இஸ்லாமியக் கலா நிலையங்களின் தோற்றமும் வளர்ச்சியும் – கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி
இஸ்லாத்துக்கும் அறிவுக்கும் இடையில் காணப்படும் தொடர்பும் இணைப்பும் மிக இறுக்கமானதாகும். ‘இக்ரஃ’ ‘ஓதுவீராக ‘ என்ற வார்த்தையுடனேயே இஸ்லாமிய அழைப்பின் வரலாறே ஆரம்பமாகின்றது. அந்த வார்த்தையுடன் ஆரம்பமாகும் அல்-குர்ஆனின் முதல் அத்தியாயம் ‘கலம்’ என்னும் எழுதுகோல் பற்றியும் குறிப்பிடுகின்றது. அல்-குர்ஆனை மக்களுக்கு ஓதிக் காண்பித்து, அதன் திருவசனங்களை விளக்கும் ஓர் ஆசானாக பெருமானார் நபி (ஸல்) அவர்களை அல்-குர்ஆன் சித்தரிக்கின்றது.
‘அவன்தான் எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களை பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.’ (ஸூரா ஜும்ஆ: 2)
‘நிச்சயமாக நான் ஓர் ஆசிரியனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்’ (இன்னமா புஇஸ்து முஅல்லிமன்) எனப் பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இஸ்லாத்தின் ஆரம்ப அறிவோடும், அறிவுப்பணியோடும் அறிவுப்போதனையோடும் ஆரம்பமாகியது. றஸூல் (ஸல்) அவர்கள் அல் குர்ஆனின் திருவசனங்களை மக்களுக்கு போதித்தது மட்டுமன்றி, அறிவுதேடும் வேட்கையையும் தாண்டி அறிவுப் போதனைக்காக ஆசிரியர்களையும் அனுப்பிவைத்தார்கள். இத்தகையோரே இஸ்லாமிய கல்வி வரலாற்றில் தோன்றிய முதல் ஆசிரியர்களாகவும் மதீனாவில் எழுப்பப்பட்ட மஸ்ஜிதுல் நபவி முதல் கல்வி கூடமாகவும் அல் குர்ஆன் முதல் பாடநூலாகவும் அமைந்தன.
பெருமானார் (ஸல்) அவர்களது காலப் பிரிவில் மஸ்ஜிதுந் நபவி இறை வணக்கத்திற்கான பள்ளிவாசலாக மட்டுமன்றி, அறிவு வளர்ச்சிக்கான கலைக் கூடமாகவும் விளங்கியது. குலபாஉர்ராஷிதீன்களின் காலப்பிரிவிலும் மஸ்ஜிதுகள் இதே நிலையை வகித்தன. அல்-குர்ஆன் போதனைகள், ஹதீஸ் விரிவுரைகள் அங்கு நடைபெற்றன. சட்ட வல்லுனர்கள் சட்ட விளக்கங்களை அங்கு அளித்தனர். அரபிலக்கண, இலக்கியப் போதனைகள் கூட மஸ்ஜிதுகளில் நடைபெற்றன. பிரபல சட்ட அறிஞர் ரபீ அதுர் ரஃய், மதீனாவில் மஸ்ஜிதுந் நபவியில் அமர்ந்திருப்பார்களென்றும் அவர்களது அறிவுவட்டத்தில் (ஹல்கா) மாலிக் இப்னு அனஸ் போன்ற மதீனாவின் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்து அவர்களது சட்ட விளக்கங்களைக் கேட்டறிந்து படிப்பார்களென்றும் இப்னு கல்லிகான் குறிப்பிடுகின்றார். 1
உமையாக் காலப்பிரிவில் பஸராவிலிருந்த மஸ்ஜிதுகளில் மார்க்கக் கல்விப் போதனைகள் மட்டுமன்றி, அரபிலக்கணம், இலக்கியம் பற்றிய விரிவுரைகளும் நடைபெற்றன. இமாம் ஹஸனுல் பஸரி இம்மஸ்ஜிதில் விரிவுரை நிகழ்த்திய புகழ்மிக்க அறிஞர்களுள் ஒருவராக விளங்கினார். அவர்களது விரிவுரைகளுக்குச் செவிமடுத்து கருத்து வேற்றுமை காரணமாக அவரது மாணவர் வாஸில் இப்னு அதா பிரிந்து சென்றதே முஃதஸிலா இயக்கத்தின் தோற்றத்திற்கான ஆரம்பப்படியாக அமைந்தது.2
அப்பாஸியக் காலப்பிரிவில் மஸ்ஜித்களில் மார்க்கப் போதனைகள் மட்டுமன்றி ஏனைய கலைகள் பற்றிய விரிவுரைகள், விளக்கங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டன. பக்தாதிலுள்ள கலீபா மன்ஸூரின் மஸ்ஜிதில் முஃதஸிலாக்கள் “இல்முல கலாம்“ பற்றிய விளக்கங்களை அளித்தனர். குமைத் இப்னு ஸைத், ஹம்மத் அர் ராஸியா ஆகிய இருவரும் கூபாவிள்ள மஸ்ஜிதில் அரபுக் கவிதைகள் பற்றிய விமர்சனங்களை அளித்தனர். ஸ்பெயினிலும் மஸ்ஜிதுகள் இதே நிலையை வகித்தன. கொர்டோவா, கிரனாடா ஆகிய நகர்களில் காணப்பட்ட மஸ்ஜித்கள் தலை சிறந்த கலா நிலையங்களாவும் பணிபுரிந்தன.3
மஸ்ஜித்களில் நடைபெற்ற கல்விப் போதனையோடு கல்வி வளர்ச்சிக்கான தனிப்பட்ட நிறுவனங்களும் தோற்றமெடுத்தன. இஸ்லாமிய கல்வி வரலாற்றில் மிக ஆரம்பத்தில் தோன்றிய ஆரம்பப் பாடசாலைகள் ‘குத்தாப்’ என அழைக்கப்பட்டன. இத்தகைய ‘குத்தாப்கள்’ அரபுத் தீபகற்பத்தில் மட்டுமன்றி, முஸ்லிம் உலகில் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டன. உமையாக்களின் ஆரம்ப காலப்பகுதிகளில் ஆரம்பக் கல்விக்கான இந்நிறுவனம் மிக உறுதியான அமைப்பேற்று முஸ்லிம் உலகில் பரந்து காணப்பட்டன. இத்தகைய குத்தாப்கள் பலவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் நாம் காணமுடிகின்றது. தாயிபில், கூபாவின் கவர்னரான ஹஜ்ஜாஜ் ஒரு குத்தாபை நிறுவினார். அத்தஹ்ஹாக் என்பார் கூபாவில் நடத்திய குத்தாப் பற்றிய குறிப்புக்கள் அல்-ஜாஹிஸ் எழுதிய ‘அல்-பயான்’ என்னும் நூலில் காணப்படுகின்றன.4 பெரும்பாலும் இத்தகைய குத்தாப்கள் வசதிபடைத்த, தாராள உள்ளம் கொண்ட முஸ்லிம் செல்வந்தர்களால் நிறுவப்பட்டன.
இக்காலகட்டங்களில் பொதுவாக இலவசமாகவே பாட போதனைகள் நடைபெற்றன. சிலபோது எல்லோராலும் கொடுக்கப்படக் கூடிய மிகச் சாதாரண தொகை அறவிடப்பட்டது. குத்தாப்களின் பாடத்திட்டம் அல்-குர்ஆனை மையமாக வைத்தே அமைந்திருந்தது. ஒருவனுக்கு தனது சன்மார்க்கக் கடமைகளையும், கிரிகைகளையும் நிறைவேற்றத் துணைபுரியும் வகையில் அல்-குர்ஆனை ஓதும் தகைமையை வழங்கும் வகையில் குத்தாப்களின் கல்விப்போதனை முறை காணப்பட்டது.
மாணவர்கள் தமது பத்தாவது வயதை அடையும் போது அல்-குர்ஆன் முழுவதையும் மனனம் செய்யும் ஆற்றலை குத்தாப்களில் பெற்றனர். ஆனால் நினைவாற்றலும் விவேகமும் மிக்க மாணவர் அவ்வயதை அடையும் முன்னரே இத்திறமையைப் பெற்றனர். உமர் இப்னு அஹமத் ஒன்பதாவது வயதிலும், அத்தபரீ ஏழாவது வயதிலும் அல்-குர்ஆனை மனனம் செய்து முடித்தனர் என்று வரலாறு குறிப்பிடுகின்றது.
குத்தாப்களில் அல்-குர்ஆனோடு, அதான், வுளூ, தொழுகை பற்றிய விதிகளும் போதிக்கப்பட்டன. நபிமார்களின் சரிதைகள், பெரியார்களின் வாழ்வில் நடந்த வரலாற்று சம்பவங்கள் ( ஹிகாயதுஸ் ஸாலிஹீன் ) ஆகியவற்றோடு இலக்கியம், எழுத்துக்கலை, அடிப்படை இலக்கணம் என்பனவும் போதிக்கப்பட்டன. குத்தாப்களில் பின்பற்றப்பட்ட பாடத்திட்டத்தின் பொதுப்பண்புகளே இவையாகும். ஆனால் இடத்துக்கிடம் பாடத்திட்டங்களில் சில மாற்றங்களும் காணப்பட்டன. உதாரணமாக மொரோக்கோ, அல்ஜீரியா, போன்ற பகுதிகளில் அல் குர்ஆனோடு வேறு எந்த நூற்களும் கற்பிக்கப்படவில்லை. அல்குர்ஆனை முழுமையாகக் கற்ற பின்னரே ஏனைய பாடங்கள் போதிக்கப்பட்டன. ஆனால் ஸ்பெயினில் இதற்கு வித்தியாசமான முறை பின்பற்றப்பட்டது. அங்கு அல்-குர்ஆனோடு கவிதைகள், இலக்கணத்தின் அடிப்படைகள், எழுத்துக்கலை என்பனவும் போதிக்கப்பட்டன.
குத்தாப்களில் ஒரு ஒழுங்கான நேர அட்டவணை காணப்படவில்லை. காலை முதல் பகல் வரையும், பகல் உணவுக்குப் பிறகு மாலையில் சூரியன் மறையும் வரையும் பாட போதனைகள் நடைபெறும். குறிப்பிட்ட பாடம் குறிப்பிட்ட நேரத்தில் கற்பிக்கப்படல் வேண்டும் என்ற ஒழுங்குமுறை இருக்கவில்லை. பொதுவாக வியாழன், வெள்ளிக்கிழமைகள் விடுமுறை நாட்களாக அமைந்தன. ஒரு மாணவன் அல்-குர்ஆன் முழுவதையும் ஓதி முடிக்கும் நாள் மிக்க கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களின் பெற்றோர் அத்தினத்தில் விருந்துபசாரமளித்தும், ஆசிரியருக்கு நன்கொடைகள் வழங்கியும் சிறப்பிப்பர். மாணவன் ஒட்டகத்தின் மீது ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டான். இவ்வாறு ஒருவன் அல்-குர்ஆனை ஓதிப் பூரணப்படுத்தும் நாளன்று கொண்டாடப்படும் விழா மக்காவில் ‘இபாதா’ என்றும் மக்ரிபில் ‘ தக்ரீஜா ‘ எனவும் அழைக்கப்பட்டது.
குத்தாப் எனும் இவ்வாரம்பப் பாடசாலைகள், இஸ்லாமியக் கல்வியின் வளர்ச்சியில் ஆரம்பகாலப் பிரிவில் மிக முக்கிய பங்கை வகித்தன. ஆனால் எத்தகைய கட்டுப்பாடும் ஒழுங்கான மேற்பார்வையுமற்ற அதன் அமைப்பு முறையும், காலவளர்ச்சிக்கும் மாற்றங்களுக்குமேற்ப மாற்றமடையாத அதன் பாடநெறிகளும், காலப்போக்கில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தின.5
குத்தாப் எனும் இவ்வாரம்பப் பாடசாலை அமைப்பு முறைக்கு அடுத்ததாக இஸ்லாமிய கலா நிலையங்களின் வளர்ச்சிப் பருவத்தில் முக்கியத்துவம் பெறுவது ‘ மத்ரஸா ‘ என்னும் நிறுவனமாகும். மத்ரஸா என்னும் நிறுவனம் ஸஹாபாக்களினதோ, தாபியீன்களினதோ காலப்பிரிவில் காணப்படவில்லை. இஸ்லாத்தின் ஆரம்பகாலப் பிரிவிலிருந்தே மஸ்ஜித்களே கல்விக் கூடங்களாகவும் விளங்கின. மஸ்ஜிதுகளில் ஒரு பகுதியிலேயே சன்மார்க்கக் கலைகளும்போதிக்கப்பட்டன.6 ஆனால் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் பிரிவில் (கி.பி. ஒன்பதாம் நூற்றண்டின் ஆரம்ப தசாப்தம் ) மஸ்ஜிதுகளிலிருந்து வேறுபட்டு இயங்கும் மத்ரஸா என்னும் நிறுவனத்தின் தோற்றத்தை நாம் காண முடிகின்றது. இஸ்லாமிய வரலாற்றில் முதலாவது மத்ரஸாவின் ஸ்தாபகராக நிஸாமுல் முல்க் கருதப்படுகின்றார். அவர் பிறப்பதற்கு முன்னரேயே நிஷாபூரில் மத்ரஸா பைஹகீயா என்னும் பெயரில் ஒரு மத்ரஸா காணப்பட்டதாக அல்-ஸுப்கி தனது ‘ தபகாதுஷ் ஷாபிஇய்யா ‘ வில் குறிப்பிடுன்றார். எனவே நிஸாமுல் முல்கிற்கு முன்னரே மத்ரஸாக்கள் காணப்பட்டன. ஆனால் பெருமளவில் மத்ரஸாக்களை நிறுவியும், மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வியைப் பெறும்வகையில் ஒரு புதிய முறையிலான கல்விக் கூடங்களை அமைத்தும், இத்துரையில் ஒரு மலர்ச்சி மிக்க காலப்பிரிவை தோற்றுவித்தவர் என்றவகையில் மத்ரஸா கல்வி வரலாற்றில் நிஸாமுல் முல்க் சிறப்பிடம் பெறுகின்றார்.
நிஸாமுல் முல்கின் காலப்பிரிவிலும் (ஹி. 456 – 485) அவரைத் தொடர்ந்த காலப் பிரிவிலும் ஈராக்கிலும், குராஸானிலும் மத்ரஸாக்கள் பரவலாக நிறுவப்பட்டன. நிஸாமுல் முல்க் பக்தாதிலும் நிஷாபூரிலும் நிறுவிய புகழ் வாய்ந்த மத்ரஸாக்களோடு மட்டும் திருப்தியடையாது, மர்வ், ஹீரத், பல்க், மவ்ஸில் ஆகிய இடங்களிலும் மத்ரஸாக்களை ஏற்படுத்தினார்.7
ஹ்ஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டளவில் நிஸாமுல் முல்கினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பணி நீண்ட காலம் நீடித்தது. கி. பி. 1234ம் ஆண்டு கலீபா முஸ்தலீன்ஸிர் பில்லாஹ் முஸ்தன்ஸிரியா மத்ரஸாவை உருவாக்கினார். பக்தாதில் மிக முக்கியம் பெற்று விளங்கிய நிஸாமியா, முஸ்தன்ஸிரியா ஆகிய மத்ரஸாக்களிலும் கி. பி. 1258-ல் நடைபெற்ற மங்கோலியப் படை எடுப்பின் பேரழிவில் நின்றும் தப்பி ஹிஜ்ரி 8-ம் நூற்றண்டுவரை நிலைத்திருப்பதை இப்னு பதூதாவின் பிரயாணக் குறிப்புக்கள் உணர்த்துகின்றன. இது தவிற இப்னு பதூதா, வாஸித் துஸ்தர், ஸீராஸ் ஆகிய பகுதிகளில் அவர் கண்ட பல மத்ரஸாக்கள் பற்றியும் தனது பிரயாண நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பக்தாதில் அறிவின் பேரொளியை அணையச் செய்து பேரழிவை ஏற்படுத்திய மங்கோலியர்களே காலப்போக்கில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து பல மத்ரஸாக்களை நிறுவினர். மங்கோலியத் தலைவன் ஹலாகு கானின் தாய் புகாராவில் ஆயிரம் மாணவர்கள் கல்வி பயிலும் இரண்டு மத்ரஸாக்களை நிறுவினார். மத்திய ஆசியாவில் தைமூரியர்களின் கீழ் மத்ரஸாக்களின் வளர்ச்சி உச்ச கட்டத்தை அடைந்தது.
ஈராக்கிலும் சிரியாவிலும் மத்ரஸாக்களை அமைக்கும் பணி ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு முதல் மிகத் துரித வளர்ச்சியைக் கண்டது. அய்யூபி ஆட்சியாளர் நூருத்தீன் ஸன்ஜி டமஸ்கஸ், ஹலப். ஹிம்ஸ், பல்க் ஆகிய இடங்களில் ஷாபி மத்ஹபின் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த பல மத்ரஸாக்களை நிறுவினார். சிரியாவில் மத்ரஸாக்களை நிறுவிய பணியில் மிகப் புகழ்பெற்று விளங்குபவர் அய்யூபி ஆட்சியாளரான ஸலாஹுத்தீன் அய்யூபி ( கி. பி. 1138 – 1193 ) ஆவர்.
நிஸாமுல் முல்கிற்கு அடுத்ததாக மத்ரஸாக்களை நிறுவுவதில் புகழ்பெற்று விளங்கியவர் இவராவார். இவரது காலப்பிரிவில்தான் ஹிஜாஸிலும், வட ஆபிரிக்காவிலும் மத்ரஸாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.9
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மத்ரஸாக்களுள் மிகப் புகழ்பெற்று விளங்கிய இரு மத்ரஸாக்களான நிஸாமிய்யா, ஸ்தன்ஸிகிய்யா ஆகியன பற்றி ஓரளவு விரிவாக ஆராய்தல் அக்கால மத்ரஸாக்களின் அமைப்பு முறைகள் பற்றி விளங்கிக்கொள்ள துணைபுரியும்.
இஸ்லாமிய ஆட்சியில் தோன்றிய சிற்றாட்சிகளுள் ஸெல்ஜூக்கியர்களின் ஆட்சி சிறப்பிடம் பெறுகின்றது. துக்ரில் பேக் ( மரணம் கி.பி. 1063 ) அல்ப் அர்ஸலான் ( கி. பி. 1072 ) மலிக் ஷா (1092) ஆகியோர் முக்கியமான ஸெல்ஜூக்கிய ஆட்சியாளர்களாக விளங்கினர். மலிக் ஷாவின் ஆட்சியின் கீழ் ஸெல்ஜூக்கியரின் ஆட்சி காஸ்கர் முதல் ஜெரூஸலம் வரை, கொன்ஸ்தாந்திநோபில் முதல் கஸ்பியன் கடல்வரை பரந்திருந்தது. நிஸாமுல் முல்க் மிக நீண்ட காலம் அல்ப் அர்ஸலானின் கீழும், மலிக் ஷாவின் கீழும் மந்திரியாக (வஸீர்) மிக விரிவான அதிகாரங்களுடன் பணிபுரிந்தார். நிஸாமுல் முல்க் அவரது கல்விப் பணியாலும், அறிவுச் சேவையின் காரணமாகவும் அறிஞர்களையும், கல்விமான்களையும் ஆதரித்துப் போற்றியவர் என்றவகையிலும் மிகப் போற்றப்படுகின்றார். அவரது பணிகளுள் தலையாயதாக அமைந்தது பக்தாத் நகரில் நிஸாமியா என்ற பெயரில் அவர் கட்டியெழுப்பிய மாபெரும் கலாநிலையமாகும்.
இது பற்றி புகழ்பூத்த வரலாற்றாசிரியர் கிப்பன் தனது ‘ ரோம் சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் ‘ என்ற நூலின் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
‘ நிஸாமுல் முல்க் பக்தாதில் இக்கல்வி நிலையத்தை நிறுவுவதற்காக இரண்டு லட்சம் தங்க நாணயங்களையும் அதன் நிருவாக செலவுக்காக வருடம் பதினையாயிரம் தினாரையும் ஒதுக்கியிருந்தார். ஏறக்குறைய ஆறாயிரம் மாணவர்கள் அதில் கல்வி கற்றனர். அவர்களுள் மிக உயர்தர வகுப்பைச் சேர்ந்த வசதிபடைத்தவர்களின் புதல்வர்களும் மிகச் சாதாரண நிலையிலுள்ளோர்களின் பிள்ளைகளும் காணப்பட்டனர். ‘
நிஸாமிய்யா கல்லூரி ஹிஜ்ரி 457 ( கி. பி. 1064ல் ) நிறுவப்பட்டது. பக்தாதில் ஆட்சி நிலை பெற்றிருந்த காலம் வரை நிஸாமியாவின் புகழும் செல்வாக்கும் இஸ்லாமிய உலகெங்கும் பரந்திருந்தது. குலிஸ்தான் பூஸ்தான் ஆகிய இலக்கியச் செல்வங்களை உலகிற்கு அளித்த மகான் ஷெய்கு ஸஆதி ஒரு காலப்பிரிவில் நிஸாமியாவில் மாணவராக இருந்தார். இமாம் கஸ்ஸாலி, இமாம் தபரி இப்னுல் கதீப் தபரீஸி, அபுல் ஹஸன் பஸீஹீ ஆகியோர் இக்கலா நிலையத்தின் அதிபர்களாகப் பணிபுரிந்தவர்களாவர். அக்காலை நிஸாமியாவில் பேராசிரியராகப் பதவி வகிப்பது அறிவுலகில் பெரும் கௌரவமாகக் கருதப்பட்டது. அவர்களது துறையில் மிகப் புலமையும் தேர்ச்சியும் மிக்கோரே நிஸாமியாவில் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். நிஸாமியாவோடு இணைந்து ஒரு நூல் நிலையமும், நிஸாமுல் முல்கினால் அமைக்கப்பட்டது. அல்லாமா அபு ஸகரிய்யா அதன் நூலகராகப் பணிபுரிந்தார். கி. பி. 1139-ல் நாஸிருதீன் அதனோடு இணைந்து இன்னொரு நூல் நிலையத்தை நிறுவி. அவர் சொந்தமாக சேகரித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான மிக அரிதான நூல்களை அன்பளிப்புச் செய்தார்.11
நிஸாமியாவின் பாடநெறிகள் பற்றி அறிந்து கொள்ளப் போதிய தகவல்கள் இன்று எமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் பொதுவாக அல்-குர் ஆன், சன்மார்க்கக் கலைகள்,அரபு மொழி இலக்கண இலக்கியங்களை அதன் பாட நெறி உள்ளடக்கியிருந்தது. எனலாம்.
நிஸாமியா நிறுவப்பட்டதானது இஸ்லாமிய உலகில் கல்வித்துறையில் ஒரு மாபெரும் எழுச்சியைத் தோற்றுவித்தது. மத்ரஸாக் கல்வி வளர்ச்சியில் அது ஒரு மைல் கல்லாக அமைந்தது. ஆட்சியாளர்களும் உயர்தர வகுப்பினரும் அதன் அமைப்பைப் பின்பற்றிப் பல கல்வி நிலையங்களை நிறுவுவதில் தீவிர ஆர்வங்காட்டினர். பக்தாதில் மட்டும் நிஸாமியோடு மேலும் முப்பது கல்விகூடங்கள் நிறுவப்பட்டன.
நிஸாமியாவைப் போன்றே பக்தாதில் புகழ்பெற்று விளங்கிய இன்னொரு கலைக்கூடம் முஸ்தன்ஸிரியாவாகும். கி. பி. 1226ல் பதவிக்கு வந்த அப்பாஸிய கலீபா அல்-முஸ்தன்ஸிர் பில்லாஹ், இரண்டு ஆண்டுகள் கழித்து தைகிரீஸ் நதித்தீரத்தில் முஸ்தன்ஸிரிய்யாவிற்கான அடிக்கல்லை நாட்டினார். ஆறுவருட காலப்பிரிவில் அதன் கட்டட வேலைகள் பூர்த்தியடைந்ததும் ரஜப் மாதம் வியாழக்கிழமையன்று மிகக் கோலாகலமான முறையில் அதன் திறப்பு விழா நடந்தது. பல்வேறு கலைகளிலும் பாண்டித்தியமுள்ள அறிஞர்கள் அதன் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். கலீபாவின் நூல் நிலையத்திலிருந்து நூற்றி அறுபது ஒட்டகங்கள் சுமக்கக்கூடிய நூல்கள் இக்கலா நிலையத்தின் நூல்நிலையத்துக்கு அனுப்பப்பட்டன. எழுபதினாயிரம் ‘ மிஸ்கால் ‘ பெறுமதியான தங்கத்தை வருமானமாக அளிக்கக்கூடிய நூற்றுக்கணக்கான கிராமங்கள் இக்கலா நிலையத்துக்கு நன்கொடைகளாக வழங்கபட்டன.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் முஸ்தன்ஸிரியாவின் வளர்ச்சி பற்றி Le Strange என்னும் அறிஞர் ‘Baghdad during the Abbaside Caliphate’ என்னும் நூலில் பின்வருமாறு விளக்குகிறார்.12
‘முஸ்தன்ஸிரியா பல்கலைக்கழகம் மிகச் சிறந்த அமைப்பில், அழகிய தளபாடங்களைக் கொண்டு தோற்றம் நல்கியது. நான்கு மத்ஹப்களின் சட்டங்களையும் போதிக்க பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறந்த ஊதியமும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவனுக்கும் மாதத்துக்கொருமுறை ஒரு தங்க தீனார் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக நூல் நிலையம் பல்வேறு கலைகள் பற்றிய மிக அரிதான, பெறுமதிவாய்ந்த நூல்களைக் கொண்டிருந்தது. மாணவர்கள் அவர்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களை சிரமமின்றி பெறக்கூடிய வகையில் நூல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. கையெழுத்து உருவில் அமைந்திருந்த இந்நூல்களைப் பிரதிபண்ண விரும்பும் மாணவருக்கு எழுதுகோலும் மையும் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கான விளக்குகளும், அவற்றை எரிப்பதற்கான ஒலிவ் எண்ணெய்யும் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் ஒரு கடிகாரம் தொழுகை நேரத்தையும், காலத்தையும் குறித்துக்கொண்டிருந்தது. பல்கலைக் கழகத்தின் உள்ளே மாணவர்களின் சொந்த உபயோகத்திற்கான குளியலறையும், ஒரு மருத்துவமனையும் அமைந்திருந்தது. மாணவர்களின் நலன்களைக் கவனிக்க ஒரு மருத்துவரும் பணிபுரிந்தார்.13
முஸ்தன்ஸிரியா பல்கலைக்கழகம் பற்றிய இக்குறிப்புக்களிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஓர் இஸ்லாமிய கலாநிலையம் அடைந்திருந்த வளர்ச்சியை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.
இஸ்லாமிய உலகில் மத்ரஸாக்கள் கால வளர்ச்சியோடு இத்தகைய வளர்ச்சியைக் கண்டாலும் அடிப்படையில் மத்ரஸாவிற்கும், மஸ்ஜிதுகளுக்குமிடையில் எத்தகைய வித்தியாசமும் காணப்படவில்லை. மத்ரஸா முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் மஸ்ஜிதுகள் கல்வி நிலையங்களாகத் தொடர்ந்து விளங்கின. ஹிஜ்ரி எட்டாம் நூற்றாண்டளவில் முஸ்லிம் உலகில் மத்ரஸாக்களின் எண்ணிக்கையில் அதிகமாகக் காணப்பட்ட காலப்பிரிவில் பிரயாணம் செய்த இப்னு பதூதா பக்தாதில் ஜாமிஆ மன்ஸூரிலும் ஷிராஸில் ஜாமிஆ ஷிராஸிலும் ஹதீஸ் பற்றிய விரிவுரைகளைச் செவிமடுத்தார், என அவரது பயணக் குறிப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.14
இப்னு ஜுபைர் என்னும் அரபுப் பிரயாணி கி. பி. 1184ல் டமஸ்கஸிலுள்ள உமய்யா பள்ளிவாயிலில் ஷாபிஈ, ஹனபி மத்ஹபுகளின் சட்டங்களைப் பயிலும் மாணவர்களுக்காகச் சில அறைகள் பயன்படுத்தப்பட்டது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இப்னு பதூதா, மஸ்ஜிதுகளில் நடைபெற்ற ‘ ஹல்க் ‘ அறிவு வட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அல்-மக்ரீஸியின் காலப்பிரிவில் ( பதினைந்தாம் நூற்றாண்டு ) எகிப்தில் அம்ர் இப்னு ஆஸ் பள்ளிவாயலில் ‘ பிக்ஹ் ‘ படிக்கும் மாணவர்களுக்காக எட்டு அறைகள் காணப்பட்டதாகவும் நாற்பதுக்கு மேற்பட்ட அறிவுவட்டங்கள் காணப்பட்டதாகவும் தனது ‘ கிதத் ‘ என்னும் புகழ்பெற்ற நூலில் அவர் குறிப்பிடுகின்றார்.15 இக்குறிப்புக்கள், மத்ரஸா அமைப்பு முறையின் தோற்றத்தின் பின்னரும் கூட மஸ்ஜிதுகள் தொடர்ந்து கல்வி நிலையங்களாக இயங்கியதைக் குறிக்கின்றது.
மத்திய காலப்பிரிவில் முஸ்லிம் உலகில் ‘ தஸவ்வுப் ‘ என்னும் ஆத்மிகவியலின் அடியாக வளர்ச்சி பெற்ற நிறுவனங்களான ‘ ஸாவியா“ “கான்கா ‘ ஆகிய நிறுவனங்களும் ஆத்மிக பயிற்சிக் கூடங்களாக மட்டுமன்றி கல்விக் கூடங்களாகவும் விளங்கின. ஸூபிகள் என அழைக்கப்பட்ட ஆத்மஞானிகள் மஸ்ஜிதுகளில் சில அறைகளிலும் வேறு சிறு கட்டிடங்களிலும் ஒதுங்கி வணக்கத்திலும் தியானத்திலும் ஈடுபட்டனர். இவ்வாறு வணக்கத்திற்கும், தியானத்திற்கும் கல்விப் போதனைக்கும் பயன்படுத்தப்பட்ட இடம் ‘ ஸாவியா ‘ என அழைக்கப்பட்டது. ஸாவியா எனில் மூலை என்பது அடிப்படைக்கருத்தாகும். கி. பி. 1009-ம் ஆண்டளவில் கான்கா என்னும் நிறுவனமும் ஸாவியாவின் அமைப்பினிலே தோன்றியது ‘ ரிபாத் ‘என்பது இவ்வகையைச் சேர்ந்த இன்னொரு நிறுவனமாகும். முஸ்லிம் நாடுகளின் எல்லைப் புறங்களில் ‘ ஜிஹாதில் ‘ ஈடுபட்டோர் ‘ ரிபாத்களில் ‘ வாழ்ந்தனர். ஸாவியா, கான்கா, ரிபாத் போன்ற தியான கூடங்களுக்கும் மத்ரஸவிற்குமிடையில் ஒருமித்த பண்புகள் காணப்பட்டன. ஏனெனில், இஸ்லாத்தில் அறிவும், பக்தியும் பிரிக்க முடியாது பிணைக்கப்பட்டு எப்போதும் இணிந்தே தொழிற்பட்டு வந்துள்ளன. சில ஸூபிமகான்கள் அவர்களது ஸாவியா, கான்கா போன்ற தியான கூடங்களில் ‘ ஹதீஸ் ‘ பற்றிய விரிவுரைகளை நடாத்தினர். மத்ரஸாக்களில் நடைபெற்றது போன்றே இந்நிறுவனங்களில் அறிவு போதிப்பதற்கும், கல்விக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்துல் லதீப் (ஹி: 1231 ) பக்தாதில் இருந்து ரிபாதில் ‘ உஸூலுல் ஹதீஸ் ‘ பற்றிய விரிவுரைகள் நிகழ்த்தினார். மத்திய ஆசியாவில் கி.பி. 1355-ல் காணப்பட்ட கான்காக்களில் ஹதீஸ் உட்பட நான்கு மத்ஹபுகளின் சட்டங்களும் போதிக்கப்பட்டன.17
இந்திய துணைக்கண்டத்தில் மத்ரஸாக்கள் மிகச் சிறப்பாக மொகலாய ஆட்சியாளர்கள் அவ்ரங்கஸீப்பின் காலப்பிரிவில் நிறுவப்பட்ட பறங்கி மஹல் மத்ரஸாவே இந்தியாவில் ‘தாருல் உலூம்’ என்னும் பெயரில் அழைக்கப்பட்ட முதல் மத்ரஸாவாகும். நிஸாமுத்தீன் என்னும் அறிஞருக்கு ஹி. 1103 கி. பி. 1691-ல் மொகலாய மன்னர் அவ்ரங்கஸீப் ஒரு வீட்டை நன்கொடையாக வழங்கினார். பறங்கி மஹல் என அழைக்கபட்ட அவ்வீட்டில் அவர் ஆரம்பித்த மத்ரஸாவே தாருல் உலூம் பறங்கி மஹல் ஆகும்.
நிஸாமுத்தீன் புகழ் பரவ அவர் உருவாக்கிய மத்ரஸாவை விட, அவர் உருவாக்கிய பாடத்திட்டமே முக்கிய காரணமாக அமைந்தது. ‘தா்ஸே நிஸாமி’ எனப் பொதுவாக பிரபல்யம் அடைந்த இப்பாடத்திட்டம், அரபு இலக்கணம், தர்க்கம், தத்துவ ஞானம் ஆகியவற்றிற்கு முக்கியமளித்தது மட்டுமன்றி ஏனைய நவீன கலைகளையும். அறிவையும் முற்றிலும் புறக்கணித்தது. அக்பாரின் காலப்பிரிவில் பள்லுல்லாஹ் ஷிராஸி என்னும் அறிஞர் இப்பாடத்திட்டத்தில் சில மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்யும் முயற்சியை மேற்கொண்டாலும் அது வெற்றியளிக்கவில்லை.
தாருல் உலூம் பறங்கி மஹாலுக்கு அடுத்து முக்கியம் பெறுவது தாருல் உலூம் தேவ்பந்த் ஆகும். 1857-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முஸ்லிம் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட எழுச்சிப் போராட்டத்தில் முஸ்லிம்கள் அடைந்த தோல்வியானது அவர்களின் விரக்தியையும் தோல்வி மனப்பான்மையையும் தோற்றுவித்தது. பிரிட்டிஷார் இப்புரட்சியை அடக்குவதில் வெற்றி காண்டதால் ஆர்வமூட்டப்பட்ட கிரிஸ்தவ மிஷனரிகள் மதப் பிரசார, மதமாற்ற முயற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபடலாயினர். இச்சூழ்நிலையில் முஸ்லிம்களோ மேற்கத்திய கல்விக்கும், நாகரிகத்துக்கும் அடிமையாகி ஒரு சிந்தனைக் குழப்பத்தில் சிக்கி, திக்குத் தெரியாது தடுமாறினர். இச்சந்தர்ப்பத்திலே தூர நோக்குப் படைத்த உலமாக்கள் வளர்ந்துவரும் முஸ்லிம் பரம்பரையினரை தூய இஸ்லாமிய கோட்பாடுகளோடும், நம்பிக்கைகளோடும் இணைத்து இஸ்லாமிய ஆளுமையைப் பாதுகாக்கும் வகையில் சன்மார்க்கக் கல்வியைப் போதிக்கும் கல்வி நிறுவனங்களை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களுள் தாருல் உலூம் தேவ்பந்த் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. மிக எளிய முறையில், மிகச் சாதாரண மத்ரஸாவாக ஆரம்பிக்கப்பட்ட தாருல் உலூம் தேவ்பந்த், அதனை நிறுவியவர்களின் தூய எண்ணமும் அயராத உழைப்பும், தியாகமும் காரணமாக ஒரு பெரிய பல்கலைக்கழகமாக மட்டுமல்ல, ஆசியாவிலே மிகப் பெரிய கல்வி நிலையமாக வளர்ச்சி அடைந்தது.
1866-ல் தேவ்பந்த் நகரில் ஆரம்ப மத்ரஸாவாக ஆரம்பிக்கப்பட்ட இம் மத்ரஸா அதனோடு ஆரம்பகாலத்திலிருந்தே தொடர்புகொண்டு உழைத்த மௌலானா முஹம்மது காஸீம் நானூத்தியின் பெரு முயற்சியினாலும் தியாகத்தினாலும் மிகத்துரிதமான வளர்ச்சியைக் கண்டது. இந்தியாவின் தலை சிறந்த அறிஞர்கள் அதில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிந்துள்ளார்கள். ஹதீஸ் கலை, சட்டக்கலை ஆகியவற்றில் புலமை பெற்ற ஆசிரியப்பெரு மக்களிடம் அறிவுத் தேனை அள்ளிப் பருக இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மட்டுமன்றி முஸ்லிம் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மாணவர்கள் அங்கு வந்தனர். இதுவரை பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் அதில் கல்வியை முடித்து வெளியேறியுள்ளனர். அவர்களுள் ஐநூறு மாணவர்கள் ஆப்கானிஸ்தான், புகாரா, ரஷ்யா, அஸர்பைஜான், சின்னாசியா, தீபெத், சீனா, இந்து சமுத்திரத் தீவுகள், அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாகும். தேவ்பந்த் உருவாக்கிய அறிஞர்களின் தாக்கம் இந்திய முஸ்லிம் சமூகத்தில் ஒரு புத்துணர்ச்சியைத் தோற்றுவித்தது. தேவ்பந்த் உருவாக்கிய பலர் அரசியலில் சிறந்த பங்களிப்பைச் செய்தனர்.18
தேவ்பந்துக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுவது 1866-ல் ஷஹ்ரன்பூரில் நிறுவப்பட்ட ‘மஸ்ஹருல் உலூம்’ ஆகும். இந்தியா உருவாக்கிய தலைசிறந்த அறிஞர்களுள் சிலரான மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹீ, மௌனானா அஷ்ரப் அலி தானவி ஆகியோரின் ஆதரவை இக் கலாநிலையம் பெற்றது. மௌலானா கலீல் அஹ்மத், மௌலானா முஹம்மது இல்யாஸ், ஷெய்குல் ஹதீஸ் மௌலானா முஹம்மத் கைரியா ஆகியோர் இதில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்துள்ளனர். இந்நிறுவனம் உருவாக்கிய பல அறிஞர்கள் கலையின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணிபுரிந்துள்ளனர்.
இவ்விரண்டு முக்கியமான கல்வி நிலையங்களோடு ‘தர்ஸே நிஸாமி’யைப் பின்பற்றி தமது பாடநெறிகளை அமைத்துக்கொண்ட பல மத்ரஸாக்கள் காலப்போக்கில் நிறுவப்பட்டன. ராம்பூரில் உள்ள மத்ரஸா ஷம்ஸுல்ஹுதா, கல்கத்தவில் உள்ள மத்ரஸே ஆலியா ஆகியவற்றை சிறப்பாகக் குறிப்பிடலாம்.19
இக்காலப்பிரிவில் மௌலானா முஹம்மத் அலி அவர்களால் லக்னோவில் நிறுவப்பட்ட தாருல் உலூம் நத்வதுல் உலமா மிக முக்கியத்துவம் வாய்ந்த, புகழ்மிக்க கலாநிலையமாகும். முங்கீர் என்னும் இடத்தைச் சேர்ந்த மௌலானா முஹம்மத் அலி அவர்கள் இஸ்லாமிய பிரசாரப் பணியில் மிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், மிக விரிவான அறிவும் நுட்பமான ஆற்றல் படைத்த உள்ளமும் உடையவராகவும் விளங்கினார்.அக்காலப்பிரிவில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவ மத பிரசாரகர்களோடு மதம் பற்றிய சர்ச்சைகளிலும் வாதப் பிரதிவாதங்களிலும் ஈடுபடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. நவீன காலத்தின் அறிவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், அதன் அறைகூவலை சமாளிக்கவும், பாரம்பரியமான பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த பழமை சார்ந்த கல்வி முறையினால் சாத்தியப்படாது என்பதையும் மேற்கின் கலாசார ஊடுருவலுக்கு எதிராகப் போராடி, இஸ்லாமியக் கோட்பாட்டை நவீன யுகத்தின் பரிபாஷையில் விளக்கி நெறிப்படுத்தும் அறிஞர்களையும், பிரசாரகர்களையும் உருவாக்கும் ஆற்றல் பழமை சார்ந்த கல்வி முறைக்கு இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
இந்த நோக்கத்தை அடைவதற்கு இஸ்லாமிய கல்வியமைப்பு முற்றிலும் புணர்நிர்மானம் செய்யப்பட வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்கு ஏற்பட்டது.எனவே, காலத்திற்கு பொருத்தமற்ற பழைய தத்துவம் சார்ந்த சில பாடங்களை நீக்கியும், நவீன கலைகளை அறிமுகப்படுத்தியும் ஓர் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டார்கள் அத்தோடு அக்காலப்பிரிவில் முஸ்லிம்கள் மத்தியில் ஷாபி, ஹனபி, அஹ்லே ஹதீஸ் என்ற அடிப்படையில் மத்ஹப் சர்ச்சைகளும் சன்மார்க்கத் துறையில் முக்கியத்துவமற்ற சில சில்லறைப் பிரச்சினைகலும் தோன்றி, முஸ்லிம் சமுதாயத்தையே இழிநிலைக்கு இட்டுச் செல்வதையும் அவர்கள் அவதனித்தார்கள். எனவே இந்த இழிநிலையைச் சீர்ப்படுத்தும் நோக்கோடு, முஸ்லிம்களில் பல பிரிவினரிடையிலும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கோடும் நத்வத்துல் உலமா என்னும் ஓர் அமைப்பைத் தோற்றுவித்து 1898-ல் லக்னோவில் ஓர் முன்மாதிரியான கலாநிலையம் ஒன்றையும் தோற்றுவித்தார்கள். படிப்படியாக தாருல் உலூம் நத்வதுல் உலமா பரந்த மனப்பான்மையையும், விரிந்த சிந்தனையையும் கொண்ட அறிஞர்கள், தலைவர்கள் அனைவரினதும் ஆதரவையும் பெற்றது.
பழைய படத்திட்ட அமைப்பிலிருந்து சிறிதேனும் மாறுபடுவது பெரும் பாவம் எனக் கருதப்பட்ட பழைய மத்ரஸாக்களின் கண்டிப்பான போக்கிலிருந்தும், நவீன அறிவைத் தவிர்ந்த ஏனைய அறிவுகள் அனைத்தும் பயனற்றவை என்ற நவீன பல்கலைக்கழகங்களின் கொள்கைகளிலிருந்தும் விடுபட்டு நடுநிலையான போக்கை மிக ஆரம்பத்திலிருந்தே நத்வா பின்பற்றியது. எனவே, பழைமையின் பயனுள்ளதையும், புதியதில் சிறந்ததையும் நத்வா இணைத்தது. வாழ்க்கைக்கு முழுமையான வழிகாட்டி என்ற வகையில் அல்-குர்ஆனை போதிப்பதில் அது அடிப்படையில் கவனம் செலுத்தியது. அரபு மொழியையும், பழைய வழக்கொழிந்த பழைமையான மொழி எனக் கருதாமல் உயிர் வாழும் சக்தி வாய்ந்த மொழி என்ற வகையில் அது போதிக்கப்பட்டது.
இந்த அடிப்படையில் அமைந்த நத்வியின் பாடத்திட்டம் ஆற்றலும், திறமையும் மிக்க அறிஞர்கள், பிரசாரகர்கள் பலரை உருவாக்கியது. மொழி, இலக்கியம்,ஸீரா போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் பணியாற்றிய இவ்வறிஞர்கள் நத்வாவின் பாடத்திட்டத்தினதும், வெற்றிக்குச் சிறந்த சான்றாகும். பேரறிஞர் மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி அவர்களின் கீழ் நத்வா இன்றும் அதன் இஸ்லாமிய தஃவத் பணியைத் தொடர்கிறது.20
தென் இந்தியாவிலும் இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காக எண்ணற்ற கலாநிலையங்கள் நிறுவப்பட்டன.
ஹிஜ்ரி. 1268 கி. பி. 1851-ல் நவாப் குலாப் கவ்ஸ் கான் பஹதூர் என்பவரால் அரபு, பாரசீகம் ஆகிய மொழிகளைப் போதிக்கும் நோக்கோடு ‘ மத்ரஸே ஆஸம் ‘ என்னும் மத்ரஸா நிறுவப்பட்ட்து. ஆனால் ஹிஜ்ரி. 1275 -1859-ம் ஆண்டு மே மாதம் முதலாந் திகதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இது ஒரு ஆங்கிலக் கல்லூரியாக மாற்றப்பட்டது. இம்மத்ரஸாவில் அரபு, பாரசிகம், இஸ்லாமிய கலைகள், யூனானி, மருத்துவம், ஆகியவற்றைப் போதிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் படிப்படியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
பாடத்திட்டத்தில் சன்மார்க்கக் கலைகள் சாராத ஏனைய உலகியல் ரீதியான பாடங்கள் புகுத்தப்படுவதை காஸி பகதூர் உட்பட பலர் எதிர்த்தனர். ஆனால் இதற்கு சிறிதேனும் செவிமடுக்காத ஆங்கில ஆட்சியாளர்கள் நாட்டின் கல்வி முறையை மாற்றி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். அதனால் அரபு மொழியும், பாரசிகமும் அவற்றின் முக்கியத்தை இழந்தன. அதனிடத்தை ஆங்கிலமும் ஏனைய மொழிகளும் பெற்றன.
கிழக்கிந்திய கம்பனி மதராஸிலுள்ள சென் ஜோஜ் கோட்டையில் (Fort-St. George) அதன் மத்ரஸாவை அமைத்திந்தது. இதில் அரபு, பாரசிகம் என்பன போதிக்கப்பட்டன. அரபியிலும் பாரசிகத்திலும் பல நூல்கள் கூட பதிப்பிக்கப்பட்டு இம்மத்ரஸாவினால் வெளியிடப்பட்டன. ஆனால், காலப்போக்கில் இம்மத்ரஸாவும் ஒரு கல்லூரியாக மாற்றப்பட்டது. சில வருடங்களின் பின்னர் இது ஒரு உயர்தரக் கல்லூரியாக மாற்றப்பட்ட்து. சில வருடங்களின் பின்னர் இது ஒரு உயர்தரக் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டது. இதுவே தற்போது மதராஸிலுள்ள ‘பிரஸி டென்ஸி’ கல்லூரியாகும்.
ஆங்கிலேயரின் இந்த தந்திர முயற்சிகளை உணர்ந்த முஸ்லிம்கள் தென் இந்தியாவின் பல பகுதிகளிலும் மத்ரஸாக்களை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தென் இந்தியாவில் தென் கோடியில் அமைந்துள்ள கீழைக் கரையில் ஸெய்யித் முஹம்மத் மாப்பிள்ளை ஆலிம் ( ஹிஜ்ரி 1232 – 1316 ) அவர்களால் ‘ மத்ரஸதுல் அரூஸியா ‘ என்னும் கலாநிலையம் நிறுவப்பட்டது. இது ஒரு காலப்பிரிவில் தென் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் நானூறுக்கும் மேற்பட்ட மாணாவர்களைக் கொண்டிருந்தது.
வேலூரில் வாழ்ந்த சிறந்த அறிஞர்களுள் ஒருவரான செய்யித் அப்துல் லதீபின் மாணவரான மௌலவி அப்துல் வஹ்ஹாப் (1247 – 1337) வேலூரில் ‘பாகியாதுஸ் ஸாலிஹாத்’ என்னும் புகழ் மிக்க மத்ரஸாவை நிறுவினார். இம்மத்ரஸா ஹி. 1301ஃ கி. பி. 1884-ல் நிறுவப்பட்டது. இஸ்லாமியக் கலைகளில் ஆழ்ந்த புலமைப் பெற்றிருந்த மௌலவி அப்துல் வஹ்ஹாபின் பரிபாலனத்தினதும், வழிகாட்டுதலின் கீழும் பாகியாத் மிகத் துரித வளர்ச்சியைக் கண்டது. மாணவர்களுக்கு அரபு, பாரசிகம் ஆகிய மொழிகளைக் கற்பிப்பதில் தனது முழுக் காலத்தையும் கழித்த அவர் 1337 ஃ 1919-ல் வேலூரில் மரணித்த போது பல பகுதிகளிலிருந்தும் வந்த பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் அவர்களது ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொண்டார்கள். தொழுகையை நடாத்துவதற்கு மஸ்ஜிதினதும், மத்ரஸாவினதும் கட்டிடங்களின் இடவசதியையும் மிஞ்சி மக்கள் கூட்டம் காணப்பட்டதால் வேலூரின் கோட்டைக்கு முன்னாலுள்ள திறந்த வெளியில் ஜனாஸாத் தொழுகை நடாத்தப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து பாக்கியாத் பல்வேறு தலை சிறந்த உலமாக்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சியடைந்து இன்னும் அறிவுப் பணி புரியும் உன்னத கலாநிலையங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. பாகியாத்தின் மாணவர்கள் தமிழ் நாடு, கேரளம், இலங்கை முதலிய பல நாடுகளிலும் பரந்து வாழ்ந்து அறிவுப் பணி புரிகின்றனர். பாக்கியாத் உருவாக்கிய அப்துல் கரீம் பாகவி 1330 ஃ 1912-ல் மாயூரத்திலுள்ள நிடுரில் மிஸ்பாஹுல் ஹுதா என்னும் மத்ரஸாவையும்இ அதே பெயருடைய முஹம்மத் அப்துல் கரீம் பாகவி என்னும் இன்னொரு அறிஞர் 1334 ஃ 1916-ல் புதுக்குடியில் ‘ அல் – மதுரஸதுந் நுருல் முஹம்மதீ ‘ என்னும் மத்ரஸாவையும் நிறுவினார்கள்.
வேலூரில் அரபு, பாரசிக மொழிகளின் போதனைக்காக இன்னொரு முக்கிய கல்வி நிறுவனம் ஸெய்யித் ஷாஹ் ருக்னுத்தீன் முஹம்மத் அவர்களால் நிறுவப்பட்டது.’ தாருல் உலூம் லதீபிய்யா ‘ என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா கி. பி. 1894-ல் நடைபெற்றது. இக்கலா நிலையம் தென் இந்தியாவின் பல புகழ்மிக்க அறிஞர்களை உருவாக்கியது. 1888-ம் ஆண்டு தமிழகத்தில் வாணியம்பாடியில் மத்ரஸா முபீத், மத்ரஸா மஃதனுல் உலூம் என்னும் பெயரில் இரண்டு மத்ரஸாக்கள் நிறுவப்பட்டன.
ஹிஜ்ரி. 1318 ஃ 1901-ல் மத்ரஸா ஜமாலியா என்னும் பெயரில் மதராசில் பிரம்பூரில் ஒரு மத்ரஸா நிறுவப்பட்டது.அரபு மொழி இஸ்லாமிய கலாஞானங்கள் மட்டும் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இந்த மத்ரஸா தலை சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் பலரை உருவாக்கியது மட்டுமன்றி, இஸ்லாமிய கலா ஞானங்களின் வளர்ச்சிக்கும் அளப்பரிய பணிபுரிந்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த மௌலானா மதார் ஸாஹிப் இந்தக் கலாநிலையத்தின் முதலாவதுஅதிபராகப் பணிபுரிந்தார். அவர்களைத் தொடர்ந்து மௌலானா ஹஸன் குஸ்ரூ, மௌலானா ஸெய்யித் அபூ ஸபர் நத்வி, மௌலானா செய்யித் அப்துல் வஹ்ஹாப், ஸாஹிப் புகாரி ஆகியோர் இக்கல்லூரியின் அதிபர்களாகப் பணிபுரிந்து அரபு, இஸ்லாமியக் கல்வியின் வளர்ச்சிக்கு அளப்பரும் பணிபுரிந்தார்கள்.
அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்திலிருந்து தென்னிந்தியாவுக்கு விரிவுரையாளராக வந்திருந்த ஷெய்கு அஹ்மத் ஷர்காவி அவர்கள் ஜமாலிய்யாவின் அதிபராகப் பணிபுரிந்த காலம் அதன் பொற்காலமாக அமைந்தது. அவர் அரபு மொழியைப் போதனா மொழியாக அறிமுகப்படுத்தி, இக்கலாநிலைய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பினைச் செய்தார்.
ஆங்கிலத்தையும் ஏனைய உலகாயதக் கலைகளையும் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தி மிகச் சிறந்த வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்ட நிறுவனம் வட ஆட்காடு ஜில்லாவிலுள்ள ஒமராபாத்தில் நிறுவப்பட்ட ஜாமிஆ தாருஸ்ஸலாம் ஆகும். இஸ்லாமிய கலைகளைப் பொறுத்தளவில் மாணவர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு இடமளிக்கப்பட்டதுடன், நான்கு மத்ஹப்களும் ஒப்பீட்டாய்வின் அடிப்படையில் போதிக்கப்பட்டன.21
தற்போது கேரளத்தில் ஒரு பகுதியாக விளங்கும் மலபார் பிரதேசம் அரபு மொழி ஆர்வம், சன்மார்க்கப் பற்று ஆகிய பண்புகளுக்குப் பிரபல்யம் பெற்ற பிரதேசமாகும். இப்பகுதியில் எண்ணற்ற அரபு மத்ரஸாக்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கலிகட், (கள்ளிக்கோட்டை) என்னும் பகுதியைச் சூழ ‘ ரவ்ளதுல் உலூம் ‘ ‘ மதீனதுல் உலூம் ‘ ‘ ஸுல்லமுஸ் ஸலாம் ‘ ஆகிய முக்கியமான மத்ரஸாக்கள் காணப்படுகின்றன. குஜராத் பகுதியிலும் தப்ஹலிலுள்ள ஜாமிஆ இஸ்லாமியா ஒரு காலப்பிரிவில் தலை சிறந்த கலா நிலையங்களுள் ஒன்றாக விளங்கியது. மவ்லானா அன்வர் ஷா கஸ்மீரிஇ மௌலானா ஷபீர் அஹ்மத் உஸ்மான் போன்ற அறிஞர்கள் பலரிதில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தனர்.
இலங்கையில் அரபு முஸ்லிம் குடியேற்றாங்களின் பரவலோடு முஸ்லிம்கள் குடியேறிய பகுதிகளில் இஸ்லாமிய பாரம்பரிய மரபுகளுக்கேற்ப சன்மார்க்கத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் மஸ்ஜிதுகளோடிணைந்த ‘ குத்தாப்கள்’ அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும் என நாம் அனுமானிக்கலாம். மஸ்ஜித்களை மையமாக வைத்து குத்தாப்களோடு இணைந்து காணப்பட்ட முஸ்லிம் சமூகக்கட்டுக் கோப்பை இலங்கை முஸ்லிம்கள் பெற்றிருந்ததே போர்த்துகேய டச்சுக்காரர்களின் காலப்பிரிவில் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு மதமாற்றப் பிரச்சாரங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும் அவர்களது இஸ்லாமிய ஆளுமையை பேணித் தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ளாத் துணைபுரிந்தது. ஆனால், அக்காலத்தில் குத்தாப்களில் புகட்டப்பட்ட கல்விமுறை பற்றிய விவரங்களை நாம் பெற முடியாவிட்டாலும் பொதுவாக குர்ஆன், ஒரு முஸ்லிமின் நாளாந்த கடமைகளை நிறைவேற்ற துணைபுரியும் சன்மார்க்க சட்ட விதிகள் பற்றிய அடிப்படை போதனைகளை உள்ளடக்கிய வகையில் பாடபோதனை அமைந்திருக்கலாம் என நாம் அனுமானிக்க முடியும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலப்பிரிவில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் தோன்றிய எழுச்சியின் விளைவாக சன்மார்க்கக் கல்வித்துறையிலும் ஓர் உத்வேகம் தோன்றியது. இலங்கையிலிருந்து தென் இந்தியாவிலுள்ள மத்ரஸாக்களுக்குக் கல்வி பயிலச் செல்லும் ஒரு மரபு இக்காலப்பிரிவில் தோன்றியது. அதனைத் தொடர்ந்து இலங்கையிலும் அரபுமொழி சன்மார்க்கக் கலைகளின் போதனைகளுக்காக மத்ரஸாக்களை உருவாக்கும் பணி ஆரம்பமாகியது. இந்தியாவில் பிற்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய மத்ரஸாக்கள் உருவாக்கப்பட்ட அதே காலப்பிரிவிலே இலங்கையிலும் அத்தகைய மத்ரஸாக்களை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக ஹிஜ்ரி 1301 ஃ கி. பி. 1884-ம் ஆண்டு வேலூரில் செய்யித் ஷா அப்துல் லதீப் அவர்கள் மத்ரஸதுல் பாகிதுல் ஸாலிஹாத்தை நிறுவிய அதே ஆண்டு இலங்கையில் இஸ்லாமியப் பணியில் அக்காலை தீவிரமாக ஈடுபட்டுழைத்த கீழக்கரை செய்யித் முஹம்மத் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ( ஹி: 1232 ஃ 1316 ) அவர்களால் வெலிகாமத்தில் மத்ரஸதுல் பாரி பி மஸ்ஜிதுல் புகாரி அலன் நஹ்ரில் ஜாரி ‘ என்னும் பெயரில் பாரி மத்ரஸா நிறுவப்பட்டது.22
இலங்கையில் தோன்றிய முதல் மத்ரஸாவும், வேலூரின் பாகியாதுஸ் ஸாலிஹாத்தும் சமகாலத்திலே நிறுவப்பட்டுள்ளன என்பது ஈன்று கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். வெலிகாமம் பாரி மத்ரஸா இலங்கையில் அரபிக் கல்வி வளர்ச்சிக்கு மிக அளப்பரிய பணிபுரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 1130 ஃ 1892 காலியில் ‘ பஹ்ஜதுல் இப்ராஹிமிய்யா ‘ நிறுவப்பட்டது. 1931-ம் ஆண்டு மஹரகமையில் மத்ரஸதுல் கபூரியா நிறுவப்பட்டது. வெலிகாமம், காலி, மஹரகமை ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்ட இம் மத்ரஸாக்கள் இலங்கையின் அரபு மொழியினதும், சன்மார்க்கக் கலையினதும் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளன. 1954-ல் காத்தான்குடியில் நிறுவப்பட்ட ‘மத்ரஸதுல் பலாஹ்’ 1957-ம் ஆண்டு புத்தளத்தில் தோற்றுவிக்கப்பட்ட ‘ மத்ரஸதுல் காஸிமிய்யா ‘ ஆகியனவும் இவ்வகையில் முக்கியத்துவம் பெறும் சில மத்ரஸாக்களாகும். மத்ரஸதுல் பலாஹ் மிகக் குறுகிய காலப்பிரிவில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது.இலங்கையில் பல ஹாபிள்களை உருவாக்கிய பெருமை இம்மத்ரஸாவைச் சாருகின்றது.23
1955-ம் ஆண்டு கல் எலியாவில் நிறுவப்பட்ட பெண்களுக்கான அரபுக்கல்லூரி இலங்கையில் அரபுக் கல்வி வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாகும். இக்கல்லூரி மிகக் குறுகிய காலப்பிரிவில் துரித வளர்ச்சியைக் கண்டு இந்நாட்டில் பல மௌலவியாக்களை உருவாக்கக் காரணமாய் அமைந்தது.
1973-ம் ஆண்டு பேருவளையில் ‘ ஜாமிஆ நளீமிய்யா ‘ தோற்றுவிக்கப்பட்டதானது இந்நாட்டு அரபு, இஸ்லாமிய கல்வி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனக் குறிப்பிடுதல் பொருத்தமாகும். இஸ்லாமியக் கலைகளையும் நவீன கலைகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான பாடத்திட்டத்தின் அடிப்படையில் இஸ்லாமியக் கல்வியையும், பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டடப் படிப்பையும் ஒரே நேரத்தில் மேற்கொண்ட புத்தி ஜீவிகளை உருவாக்கும் இலட்சியத்தோடு உருவாக்கப்பட்ட ஜாமிஆ மிகக் குறுகிய காலத்தில் அதன் இலட்சியத்தை அடைந்துள்ளது, என்பதற்கு அது உருவாக்கிய பட்டதாரிகள் சிறந்த சான்றாக அமைகின்றனர். இன்று இலங்கை முஸ்லிம்களின் கலாசாரப் பல்கலைக்கழகத்திற்கான சகல அமைப்புக்களையும் தகைமைகளையும் பெற்று அது விளங்குகின்றது. இஸ்லாமிய கலாநிலையங்களின் ஆரம்பத் தோற்றம் அதன் படிமுறை வளர்ச்சி பற்றிய ஒரு பொதுவான விளக்கம் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. அத்தோடு இக்கலா நிலையங்களின் பாட நெறி, ஆசிரியர்களின் பங்கும் பணியும் ஆகிய ஏனைய முக்கிய அம்சங்கள் பற்றி ஆராய இச்சிறிய கட்டுரை வாய்ப்பாக அமையவில்லை. ஆனால், பொதுவாக இஸ்லாமிய கலாநிலையங்களோடும் சிறப்பாக இலங்கையில் காணப்படும் மத்ரஸாக்களோடும் தொடர்புடைய ஓர் அடிப்படை பிரச்சினையை இங்கு குறிப்பிடுவது பொறுத்தமாகும்.
கல்வியும் கற்கை நெறியும், பாட போதனை உத்திகளும் கால வளர்ச்சிக்கு ஏற்பவும், கருத்துக்களின் வளர்ச்சிக்கேற்பவும் இணைந்து செல்லல் அவசியமாகும். பொதுவாக இது கல்வித்துறை சார்ந்த எல்லா அறிஞர்களும் ஏற்றுக்கொள்ளும் ஓர் உண்மையாகும். உலகில் எந்த ஒரு மொழியும், கல்வி அமைப்பும் இப்போது நியதிக்கு விதிவிலக்காக அமைய முடியாது. ஆனால், இந்த பொது நியதிக்குட்பட்ட வகையில் கடந்த ஒரு நூற்றாண்டுக் கால வளர்ச்சியையும், சமுதாய மாற்றங்கள், சமூகத் தேவையில் அதனடியாகத் தோன்றிய புதிய அறை கூவல்கள் ஆகியவற்றை உணர்ந்து இந்நாட்டில் காணப்படும் மத்ரஸாக்களின் பாடத்திட்டம், கற்கை நெறி, பாட போதனை உத்திகளில் எவ்வகையிலேனும் ஒரு மாற்றம் நடந்துள்ளதா என்பது கேள்விக் குறியாகவே அமைந்துள்ளது. அவ்வப்போது இந்நாட்டு மத்ரஸாக்களில் காலமாற்றத்தை அணுசரித்து மாற்றங்கள் தேவை என்ற கருத்தை இந்நாட்டிலும் பல உலமாக்கள் முன்வைத்தனர் என்பதை எவரும் மறுப்பதில்லை.
இந்நாட்டில் மத்ரஸாக்களின் பாடத்திட்ட மாற்றங்கள் சம்பந்தமாக சில புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்தவர்களுள் பன்மொழி அறிஞராக விளங்கிய மத்ரஸா கபூரியாவின் முன்னை நாள் அதிபர் உமர் ஹஸ்ரத், அரபுமொழியிலும் இலக்கியத்திலும் பாண்டித்தியம் பெற்ற ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மௌலானா, அரபு மொழி ஆற்றலும் விரிந்த அறிவும் படைத்த மௌலவி யூ. எம். தாஸீம் (நத்வி) அல்-அஸ்ஹரி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இக்கட்டுரை ஆசிரியரும் அவ்வப்போது வானொலிப் பேச்சுக்கள் மூலமும் கட்டுரைகள் மூலமும் இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இக்கருத்துக்கள் அனைத்தும் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டனவேயன்றி, அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், இஸ்லாமியக் கல்வியையும்,அரபு மொழி ஞானத்தையும், ஏனைய மொழிகளின் புலமையையும், நவீன கலைகள் பற்றிய அறிவையும் கொண்ட பரந்த அறிவும்இ விரிந்த சிந்தனையும் உடைய அறிஞர்களை உருவாக்கும் நோக்கோடு 1973ல் தோற்றுவிக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா இவ்வெற்றிடத்தை நிரப்பியமை, காலத்தின் அறைகூவலுக்குப்பதிலாக அமைந்தது. குறுகிய பத்து வருடக் காலப்பிரிவில் அது இத்துறையில் அடைந்துள்ள வெற்றி அதன் பாடத்திட்டத்தின் செயல்பாட்டுத் தன்மைக்குச் சிறந்த உதாரணமாகும்.
ஆனால், இன்று வேகமாக பரந்துவரும் அறிவு வளர்ச்சியின் தாக்கமும், அரபு இஸ்லாமிய உலகுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்குமிடையிலான தொடர்பின் அண்மைக்கால துரித வளர்ச்சியும், நவீன சிந்தனைகளின் பாதிப்பு பற்றிய பிரத்தியட்சமான அனுபவங்களும், இன்றைய சமூக அமைப்பில் இஸ்லாமிய கல்வியைக் கற்றோர் ஆக்கபூர்வமான பணியைப் புரிவதாயின் அத்தகைய கல்வி அமைப்பு முறையிலும் போதனா முறையிலும் கால வளர்ச்சிக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகும் என்ற கருத்து இன்று பரவலாக உணரப்பட்டு வருகின்றது. இது மகிழ்ச்சிகரமான ஒர் அறிகுறியாகும். இந்த உண்மையின் அடிப்படையில் செயல்பட இந்த நாட்டு அரபு, இஸ்லாமிய கலா நிலையங்கள் முற்பட்டால் நிச்சயம் இந்த நாட்டில் அரபு இஸ்லாமிய கல்விக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.
அடிக்குறிப்புக்கள்:
- இப்னு கல்லிகான். ‘வபயாதுல் அஃயான்’ பாகம் 1, பக்கம் 227
- யாகூத் அல்-ஹமவீ, முஃஜமதுல் உதபா பாகம் 4, பக்கம் 135
- அஹ்மத் அமீன், ‘ளுஹல் இஸ்லாம்’ பாகம் 2, பக்கம் 77
மேலும் பார்க்க. ‘Art Masjid’ Encyclopedia of Islam.
- அல்-ஜாஹிஸ் ‘அல் பயான் வத் தப்யீன்’ பாகம் 1, பக்கம் 74
- Mansoor A Guraishi, ‘Some aspects of Muslim Education. pp. 15 – 21.
- Art ‘Madrasa” in Encyclopedia of Islam.
- Adam Mez, The Renasisence of Islam. p. 186
- இப்னு பதூதா, ‘ரிஹ்லா’ பாகம் 2, பக்கம் 108
- Hitti, ‘history of Arabs’ pp 446
- bibbon, Decline and fall of the Roman Empire, பாகம் 4, பக்கம் 28
- இப்னு கல்லிகான், பாகம் 1, பக்கம் 414
- G. Le Strange, Bagdad during the Abbasiah Caliphate, பக்கம் 267
- Quraishi, ‘some Aspects of Muslim Education. pp 88, 89
- இப்னு பதூதா, ‘ரிஹ்லா’ பாகம் 1, பக்கம் 46-47
- அல்-மக்ரிஸ் ‘அல்-மவாஇன் வல் இஸ் திபாரில் கித்த்த் வல் ஆதார்’ பக்கம் 55
- ஸாவியா, கான்கா, ரிபாத் போன்றா பதப்பிரயோகங்களின் விரிவான விளக்கத்துக்கு பார்க்க: கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி. ‘ஆத்மஞானிகளும் அறப்போராட்டங்களும்’ நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டு பணியக வெளியீடு.
- இஸ்லாமிய உலகின் கலா நிலையங்களின் வளர்ச்சி பற்றிய இந்த ஆய்வில் பக்தாத், எகிப்து, பாரசிகம், மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் ‘மத்ரஸா’ நிறுவனம் பற்றி பொதுவாக ஆராயப்பட்டுள்ளது. எகிப்தின் ‘அல்-அஸ்ஹர்’ டியூனிஷியாவின் ‘ஸைதூனியா’ மொரோக்கோவின் ‘ஜாமிஆ கய்ரவான்’ என்பன ‘ஜாமிஆ’ என்னும் தனிப்பட்ட பிரிவைச் சேர்ந்த கலா நிலையமாக அமைவதால் விரிவஞ்சி அவை பற்றிய ஆராய்ச்சி விடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஆராய்ச்சி தனிப்பட்ட ஒரு கட்டுரையையே வேண்டி நிற்கும்.
18.இந்திய உலமாக்கள்இ குறிப்பாக ‘தேவ்பந்த்’ உலமாக்கள் இந்திய அரசியல் போராட்ட்த்தில் வகித்த பங்கை பேராசிரியர்: இஷ்தியாக் ஹுஸைன் குறைஷி தனது ‘Ulama in Politics’ என்னும் நூலில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
- Abdul Hasan Ali Nadwi, Muslim in India pp. 89-104
- Ibid
- Mohamed Yusuf Kokan, Arabic and Persian in Carnatic. (1710 – 1960 ) pp. 517 – 550
- Ibid
- இது பற்றிய விபரங்களுக்குப் பார்க்க: Golden Jubilee Volume, Gafooriya Arabic Collage, Maharagama.
‘நூருல் பலாஹ்’ மத்ரஸதுல் பலாஹ் அரபிக் கல்லூரி, காத்தான்குடி. இருபதாண்டு பூர்த்தி விழா மலர். 1394 ஃ 1974.
* நன்றி – மிஷ்காதுல் பாரி நூற்றாண்டு விழா இதழ்(1984)
