மேற்கத்திய உளவியலின் பரிமாணங்களும் முஸ்லிம்களின் பங்களிப்பும்

உளவியல் என்பது மனிதன் தன்னைப் பற்றி விளங்குவதற்கு மேற்கொண்ட ஆர்வம், தேடல் முயற்சியின் விளைவாகத் தோன்றிய ஒரு கலையாகும். அதன் வரலாற்று வளர்ச்சியில் பல படித்தரங்களைக் கடந்து அதன் நவீன அமைப்பைப் பெற்றுள்ளது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனின் ‘ஆத்மா’(Soul) பற்றிய விசாரணையோடு உளவியல் தோற்றம் பெற்றது. அதற்குச் சில காலத்தின் பின்னர் உள்ளம் (psychic) பற்றிய கற்கையாக அது மாற்றமடைந்தது. அதன் பின்னர் மனிதனின் புலன்கள், அதன் உணர்வுகள் பற்றிப் பேச ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து வெறுமனே மனிதனின் உணர்வுகள் (consciousness) பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டது. இன்று அதன் நவீன அமைப்பில்‌ ஆத்மா, உள்ளம், உணர்வு ஆகிய அனைத் தையும் புறக்கணித்து மனிதநடத்தை (Behavior) பற்றியே அதன் முழுக் கவனத்தையும் செலுத்து கின்றது. மேற்கத்திய உளவியலின் இந்த படிமுறை மாற்றங்களை   விளக்கும் வுட்வேர்த் (Woodwarth) என்னும் அறிஞர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

Psychology first lost it’s “soul”, Then it’s “mind”. Then it’s “feelings” Then it’s “consciousness” and only its’ Visible behavior is reserved for it.” Morris Roclain History of Psychology. 1972, P.9

உளவியல் ஆரம்பத்தில் அதன் “ஆத்மா” வை இழந்தது. பின்னர் அதன் “உள்ளத்தை” இழந்தது அதனைத் தொடர்ந்து “உணர்வை” இழந்து இப்போது புலன்களுக்குப் புலப்படும் மனிதனின் நடத்தை மட்டுமே அதன் அவதானத்தைப் பெற்றுள்ளது.”

மேற்கத்திய உளவியலாளர்களின் வித்தியாசமான பண்பாட்டுச் சூழுல்களே உளவியல் அதன் வரலாற்று வளர்ச்சியில் கண்டுள்ள பல்வேறு மாற்றங்களுக்கான காரணமாகும். மேற்கத்திய உளவியலின் வரலாற்று வளர்ச்சியை விளக்குதல் இங்கு எமது நோக்கமன்று. உடல், உள்ளம், ஆத்மா ஆகிய அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய வகையில் மனிதனை முழுமைத்துவ நோக்கில் அணுகாமையே மேற்கத்திய உளவியலின் அடிப்படைப் பிரச்சினையாகும். இதற்குப் பகரமாக அதன் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனின் ஆளுமையில் ஆத்மா, உள்ளம், உணர்வு போன்றவைகளில் ஓர் அம்சத்திலேயே அது கவனம் செலுத்தி, அடுத்த அம்சங்களைப் புறக்கணித்துள்ளது. எனவே மனித ஆளுமை குறித்து மொத்தமான, ஒட்டு மொத்தமான பார்வை அங்கு காணப்படவில்லை. நவீன உளவியல் உள்ளத்தின் சடரீதியான அம்சங்களில் மட்டும் ஆர்வம் செலுத்தி மனித ஆளுமையின் ஆத்மீக ஒழுக்கப் பரிமாணங்களை முற்றிலும் புறக்கணித்துள்ளது. உதாரணமாக மனிதருக்கும் மிருகத்துக்குமிடையிலான அடிப்படை வித்தியாசங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. மனிதனின் நடத்தையை மிருகங்களின் நடத்தையை அடிப்படையாக வைத்து ஆராயும் முறைமையை நவீன நடத்தையியல் உளவியல் கையாளுகின்றது.        (Behaviourist Psychology ) நவீன உளவியலாளரான ஸிக்மென் ப்ரொய்ட் மனிதன் முழுக்க முழுக்க பாலியல் தூண்டுதலின்‌ அடிப்படையில் செயல்படுகிறான் என்ற பிரமாணததை வகுத்து மனிதனின் உளவியல் நோய்களுக்கான காரணங்களை ஆராய்ந்தார். இந்தக் குறை பாடானது சடரீதியான நாகரிக வளர்ச்சியோடும் உலக வளங்களின் அதிகரிப்போடும் மக்களில் கவலைகள், பதட்டநிலை, நிம்மதியற்ற தன்மையை அதிகரித்துள்ளன. அறிவுவளர்ச்சி யோடு உள்ளத்தின் கவலைகளையும் பெருக்கியுள்ளன. இந்நிலையை அலெக்ஸிஸ் கர்ரெல் பின்வருமாறு விளக்குகின்றார்:

மனிதன் தனது சடரீதியான அம்சங்களில் கவனம் செலுத்துவதில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளான். சடம் (matter) அதன் அமைப்பு பற்றிய மர்மங்கள், நுட்பங்களை அவன் கண்டறிந்துள்ளான். இதனடியாக பல்வேறு பொருட்களின் மீது தனது அதிகாரத்தைச் செலுத்தும் சக்தியைப் பெற்றுள்ளான். ஆனால் தன்மீது இன்னொரு வகையில் கூறப்போனால், தனது உள்ளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதனைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் சக்தியை அவன் பெறவில்லை. மனிதன் இன்னும் அறியப்படாதவனாகவே உள்ளான். (Man is still unknown) எங்களைப் பற்றிய அறிவு இன்னும் வளர்ச்சி அடையவில்லை. அது அரை குறையாகவும் உள்ளது.

மனித உள்ளம் பற்றிய ஆய்வில் இஸ்லாத்தின் கரி சனை

இஸ்லாம், ஏனைய அறிவுகளை ஊக்குவித்து தூண்டுதல் வழங்குவது போன்றே மனித உள்ளம் பற்றிய கற்கைக்கும் தூண்டுதல் வழங்குகிறது. அல்குர்ஆன் உளவியல், புவியியல், பிரபஞ்சவியல் பற்றிய ஒரு நூலன்று அது அடிப்படையில் மனித இனத்திற்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதலை வழங்கும் தெய்வீக நூலாகும். அது பிரபஞ்சத்தின் மர்மங்களையும், மனித உள்ளத்தின் மர்மங்களையும் விளக்கி அல்லாஹ்விற்கு வழிப்படுவதில் அதனைப் பயன்படுத்த வகைசெய்கிறது. அல் குர்ஆனில் உள்ளம் எனப் பொருள்படும் “நப்ஸ்” என்ற பதம் 300 தடவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனித உள்ளம் பற்றிய கற்கை அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையை ஒருவன் அடைவதற்கு மிக சுருக்கமான, நிச்சயமான வழியாகும் அல்குர்ஆன் இதனைப் பின்வரும் திருவசனங் களில் மிக அழகாக தெளிவுபடுத்துகின்றது:

“நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் வரையில், (உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம் (நபியே!) உமதிரட்சக னுக்கு, நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் (அது பற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?” ( 41:53)

“உங்களுக்குள்ளேயும்- (பல அத்தாட்சிகள் இருக்கின்றன அவைகளை) நீங்கள் (கவனித்துப்) பார்க்க மாட்டீர் களா?” (51:21)

இஸ்லாம் மனித உள்ளத்தை , அதில் உள்ளடங்கியுள்ள உணர்வுகள் (emotions),பிரக்ஞைகள் (consciousness), மனோபாவனை (attitudes), தொழிற்பாடுகள் (functions) ஆகியவற்றின் அடிப்படையில் வகைப் படுத்தியுள்ளது.

முஸ்லிம் சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள், ஆத்மஞானிகள், ஸூபிகள் இஸ்லாமிய உளவியல் பாரம்பரியத்திற்கு மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர். புகழ்பெற்ற முஸ்லிம் தத்துவஞானியும் மருத்துவருமான இப்னு ஸீனா (ஹிஜ்ரி 432ஃ கி.பி 950) அவரது நூலில் உளவியல் தூண்டுதல் பற்றியும் உள்ளத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கியுள்ளார். (consciousness) எனும் உணர்வுகள் பற்றி ஆய்வுசெய்த ஒரு முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு பற்றி மிக ஆய்வு ரீதியான கற்கையை மேற்கொண்ட அவர் வயது வந்தவர்களுக்கான உளவியல் பற்றியும் (adult psychology) குறிப்பிட்டுள்ளார். இப்னுல் கய்யும் அல் ஜவ்ஸிய்யாவின் ‘இகாஸதுல் லஹ்பான் மின் மஸாயிதிஷ் ஷெய்தான்’ என்னும் நூலில் அவர் மனிதர்களின் உள்ளங்களை ஆரோக்கிய மான உள்ளம், நோய்பிடித்த உள்ளம், இறந்த உள்ளம் என வகைப்படுத்தியுள்ளார். உள்ளத்தைப் பாதிக்கும் உளவியல் நோய்கள் பற்றி விளக்குவதோடு அவற்றிற்கான சிகிச்சை களையும் குறிப்பிடுகின்றார். குறிப்பாக Depression என்னும் மன அழுத்தம் பற்றிய அவரது விளக்கங்களும் அதற்கான சிகிச்சை முறையும் மிக நவீனத்துவமானது. அபூ ஹய்யான் அத்தவ்ஹீதி (ஹி:403) அவரது ‘அல்- முகாபஸாத்’ என்னும் நூலில் உறக்கம், கனவுகள், நிறங்களிடையே வித்தியாசப்படுத்தி அறிய துணைபுரியும் அம்சங்கள் பற்றி மிக நுட்பமான விளக்கமொன்றை அளித்துள்ளதோடு சிரிப்போடு தொடர்புடைய உளவியல் தூண்டுதல் பற்றியும் அவர் ஆராய்ந்துள்ளார்.

அபூபக்கர் இப்னு துபைல் ஹி:581ஃகி.பி. 1185) “ஹய் இப்னு யக்ளான்” என்னும் தத்துவ நாவலில், ஹய் என்னும் பிரதம பாத்திரத்தை மையமாக வைத்து, ஹய்யின் குழந்தைப் பருவம், இளமை, வாலிபப் பருவத்தை விளக்கும் வகையில் மனிதனின் வளர்ச்சியின் முக்கிய உளரீதியான வளர்ச்சிப் படித்தரங்  களை ஆராய்ந்துள்ளார். பாவனை செய்தல், கற்பனை செய்தல், மீட்டல், கண்டுபிடித்தல், தன்னைப் பற்றியும் சுற்றாடல் பற்றியும் பரிசோதனையிலீடுபடுதல், பிறருடன் தொடர்பு கொள்ளத் தூண்டும் உளவியல் உந்துதல் பற்றியெல்லாம் மிக விரிவாக விளக்குகின்றார்.

அபுல் பரஜ் இப்னுல் ஜவ்ஸீ (ஹி: 597ஃ கி.பி. 1201) அவரது “அல்- அஸ்கியா” என்னும் நூலில் மூளை, கிரகித்தல், விவேகம் ஆகிய மூன்று பதங்களுக்குமிடையிலான வித்தியாசங் களை விரிவாக ஆராய்ந்துள்ளார். அத்தோடு சில உடல் ரீதியான அறிகுறிகள், நடத்தை சார்ந்த அறிகுறிகள் மூலமாக விவேகத்தை அளவிடும் முறையை அவர் விளக்குகிறார். அதன் அடிப்படையில் குழந்தைகள், முதியோர், விவேகம் மிக்கோர், புத்திசுவாதீனமற்றோர் ஆகியோருடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகளை அவர் விளக்குகிறார். புகழ்பெற்ற முஸ்லிம் தத்துவஞானி அபூ நஸ்ர் அல்-பாராபீ (ஹி:329ஃ கி.பி 950) ‘அல்- மதீனதுல் பாளிலா’ என்னும் நூலில் மனித உள்ளம் அதன் செயல்பாடு மிக ஆழமான விளக்கத்தை அளிப்பதோடு ஏனைய மனிதர்களுடன் இணைந்து வாழவிரும்பும் மனித இயல்பு குறித்தும், தலைமைத்துவத்தின் முக்கியத் துவத்தையும், தலைமைத்துவத்தின் முக்கிய பண்புகளையும் ஆராய்கிறார்.

அபூதாலிப் அல்- மக்கீயின் ‘கூதுல் குலூப்’ என்னும் நூல் மனித ஆளுமையோடு தொடர்புடைய நப்ஸ்,கல்ப்,ரூஹ் ஆகியன பற்றிய மிக விரிவான விளக்கங்களைக் கொண்டுள்ளது.

இஸ்லாமிய உளவியலுக்கு இமாம் கஸ்ஸாலியின் (ஹி:505ஃ கி.பி.1111) பங்களிப்பு மகத்தானது. இஹ்யா உலூமுத்தீன் என்னும் நூலில் “நப்ஸ்”, கல்ப்”, “ரூஹ்” பற்றி மிக ஆழமான விரிவான விளக்கங்களை அவர் அளித்துள்ளார்கள். குறிப்பாக மனிதனை ஆத்மீக வாழ்விற்கு மீட்சியளிக்கும் செயல்களை விளக்கும் அந்நூலின் மூன்றாம் பகுதியில் “நப்ஸ்” என்னும் உள்ளத்தை இயக்குவிக்கும் சக்திகள் ( ஜுனூதுல் கல்ப்) உள்ளத்தின் நோய்கள் (அம்ராலுல் குலூப்) அவற்றின் அறிகுறிகள், அதன் நிவாரணங்கள் பற்றி இமாமவர்கள் விளக்குகின்றார். இமாமவர்கள் இஸ்லாமிய உளவியலை “உள்ளத்தின் நோய் களுக்கான சிகிச்சை” என வர்ணிக்கின்றார்கள்.

உசாத்துணைகள்

  1. . Morris Roclain- ‘A History of Psychlology’ 1972, P.09
  2. Alexis Carrel- ‘Man the Unknown’ 1972, London, Muhammed Qutb.
  3. Abdul Kareem Uthman- ‘Psychological studies by Clas sical Muslims Scholars’ – London.

4. Mohammed Usman Najathi – ‘Al Quran wal Ilmun nafs’                   -Cairo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *