சமூக மாற்றமும் தனிமனித புனர் நிர்மானமும்- மாலிக் பின் நபியின் சில அவதானங்கள்

மனித சிந்தனையிலும், நாகரிகதத்திலும் ஐரோப்பிய சிந்தனை ஏற்படுத்திய எதிர்‌மறையான விளைவுகள் வரலாற்றில்‌ ஏற்படுத்திய தாக்கங்கள் மிகப் பாரதூரமானவையாகும். இந்தப் பாதகமான விளைவுகள் குறித்து மாலிக் பின் நபி பகுப்பாய்வு செய்து அவரது “விஜ்ஹதுல் ஆலமுல் இஸ்லாமி பீ மஹப்பில் மஃரக்””அல் ஆபாகுல் ஜஸாயிரிய்யா” போன்ற நூல்களில் மிக விரிவாக விளக்கியுள்ளார்.

அவரது கண்ணோட்டத்தில், இத்தகைய பாதகமான – எதிர்மறையான விளைவுகளில் ஒன்றாகக் காணப்படுவது, மனிதன் அவனது மனிதத்துவத்தை(இன்ஸானிய்யா)பேணிப்பாதுகாக்கும் பெறுமானங்கள் முற்றிலும் இழக்கப்பட்டு சமூக வாழ்வில் பொருட்கள், சாதனங்கள், உடமைகளின் எண்ணிக்கை முன்னுரிமை பெற்றதாகும். இந்த நிலை தோன்றியதும் மனிதன் அவனது கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் இழந்தான். அவனது சுயத்தின் சமநிலையும் இழக்கப்பட்டது. அவனது சிந்தனை குழம்பியது. இதன் விளைவாக மனிதன் நாளாந்த வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல தத்துவங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் தோன்றின. அவற்றைப் பரிசோதித்து நடைமுறைப்படுத்தும் தடுமாற்ற நிலைக்கு மனிதன் ஆளாக்கப்பட்டான்.  பொருட்களும் சாதனங்களும் மனித வாழ்வில் முன்னுரிமை பெற்ற நிலையில் மனிதன் எண்களின் உலகில் (ஆலமுல் அர்காம்) ஓர் அங்கமாக மாறினான். வெறும் சடமாக அவன் நோக்கி விளக்கப்பட்டான்.

மாலிக் பின் நபியின் கருத்துப்படி இஸ்லாமிய நோக்கு இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனிதன் புள்ளி விபரங்களுக்கும், அளவைப் பிரமாணங்களுக்கும், பரிசோதனைக் கூடங்களின் பகுப்பாய்வுகளுக்கும் அப்பாற்பட்டவன். இவைகளின் அடிப்படையில் அவனது இறையாளுமையை மதிப்பீடு செய்தல் எந்த வகையிலும் சாத்தியப்படாது. அதனைக் கடந்த ஒரு மகத்தான ஆளுமையை அவன் பெற்றுள்ளான். உண்மையான சமூக முன்னேற்றமும், சமூக மாற்றமும் மனிதனை  அவனது இயற்ைகைத் தன்மையின் அடிப்படையில் நோக்கினாலேயன்றி என்றுமே சாத்தியமாகாது. ஏனெனில் வராலாற்றை உருவாக்கி, போஷித்து, வளப்படுத்தும் பங்கை அவனாலன்றி வேறு எந்த சக்தியாலும் நிறைவேற்ற முடியாது.

 

ஆனால், சமகால முஸ்லிமில் இஸ்லாமிய மனிதத்துவக் கோட்பாட்டில் கட்டியெழுப்பப்பட்ட இஸ்லாமிய ஆளுமை வலுவிழந்துள்ளது. அறபு இஸ்லாமிய உலகில் 200 ஆண்டுகாலமாக நிலவிய மேற்கத்திய காலனித்துவ ஆதிக்கம் காரணமாகவும், மேற்குலக பல்கலைக்கழக கல்வியினால் மூளைச்சலவை செய்யப்பட்ட புத்திஜீவிகளின் செல்வாக்குக் காரணமாகவும் கணிசமான முஸ்லிம்கள் மேற்கத்திய சிந்தனை, கலாசார ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டனர். முஸ்லிம் உலகின் பிரச்சினைகளுக்கான தீர்வு ஐரோப்பிய மருந்துச்சாலைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பரிகாரங்களில் உள்ளது என்ற சிந்தனா அடிமைத்தனத்திற்கு இவர்கள் பலியாகினர். இதுவே முன்னேற்றத்திற்கான ஒரே வழியென்றும் உறுதியாக அவர்கள் விசுவாசித்தனர் என மாலிக் பின் நபி குறிப்பிடுகிறார்.

இவ்வாறு மேற்கத்திய உலகம் இஸ்லாமிய உலகில் அரசியல், கலாசார ஆதிக்கம் செலுத்தக் காரணமாக அமைந்தது எது என்பது மாலிக் பின் நபி விடைகாண முயற்சித்த ஒரு முக்கிய வினவாகும். அவரது பெரும்பாலான ஆய்வுகள் இந்தத் தேடலை அடிப்படையாக வைத்தே அமைந்திருந்தன. இந்த நிலைக்கு முஸ்லிம் சமூகத்தில் அரசியல் பலவீனம் தோன்றி வலிமை குன்றியமையும், சிந்தனை தேக்கநிலையடைந்து அறியாமை, மூடக்கொள்ளை ஆதிக்கம் பெற்று முஸ்லிம் சமூகம் இயங்கு நிலை இழந்தமையுமே முக்கிய காரணங்களாகும் எனக்குறிப்பிடும் மாலிக் பின் நபி, இந்த நிலையை ‘அல் காபிலிய்யது லில் இஸ்திஃமார்-காலனித்துவத்திற்கு ஆளாகும் பலவீன நிலை’ எனக்குறிப்பிடுகின்றார். சுய சிந்தனை இழந்து பிறாின் கருத்துக்கள், ஆதிக்கத்திற்கு ஆளாகும் பலவீன நிலையே காலனித்துவவாதிகள் முஸ்லிம் உலகில் ஆதிக்கம் செலுத்தக் காரணமாக அமைந்தது என அவர் இனம் கண்டார்.

‘இஸ்திஃமார்’ அல்லது காலனித்துவம் என்றால் என்ன என்பதை மாலிக் பின் நபி பின்வருமாறு விளக்குகிறார்:

“முஸ்லிம்கள் சுயமாகச் சிந்தித்து ஒரு நாகரிகம் எழுச்சி பெறக் காரணமாக அமையும் தனி மனிதர்களின் உள்ளார்ந்த ஆற்றல்கள், பௌதீக வளங்கள், காலத்தின் பயன்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான சாதனங்களை செயலிழக்கச் செய்து, சமூகத்தைப் பலவீனப்படுத்தி, பிறருக்கு  அடிமையாகும் மனோ நிலையை உருவாக்குவதே காலனித்துவ மாகும் ” என அவர் குறிப்பிடுகிறார். மாலிக் பின் நபியின் நோக்கில் மனிதன் காலத்தையும் இயற்கை வளங்களையும் உரிய முறையில் பயன்படுத்தும் போதே நாகரிகம் தோன்றுகின்றது. இன்ஸான்(மனிதன்), வக்த்(காலம்), துராப்(மண் அல்லது இயற்கை வளம்) ஆகிய மூன்றினதும் கூட்டுக் கலவையே நாகரிகமாகும். இன்ஸான்  வக்த்  துராப் ஸ்ரீ ஹளாரா என்ற சமன்பாட்டின் மூலம் இதனை அவர் விளக்குகின்றார்.

 

எனவே காலனித்துவத்தின் ஆதிக்கம், செல்வாக்கிலிருந்து விடுதலை பெறுவதற்கு வழியாக அமைவது முதலில் அத்தகைய ஆதிக்கம் உருவாகக் காரணமாக அமைந்த -காபிலிய்யதுல் இஸ்திஃமார்- நிலையிலிருந்து, அதாவது காலனித் துவ ஆதிக்கம் நிலைபெறக் காரணமாக அமைந்த பலவீன நிலையிலிருந்து மீட்சி பெற முயற்சிகளை மேற்கொள்வதாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இதற்கு ஆரம்பப்படியாக, ஐரோப்பிய நாகரிகத்தின் புறக்கவர்ச்சியில் மயங்கி அதனைப் பின்பபற்ற முனையும் தாழ்வுச்சிக்கலில் இருந்தும், முஸ்லிம் சமூகத்தில் புரையோடிக் கொண்டிருக் கின்ற மூடக்கொள்கைகளில் இருந்தும், எத்தகைய முயற்சியுமின்றி இறைவனில் பரஞ்சாட்டும் ‘தவக்குல்’ பற்றிய தவறான கோட்பாட்டிலிருந்தும் முஸ்லிம் சமூகத்தின் தனிமனிதனை விடுதலை செய்தல் வேண்டும்.

 

வெறுமனே புமியின் விடுதலை என்பது உண்மையான சுதந்திரம் எனக் கொள்ளப்படல் முடியாது என்பது அவரது உறுதியான நம்பிக்கை யாகும். புமியின் சுதந்திரத்துடன் மனிதனும் விடுதலை செய்யப்படுவதே காலனித்துவத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற ஒரே வழியாகும். சுதந்திரம் என்ற பெயரில் நாட்டின் புகோள வரைபடம் மாற்றமடைவதும், ஒரு காலப்பிரிவில் காலனித்துவவாதிகள் வகித்த பதவிகளை நாட்டு  மக்கள் பெற்றுக்கொள்ள வழி செய்வதும், பொதுஇடங்களில் அறிவித்தல் பலகைகளில் பிற மொழிகளுக்குப் பதிலாக அறபு மொழி இடம் பெறுவதும், மனிதனின்‌ சிந்தனைப் போக்கிலும் கருத்துப் பாங்கிலும் கண்ணோட்டத்திலும் மாற்றம் ஏற்படாதவரை வெறுமனே புறக்கவர்ச்சியை ஏற்படுத்தும் அம்சங்கள் மட்டுமேயாகும்.

 

ஆனால் இஸ்லாமிய உலகில் தோன்றிய சுதந்திர இயக்கங்கள் இழைத்த பெரும் தவறு என்னவெனில், காலனித்துவவாதிகளை தங்களது புமியில் இருந்து வெளியேற்றும் முயற்சியை மேற்கொண்ட காலகட்டத்தில், காலனித்துவ சிந்தனைக்கு அடிமைப்பட்டிருந்த தனிமனிதனின் புனர்நிர்மாணத்திற்கான எந்தவொரு ஆக்கபுர்வ முயற்சியையும் மெற்கொள்ளத் தவறியமையாகும். எத்தகைய புரட்சி இயக்கத்திலும் வெற்றி என்பது தனிமனிதர்களில் உள்ளார்ந்த மாற்றத்தை ஏற்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. ஏனெனில் தனிமனிதனே அதன் அடிப்படையாகவும், அது தொடர்ந்து நிலைப்பதை உறுதி செய்பவனாகவும் உள்ளான். எந்தவொரு சமூக மாற்றத்தையும் உறுதி செய்வதற்கு ஒரே வெற்றிகரமான வழியாக விளங்குவது அது தொடர்பாக அல்குர்ஆன் குறிப்பிடும் சமூக மாற்றத்திற்கான சமூக விதியைப் பின்பற்றுவதாகும்.

“ஒரு சமூகம் தனது உள்ளங்களில் உள்ளவற்றை மாற்றாதவரை நிச்சயமாக அல்லாஹ் அந்த சமூகத்தில் உள்ளவற்றை மாற்றுவதில்லை” (அர்ரஃத்:11)

 

முஸ்லிம் உலகில் கால ஓட்டத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக தனிமனிதர் களைப் புனர்நிர்மாணம் செய்யும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அது நிச்சயம் காலனித் துத்தினால் ஒடுக்கப்பட்டு பலவீனமடைந்த மக்களின் எழுச்சியின் ஆரம்பமாக அமையப்போவதை காலனித்துவவாதிகள் உணர்ந்தனர். இந்நிலையில் மக்களைத் திசை திருப்பும் நோக்கோடும், அவர்களைப் பலவீனப்படுத்தும் நோக்கோடும் உலக வாழ்வின் புறக்கவர்ச்சியினை அழகுபடுத்தி்ச் சித்தரித்துக்காட்டவும், வாழ்க்கையின் யதார்த்தத்தை திரித்தும் சிதைத்தும் சித்தரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடமைகளைவிட உரிமைகளுக்கு மிக அழுத்தம் கொடுக்கப்பட்டது.  சமூக நன்மையை விட தனிமனிதவாதத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்கும் முயற்‌சி காணப்பட்டது.

இது முஸ்லிம் சமூகத்தின் ஒருமைப் பாட்டையும் கட்டுக்கோப்பையும் குலைத்து, காலனித்துவ விடுதலைக்குப்பின்னா. ஏற்பட்ட சமூக எழுச்சியைத் தடுப்பதற்கு மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். ஏனெனில் தனிமனிதவாதக்கோட்பாடு (INDIVIDUALISM) மிகப்பாரதூரமான விளைவுகளைக் கொண்டது. மனித இனத்தின் முன்னேற்றம், வளர்ச்சி, நல்வாழ்வு  என்பன தனிமனிதர்களின் பரஸ்பர ஒத்துழைப் பிலேயே தங்கியுள்ளது. நாகரிகத்தை உருவாக்குவதற்கு மூன்று அம்சங்களின் கூட்டிணைப்பு அவசியமாக உள்ளது. மனிதன் (இன்ஸான்), பௌதீக வளங்கள்(துராப்),  காலம்(வக்த்) ஆகிய மூன்றினதும் கூட்டிணைப்பே நாகரிகம் தோற்றம் பெறக் காரணமாக அமைகின்றது என்பது மாலிக் பின் நபியின் கோட்பாடாகும். அதாவது மனிதன் தன் ஆற்றல்களையும், பௌதீக வளங்களையும், காலத்தையும் ஒன்றிணைத்து உரிய முறையில் பயன்படுத்தும் போது நாகரிகம் உருவாகின்றது. இவ்வாறு நாகரிகம் உருவாவதற்கு தனிமனித முயற்சி மட்டும் போதுமானதாக அமையாது. ஏனெனில் மக்களின் ஒட்டுமொத்த முயற்சியும் பரஸ்பர கூட்டுறவுமே  இன்ஸான், துராப், வக்‌த் ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டு நாகரிகம் உருவாவதை சாத்தியமாக்குகின்றது. மேற்கத்திய தனிமனிதவாதம் இத்தகைய கூட்டு முயற்சிக்கும், இஸ்லாமிய சமூக கட்டுக்கோப்புக்கும் முற்றிலும் முரணாக அமைகின்றது.

எனவே காலனித்துவவாதம், காலனித்துவ வாதத்திற்குப் பலியாகும் நிலை-காபிலியய்யா லில் இஸ்தி.மார்- ஆகியவற்றிற்கு எதிராகப் போராடுவது போன்றே தனிமனிதவாதத்திற்கு  எதிராகவும் குரல் எழுப்பப்படல் வேண்டும் என மாலிக் பின் நபி குறிப்பிடுகிறார்.

இதற்கான வகையில் மக்களின் சிந்தனை நெறிப்படுத்தப்படல் வேண்டும். அதாவது சமூகத்தில்  ஒரு தனிமனிதன் தனது சிந்தனை, செயல்முறை, வாழ்வியலை எந்த வகையில் அமைத்துக் கொள்ளல் வேண்டும், சமூகத்தின் பிற அங்கத்தவர்களுடனான தொடர்புகள், உறவுகள் எந்த வகையில் அமைதல் வேண்டும் என்பன போன்ற விடயங்களில் ஒவ்வொரு மனிதனும் அறிவுட்டப்படல் வேண்டும். அப்பொழுதே அவன் தனது வரலாற்றுப் பங்கினை உரிய முறையில் செலுத்த முடியும். இவ்வாறு தனிமனிதனுக்குப் பண்பாட்டுப் பயிற்சி வழங்கி, அதனூடாக சமூக மாற்றம் காண விழைவது சமூகமாற்றம் தொடர்பான குர்ஆன் குறிப்பிடும் அடிப்படை விதியாகும்.

“வேதம் வழங்கப்பட்டவர்கள்‌ (அனைவரும்) ஒரே தரத்தில் உள்ளவர்கள் அல்லர். சத்தியத்தில் நிலைத்து நின்று , இரவு நேரங்களில் ஸுஜூதுடைய நிலையில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்ற ஒரு கூட்டத்தாரும் வேதக்காரர்களில் உள்ளனர்”(ஆலஇம்ரான்:113)

தனிமனிதனுக்கும், சமூகத்திற்குமிடையில் உள்ள இறுக்கமான பிணைப்பின் அடிப்படையில் வழங்கப்படும் இப்பயிற்‌சியானது சமூகத்தில் ஒழுங்கையும்,  கட்டுக்கோப்பையும் உருவாக்கத் துணைபுரியும். ஏனெனில் சீர்திருத்தம் என்பது ஒரு கட்டுக்கோப்பிற்கு அமைய, ஒரு குறிக்கோளை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும்போதே அது வெற்றிகரமானதாக அமைய முடியும்.  இது சமூகத்தில் குழப்பநிலையையும் மயக்கத்தையும் போக்கி, ஒழுங்கையும் சீரமைப்பையும் தோற்றுவிக்கும். ஏனெனில் காலனித்துவம்-குறிப்பாக ஸியோனிஸ காலனித்துவம்-மிக திட்டமிடப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் முஸ்லிம் உலகை எதிர்கொள்ளும் போது, முஸ்லிம் உலகம் மயக்கத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்த நிலையில் அதனை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பது இது தொடர்பாக நாம் எழுப்ப வேண்டிய முக்கிய வினாவாகும் என மாலிக் பின் நபி குறிப்பிடுகிறார்.

 

ஒட்டு மொத்தமாக நோக்கமிடத்து, சமூக மாற்றம் என்பது தனிமனிதனிலிருந்தே ஆரம்பமாகின்றது. ஏனெனில் படைப்புகளுள் அவன் மட்டுமே ஒரு சமூகத்தை நிர்மாணித்து நாகரிகத்தை  தோற்றுவிக்கும் பணியில் தலைமைத்துவத்தை வழங்கும் ஆற்றலைப் பெற்றுள்ளான். சடப்பொருட் கள், சாதனங்கள், உபகரணங்கள் என்பன எவ்வளவு சக்தியும் பலமும் பொருந்தியனவாக இருந்தாலும் அவற்றினால் எண்ணிக்கையை  (QUANTITY) வழங்க முடியுமேயன்றி,ஒரு பண்பை (QUALITY) வழங்குதல் முடியாது.  மனிதன் சடப்பொருட்களையும் சாதனங்களையும் ஒரு குறிப்பிட்ட வகையில் பயன்படுத்தும்போதே அவை ஒரு பண்பைப் பெறுகின்றன. எனவே மனிதனை சீரமைக்கும் முயற்சி ஆரம்பத்தில் மேற்கொள்ளப் படல் வேண்டும். இதற்கு அடிப்படையாக ஒவ்வொரு தனிமனிதனும் முதலில் தன்னை இனங்கண்டு, சீர்படுத்தல் வேண்டும். இது நிகழாதபட்சதத்தில் ஒரு முஸ்லிம் தன்னை பாதுகாத்துக் கொள்ளவோ, பிறரை மீட்சிபெறச் செய்யவோ சக்தி பெறமாட்டான். இறைவனால் மனித சமூகத்துக்கு வழங்கப்பட்ட தூது மனித சமூகத்தில் மாற்றத்தை நோக்கமாகக் கொண்டது என நாம் உணர்ந்தால் இதற்கு ஆரம்பப் படியாக உள்ளங்களில் மாற்றங்கள் நிகழ்வது அவசியமாகும். ஒரு முஸ்லிம் இம்மாற்றத்தை அடைவதற்காக மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் செயல்படவேண்டும் என மாலிக் பின் நபி கூறுகிறார்:

  1. தன்னை அறிதல்.
  2. பிறரை அறிதல்-பிறரைப் புறக்கணிப்பதையும் பிறா் மீது ஆதிக்கம் செலுத்தலையும் தவிர்த்தல்.
  3. “காபிலிய்யதுல் இஸ்திஃமார்” என்னும் காலனித்துவத்திற்கு அடிமைப்படும் மனநிலையை தோற்றுவிக்கும் பலவீனங்களில் இருந்தும், குறைபாடுகளில் இருந்தும் விடுபட்ட நிலையில் பிறருடன் கனிவுடன் பழகி தன்னை பிறருக்கு அறிமுகம் செய்தல்.

முதலாவது நிபந்தனையின் அடிப்படை நோக்கம், மனிதன் தன்னில் பொதிந்துள்ள ஆற்றல்களை, திறன்களை இனங்கண்டு அவற்றை வெளிப்படுத்தலாகும். அதே நேரத்தில் தனது தகைமைக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட விடயங்களை அவன் தவிர்த்தல் வேண்டும். ஒருவன்  இந்தவகையில் செயல்படாத பட்சத்தில் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அழிவையே தோற்றுவிப்பான். எனவே ஒரு செயலில் வெறுமனே தூய்மையான எண்ணங்களும் நோக்கங்களும் மட்டும் அமைந்திருத்தல் போதாது. அச்செயலை மேற்கொள்வதற்கான ஆற்றலும் திறமையும் காணப்படல் வேண்டும். இந்த முறையைப் பின்பற்றுவதையே அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“நபியே! எதைப்பற்றி உமக்கு தீர்க்கமான அறிவு இல்லையோ அதனைத் தொடராதீர். ஏனெனில் நிச்சயமாக செவி, பார்வை, இதயம் ஆகிய ஒவ்வொன்றும் இதனைப்பற்றி மறுமையில் விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.           (பனூஇஸ்றாயீீல்:36)

இரண்டாவது நிபந்தனை பிறரைச் சீர்திருத்தும் பணியோடு தொடர்புடையது. இதில் பிறா் மீது ஆதிக்கம் செலுத்தும் மேலாதிக்க உணர்வு முற்றிலும் தவிர்க்கப்படல் வேண்டும். அல்குர்ஆன் பிறருடன் கனிவுடனும் பணிவாகவும் பழகும்படி கட்டளையிடுகின்றது. ஏனெனில் மனிதன் எத்துணை ஆற்றலும் சக்தியும் பெற்றவனாக விளங்கினாலும் அவன் இறைவனின் ஒரு சிருஷ்டியாகவே உள்ளான். அவனுக்கும் மேலால் அவனைவிட வல்லமையும் சக்தியும் ஆற்றலும் உள்ள ஒருவன் இருக்கின்றான். என்ற உண்மையை அவன் உணர்தல் வேண்டும். எனவேதான் அல்குர்ஆன் ஒருவன் தனது சக்தியிலும் ஆற்றலிலும் மதி மயங்கி, பிறா் மீது ஆதிக்கம் செலுத்துவதை வன்மையாகக் கண்டிக்கின்றது.

“மேலும் புமியில் கர்வம் கொண்டு நீர் நடக்க வேண்டாம். (அவ்வாறு நடப்பதால்) நீர் புமியை ஆழ்ந்து பிளந்து விடமாட்டீர். இன்னும் உயரத்தால் மலைகளை அடைந்து விடவே மாட்டீர்.                    (பனூஇஸ்ராயீல்:37)

மூன்றாவது நிபந்தனையாக அமைவது, தனது கனிவு, அன்பு, குணஒழுக்கம், முன்மாதிரியின் காரணமாக தனது கருத்துக்களுக்கு மக்கள் செவிமடுக்கும் நிலையைப் பெறுதலாகும். இதன் காரணமாகவே அழைப்புப் பணி தொடர்பாக பின்வருமாறு அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கின்றான்:

“நபியே! நீர் விவேகத்தைக்கொண்டும் அழகான வார்த்தைகளைக் கொண்டும் உமதிரட்சகனின் வழியின் பக்கம் மக்களை அழைப்பீராக!              (அந்நஹ்ல்:125)

எனவே சமூக மறுமலர்ச்சியையும் புனர்நிர்மாணத்தையும் இலட்சியமாகக் கொண்ட ஒரு முஸ்லிம,் அடிப்படையில் தன்னை உரிய முறையில் மதிப்பீடு செய்து அறிந்து கொள்ளல் வேண்டும். சமுகத்தின் ஏனைய அங்கத்தவர்களை அன்போடும் கனிவோடும் அணுகி அவர்கள் பற்றிய புரிந்துணர்வையும் பெறல் வேண்டும். அவர்களை இறைதிருப்தியைப் பெறும் ஒரே நோக்கோடு நேசித்தல் வேண்டும். இந்த நேச உணர்வு அவனுக்கும் பிறருக்குமிடையே ஓர் இணைப்புப் பாலமாக அமைந்து உண்மையான இஸ்லாமிய நேசத்தின் உஷ்ண உணர்வுகளை ஏற்படுத்தும். இறைதிருப்தியின் அடிப்படையில் அமையும் இந்த அன்புணர்வு உள்ளங்களைப் பிணைத்து, நபி (ஸல்)் அவர்கள் ஆரம்ப கால இஸ்லாமிய சமுகத்தில் முஹாஜிர்களுக்கும் அன்ஸார்களுக்குமிடையில் உருவாக்கிய சகோதரத்துவக் கட்டுக்கோப்பு போன்ற ஒரு உறுதியான சமூகக் கட்டுக் கோப்பை தோற்றுவிக்கும்.

இன்று மனித சமூகம் அளவை, எண்ணிக்கை, பிரமாணம் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சடவாதத்தின் இரும்புப் பிடியில் சிக்கி வேதனைக்குரல் எழுப்புகின்றது.  இந்த சடவாத நாகரிகத்தின் ஆதிக்கத்திற்குட்பட்ட மனிதன் நிம்மதியையும் மனிதத்துவத்தையும் தேடி தடுமாறி அலைகின்றான். அந்தத் தேடுதலை ஐரோப்பிய சிந்தனையினாலோ அல்லது ஏனைய தத்துவங்களினாலோ தீர்த்தல் முடியாது. அதற்கான தீர்வை இஸ்லாம் மட்டுமே வழங்க முடியும்.

சமகால உலகின் இந்த யதார்த்த நிலையின் முன்னால் ஒரு முஸ்லிமின் பொறுப்பு மகத்தானது. அவனது சமூகத்தினதும் அவன் வாழும் உலகினதும் நிலையானது, ஐரோப்பிய சிந்தனை அபகரித்துக்கொண்ட சுதந்திரத்தையும் மனிதத்துவத்தையும் மீண்டும் மனித இனத்திற்குப் பெற்றுக்கொடுக்க அவனது பங்கை எதிர்பார்க் கின்றது. இந்தப் பங்கை நிறைவேற்றுவதற்கான ஆரம்பம் மனிதனின் புனர்நிர்மாணத்திலிருந்தே ஆரம்பிக்கப்படல் வேண்டும். எந்த மாற்றத்தினதும், நிர்மாணத்தினதும் ஆரம்பமாகவும் இலட்சியமாகவும் மனிதனே உள்ளான் என மாலிக் பின் நபி குறிப்பிடுகின்றார்.

 

உசாத்துணை நூல்கள்:

  1. மாலிக் பின் நபி- ஸிராஉல் பிக்ர் பில் பிலாதில் முஸ்தஃமர், டமஸ்கஸ்: 1977
  2. மாலிக் பின் நபி – தாருல் முஸ்லிம் வ ரிஸாலதுஹு, டமஸ்கஸ்:1978
  3. கலாநிதி அஸ்அத் அஸ்-ஸஹ்மராானீ, மாலிக் பின் நபி, முபக்கிரன் இஸ்லாஹிய்யன், பெய்ருத்:1986

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *