முஸ்லிம்- பௌத்தம் உரையாடல் பற்றி ஒரு நோக்கு
இன்று பரவலாக உலகில் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வருகின்ற வன்முறை, இன மோதல்கள், மதங்களின் பெயரால் நடைபெறும் இரத்தம் சிந்தல் என்பன சமுதாயங்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அறைகூவலாக அமைந்து சமூகங்களின் உறுதியான கட்டுக்கோப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிலை தோன்றியுள்ளது. ஸாமுவேல் ஹன்டிங்டனின் நாகரிகங்களுக்கு இடையிலான மோதல் பற்றிய எதிர்வுகூறல், உலகில் சமாதானத்தையும், நல்லுறவையும் விரும்பும் அனைவருக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது. இந்நிலையிலேயே ‘மோதல் என்ற கருத்தை மறுதலித்து, உரையாடலுக்கான (dialogue) அவசியம் பரவலாக வலியுறுத்தப்பட்டது. நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் தொடர்பான பல சர்வதேசிய கருத்தாடல்கள் சர்வதேச மட்டத்தில் பல நாடுகளில் நடை பெற்றன. இதே தொடரில் மதங்களுக்கிடையிலான உரையாடல் பற்றிய கருத்தும் வலுப்பெற்றது. குறிப்பாக மேற்குலகில் இஸ்லாத்தைப் பற்றிய தப்பான கருத்துக்களை நீக்கும் வகையிலும், முஸ்லிமகளு்க்கும் கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்குமிடையில் நிலவும் புரிந்துணர்வின்மை, மயக்கம் ஆகியவற்றைத் தெளிவுபடுத்தி நல்லுறவை வளர்க்கும் நோக்கோடும் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்குமிடையிலான உரையாடல்கள் சர்வதேச மட்டத்தில் மேற்குலகிலும், இஸ்லாமிய நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
கிறிஸ்தவ, யூத மதங்களுக்கும் – முஸ்லிம்களுக்குமிடையில் உரையாடல்கள் மேற்கொள்ளப்படுவது போன்று பௌத்தம், ஹிந்து மதம், சீக்கிய மதம் போன்ற மதங்களுடன் முஸ்லிம்கள் உரையாடல்களை மேற்கொள்வதற்கு எத்தகைய முயற்சிகளும் இதுவரை நடைபெறவில்லை.
பௌத்தம், ஹிந்து மதம், சீக்கிய மதம், ஜைன மதம் போன்ற மதங்களைப் பின்பற்றுபவர்கள் உலக சனத்தொகையில் அரைப் பகுதியளவாக உள்ளனர். மனித இனத்தின் மதப் பாரம்பரியத்தை உருவாக்குவதில் இம்மதங்கள் கணிசமான பங்களிப்பைச் செலுத்தியுள்ளன.
கீழைத்தேய உலகில் மதங்களுக் கிடையில் நல்லுறவு காணப்பட்ட நீண்ட வரலாறு உள்ளது. அவ்வப்போது அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்காக சில மோதல்கள் நிகழ்ந்தாலும், இவை பொதுப் பண்பாக இல்லாமல், விதிவிலக்காகவே உள்ளன. ஆனால், அண்மையில் இம்மதங்கள் பின்பற்றப்படும் பிரதேசங்களில் நிகழும் சம்பவங்கள், இம்மதங்களைப் பின்பற்றுவோர் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்தும் அவசியத்தை உருவாக்கியுள்ளன. இம்மதங்களுக்கிடையே காணப்படும் பொதுப் பண்புகள், அன்பு, கருணை, மனித உயிர்களை மதித்தல், சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை, சமாதானமும் சுதந்திரமும், நீதி ஆகியவற்றின் அடிப்படையில் சமாதான சகவாழ்வு மேற்கொள்ள இத்தகைய உரையாடல்கள் பெரும் பங்களிப்புச் செய்ய முடியும். இந்தப் பின்னணியில் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையிலான உரையாடல் பற்றியும் அவற்றிற்கான அடிப்படைகளையும் ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இஸ்லாம் அதன் ஆரம்ப காலப் பரவலின் போது கிறிஸ்தவ மதத்தை எதிர்கொண்டது. இக்காலகட்டத்திலேயே அல்குர்ஆன் சில கோட்பாடுகளின் அடிப்படையில் ஒன்றுபட வரும்படி கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்தது:
“(நபியே! பின்னும் அவர்களிடம்) நீர் கூறுவீராக: ‘வேதத்தையுடையவர்களே! எங்களுக்கும், உங்களுக்குமிடையே, நாம் அல்லாஹ்வைத் தவிர வேறோன்றையும் வணங்கக்கூடாது நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கவும் கூடாது நம்மில் சிலர், சிலரை அல்லாஹ்வையன்றி தெய்வங்களாக எடுத்துக்கொள்ளவும் கூடாது என்ற சமமானதொரு வார்த்தையின் பால் வாருங்கள்.’ (இதை ஏற்காது) அவர்கள் புறக்கணி்த்தால் (அவர்களிடம்) ‘நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்கள் என நீங்கள் சாட்சியம் கூறுவீர்களாக!’ என்று நீங்கள் கூறி(விட்டு) விடுங்கள். (3:69)
இஸ்லாம் இறைவனை- றப்புல் ஆலமீன்- அனைத்துலகினதும் இரட்சகனாக அறிமுகப்படுத்துகின்றது. அவனது அன்பும், கருணையும், இரட்சிப்பும் முழுப் படைப்பினங்களையும் தழுவியது. இது போன்றே இஸ்லாம் மனித இனத்தின் ஆரம்பம் முதலே இறைவனின் வழிகாட்டுதல் எல்லா சமூகங்களுக்கும் இனங்களுக்கும் அருளாக அமைந்ததையும் இறைவனது வழிகாட்டுதலைச் சுமந்த இறைத்தூதர்கள் அனுப்பப்படாத எந்த ஒரு சமூகமும் இல்லை என்றும் குறிப்பிடுகிறது.
“ஒவ்வொரு சமூகத்தினருக்கும் (நம்மால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் உண்டு எனவே, அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்துவிடும் பொழுது அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும். மேலும் அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (10:47)
“(நபியே!) நிச்சயமாக நாம், உம்மை சத்தியத்தைக்கொண்டு நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பினோம் மேலும் எந்த சமுதாயத்தவரும் அ(ச்சமுதாயத்)தில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் சென்றே தவிர (இப்புவியில்) இல்லை. (35:24)
இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களது தூதுடன் தொடர்புள்ள, அவர்களது தூது நிகழ்ந்த பூகோளப் பிரதேசத்தில் தோன்றிய இறைத்தூதர்கள் பற்றி மட்டுமே அல்குர்ஆன் பேசுகின்றது: “மேலும், (நபியே! ஒவ்வொரு சமூகத்தார்க்கும்) அவர்களுக்கு (நம் தூதுத்துவத்தை) விளக்கிக் கூறுவதற்காக, எந்த ஒரு தூதரையும் அவ(ரவ)ருடைய சமூகத்தாரின் மொழியைக் கொண்டேயல்லாது நாம் அனுப்பவில்லை. (ஆகவே) அல்லாஹ் தான் நாடியவர்களை தவறான வழியில் விட்டுவிடுகிறான் மேலும், அவன் நாடியவர்களை நேர் வழியில் செலுத்து கிறான் அவனே (யாவற்றையும்) மிகைத்த வன் தீர்க்கமான அறிவுடையவன். (14:4)
கீழைத்தேய உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பற்றி அல்குர்ஆன் எதனையும் குறிப்பிடவில்லை. இது இப் பிரதேசத்திற்கு எந்த இறைதூதரும் அனுப்பப்படவில்லை என்று கருத்தன்று. கீழைத்தேய உலகின் ஹிந்து மதம், பௌத்தம் போன்ற மதங்களை ஆழமாக நோக்கின் இறைதூதர்களின் போதனைகளை சூட்சுமமாக உணரக்கூடிய சில ஒழுக்க மாண்புகளை நாம் அடையாளம் காண முடிகிறது.
இஸ்லாம் பன்மைத்துவத்தை ஏற்றுக் கொள்கின்றது. இதனை அல்குர்ஆன் பின்வரும் திருவசனங்களில் தெளிவு படுத்துகின்றது:
“அன்றியும் அல்லாஹ் நாடியிருந்தால், அவர்களை (ஒரே மார்க்கத்தையுடைய) ஒரே சமுதாயத்தினராக ஆக்கியிருப்பான். எனினும், தான் நாடியவர்களை தன் அருளில் அவன் புகச் செய்வான் அநியாயக்காரர்களோ- அவர்களுக்குப் பாதுகாவலனும் இல்லை எந்த உதவியாளனும் இல்லை.” (42:8)
“மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கி வைத்துள்ளோம். இது வேதத்திலிருந்து தனக்கு முன்னுள்ளவற்றை உண்மையாக்கி வைக்கக்கூடியதாகவும், அவற்றைப் பாதுகாப்பதாகவுமிருக்கின்றது. ஆகவே, அல்லாஹ் (உமக்கு) இறக்கி வைத்ததைக் கொண்டு அவர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பீராக! இன்னும் உண்மையிலிருந்து உம்மிடம் வந்ததை புறக்கணித்து விட்டு,அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்றாதீர் உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஆக்கினோம். அல்லாஹ் நாடினால், உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்ததில் (எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு அவன் செய்திருக்கிறான்.) ஆகவே, நன்மைகளின் பக்கம் முந்திக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பக்கமே உங்களனைவரின் திரும்பிச் செல்லுதலுமிருக்கின்றது. அப்பொழுது நீங்கள் எதில் மாறுபட்டுக் கொண்டிருந் தீர்களோ அதனை அவன் உங்களுக்கு நன்கறிவித்துவிடுவான்.” (5:48)
பன்மைத்துவம் என்பது மனிதப் பண்பையும், பண்பாட்டையும், நாகரிகத்தையும் வளப்படுத்தும் ஒரு பண்பாகும். பல்வேறு இனங்களும் சமூகங்களும் ஒருவரை ஒருவர் இனங்கண்டு சகிப்புத் தன்மை யுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ அது வகை செய்கின்றது.
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். இன்னும், ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடையவர்தான். நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) நன்கறிந்தவன் நன்குணர்ந்தவன்.” (49:13)
அல்குர்ஆனின் மேற்குறிப்பிடப்பட்ட திருவசனம் மூன்று முக்கிய உண்மைகளைக் குறிப்பிடுகின்றது:
- இந்தத் திருவசனம் முஸ்லிம்களைச் சிறப்பாக குறிப்பிட்டுப் பேசாது, முழு மனித இனத்தையும் விளித்துப் பேசுகின்றது.
- மனித இனம் பல்வேறு இனங்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பது இறைவனின் சித்தம் என்பதனையும், இது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பு என்பதனையும் குறிப்பிடு கின்றது. எனவே, பன்மைத்துவம் ஒரு உடன்பாடான பெறுமானம் (Positive Value) என்பது விளக்கப்படுகின்றது.
- வேற்றுமைகளைக் கடந்த நிலையில் ஒருவரை ஒருவர் இனம் கண்டு புரிந்துணர்வுடன் வாழ இது பணிக்கின்றது.
இத் திருவசனத்தில் குறிப்பிடப்படும் ‘லிதஆரபூ’- ஒருவரை ஒருவர் இனம்கண்டு புரிந்து கொள்வதற்காக- எனப் பொருள்படும் சொற்றொடர் மிக முக்கியமான ஒரு கருத்தைப் புலப்படுத்துகின்றது. இதன் மூலம் அல்குர்ஆன் இனங்கள், சமுதாயங்களை பரந்த மனித இனத்தின் அங்கத்தவர்கள் என்ற வகையில் அவர்களிடையே காணப்படும் பொதுப் பண்புகளை இனம்கண்டு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்வதைத் தூண்டுகிறது.
பன்மைத்துவம் தொடர்பான இஸ்லாமிய நோக்கின் இந்தப் பின்னணியில், இஸ்லாம் வரலாற்றில் பௌத்தத்தை எந்த வகையில் எதிர்கொண்டது என்பதையும், அது ஆக்கபூர்வமான ஒரு கலாசாரப் பண்பாட்டு உறவுக்கும், உரையாடல்களுக்கும் எவ்வாறு வழியாக அமைந்தது என்பதையும் விளக்குவதுடன், இந்த இரண்டு மதங்களுக்குமிடையில் காணப்படும் சில பொதுப் பண்புகளை வகைப்படுத்துவதும் இந்த ஆய்வின் நோக்கமாகும்
உமையா ஆட்சிக் காலப் பிரிவில் முஸ்லிம் ஆட்சிப் பரவலில் வட ஆப்கானிஸ்தானிலும், மேற்குத் துருக்கிஸ்தானிலும் இஸ்லாம் பௌத்த மதத்தை எதிர்கொண்டது. கி.பி 683ம் ஆண்டு பல்க் கைப்பற்றப்பட்டதுடன், பௌத்த மதம் ஏற்கனவே பரவியிருந்த அப் பூமிப் பிரதேசம் முஸ்லிம் ஆட்சிக்கு உட்பட்டது. இங்குதான் பௌதத்திற்கும் இஸ்லாத்திக்கு மிடையிலான முதல் எதிர்கொள்ளல் நிகழ்ந்தது.
உமையா ஆட்சியாளர் முஹம்மத் பின் காஸிமினால் இந்தியாவின் சிந்துப் பிரதேசம் கி.பி 711ம் ஆண்டு கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்துக்களைப் பொறுத்தளவில் கடைப்பிடிக்கப்பட்ட அதே கொள்கையையே முஸ்லிம் ஆட்சியாளர்கள் பௌத்தர்களைப் பொறுத்தளவிலும் பின்பற்றினர். சிந்துப் பிரதேசம் கைப்பற்றப்பட்டதும் முஸ்லிம்கள் ஹிந்து மதத்தை எதிர்கொண்டனர். இது அவர்களுக்கு இதற்கு முன்னர் அறிமுகமில்லாத ஒரு புதிய மதமாகும். எனவே அவர்கள் இந்த புதிய மதத்தைப் பொறுத்தளவில் எத்தகைய ஒரு கொள்கையைக் கடைப்பிடித்தல் வேண்டுமென மார்க்க அறிஞர்கள் ஆலோசித்து தனக்கு அறிவுறுத்தல் வேண்டும் என உமையா கலீபா கேடடுக்கொண்டார்.முஸ்லிம் ஆட்சியில் இந்துக்கள் தங்களது தெய்வங்களை வணங்கவும், கோயில்களைப் பராமரிக்கவும் பூரண சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும் எனவும், அதற்குப் பகரமாக அவர்கள் ஜிஸ்யா வரியைச் செலுத்துதல் வேண்டும் எனவும் மார்க்க அறிஞர்கள் ஆலோசனை வழங்கினர். முஸ்லிம் ஆட்சியாளர்கள் யூதர்கள், கிறிஸ்தவர்களுக்கு வழங்கிய ‘அஹ்லுல் கிதாப்’ கோட்பாடு ஹிந்துக்களையும் உள்ளடக்கும் வகையில் விசாலிக்கப்பட்டது. வட ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியாவில் பௌத்த பிரதேசங்கள் முஸ்லிம் ஆட்சிக்கு உட்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கும் ‘அஹ்லுல் கிதாப்களுக்கு’ மத கிரியைகளைப் பொறுத்தளவில் வழங்கப்பட்ட உரிமைகள் வழங்கப்பட்டன.
உமையாக்கள் காலப் பிரிவில் முஸ்லிம்களுக்கு பௌத்தம் பற்றிய பரிச்சயமும் அறிமுகமும் காணப்பட்டதை உமர் பின் அல்- அஸ்ரக் அல் கிர்மானியின் குறிப்புகள் மூலம் நாம் அறிய முடிகின்றது. அல் கிர்மானி பௌத்தர்களிடம் காணப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றி ஒரு விரிந்த விளக்கத்தை அளிக்கிறார். கி.பி எட்டாம் நூற்றாண்டில் மத்தியாசியாவில் குராஸான் மாகாணத்தில் பலக் நகரில் காணப்பட்ட மிகப் புகழ் பெற்று விளங்கிய ‘நவவிஹார்’ பௌத்த மடாலயம் பற்றி ஒரு விளக்கத்தை அவர் அளிக்கின்றார். கிர்மானியின் இந்தக் குறிப்புகள் கி.பி பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த பகீஹ் அல் ஹமதானியின் ‘கிதாபுல் புல்தான்’ என்னும் நூலில் காணப்படுகின்றது. பௌத்தம் பற்றிய புகழ்பெற்ற ஆய்வாளரான அலெக்ஸ் பெர்ஸின் (Alex Berzein) அவரது Historical sketches of Buddhism and Islam in Afgahanitan என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“அல் கிர்மானியின் குறிப்புகள் முஸ்லிம்கள் கைப்பற்றிய பிரதேசங்களில் காணப்பட்ட பௌத்தம் போன்ற இஸ்லாம் அல்லாத மதங்களைப் புரிந்து கொள்வதற்கு முஸ்லிம்கள் காட்டிய திறந்த உள்ளத்தையும், பரந்த மனப்பான்மைகளையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.”
நவ விஹாரை என்ற பௌத்த மடாலயம் முஸ்லிம்களது ஆட்சியில் அதன் புகழைப் பேணி செயல்பட்டது. அப் பிரதேசத்தைத் தரிசித்த ஹான் சீன யாத்திரீகரான யூஜிங் (Yijing) என்பாரின் குறிப்புகள் இதனைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.
அப்பாஸிய ஆட்சியில் கலீபா மன்ஸூரின் (கி.பி 752-775) காலப் பிரிவில் பல கிரேக்க சமஸ்கிருத நூல்கள் அரபியில் பெயர்க்கும் ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட இக்காலப் பிரிவில் ஒழுக்கப் போதனைகள் உள்ளடக்கிய பௌத்த மதத்தின் மஹாயான சூத்திரங்களும், ஹீனாயான சூத்திரங்களும் அரபியில் பெயர்க்கப்பட்டன.
நவ விஹாரவின் பரிபாலனத்துறைத் தலைவர்களுள் ஒருவரான யஹ்யா பின் பர்மக் கலீபா ஹாரூன் அல் ரஷீதின் (கி.பி 786-808) அமைச்சராகப் பணிபுரிந்தார். அவரது ஆலோசனையின் பேரில் கலீபா ஹாரூன் ரஷீத் பௌத்த நூல்கள் சிலவற்றை அரபியில் மொழி பெயர்ப்பதற்கு சில பௌத்த அறிஞர்களை வரவழைத்தார்.
இப்னு நதீம் (கி.பி 995) அவரது ‘கிதாபுல் பிஹ்ரிஸ்த்’ என்னும் நூலில் மொழிபெயர்க்கப்பட்ட சில பௌத்த நூல்களைப் பட்டியல் படுத்தியுள்ளார். அதில் முக்கியமான ஒரு நூல் ‘கிதாபுல் பூத்’ என்பதாகும். இது ‘ஜாதக மாலா’, ‘புத்த சரித’ ஆகிய இரண்டு சமஸ்கிருத நூல்களை அடிப்படையாகக் கொண்டது.
ஸெல்ஜுக் காலப் பிரிவில் (கி.பி 1760-1153) பிற மதப் பிரிவுகள் பற்றி ஷஹ்ரஸ்தானி எழுதிய ‘கிதாபுல் மிலல் வந் நிஹல்’ சில பௌத்த நூல்கள் பற்றிய குறிப்புக்களைக் கொண்டுள்ளது.
மங்கோலியர் காலப் பிரிவில் மங்கோலிய ஆட்சியாளர் காஸன் கான் (கி.பி 295- 1304) உலக வரலாறு பற்றிய ஒரு நூலை அரபியிலும், பாரசீகத்திலும் எழுதும்படி ரஷீதுத்தீன் என்பவரைப் பணித்தார். காஸான் கான் இப்பணியில் புத்தரின் வாழ்வு, போதனை பற்றிய பகுதியை எழுதுவதற்கு ரஷீதுத் தீனுக்கு உதவி புரிவதற்காக காஷ்மீரைச் சேர்ந்த பக்ஷி கமலஷ்ரீ என்னும் பௌத்த பிக்குவை அழைத்தார். இந்நூல் புத்தரின் வாழ்வு பற்றிய ஒரு விளக்கத்தை அளிக்கிறது.
பௌத்த தத்துவத்துக்கும் இஸ்லாத்துக்கு மிடையில் நிலவிய இந்த நீண்ட வரலாற்றுத் தொடபானது சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு மூலம் மதங்கள் மற்றும் பண்பாடுகளிடையே பயனுள்ள நல்லுறவு நிலவ முடியும் என்பதற்கு சிறந்த சான்றாகும்.
மதச் சகிப்புத்தன்மை என்பது எல்லா மதங்களையும் ஒரே பரிமாணத்துக்குள் உள்ளடக்கும் முயற்சியாகவோ அல்லது மத நம்பிக்கைகள், செயற்பாடுகளை வெறும் வரலாற்று வளர்ச்சியாக விளக்கி நியாயப்படுத்தும் முயற்சியாகவோ கொள்ளப்படல் கூடாது. மதங்களைப் பொறுத்தளவில் சகிப்புத்தன்மை என்பது வித்தியாசங்கள், வேற்றுமைகளை யதார்த்தமாக, அடிப்படையானதாக அனுசரித்து ஏற்றுக்கொண்டு, இந்த வித்தியாசங்கள் வேற்றுமைகளைத் தாண்டிய நிலையில் அவற்றிற்கிடையில் காணப்படும் பொதுப் பண்புகளையும் பெறுமானங்களையும் இனம்காண்பதாகும்.
இஸ்லாத்திற்கும் பௌதத்திற்கும் இடையில் சில பொதுப் பண்புகள், பெறுமானங் கள் காணப்படுகின்றன. அன்பு, கருணை, உயிர் களின்பால் ஆதரவு, பொறுமை, மன்னிக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை, தாராள மனப்பான்மை என்பன இஸ்லாமும் பௌத்தமும் வலியுறுத்தும் பொதுப் பண்புகளாகும். இந்த இரண்டு மதங்களுக்கிடையிலான உரையாட லுக்கு இப் பொதுப் பெறுமானங்கள் ஒரு உறுதியான அடித்தளமாக அமைய முடியும்.
அன்பு, கருணை போன்ற பெறுமானங்கள் இஸ்லாத்திலும் பௌத்தத்திலும் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அர்ரஹ்மான்- அளவற்ற அன்புடையோன், அர்ரஹீம்- நிகரற்ற கருணை உடையோன் என்பன அல்லாவின் முக்கிய பண்புகளாகும்.அவனது அன்பும், அருளும், கருணையும் அனைத்தையும் பொதிந்துள்ளன.
“என்னுடைய அருளோ எல்லா வஸ்த்துக்களிலும் சூழ்ந்து விசாலமாகியுள்ளது.”(7:156)
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “பூமியில் உள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள் விண்ணிலுள்ள இறைவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்.”
இஸ்லாத்தைப் பொறுத்தளவில் அன்பும் கருணையும் மனித இனத்தை மட்டுமன்றி இறைவனின் அனைத்துப் படைப்பினங்களையும் உள்ளடக்கியது. ‘படைப்பினங்கள் இறைவனின் குடும்பமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பௌத்தத்தைப் பொறுத்தளவில் அதன் மையக் கோட்பாடாக அன்பும் கருணையும் உள்ளன. மெத்தா(அன்பு), கருணா (கருணை), முதிதா (கருணை அன்பின் விளைவாகத் தோன்றும் மகிழ்வும் களிப்பும்) , உபேகா (அமைதி, சாந்தி) என்பன மிக அழுத்தமாக அதில் வலியுறுத்தப்படுகின்றன.
இங்கு உபேகா எனக் குறிப்பிடப்படுவது, வெறுப்பு, பகைமையைப் போக்கி உள்ளம் அமைதியும் நிம்மதியும் அடைவதாகும். உள்ளமானது கோபம், வெறுப்பு, பகைமை உணர்விலிருந்து மீட்சிபெற்ற நிலையிலேயே அன்பும் கருணையும் உருவாக முடியும் என பௌத்தர் கூறுகின்றார்.
உள்ளத்தில் நல்ல சிந்தனைகளைக் கொண்டிருப்பது வெறுப்பை நீக்குவது, அன்பு, கருணை என்பன உள்ளத்தைத் தூய்மைப்படுத் தும். கோபமும் வெறுப்பும் பகைமை உணர்வும்- மன உளைச்சல், மோதலுக்கு இட்டுச் செல்கின்றன என்பது புத்தரின் கோட்பாடாகும். புத்தர் கோபத்தை பின்வருமாறு விளக்குகிறார்:
கோபம் என்பது தேரைப் போன்றது.
கோபத்தை அடக்குபவனே உண்மையான தேரோட்டியாவான்.
ஏனையோர் அந்தத் தேரின் கடிவாளங்களை மட்டுமே பிடித்துள்ளனர்.
மென்மையாக செயல்பட்டு கோபத்தை வெற்றி கொள்வாயாக!
தாராளத் தன்மையால் கஞ்சத்தனத்தைப் போக்குவாயாக! (தம்மபத)
‘தம்மபத’வில் காணப்படும் பின்வரும் அடிகள் உள்ளத்தை வெறுப்பு, பகைமை உணர்விலிருந்து மீட்சி பெற்ற நிலையில் வைத்திருப்பதை வலியுறுத்துகின்றன:
‘அவன் என்னைத் தூஷித்தான், அவன் என்னை அடித்தான், அவன் எனது பொருளைத் திருடினான்….’ இத்தகைய உணர்வுகளை உள்ளத்தில் வைத்திருப்போரில் வெறுப்பும் பகைமையும் நீங்காது.
‘அவன் என்னைத் தூசித்தான், அவன் அடித்தான், அவன் எனது பொருளைத் திருடினான்…’ இத்தகைய உணர்வுகளை உள்ளத்தில் வைத்திருக்காதவர்களில் வெறுப்பும், பகைமையும் நீங்கிவிடும்.
அல்குர்ஆன் விசுவாசிகளை ஒருவரின் பிழையான செயலுக்குப் பதிலாக நன்மை புரியும்படியும் பகைமைக்குப் பதிலாக அன்பு செலுத்தும்படியும் பணிக்கிறது.
” நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே!) எது மிக அழகானதோ அதைக்கொண்டு (தீமையை) தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது எவருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ அவர், உம்முடைய உற்ற சிநேகிதரைப் போல் ஆகிவிடுவார்.” (41:34)
கோபம் என்பது, குர்ஆனின் கருத்துப்படி செய்த்தானின் தூண்டுதலாகும். அதனை மன்னிப்பதன் மூலம் கட்டுப்படுத்தும்படி குர்ஆன் பணிக்கிறது.
“அவர்கள் எத்தகையோரென்றால், செல்வ நிலையிலும், வறுமை நிலையிலும் செலவு செய்து கொண்டிருப்பார்கள் கோபத்தையும் அடக்கிக்கொள்ளக் கூடியவர்கள் மனிதர்(களின் குற்றங்)களையும் மன்னித்து விடக்கூடியவர்கள் அல்லாஹ்வோ (இத்தகைய) நன்மை செய்வோரை நேசிக்கிறான்.”(3: 134)
இஸ்லாமும் பௌத்தமும் வலியுறுத்துகின்ற அன்பு, கருணை, மன்னிக்கும் தயாள மனப்பான்மை போன்ற பண்புகள் மனித இனங்களுக்கிடையே நிலவும் முறுகல் நிலையைக் குறைத்து, மோதல்களைத் தவிர்த்து, அமைதியும் ஒருமைப்பாடும் நிகழ்ந்து, ஆரோக்கியமான அழகிய சமூகச் சூழலை உருவாக்க சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும்.
இஸ்லாம் சாந்தியை, சமாதானத்தைப் போதிக்கும் மதமாகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் பல நிகழ்வுகள், மோதல்கள், பிரச்சினைகள் தோன்றி அவை போராக மாறி இரத்தக்களரியை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலைகளில் மோதல் தவிர்ப்பையும், இணக்கப்பாட்டையும், சமாதானத்தையும் தோற்றுவிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைக் குறிக்கின்றன. நபி (ஸல்) அவர்கள் யத்ரிபுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட போது, அங்கு அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குழுக்களிடையே மோதல் உருவாகி போரின் விளிம்பிலே யத்ரிப் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இந்த இரு சாராரிடையே சமரசத்தைத் தோற்றுவித்து அவர்களது உள்ளங்களை அன்பினால் பிணைத்து சமாதானத்தை உருவாக்கியதை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது:
“மேலும் நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து,) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் (உங்களுக்குள் கருத்து வேறுபட்டு,) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம் மேலும், உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவர் மற்றவருக்கு) விரோதிகளாக இருந்த சமயத்தில், அவன் உங்கள் இதயங்களுக் கிடையே அன்புப் பிணைப்பை உண்டாக்கி னான் ஆகவே, அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக் குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள் அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேறச் செய்தான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவு படுத்துகின்றான்.” (3:103)
பௌத்தத்தின் ‘ஸுத நிபடிக’(Suta Nipatika) உலக அமைதிக்கான பௌத்தரின் பிரார்த்தனை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
“அனைத்து படைப்பினங்களும் அமைதியையும், சாந்தியையும் தழுவுமாக!
அனைத்து படைப்பினங்களும், பலமானவையும், பலவீனமானவையும்
அனைத்துப் படைப்பினங்களும், பெரியவையும், சிறியவையும்,
புலன்களுக்குப் புலப்படும் படைப்பினங்களும், புலன்களுக்குப் புலப்படாதவையும்,
அண்மையில் வாழும் படைப்பினங்களும் தூரத்தில் உள்ளவையும்,
பிறந்தவையும், இறப்பை எதிர்நோக்கி இருப்பவையும்,
அனைத்தும் சாந்தியையும், சமாதானத்தையும் தழுவுமாக!
ஒரு தாய் அவளது உயிரைப் பணயம் வைத்து தனது குழந்தையின் உயிரைப் பாதுகாப்பது போன்று எல்லா உயிரினங்களையும் தழுவிய உனது சிந்தனையும் அப்படியே அமையட்டும்!
பிரபஞ்சம் அனைத்தையும் தழுவிய சாந்திமயமான அன்பு உனதாகட்டும்!”
இஸ்லாமும் பௌத்தமும் உள்ளடக்கியுள்ள பெறுமானங்களான சகிப்புத்தன்மை, பரஸ்பர புரிந்துணர்வு, கருணை போன்ற பண்புகள் அடிப்படையில் இந்த இரு மதங்களுக்கிடையில் நடைபெறும் உரையாடல், அமைதியான, ஒருமைப்பாட்டுடைய சமூக அமைப்பை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்புச் செய்ய முடியும்.
யுனெஸ்கோ அமைப்பு 1995 நவம்பர் 16ம் திகதி வெளியிட்ட சகிப்புத் தன்மை பற்றிய அடிப்படைகளை விளக்கும் பிரகடனம் அதனைப் பின்வருமாறு விளக்குகிறது:
‘சகிப்புத்தன்மை என்பது உலகப் பண்பாட்டின் பன்மைத்துவத்தையும், மனித இனத்தின் மனிதத்து வத்தையும் மதிப்பதாகும். அது அறிவு, திறந்த மனப்பான்மை,தொடர்பாடல், சிந்தனைச் சுதந்திரம் ஆகியவற்றால் போஷிக்கப்படுகின்றது. சகிப்புத்தன்மை என்பது வேற்றுமையில் ஒருமைப்பாட்டைக் காண்பதாகும். அது தார்மீகக் கடமை மட்டுமன்றி, அரசியல் ரீதியான, சட்ட ரீதியான அவசியமுமாகும். சகிப்புத் தன்மை என்பது சமாதானத்தை சாத்தியமாக்கும் சான்றாண்மை மிக்க பண்பாகும். அது போர்க் கலாசாரத்தை சமாதானக் கலாசாரமாக மாற்றுகின்றது.’
