட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பி, மேற்கத்திய ஆதிக்கத்திற்கும் சிந்தனைக்கும் எதிராகப் போராடி, துருக்கியில் இஸ்லாமிய எழுச்சிக்கு அடித்தளமிட்டவராக அவர் விளங்குகின்றார்.

ஸஈத் நூர்ஸி துருக்கியில் “நூர்ஸ்” எனும் கிராமத்தில் கி.பி. 1877ம் வருடம் ஒரு பக்தி சிரத்தை மிக்க குடும்பத்தில் பிறந்தார். ‘குத்தாப்’ என அழைக்கப்படும் ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவரில் மிக இளமையிலேயே அபார ஆற்றலும் திறமையும் புலப்பட்டது. துருக்கியில் வாழ்ந்த பல அறிஞர்களிடம் இஸ்லாமிய கலைகளைக் கற்ற அவர் மிக இளம் வயதிலேயே குர்ஆனை மனனம் செய்ததுடன், அரபு மொழி, இலக்கணம், இலக்கியம், தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் துறையில் முக்கிய நூல்களை மனதில் ஆழமாகப் பதியும் வகையில் மனனம் செய்யும் அதிசயிக்கத் தக்க நினைவாற்றலைப் பெற்றிருந்தார். பாரம்பரிய சன்மார்க்கக் கலைகளை மட்டுமன்றி , கணிதம், பௌதீகவியல், ரசாயனம், புவிச்சரிதவியல், வரலாறு, தத்துவம் போன்ற கலைகளையும் துறைபோகக் கற்றார். அவரது அறிவாளுமை யில் இஸ்லாமிய அறிவும்- நவீன கலைகள் பற்றிய புலமையும் அற்புதமாக இணைந்து காணப்பட்டன. அவரது காலப் பிரிவில் துருக்கி யில் மிகப் பலமாக ஆதிக்கம் செலுத்திய மத விரோத சக்திகளுக்கு எதிராக அறிவு ரீதியான போராட்டத்தை மேற்கொள்ளும் ஆற்றலை அவர் இதன் மூலம் பெற்றிருந்தார்.

1894ம் ஆண்டு பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளுக்கான அமைச்சர் கிளாட்ஸன் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அல்-குர்ஆனைத் தனது கையில் வைத்துக்கொண்டு, பாராளுமன்றப் பிரதிநிகள் அனைவரும் ஆச்சரியமடையும் வகையில் பின்வருமாறு உரத்த குரலில் முழங்கினார்:

“இந்த நூல் இருக்கும்வரை ஐரோப்பா கிழக்குலகில் ஆதிக்கம் செலுத்தவோ, அல்லது நிம்மதியடையவோ முடியாது. எனவே, நாங்கள் இந்நூலை முற்றிலும் அழித்துவிட அல்லது முஸ்லிம்களுக்கு அதனுடனான தொடர்பைத் துண்டித்துவிட எங்களது சக்தி, ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தி முயற்சித்தல் அவசியமாகும்.”

இளைஞனான ஸஈத் நூர்ஸி கிளாட்ஸ னின் இந்த வார்த்தைகளைக் கேள்வியுற்றதும், உணர்ச்சி பொங்க பின்வருமாறு ஆவேசமாக முழங்கினார்:

“நான் முழு உலகையும் நோக்கி பிரகடனப்படுத்துகிறேன். மகத்துவம் மிக்க அல்லாஹ்வின் வார்த்தைகளைப் பொதிந்த அல் குர்ஆன், ஒளியும் பிரகாசமும் நிறைந்த அறிவுக் கருவூலமாகும். அதன் ஒளியும் பிரகாசமும் என்றும் மங்காது. அதன் ஒளியை எவராலும் அணைக்க முடியாது”

ஆத்திரமும் கவலையும் அடைந்த நூர்ஸி இந்த மனநிலையில் நபி (ஸல்) அவர்களைக் கனவில் காண்கின்றார். அவர்களை நோக்கி தனக்கு குர்ஆன் விளக்கத்தை அருளும்படியும், அதன் வழி நின்று செயல்பட அருள்புரியும் படியும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றார்.

“நீர் எதனையும் எவரிடமும் இரக்கக்கூடாது என்ற நிபந்தனையில் அல்லாஹ் உமக்கு குர்ஆனின் அறிவையும் விளக்கத்தையும் வழங்கு வான் என நபிகள் கனவில் பதிலத்தார்கள்.” ஸஈத் நூர்ஸி தான் முழு உலகத்தின் செல்வத்தையும் பெற்றுவிட்ட மன உணர்வோடு கனவிலிருந்து விழித்தாா.் அல்குர்ஆன் பற்றிய அறிவும், விளக்கமும் அவரது உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. தான் எதனையும் எவரிடமும் இரந்து கேட்பதில்லை என தனக்குள் உறுதிப் பிரமாணம் செய்துகொண்டார். அக்கணம் முதல் சடவாதம், மதச்சார்பின்மை, நாத்திக வாதம் என்ற இருள் மேகங்கள் கவிந்திருந்த முஸ்தபா கமாலின் துருக்கியில், அவரது ஆசிரியனாகவும் வழிகாட்டியாகவும் அல்-குர்ஆன் விளங்கியது.

ஸஈத் நூர்ஸியின் வாழ்க்கையை நாம் இரு பெரும் படித்தரங்களாக வகுத்து நோக்கலாம். முதலாவது படித்தரத்தினை வரலாற்றாசிரியர் “பழைய ஸஈதின் படித்தரம்” எனக் குறிப்பிடுவர். இதில் தனது பணிக்காக தன்னை அவர் சுயமாகவே ஆயத்தப்படுத்தியதோடு தனித்து நின்றும் செயல்பட்டார். கிலாபத்தைப் பாதுகாப்பதற்கான அரசியல் போராட்டத்திலும், குர்ஆனுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக இஸ்லாத்தின் பகைவர்களின் விமர்சனங்களை அறிவு ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் எதிர்கொள்ளும் போராட்டத்திலும் அவர் மிகத் தீவிரமாக ஈடுபட்டார்.

இக்காலகட்டத்தில் 1896ம் ஆண்டு அவர் ‘மத்ரஸதுல் ஸஹ்ரா’ என்னும் பெயரில் ஒரு நவீன இஸ்லாமிய பல்கலைக் கழகத்தை அமைக்கும் திட்டத்தோடு இஸ்தாம்புலுக்குப் பயணமானார். அவர் திட்டமிட்டிருந்த இப் பல்கலைக்கழகம் அல்- அஸ்ஹரின் அமைப்பில் காணப்பட்டாலும், ஷரீஆ கலைகளோடு நவீன கலைகளையும் அதன் பாடத்திட்டம் உள்ளடக்கியிருந்தது.

இந்த வகையில் அல்- அஸ்ஹரின் கற்கை நெறியிலிருந்து இது வித்தியாசப்பட்டது. அவரது சமூகத்தை அறியாமை, வறுமை, பிற்போக்குத் தன்மை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்று எழுச்சிபெற வகை செய்வதே இதன் மூலம் அவர் அடைய விரும்பிய குறிக்கோளாகும். ஆனால், அவரது இந்தத் திட்டத்தை துருக்கியின் ஆட்சியாளரான ஸுல்தான் அப்துல் ஹமீதும் அவரது உள்நாட்டு அமைச்சரும் ஏற்றுக்கொள்ள வில்லை.

