இஸ்லாமிய மதச் சிந்தனையின் புனர்நிர்மாணம் பற்றிய இக்பாலின் கருத்துக்கள் குறித்து சில அவதானங்கள்

மனித இனத்தின் வழிகாட்டுதலுக்கான இறைவனின் இறுதி வேதம் என்ற வகையில், அந்த வேதத்தின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்ட முஸ்லிம் சமூகம், வாழ்க்கையின் நித்தியமானவை – மாற்றத்திற்கு உட்பட்டவை எனும் இரண்டிற்குமிடையில் ஒருமைப்பாடு காணுதல் அவசியமாகிறது. ஏனெனில் பிரபஞ்சம் இயக்கமற்றது என்ற பழைய கோட்பாட்டை- நாம் ஏலவே நோக்கியவாறு – இஸ்லாம் நிராகரிக்கின்றது. வளர்ச்சியும், மாற்றமும் மனித வாழ்வையும், சமூகத்தையும் பொருத்தளவில் தவிர்க்க முடியாததாகும். ஆனால் மாற்றத்திற்கு உட்படாத அடிப்படை நித்திய அம்சங்களும் சமூகத்தில் உள்ளன. எனவே இறுதி வேதமான இஸ்லாம் சமூகத்தின் கூட்டு வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்தும் நித்திய கோட்பாடுகளைக் கொண்டிருத்தல் அவசிய மாகின்றது. ஆனால் நித்தியமானவை எனக் கருதப்படக் கூடியவை மாற்றத்தை சாத்தியமாக் கும் அனைத்தையும் தவிர்க்கக்கூடிய வகையில் அமைந்தவை என நாம் பொருள் கொண்டால் அது இயற்கையாகவே அசைவையும் இயக்கத் தையும் கொண்டவற்றை இயங்கவிடாமல் தடுத்து சிந்தனையிலும் சமூக வாழ்விலும் தேக்க நிலையை ஏற்படுத்திவிடும். அரசியல் துறையிலும், சமூக விஞ்ஞானத் துறையிலும் மத்திய காலப் பிரிவில் ஐரோப்பா எதிர்கொண்ட தோல்வியும், கடந்த ஐநூறு ஆண்டுகால இஸ்லாமிய சிந்தனையின் இயக்கமும் அசைவும் அற்ற நிலையும் இதனைப் பிரதிபலிக்கின்றன. அப்படியாயின் இஸ்லாமியக் கட்டுக்கோப்பைப் பொறுத்தளவில் மாற்றத்தை விளைவிக்கும் காரணி யாது? என்ற வினாவை எழுப்பும் இக்பால் இஸ்லாமிய சிந்தனை, சட்டம் சமூகம் ஆகியவற்றை தேக்கமும் அசைவுமற்ற நிலையிலிருந்து விடுவித்து, அவற்றை இயங்கச் செய்யும் உந்துதல் சக்தியாக ‘இஜ்திஹாதை’ அடையாளப் படுத்துகின்றார்(1) (Iqbal- Reconstruction, P.143)

இஜ்திஹாத் என்ற பதம் ‘முயற்சித்தல்’ என்ற கருத்தை மொழி ரீதியாகக் கொண்டுள்ளது. இஸ்லாமிய சட்ட வழக்கின் சொற்பிரயோகத் தில் ஒரு சட்டப் பிரச்சினையைப் பொருத்தள வில் சுதந்திரமான ஒரு முடிவை அல்லது தீர்ப்பைப் பெற முயற்சித்தலை அது குறிக்கின் றது. இக்கருத்து, “மேலும், நம்முடைய வழியில்(செல்ல) முயற்சிப்போரை நிச்சயமாக நாம் நம்முடைய (நேரான) வழியில் செலுத்துகின்றோம் மேலும், நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோர்களுடன் இருக்கிறான்.” (29:69) என்ற திருக் குர்ஆன் வசனத்திலிருந்து பெறப்பட்டுள்ளது என இக்பால் கருதுகிறார். குர்ஆனின் இக் கருத்து நபி (ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸினால் மேலும் உறுதிப்படுத்தப்பட் ்டுள்ளது. முஆத் இப்னு ஜபல் (றழி) அவர்கள் யெமனுக்கு மாகாண அதிபதியாக நியமிக்கப் பட்டபோது நபி (ஸல்) அவர்கள் முஆதை நோக்கி “நீர் உமக்கு எதிர்ப்படும் பிரச்சினை களுக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்?” எனக் கேட்க ‘குர்ஆனிலும், ஹதீஸிலும் அப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முயற்சிப்பேன். அவற்றிற்கான தீர்வை குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் பெற முடியாவிட்டால், நான் முயற்சித்து எனது அறிவைப் பயன்படுத்தி அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்வேன்’ எனக் குறிப்பிட்டார்.(2)

இஸ்லாத்தின் ஆட்சிப் பரவலோடு ஒழுங்காக வகுக்கப்பட்ட ஓர் சட்ட அமைப்பு மிக அவசியமாகியது. இப்பணியில் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் தொடர்ச்சியான உழைப்பை யும் முயற்சியையும் மேற்கொண்டனர். அவர்கள் (ஆரம்பகால) வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில், படித்தரங்களில் உருவாக்கிய சட்ட மரபுகளின் கூட்டமைப்பின் அடியாக முஸ்லிம் உலகில் மத்ஹபுகள் தோற்றம் பெற்றன. காலஓட்டத்தில் இஜ்திஹாத் அதன் முக்கியத்துவத்தை இழந்து, இஸ்லாமிய சட்ட வளர்ச்சி தேக்க நிலையை அடைந்தது. இதற்குப் பின்வருவன காரணங்களாக அமைந்தன:

  1. இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய ‘குர்ஆன் படைக்கப்பட்டதா? அல்லது நித்திய மானதா?’ என்ற கருத்து மோதல் அனைவரும் அறிந்ததேயாகும். குர்ஆன் நித்தியமானது என்ற கருத்து பாரம்பர்யமாக முஸ்லிம் உலகில் நிலவியது. ஆனால் பகுத்தறிவுவாதிகளான முஃதஸிலாக்கள் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற கருத்தை முன்வைத்தனர். குர்ஆனின் நித்தியத் தன்மையை மறுப்பதன் மூலமாக பகுத்தறிவு வாதிகள் இஸ்லாத்தின் அடிப்படைகளையே பாதிக்கும் வகையில் செயற்படுவதை பாரம்பர்ய சிந்தனை கொண்டோர் உணர்ந்தனர். பகுத்தறிவு வாதத்தின் சில அரசியல் விளைவுகளையும் அவதானித்த அப்பாஸிய ஆட்சியாளர்கள் சிலரும் இது தொடர்பான பாரம்பர்ய சிந்தனைக்கு ஆதரவளித்தனர். உதாரணமாக முஃதஸிலா பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்த அந்- நஸ்ஸாம் ஹதீஸ்களை நிராகரித்ததோடு ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஓர் முக்கிய நபித் தோழரான அபூஹுரைரா நம்பகமற்ற அறிவிப்பாளர் எனக் கூறினார். பகுத்தறிவாளர் களது இத்தகைய கட்டுப்பாடும் வரம்புமற்ற சிந்தனையானது இஸ்லாமிய சமூகத்தின் உறுதிப்பாட்டுக்கு   ஆபத்தாக அமைந்து சமூகக் கட்டுக்கோப்பையே சிதறடிக்கக்கூடும் என்ற அச்சமும்‌ பயமும் சமூகத்தில் தோன்றிய நிலையில், சமூகக் கட்டுக்கோப்பையும் உறுதியையும் பேணிப் பாதுகாப்பதற்கு ஷரீஆவின் கட்டுப்பாட்டை பயன்படுத்தி சட்ட அமைப்பை மிக வன்மையும், உறுதியுமானதுமாக ஆக்குவதே ஒரே வழியாக விளங்கியது. எனவே சட்டங்கள் உறுதியும் இறுக்கமும் அடைந்த அந்நிலையில் இஜ்திஹாத் அதன் முக்கியத்துவத்தை இழக்க ஆரம்பித்தது.
  2. தஸவ்வுப் கால ஓட்டத்தில் அதன் இயக்க சக்தியை இழந்து தத்துவ சாயலைப் பெற்றது. ஒரு சமூக அமைப்பு என்ற வகையில் இஸ்லாத்தை நோக்கும் பார்வையை அது மழுங்கச் செய்தது. தத்துவச் சாயலைப் பெற்ற தஸவ்வுப், முஸ்லிம்களில் மிக விவேகமும் அறிவும் புத்திக் கூர்மையும் மிக்கவர்களைத் தனக்குள் இணைத்துக் கொண்டதாலும், முஸ்லிம் சமூகம் அறிவும், தூரநோக்கும், ஆழமான சிந்தனையுமற்றவர்கள் கையிலும் சிக்கியது. இந்நிலையிலும் சிந்திக்கும் சக்தியற்ற பொதுமக்கள், பாரம்பர்ய மத்ஹப்களைப் பின்பற்றுவதே பாதுகாப்பானதெனக் கருதி அவற்றை நோக்கித் திரும்பினர்.
  3. இவை அனைத்துக்கும் மேலாக முஸ்லிம்களின் அறிவுப் பணியின் மத்திய நிலையமாக விளங்கிய பக்தாத் கி.பி 13ஆம் நூற்றாண்டளவில் மங்கோலியர்களின் படையெடுப்புக்கு ஆளாகி பேரழிவை எதிர் கொண்டது. இஸ்லாமிய ஆட்சியும், கட்டுக்கோப்பும் சீர்குலைந்து காணப்பட்ட அச் சூழுலில், அந்நிலை மேலும் சீர்கெட்டு சமூகக் கட்டுக் ே்காப்பு மேலும் சிதறிச் சின்னாபின்னமடையும் ஆபத்துக் காணப்பட்டது. இந்நிலையில் பழமைசார்ந்த முஸ்லிம் சிந்தனையாளர்கள் தங்கள் முழுக் கவனத்தையும், அவதானத்தை யும் மக்களின் நலன் கருதி சமூக ஒருமைப் பாட்டைப் பேணிப் பாதுகாப்பதில் முழுமையாக ஈடுபத்தினர். ஆரம்பகால சட்ட அறிஞர்கள் உருவாக்கிய சட்டத்தில் எத்தகைய புதுமையை யும் புகுத்துவதை முற்றிலும் தடுப்பதன் மூலம், சமூகத்தின் கட்டுக்கோப்பையும் பேணிப் பாதுகாக்க முயற்சித்தனர். அவர்களது முழு நோக்கமும் சமூக கட்டுக்கோப்பை சிதறாமல் பாதுகாப்பதாகவே காணப்பட்டது. இவ்விடயத்தில் அவர்களை ஒருவகையில் நோக்கும்போது சரியாகவே செயல்பட்டனர். ஏனெனில் எந்த ஓர் அமைப்பிலும் கட்டுக்கோப்பு உறுதியாக அமையும்போது அது வீழ்ச்சியைத் தடுத்துப் பாதுகாக்கின்றது. ஆனால், இந்தவகையில் செயல்பட்டவர்கள் ஓர் உண்மையை மறந்துவிட்டனர் என இக்பால் கருதுகின்றார். அதாவது மிக வன்மையான, இறுக்கமான ஓர் சமூகக் கட்டுக்கோப்பில் தனி மனிதன் முற்றிலும் நசுக்கப்பட்டு அவனது தனித்துவத்தை இழந்துவிடுகின்றான். கடந்தகால வரலாற்றை போலி பக்தி உணர்வோடு பூஜிப்பது, அதனைச் செயற்கையாக உயிர்த்தெழச் செய்ய முயற்சிப்பது போன்றவை மூலம் ஒரு சமூகத்தின் பி்ன்னடைவை சீர்செய்தல் முடியாது. ஒரு நவீன எழுத்தாளர் குறிப்பிடுவது போன்று, “காலங் கடந்து செல்லாக் காசாக மாறிவிட்ட கருத்துக் கள், அந்தக் கருத்துகளை காலங் கடக்கச் செய்து செல்லாக் காசாக ஆக்கியவர்களில் ஒரு சக்தியாக எழுச்சி பெறல் முடியாது. “Worm out ideas have never risen to power among a people who have worn them out’’ (3) எனவே மக்களில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் அம்சங்களை தடுத்து நிறுத்தும் ஒரே சக்தி பலம் மிக்க ஆளுமை படைத்த தனிமனிதர்களை உருவாக்குவதாகும். அத்தகைய தனிமனிதர்கள் மட்டுமே வாழ்க்கையின் ஆழத்தை வெளிப்படுத்து வார்கள். அவர்கள் புதிய அளவுகோல்களைப் புலப்படுத்துவார்கள். அதன் வெளிச்சத்தில் நாங்கள் நோக்கினால் எங்கள் சூழல் மாற்றத்தை வேண்டி நிற்கின்றது என்பதை உணர்வோம். பதின்மூன்றாம் நூற்றாண்டின் சட்ட அறிஞர்களில் காணப்பட்டது போன்று கடந்த காலத்தை போலித்தன்மையாக பூஜித்து, அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டுடன் செயல்படுவதானது இஸ்லாத்தின் உள்ளார்ந்த இயக்க சக்திக்கு முரணானது. இதன் விளைவாகவே பக்தாதின் பேரழிவிற்கு ஐந்து ஆண்டுகள் பின் 1283ஆம் ஆண்டு பிறந்த இப்னு தைமியாவின் பலம்மிக்க ஆளுமை இந்த சிந்தனைப் பாங்கிற்கும் செயல்பாட்டுக்கும் ஓர் எதிர்த்தாக்கத்தை தோற்று வித்தது. ஹம்பலி மத்ஹபின் பாரம்பர்யத்தில் வளர்ந்த இமாம் இப்னு தைமியா, இஜ்திஹாதை வலியுறுத்தி இஸ்லாமிய சட்டத்திற்கு ஓர் இயங்கு சக்தியை வழங்க முனைந்தார். இப்னு தைமியாவின் கருத்துக்கள் இஸ்லாமிய சிந்தனையில் மிக ஆழமான செல்வாக்குச் செலுத்தின. ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் தோன்றிய அனைத்து நவீன சீர்திருத்த இயக்கங்களும் அவரின் போதனைகள், கருத்துகளின் தாக்கத்தினால் தோன்றியவையாகும். வஹ்ஹாபி இயக்கம், ஸனூஸி இயக்கம், ஜமாலுத்தீன் ஆப்கானியின் சர்வதேச இஸ்லாமிய ஒருமைப்பாட்டு இயக்கம். (Pan- Islam) ஆகியன இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

“இஜ்திஹாத்” இஸ்லாமிய சட்டத்திற்கு இயங்கு சக்தியை வழங்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் இக்பால், இஸ்லாமிய உலகில் அவரது காலப்பிரிவில் பாரம்பரிய இஸ்லாமிய சட்டத்தில் நவீன தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற சிந்தனைப் பாங்கில் செயல்பட்ட நவீனத்துவ இயக்கங்கள் பற்றிய தனது கருத்தைப் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றார்:

“நவீன இஸ்லாத்தில் தாராள சிந்தனையுடைய (Liberal movements) ஒரு போக்கை நான் வரவேற்கிறேன். ஆனால் ஒன்றைப் பற்றி நாம் மிக அவதானத்துடன் இருத்தல் வேண்டும். இந்த தாராள, சுதந்திர சிந்தனை உணர்வுகளும் கருத்துகளும் இஸ்லாமிய வரலாற்றில் மிக சோதனை மிக்க காலகட்டத்திலேயே தோன்றி யுள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். ஏனெனில் சுதந்திர, தாராளவாத மனப்பான்மையும் செயல்பாடும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் தன்மையுடையதாக மாறும் நிலைமையும் தோன்ற இடமுள்ளது. சீர்திருத்தம், மாற்றம் என்ற உற்சாக உணர்வில் வரம்பையும் எல்லையையும் மீறும் மனப்பான்மையுடன் சீர்திருத்தவாதிகள் செயல்பட வாய்ப்புள்ளது. நாங்கள் இன்று எமது காலப் பிரிவில் ஐரோப்பா வில் புரட்டஸ்தாந்திய புரட்சி நடைபெற்ற காலப் பிரிவைப் போன்ற ஒரு காலகட்டத்தில் உள்ளோம். புரட்டஸ்தாந்துப் புரட்சியைத் தோற்றுவித்த மார்டின் லூத்தரின் இயக்கத்தின் தோற்றமும், விளைவுகளும் எங்களுக்குப் போதிக்கும் பாடங் களை நாங்கள் மறக்கக்கூடாது. வரலாற்றை நாம் மிகக் கவனமாக அவதானித்தால் புரட்டஸ்தாந்து சீர்‌திருத்தம் என்பது அடிப்படையில் ஓர் அரசியல் இயக்கம் என்பதைக் கண்டுகொள்வோம். ஐரோப்பாவில் இந்த இயக்கத்தின் மொத்த விளைவு என்ன என்பதை நாம் நோக்கினால் கிறிஸ்தவ மதத்தின் உலகப் பொதுமையான ஒழுக்கக் கோட்பாட்டை (UNIVERSAL ETHICS) படிப்படியாக நீக்கி தேசிய ஒழுக்கத்தை (NATIONAL ETHICS) அந்த இடத்தில் அறிமுகப்படுத்தியமையாகும். இந்தப் போக்கின் ஆபத்தான விளைவை ஐரோப்பாவில் நடை பெற்ற மகாயுத்தத்தில் நாம் காண முடிந்தது. எனவே இஸ்லாமிய உலகின் தலைவர்கள் ஐரோப்பாவில் நடைபெற்ற நிகழ்வின் உண்மையான கருத்தை அறிந்து மனக் கட்டுப்பாட்டுடனும் தூரநோக்குடனும் இஸ்லாமிய சமூக மாற்றம், புனருத்தாரணத்தை நோக்கி அவதானத்துடன் நகர்தல் வேண்டும்.(4)

இங்கு நாம் இது தொடர்பான ஒரு முக்கியமான வினாவிற்கு விடை காணுதல் வேண்டும். இஸ்லாமிய சட்டத்தைப் பொருத்தள வில் அது வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் இடமளிக்கின்றதா என்பதே அதுவாகும். இது இஸ்லாமிய சட்டத்திற்கு மட்டுமன்றி சிந்தனைக் கும் பொருத்தமான வினாவாகும். இதற்கு விடைகாணும் முயற்சியில் நாம் இஸ்லாமிய வரலாற்றையும், அதில் முஸ்லிம் சிந்தனையாளர் களின் பங்களிப்பையும் நோக்கினால், இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் முஸ்லிம்கள் தங்களது மதக் கண்ணோட்டத்தை அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப விளங்கிச் செயல்பட்டுள் ளதை நாம் அவதானிக் முடிகிறது. இஸ்லாமிய சிந்தனையின் வரலாற்றில் பல்வேறு சிந்தனைப் பிரிவுகள், கருத்துகள் தோன்றியுள்ளமை இஸ்லாமிய சிந்தனையின் நெகிழ்வுத் தன்மையையும், முஸ்லிம் சிந்தனையாளர்களின் தொடர்ச்சியான செயல்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றது. இது தொடர்பாக இக்பால் புகழ் மிக்க கீழைத்தேய ஆய்வாளரான ஹோர்டன் (HORTON) என்பாரின் கருத்தை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“இஸ்லாத்தின் உட்பொருளும் உள்ளார்ந்த சக்தியும் எத்துணை விசாலமானது எனில் அது நாத்திகவாதத்தைத் தவிர தனது சூழலில் வாழ்ந்த மக்களின் கருத்துக்களில் தனக்குள் இணைத்துக் கொள்ள முடியுமான அனைத்தையும் உள்வாங்கி, அதனை இஸ்லாமிய மயப்படுத்தி தனது சிந்தனையை வழங்கியுள்ளது.”

பிற கருத்துக்களை தனக்குள் இணைத்து இசைவாக்கம் பெறச் செய்யும் இஸ்லாத்தின் இந்தப் பண்பு இஸ்லாமிய சிந்தனையின் வளர்ச்சியில் மட்டுமன்றி, இஸ்லாமிய சட்ட வளர்ச்சியிலும் பிரதிபலிக்கின்றது. இஸ்லாமிய சட்டத்தின் வரலாற்றையும் அதன் வளர்ச்சிப் படிவங்களையும் ஆராயும் எவரும் கால வளர்ச்சி, மாற்றத்திற்கு ஏற்ப அது நெகிழ்ந்து கொடுத்து, இசைவாக்கம் பெற்று வளர்ச்சியடைந்துள்ளதை அவதானிக்க முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக முஸ்லிம்களின் பாரம்பரியச் சிந்தனையைச் சார்ந்தவர்கள், பிக்ஹ் என்னும் இஸ்லாமிய சட்டக் கலையை விமர்சன ரீதியாக ஆராயத் தயங்குகின்றனர். இந்த முயற்சியை மேற் கொண்டால் அது பெரும்பான்மை மக்களின் அதிருப்தியைப் பெற்றுத்தரும் எனவும், தீவிர கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் சிந்திக்கின்றனர்.

இஸ்லாமிய சட்டம் அதன் வளர்ச்சியின் ஆரம்ப நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு வரை பத்தொன்பது சட்ட மரபுகளை உள்ளடக்கியிருந்தது. எமது சான்றோர்களான சட்ட அறிஞர்கள் சமூக மாற்றங்களை அனுசரித்து சட்ட விளக்கங்களை வழங்குவதில் எவ்வளவு முனைப்புடன் செயல்பட்டுள்ளனர் என்பதனை இதன் மூலம் நாம் அறிய முடிகின்றது.

இஸ்லாமிய சட்டத்தை நவீன காலத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் விளக்க முனைவோர் எமது மூதாதையர்கள் உருவாக்கிய சட்டப் பாரம்பரியத்தை முற்றிலும் புறக்கணித்து செயல்படல் முடியாது. ஏனெனில் வாழ்வு அதன் பழைய காலத்தின் சுமையை முதுகில் சுமந்து கொண்டே எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து செல்கின்றது. எந்த ஒரு சமூகமும் அதன் கடந்த காலத்தை ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் கடந்த காலமே அவர்களது நிகழ் காலத்தை உருவாக்கியுள்ளது. எனவே இஸ்லாத்தைப் பொருத்தளவில் பழைய பாரம்பரிய நிறுவனங்கள், மரபுகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் பணி மிகக் கவனமாக மேற்கொள்ளப்படல் வேண்டும். இவ்விடயத்தில் சமூக சிந்தனையை புனர்நிர்மாணம் செய்ய முனையும் ஒரு சீர்திருத்தவாதியின் பணியும், பொறுப்பும் மிகப் பாரதூரமானது.(5)

ஆழமான சிந்தனையோடும், தூர நோக்கோடும் முஸ்லிம் சிந்தனையாளர்கள் இஸ்லாமிய சிந்தனையை புனர்நிர்மாணம் செய்யும் பணியை மேற்கொள்ளுதல் வேண்டும். இதன் மூலம் மனித சமூகத்திற்கே மகத்தான பங்களிப்பைச் செய்யமுடியும். எனெனில் இன்று மனித சமூகம் மூன்று விடயங்களை வேண்டி நிற்கின்றது. பிரபஞ்சம் பற்றிய ஆத்மீக விளக்கம், தனி மனிதனின் ஆத்மீக விடுதலை, மனித சமூகத்தை ஆத்மிக அடிப்படையில் நெறிப்படுத்தி வழிகாட்டத்தக்க உலகப் பொதுமையான கோட்பாடுகள் ஆகிய மூன்றுமே அவையாகும் என இக்பால் கூறுகிறார்.(6)

1>2>3>4>5>6.(Iqbal- Reconstruction, P.143)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *