சுக்ரி பணிவும் அடக்கமும் உடைய அன்பான மனிதர். பேராசிரியர்.எம்.ஏ.நுஃமான்
நண்பர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி காலமானார் என்ற துயரச் செய்தியை இன்று காலையில் நண்பர் பேராசிரியர் அனஸ் என்னுடன் பகிர்ந்துகொண்டார். நேற்று மாலைதான் நான் அவரைப்பற்றி கலாநிதி நபீலிடம் விசாரித்தேன்.
அப்போதுதான் அவர் கோமா நிலையில் இருப்பதாக அறிந்தேன். அவர் சுகவீனமாக இருப்பதாக ஏற்கனவே அறிந்திருந்தேன். அவருடன் பேசவேண்டும் என்று நண்பர் நஹியாவிடம் அவரது தொலைபேசி இலக்கத்தையும் பெற்றிருந்தேன். இந்த்க் கொரோனா குழப்படியில் அது பின்போய்விட்டது. இனி அவருடன் தொடர்புகொண்டு அருக்கு ஆறுதல் சொல்லமுடியாது.
நண்பர் சுக்ரியை நான் முதன்முதலில் சந்தித்தது 1963 அல்லது 1964ல் என்று நினைக்கிறேன். அவர் அப்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார். நான் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் மாணவனாக இருந்தேன். கலாசாலையில் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக வந்திருந்தார். அப்போதே அவர் நல்ல பேச்சாளனாக இருந்தார். கூட்டமுடிவில் நாங்கள் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதே ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் ஒரு கவியரங்கத்துக்காக என்னை அழைத்திருந்தது. நாவற்குழியூர் நடராசன் தலைமையில் மான் இங்கு வந்ததுண்டோ என்ற தலைப்பில் கவியரங்கம். நான், மௌனகுரு, சத்தியசீலன் முதலியோர் கலந்துகொண்டோம். அன்று சுக்ரி அங்கு இருக்கவில்லை. ஆனால் அன்று இரவு சுகரியின் அறையில்தான் என்னைத் தங்கவைத்தார்கள். சுக்ரி இல்லாவிட்டாலும் சுகரியுடன் அவரது அறையில் ஒன்றாகத் தங்கியிருந்த உணர்வு இருந்தது.அதன்பிறகு சுக்ரியை அடிக்கடி இல்லாவிட்டாலும் நீண்ட இடைவெளிகளில் அவ்வப்போது சந்தித்திருக்கிறேன்.
பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியை விட்டு அவர் நழீமியாவுக்குச் சென்றது பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரிகத் துறைக்குப் பெரிய இழப்பு என்பதே என் கருத்து. அவர் தொடர்ந்து இருந்திருந்தால் அவரது தகைமைக்கும் ஆற்றலுக்கும் பேராசிரியர் இமாம் காலத்தைப் போன்ற ஒரு துறையாக அது வளர்ச்சி பெற்றிருக்கும். பல கலாநிதிகளும் பேராசிரியர்களும் உருவாகியிருக்கக்கூடும். அது இன்னும் வாய்க்கவில்லை. ஆயினும் நழீமியா அவரால் பயனடைந்தது.நண்பர் சுக்ரியின் கல்வித்துறைப் பங்களிப்புகளை பல.
அற்றுள் மிக முக்கியமானது அவர் பதிப்பித்த Muslims of Sri Lanka: Avenues to Antiquty இன்றுவரை இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய ஒரு முக்கியமான ஆவணமாக அது திகழ்கிறது. கட்டாயம் அதற்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு வரவேண்டும். பல தசாப்தங்கள் நழீமியாவுக்காக உழைத்த சுக்ரியின் நினைவாக நழீமியா இதைப் பொறுப்பெடுத்துச் செய்யும் என்று நம்புகின்றேன்.சுக்ரி பணிவும் அடக்கமும் உடைய அன்பான மனிதர். அவர் நினைவுகள் நம்முள் நிலைத்து வாழட்டும்.