1907ம் ஆண்டு இந்த நோக்கோடு மீண்டும் இஸ்தாம்புலை நோக்கி அவர் பயணமானார். அங்கு ஸுல்தான் அப்துல் ஹமீதைச் சந்தித்து துருக்கியில் நிலவும் சர்வாதிகாரம், உளவறியக் கையாளப்படும் முறைகள் பற்றி அவர் விமர்சித்தார். இதனால் கோபமும், ஆத்திரமும் அடைந்த ஸுல்தானின் பரிவாரங்கள் அவரைக் கைது செய்து ராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தினர். நூர்ஸி ராணுவ நீதிமன்றத்தில் மிக மன உறுதியுடனும், துணிச்சலுடனும் தனது கருத்துக்களை முன்வைத்து வாதிட்டார். தனது உயிருக்கே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க கருத்துக்களை ராணுவ நீதிமன்றத்தையும் துச்சமாக மதித்து அவர் வீராவேசத்துடன் ஆற்றிய உரை நீதிபதியை நூர்ஸியின் சுய உணர்வை சந்தேகிக்க வைத்தது. அவருக்கு ஏற்பட்டுள்ள ஒரு மன நோய் காரணமாகவே அவர் இத்தகைய முறையில் நடந்திருக்கின்றார் என்ற முடிவுக்கு வந்த நீதிபதி அவரை மனநோய் வைத்தியர்களை உள்ளடக்கிய ஒரு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். மனநோய் நிபுணர் மருத்துவ நிலையத்திற்கு பரிசோதிக்க வந்தபோது, அவர் மிக ஆழமாக உள்ளத்தை ஈர்க்கும் வகையில் தனது கருத்துக்களை வெளியிட்டார். அவரது உரையில் ஆகர்சிக்கப்பட்ட மருத்துவர் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“பதீஉஸ்ஸமானில் ஓர் அணுவளவேனும் மனநோய் உள்ளதென்றால், உலகில் அறிவுபடைத்த எந்த ஒரு மனிதனையும் நாம் காண முடியாது அறிவு படைத்த அனைவரும் உள நோயாளிகளாகவே கருதப்படுவர்.” இதனைத் தொடர்ந்து அவரை உள்நாட்டு அமைச்சின் விசாரணைக்கு உட்படுத்தினர். அங்கு அவருக்கும் உள்நாட்டமைச்சருக்கு மிடையில் பின்வரும் உரையாடல் நடைபெற்றது:

“ஸுல்தான் அப்துல் ஹமீத் உங்களுக்கு அவரது ஸலாத்தை சமர்ப்பிப்பதோடு உங்க ளுக்கு முப்பது லீராக்களை சன்மானமாக வழங்கியுள்ளார்” என அமைச்சர் கூற, பதீஉஸ் ஸமான் : “அது என்னை மௌனம் சாதிக்கச் செய்யவும்,எனது குரலை ஒடுக்கவும் வழங்கப்படும் சன்மானம்” எனக் கூறி நிராகரித்தார். அப்போது அமைச்சர் பதீஉஸ் ஸமானை நோக்கி, “இவ்வாறு ஸுல்தானின் விருப்பத்தை மறுப்பதும் நிராகரிப்பதும் மிகப் பாரதூரமான குற்றமாகக் கருதப்பட்டு உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும்” எனக் கூற, பதீஉஸ்ஸமான் மிகத் துணிச்சலுடன் பின்வருமாறு பதிலளித்தார்:

“ஒரு மனிதனின் மரணத்திற்கான காரணங் கள் பலவாக அமையலாம். ஆனால் மரணம் என்பது ஒரு தடவைதான் நிகழும். நான் தூக்கிலிடப்பட்டால் எனது உம்மத்தின் உள்ளத் தில் நான் உறங்குவேன். நான் இஸ்தாம்புலுக்கு வரும்போதே எனது உயிரை எனது கையில் சுமந்து வந்தேன். நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். நான் மிக உறுதியாக மீண்டும் கூற விரும்புகிறேன். நான் எனது சமூகத்தின் புதல்வர்களை தூக்கத்திலிருந்து விழித்தெழச் செய்ய விரும்புகின்றேன். நான் இந்த மண்ணின் ஒரு புதல்வன் என்ற உணர்வுடனே இந்தப் பணியில் ஈடுபடுகிறேன். ஊதியத்தையோ அல்லது சன்மானத்தையோ பெற்றுக்கொள்வதற் கன்று. என்னைப் போன்ற ஒருவர் ஆட்சியாள ருக்கு ஆற்றக்கூடிய பணி அவர்களுக்கு அறிவுரை பகர்ந்து நன்னெறிப் படுத்துவதாகும். இது எனது தனிப்பட்ட நலன்களைத் துறந்து விடுவதன் மூலமே சாத்தியமாகும். எனவே எனக்கு ஸுல்தான் வழங்கும் சன்மானத்தை நான் ஏற்றுக்கொள்ள மறுப்பது மன்னிக்கப்படக் கூடியதாகும்.”

அவரது வாழ்க்கையின் இந்தப் படித்தரத்தில் 1909ம் ஆண்டு ஆட்சிக்கு எதிரான செயல்பாடு களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிமன்ற முன்றலில் பதினைந்து பேர் தூக்கிலிடப்பட்டு தூக்கிலில் தொங்கும் காட்சியை அவருக்குக் காட்டினர். அது அவரது உள்ளத் தில் பயத்தையும், அச்சத்தையும் உருவாக்கு மென அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ராணுவ நீதிமன்றத்தின் பிரதம நீதிபதி குர்ஷித் பாஷா ஸஈத் நூர்ஸியை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:

“ஷரீஆ நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்று குரல் எழுப்புபவர்களில் நீரும் ஒருவர் அல்லவா? இந்தக் கோஷத்தை எழுப்புப வர்கள் இவ்வாறுதான் தூக்கிலிடப்படுவார்கள் என அவரது கையால் தூக்கிலிடப்பட்டவர்களை சுட்டிக் காடடினார். அதனைக் கேட்ட பதீஉஸ்ஸமான் எழுந்து நின்றார். நீதிமன்றம் முழுவதும் எதிரொலிக்கும் வகையில் உணர்ச்சிபூர்வமான ஓர் உரையை நிகழ்த்தினாா:் “எனக்கு ஆயிரம் உயிர்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் ஒரு சத்தியத்திற்காக அர்ப்பணிக் கத் தயங்கமாட்டேன். அந்த சத்தியமே இஸ்லாம். நான் அறிவைத் தேடும் ஒரு மாணவன். எனவே, நான் அனைத்தையும் ஷரீஆ என்னும் தராசில் வைத்து எடைபோட்டு நோக்குவேன். நான் இஸ்லாமிய கோட்பாட்டைத் தவிர வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் ஒன்றை உங்களுக்கு மிக உறுதியாகக் கூற விரும்புகிறேன். நான் மறுமையின் பயணத்திற்காக மிக ஆர்வத்தோடும், வேட்கையோடும் எதிர்பார்த்துள்ளேன். இங்கு தூக்கில் தொங்கும் தியாகிகளுடன் பயணம் செய்ய நான் ஆயத்தமாக உள்ளேன்.”

இறுதியாக நீதிபதியும் பதீஉஸ்ஸமான் நிரபராதி எனத் தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.

1910ம் ஆண்டு குர்திஷ் மக்கள் வாழும் “வானி” என்னும் பகுதிக்குச் சென்று அங்குள்ள குர்தீ குழுக்கள் மத்தியில் உரை நிகழ்த்தி அவர்களுக்கு அறிவூட்டி நெறிப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். 1911ம் ஆண்டு டமஸ்கஸுக்குப் பயணம் செய்து உமையாப் பள்ளிவாசலில் ஓர் உரையை நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய அந்த குத்பா “அஷ் ஷாபிய்யா” எனப் புகழ் பெற்றது. அந்த உரையில் முஸ்லிம் உம்மத்தைப் பீடித்துள்ள நோய்களுக்கான காரணங்களை விளக்கி அதற்கான பரிகாரங்கள், தீர்வுகள் பற்றியும் விளக்கினார். 1912ம் ஆண்டு ரஷ்யப் படைகள் துருக்கியில் ‘அர்ளுரூம்’ என்னும் பிரதேசத்தில் ஊடுருவல் செய்தன. ஸஈத் நூர்ஸி யும், அவரது மாணவர்களை உள்ளடக்கிய தொண்டர் படையும் ரஷ்யப் படைகளை எதிர்த்து பல பேராட்டங்களை நடத்தினர். இதில் நூர்ஸி படுகாயமடைந்தார். அவரது காயங்களிலிருந்து வழிந்தோடும் இரத்தத்தைத் தடுக்க முடியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது மாணவர்களில் ஒருவர் இது பற்றி ரஷ்யப் படைகளுக்குத் தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். ஸஈத் நூர்ஸி ரஷ்யப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டு இரண்டு வருடங்களும் நான்கு மாதங்களும்‌ சிறையில் கழித்த பின்னர், ரஷ்யாவில் ஏற்பட்ட போல்ஷெவிக் புரட்சியின்போது சிறையிலிருந்து தப்பி ஓடினார். அவர் சிறைவாசம் அனுபவித்த காலப் பிரிவில், ரஷ்ய மன்னரையும், ரஷ்ய இராணுவத்தையும் அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ராணுவ நீதிமன்றத்திற்கு விசாரணைக் காக அழைக்கப்பட்டார். ஒரு தடவை ரஷ்ய மன்னனின் மாமனாரும், ரஷ்யப் படையின் பிரதம தளபதியுமான நிகோலா நீகோலாபிச் சிறைக் கைதிகளைப் பார்வையிடச் சென்றிருந் தார். அப்போது ஸஈத் நூர்ஸியைத் தவிர அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்தனர். இதனை அவதானித்த தளபதி இரண்டாவது தடவையாக நூர்ஸியைக் கடந்து சென்றார். ஆனால் நூர்ஸி எழுந்து நிற்கவில்லை. நூர்ஸிக்கும் தளபதிக்கும் இடையில் நடைபெற்ற பின்வரும் உரையாடல் நூர்ஸியின் ஆழமான இறையச்சத்தையும் கொள்கைப் பற்றையும் மன உறுதியையும் அஞ்சா நெஞ்சத்தையும் எடுத்துக் காட்டுகின்றது:

தளபதி நூர்ஸியை நோக்கிக் கூறினார்: “நீர் என்னை அறியவில்லை போல் தோன்றுகின்றது?” நூர்ஸி அமைதியாகப் பதிலளித்தார் : “இல்லை நான் உம்மை நன்கு அறிவேன். நீர் மன்னனின் மாமனாரும் பிரதம தளபதியுமான நிக்கோலாபிச் என்பது எனக்குத் தெரியும்.”

“அப்படியாயின் நீர் என்னை அவமதித்து விட்டீர்” எனத் தளபதி கூற, நூர்ஸி பதிலளித்தார்:

“இல்லை, நான் எவரையும் அவமதிக்க வில்லை. அது எனது பண்பு அன்று. ஆனால் எனது விசுவாசக் கோட்பாட்டின்படி – அகீதாவின் கட்டளையின் அடிப்படையில் நான் செயல் பட்டேன்.”

“உமது விசுவாசக் கோட்பாட்டின் கட்டளை தான் என்ன?”

“நான் மார்க்கத்தைக் கற்ற ஒரு சன்மார்க்க அறிஞன். எனது உள்ளத்தில் இஸ்லாத்தின் “ஈமான்” எனும் விசுவாசக் கோட்பாட்டைச் சுமந்துள்ளேன். உள்ளத்தில் ஈமானைச்‌ சுமந்த வன் விசுவாசமற்றவனை விட கண்ணியமும், சிறப்பும் மிக்கவன். நான் எழுந்து நின்று உமக்கு மரியாதை செய்திருந்தால், எனது விசுவாசக் கோட்பாட்டை மதிக்காதவனாகவும் அதனை இழிவு படுத்தியவனாகவும் ஆகிவிடுவேன். இதன் காரணமாகவே நான் எழுந்து நிற்கவில்லை.”

இதனைச் செவியுற்ற பிரதம தளபதி இந்த கடுமையான வார்த்தைகள் மூலம் நூர்ஸி அவரையும், இராணுவத்தையும், மன்னரையும் அவமதித்தமைக்காக அவரை விசாரிக்க ஒரு விசேட இராணுவ நீதிமன்றத்தை நியமித்தார். விசாரணையின் பின்னர் ஸஈத் நூர்ஸிக்குத் தூக்குத் தண்டனை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் தூக்கிலிடப்பட நியமிக்கப்பட்ட நாளில் ராணுவத்தின் முக்கிய தளபதியும், பிரதம தளபதியும் அவரைத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தனர். தூக்குமேடை நெருங்கியபோது ஸஈத் நூர்ஸி அமைதியான புன்சிரிப்புடன் ரஷ்ய ராணுவ அதிகாரியை நோக்கி அவரது இறுதிக் கடமையை நிறைவேற்ற சிறிது அவகாசம் கேட்க, அது அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர் வுழூ செய்து இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்றினார். அவர் தொழுகையை முடித்ததும் ராணுவ அதிகாரி அவரை நெருங்கி, “உங்களிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். நீர் எனக்கு எழுந்து நின்று மரியாதை தெரிவிக்காமை என்னை அவமதிப்பதற்காகவே என நான் எண்ணினேன். ஆனால் நீர் உமது விசுவாசக் கோட்பாட்டின் கட்டளைக்கு ஏற்பவே அப்படி நடந்துகொண்டீர் என்பது எனக்கு இப்போது உறுதியாகத் தெரிகின்றது. நான் உமக்கு எதிரான ராணுவத் தீர்ப்பை ரத்துச் செய்கிறேன். உமது விசுவாசக் கோட்பாட்டில் நீர் கொண்டுள்ள உறுதியான விசுவாசத்திற்காக உம்மை நான் பாராட்டுகின்றேன்.” நூர்ஸி விடுதலை செய்யப்பட்டார்.

நூர்ஸியின் போராட்டமும் கடுமையான உழைப்பும் அர்ப்பணமும் நிறைந்த வாழ்க்கை யின் இந்த ஆரம்பகால கட்டத்தில் அவர் பல நூல்களையும், பிரசுரங்களையும் வெளியிட்டார். “இஷாராத்துல் இஃஜாஸ்”, அஸ்-ஸனூஹாத்”, அத்- துலூஆத் வலமஆத்”, “ஷிஆஆத் மின் மஃரிபதிந் நபீ” ஆகியன உட்பட பல ஆக்கங் ்களை அவர் அரபியில் எழுதினார்.

1923ம் ஆண்டுடன் நூர்ஸியின் வாழ்க்கை யின் இரண்டாவது படித்தரம் ஆரம்பமாகின்றது. துருக்கியில் அங்காராவிலிருந்து ‘வான்’ என்னும் பிரதேசத்திற்குச் சென்ற நூர்ஸி மக்கள் புழக்கமில்லாத, மனித நடமாட்டம் குறைந்த ஒரு பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்து, “அரக்” என்னும் மலையில் அமைதியான இறை வணக்கத்தில் ஈடுபட்டார். ஆனால் அவரது இந்த அமைதியான, தியான வாழ்க்கையில் கூட துருக்கியின் மதச்சார்பற்ற முஸ்தபா கமாலின் ஆட்சி குறுக்கிட்டது. அவர் கைதுசெயயப்பட்டு இஸ்தாம்புலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்த மிகக் கடுமையான குளிர்ப் பிரதேசத்திற்கு நாடுகடத்தப்பட்டார்.

“பார்லா” என்னும் இடத்தில் ஒரு தச்சன் அவருக்காக மரத்தால் ஒரு சிறிய அறையை அமைத்துக் கொடுத்தான். உயர்ந்த மரங்களால் சூழப்பட்ட இந்த அறையில் அவரது பெரும் பாலான நேரங்களை இறை வணக்கத்திலும் இறை தியானத்திலும் சிந்தனையிலும் கழித்தார். இரவு முழுவதும் அவரது கருத்துக்களை உள்ளடக்கிய “ரஸாஇலுந் நூர்” என்னும் சஞ்சிகையைத் தொகுத்தார். அச் சஞ்சிகை மூலம்‌ மனித ஆதரவற்ற அப் பாழ் வெளியில் வாழ்ந்த ஸஈதின் சிந்தனைகள் – குர்ஆன் விளக்கவுரைகள் என்பன மக்களுக்கு எட்டின. பர்லாவில் கழித்த எட்டு வருட காலங்களில் நூர்ஸி கடுமையான நோய்க்கு உட்பட்டிருந்த நிலையில் அரபியிலும் துருக்கியிலும் பல நூல்களை எழுதினார். பதீஉஸ்ஸமான் அவரது மாணவர்களுக்குக் கூற அவர்கள் எழுதிய அந்த நூல்களைக் கையெழுத்துப் பிரதிகளாக எழுதும் பணியில் பெண்கள் இரவு பகலாக ஈடுபட்டனர். குர்ஆனுக்கான அவரது விளக்கவுரைகளை உள்ளடக்கிய “ரிஸாலதுந்நூர்” ஐயாயிரம் பக்கங்களை உள்ளடக்கியிருந்தது.

ஸஈத் நூர்ஸி ஒரு தனி மனிதனாக இயங்கிய ஒரு சமூகம் என வர்ணிக்கப்படு கின்றார். அவரது முன்மாதிரியான வாழ்க்கையின் மூலம் அவரது மாணவர்களுக்கு அவர் பண்பாட்டுப் பயிற்சி அளித்தார். அவரது வாழ்வு அற்புதமானது அவரது ஆளுமை ஆச்சரியம் மிக்கது. அவர் சோதனைகளினதும், இன்னல் கள்,துன்பங்களினதும் காலத்து மனிதர். மனித சமூகத்தின் காயங்களுக்கான பரிகாரத்தை அவரது ரஸாஇல்கள் மூலம் வழங்கினார். குர்ஆனின் விரிவுரையாக அமைந்த அந்த ரகசியங்கள் அல் குர்ஆனின் ஒளியையும், வழிகாட்டுதலையும் பொதிந்திருந்தன.

ஸஈத் நூர்ஸி ரமழான் 20 ஹிஜ்ரி 1389 ஜனவரி 20.1960ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அவரது காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் தன்மை வாய்ந்த கருத்துக்களை அவர் நூலுருவில் விட்டுச் சென்றார். அவரது கருத்துக்கள் ஒரு கலைக் களஞ்சியம் எனக் கொள்ளத்தக்கவை. அது ஒரு ஈமானிய கலைக் களஞ்சியம் என ஓர் அறிஞர் வர்ணிக்கின்றார். அது இளைஞர்களின் இஸ்லாமிய அறிவுத் தாகத்தை தணித்தது சடவாதத் தத்துவங்களின் போலித் தன்மையை தோலுரித்துக் காட்டியது இஸ்லாத்தைப் பற்றி சடவாதச் சிந்தனை உள்ளவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்குப் பதிலளித்தது இஸ்லாமிய விசுவாசத்தின் அடிப்படைகளையும், யதார்த்தங்களையும் மிக உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவியது. அவரது ரஸாஇல்கள் மிகப் பெரிய அளவிலான ஒன்பது பாகங்களை உள்ளடக்கி யிருந்தன. அவரது ரஸாஇல்கள் ஆங்கில, ஜெர்மனிய, பிரெஞ்சு, ரஷ்ய, பாரசீக, உர்து மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

மரணத்தின் பின்னர் அவரது பூதவுடல் ‘உளர்பா’ என்னும் நகரில் அடக்கம் செய்யப் ்பட்டது. 1960 மே மாதம் 27ந் திகதி துருக்கியில் நடைபெற்ற ராணுவப் புரட்சியின் பின்னர்- அவர் அடக்கப்பட்டு ஐந்து மாதங்களின் பின்னர் அது தோண்டி எடுக்கப்பட்டு மிகவும் இரகசியமான ஓர் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ராணுவ அதிகாரிகள் நூர்ஸியின் சகோதரர் அப்துல் மஜீத் நூர்ஸிக்கு அவரது சகோதரரின் பூதவுடல் உளர்பாவிலிருந்து அகற்றப்படும் என அறிவித்தனர். அதிகாரிகள் ஸஈத் நூர்ஸியின் அடக்கஸ்தலத்தை தோண்டி அவரது பூதவுடலை எடுத்தபோது அவ்விடத்திலிருந்த அவரது சகோதரர் கூறினார்: “அவர்கள் நூர்ஸியின் அடகஸ்தலத்தை உடைத்து பூதவுடலைத் தோண்டி எடுத்தபோது, ‘நிச்சயமாக எனது சகோதரனின் எலும்புகள் உக்கி மண்ணாகி இருத்தல் வேண்டும்’ என, எனக்குள் நான் கூறிக்கொண்டேன். ஆனால் நான் அவரது கபனைத் தொட்டுப் பார்த்தபோது அவர் நேற்று மரணித்து அடக்கப்பட்டிருந்தது போன்று எத்தகைய மாற்றமும் இல்லாமல் காணப்பட்டது. தலைப் பக்கத்தில் மஞ்சல் நிறமாக ஏதோ காணப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்காக அவரது கபனை அகற்றி முகத்தைத் திறந்தபோது நான் அவரை நோக்கினேன். அவரது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தென்பட்டது. நாங்கள் அநியாயத் திற்கும் கொடுமைக்கும் சோதனைக்கும் ஆளாக்கப்பட்ட அந்த மனிதரின் உடலை, ராணுவத்தினர் கொண்டு வந்திருந்த பெட்டியில் வைத்தோம். தோண்டி எடுக்கப்பட்டு வெறுமையாக இருந்த புதைகுழியை செடி, கொடிகளால் நிறைத்து மூடினோம். அனைத்துக் காரியங்களும் முடிந்து நாங்கள் விமான நிலையத்திற்குச் சென்றோம். வீதிகள் மனித நடமாட்டமின்றி வெறிச்சென்று காணப்பட்டன. ஆயுதங்கள் தரித்த ராணுவவீரர்கள்‌ மட்டுமே இருந்தனர். வீதியில் மனித நடமாட்டம் தடைசெய்யப்பட்டிருந்தது. ஒரு விமானத்தில் நூஸியின் பூதவுடலைத் தாங்கிய பெட்டி ஏற்றப்பட்டது. நான் அதன் பக்கத்தில் உட்கார்ந்தேன். எனது உள்ளத்தை ஆறாத் துயரும் கவலையும் ஆட்கொண்டது. கண்கள் கண்ணீரை வடித்தன. விமானம் அப்யூன் என்னும் நகரை அடைந்தது. அங்கிருந்து அப் பெட்டி ஒரு வாகனத்தில் “இஸபார்தா” என்னும் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எங்களை விட்டுவிட்டு அவர்கள் உடலை எடுத்துச் சென்று எவருக்கும் தெரியாத ஓர் இடத்தில் அடக்கம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *