எனது பேராசான் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி – கலாநிதி ரவூப் ஸெய்ன்
நான்கு தசாப்தங்களாக ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த கலாநிதி சுக்ரி அவர்கள் கடந்த செவ்வாய் வபாத்தானார்கள். இழப்பின் வலி தாளாமல் சொற்களுக்குள் கசியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே அவரைப் பற்றிய சில குறிப்புக்களை இங்கு பதிவு செய்கிறேன். 2016இன் இறுதிக் கூறுகளில் கலாநிதி அவர்களை அவரது கல்கிஸ்ஸை வீட்டில் சந்தித்து பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டவன் என்ற வகையிலும் எனது கலாநிதி கற்கை நெறிக்கு நெம்புகோலாக இருந்தவர் என்ற வகையிலும் இந்தக் குறிப்பை பதிவுக்குக் கொண்டுவருவது பொருத்தம் என எண்ணுகிறேன். இதையும் தாண்டி கலாநிதி சுக்ரி எனும் ஆய்வறிவாளர் பற்றிய இந்த எடுத்துரைப்பு அவர் மீதான எம் அறக் கடப்பாட்டின் பிரதிபலிப்பாக இருக்கும் எனவும் நினைக்கிறேன்.
புத்திஜீவிகள் ஒரு நாகரித்தினைச் சுமக்கும் சக்கரங்கள் ( Intellectual are wheels of a civilization) என்ற Arnold Toynbee எனும் அறிஞரின் வாக்கியத்தை கலாநிதி அவர்கள் எமக்கு அடிக்கடி நினைவுபடுத்துவார்கள். அந்த வார்த்தைகளுக்குகேற்ப வாழ்ந்து மறைந்தவர் சுக்ரி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆர்ப்பாட்டமில்லாமல் ஓர் அமைதியான அறிவுப் பணியையும் சமூக மாற்றப் போரட்டத்தையும் தனது ஆய்வுகளாலும் சிந்தனையாலும் முன்னெடுத்தவர் என்ற மங்காத பெருமை அவரைச் சாரும்.
1940 ஆம் ஆண்டு மாத்தறையில் பிறந்த கலாநிதி அவர்கள் மாத்தறை சென்ட் தோமஸ், தர்காநகர் அல்ஹம்றா, கொழும்பு ஸாஹிரா என்பவற்றின் பழைய மாணவர் ஆவார். சுமார் எட்டு தசாப்த அவரது வாழ்க்கையில் 50ஆண்டுகள் ஆய்வு மற்றும் அறிவுப் பணிகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகப் பரப்பில் ஒரு காத்திரமான பாத்திரத்தை வகித்து வந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
கலாநிதி சுக்ரி அவர்கள் முஸ்லிம் சமூகத்திலுள்ள கலாநிதிகள் அனைவரிலும் மிகத் தனித்துவமானவர். அவர் ஏனையவர்களிலிருந்து விலகும் புள்ளிகள் பல என்பதுதான் அதற்குக் காரணம். இந்த சிறப்புத்தன்மையால் பலருக்கு அவர் ஓர் ஆதர்ஷனமாகத் திகழ்ந்துள்ளார். இஸ்லாமிய தத்துவம், சூபித்துவம், சமூகவியல், இஸ்லாமியக் கல்விக் கோட்பாடு, தொல்பொருளியல் போன்ற பரிமாணங்களில் அவர் கொண்டிருந்த நிபுணத்துவ அறிவு அவர் பற்றிய ஓர் ஈர்ப்பு விசையை பலரிடையே உருவாக்கி இருந்தது.
கலாநிதி சுக்ரி அவர்களின் அணுகுமுறை
எம்.ஏ.எம் சுக்ரி அவர்கள் எதனையும் விமர்சனபூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் நோக்கும் மனப்பாங்கைக் கொண்டிருந்தார். அவரது ஆய்வுகளிலும் ஆக்கங்களிலும் ஓர் ஒப்பீட்டுத் தத்துவ நோக்கு பிரதிபலிப்பதைக் காணலாம். அந்த ஒப்பீட்டுக்கு அவருக்குப் பெரிதும் துணைநின்றது அவரது ஆழமான வாசிப்பும் தேடலுமே என்பதில் சந்தேகமில்லை. இங்கு தான் அவரது தனித்தன்மையை நாம் புரிந்து கொள்கிறோம். இன்றைய அறிவுலத்தின் முக்கிய பண்பாக உள்ள பல்துறைசார் அணுகுமுறை (Multi -descipilinary Approach) அவரது பார்வையின் தூக்கலான சிறப்பம்சமாகும். உதாரணமாக இஸ்லாமிய அறிவுக் கோட்பாடு குறித்து அவர் பேசும்போதெல்லாம் மேலைய உலகின் செல்வாக்குப் பெற்ற மெய்யியல் நோக்குகளை அவர் இஸ்லாத்துடன் ஒப்பிடுகிறார். அதன் மூலம் அறிவு பற்றிய ஒரு முழுமைத்துவப் பார்வையை (Holistic view) அவர் கட்டி எழுப்புகிறார்.
17ஆம் நூற்றாண்டில் மேலை உலகில் செல்வாக்குப் பெற்றிருந்த அனுபவவாதம் (Empiricism) முறைசார் கோளாறுகளையும் டேக்காட்டின் வழிவந்த அறிவு முதல் வாதத்தின் குறைபாடுகளையும் எடுத்துக் காட்டி இஸ்லாம் இரண்டையும் இணைப்பதோடு நில்லாமல் வஹி எனும் அறிவு மூலத்தின் தவிர்க்க முடியாமையைத் தத்ரூபமாக நிறுவுகிறார். இஸ்லாமிய கலைகளில் மட்டுமன்றி நவீன சமூகவியல் கலைகளுடனும் அன்னாருக்கு இருந்த ஆழ்ந்த பரிச்சயமே இதற்குப் பின்புலமாக இருந்தது. இங்கு கலாநிதி சுக்ரி அவர்கள் ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு முன்னுதாரணமாகத் தோன்றுகிறார். ஓர் அறிவுஜீவி நிபுணத்துவ அறிவுப்புலங்களைக் கடந்து பிற அறிவுத் தொகுதிகளையும் குறிப்பிட்டளவு உள்வாங்கவேண்டும் என்ற பாடத்தை அவர் நமக்குக் கற்றுத் தருகிறார். உண்மையில் கலாநிதி சுக்ரி அவர்களிடம் காணப்பட்ட ஓர் ஒப்பற்ற தனித்தன்மையே இது. அவரது அத்தனை நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் ஒன்றுவிடாமல் படித்த அவரது மாணவன் என்ற வகையில் அவரிடம் இருந்து என்னை ஆகர்ஷித்த ஒரு விடயம் எல்லாவற்றையும் நாம் கற்க வேண்டும் என்ற அவரது முன்னுதரணம் எனத் துணிந்து கூறுவேன்.
இன்று முஸ்லிம் சமூகப்பரப்பில் உள்ள மிக முக்கிய குறைபாடுகளில் ஒன்று; இஸ்லாமியக் கலைகளைக் கற்ற பாரம்பரிய உலமாக்களுக்கும் மேலைய அறிவுத்துறைகளைக் கற்று நவீனத்துவ முஸ்லிம் புலமையாளர்களுக்கும் இடையில் வியாபிக்கும் சகிக்க முடியாத இடைவெளியாகும். ஒரு புறம் ஆப்த வாக்கியங்கள் குறித்த அறிவை மட்டும் கொண்ட உலமாக்கள் (scholars of religious texts) மற்றொரு புறம் உலகையும் அதன் போக்குகளையும் குறித்த சூழ்நிலை அறிவு கொண்டவர்கள் (scholars of context) இணைப்புப் புள்ளிகள் இல்லாமல் இரு சாராரும் இரண்டு பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கும் அவலம் நீளும் ஒரு சூழ்நிலையில், கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களால் அல்குர்ஆன் ஸுன்னா பற்றிய ஆழ்ந்த அறிவையும் நவீன சூழமைவு பற்றிய ஆழ்ந்த அறிவையும் இணைக்க முடிந்தது. இடைவிடாத தேடலும் வாசிப்பும் ஆய்வு மனப்பாங்குமே இதனை அவரிடம் சாத்தியப்படுத்தியிருக்க முடியும்.
சுக்ரி அவர்களது ஆக்கங்களில் தொனிக்கும் சமகாலத்தன்மை (Contemporarity)யும் சூழமைவைத்தொட்டு பே சும் போக்கும் இந்த வாதத்திற்கு வலிதான ஆதாரங்களாகும்.
கலாநிதி சுக்ரி அவர்களின் மொழிப்புலமை
தென்மாகாணம் மாத்தறையில் பிறந்த வர் என்ற வகையில் சிங்களம் அவருக்கு நன்கு பரிச்சயமானது. ஆரம்பக் கல்வியை ஆங்கில மொழிமூலம் பயின்ற பின்புலத்திலும் பிற்பட்ட கால உயர்கல்வியை அம்மொழியாலேயே தொடர்ந்தவர் என்ற வகையிலும் ஆங்கில மொழிப்புலமை அவருக்கு அல்லாஹ் வழங்கிய பெரும் கொடையாகும். பேராதனை பல்கலைக்கழக வாழ்க்கையின் போது தமிழறிஞர்களுடன் அவர் பேணிய உறவுகளும் தமிழ் இதழ்களை அவர் தேடித் தேடி வாசிப்பதில் காட்டிய இடையறாத ஆர்வமும் சிங்களம், ஆங்கிலம் என்பவற்றுக்குச் சமாந்தரமான தமிழ் மொழிப்புலமையையும் அவருக்கு வழங்கியது. இதற்கப்பால் பேராதனையில் அறபு மொழியை விஷேட துறையாகப் பயின்ற ஒற்றை மாணவன் என்ற பெருமையும் அவரைச் சாரும். பேராசிரியர் S. A இமாம் அவர்கள் சுக்ரி அவர்களின் அறபுமொழி வளர்ச்சிக்கும் அறிவுத்துறைத் தேடலுக்குமான ஊக்கவிசையாகவும் உந்து சக்தியாகவும் இருந்துள்ளதை கலாநிதி அவர்கள் இறுதி வரை நினைவுபடுத்துபவராக இருந்தார்.
கலாநிதி சுக்ரி அவர்கள் வெவ்வேறு துறைகள் சார் அறிவை வியாபிக்க அவருக்கு இருந்த இந்த மொழிப்புலமை அடித்தளமாக விளங்கியது என்பதில் அணுவளவும் ஐயமில்லை. அவர் ஒரு தேசிய புலமைச் சொத்தாகப் பரிமணித்தமைக்கும் இந்த மொழிப்புலமை ஒரு முக்கிய காரணமாகும். இஸ்லாத்தை முறையாக முன்வைத்து அதனை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்வதில் சுக்ரி அவர்கள் அயராது ஈடுபாடு காட்டினார்கள். அதற்கும் ஆங்கில, சிங்கள மொழியறிவு அவருக்கு துணைநின்றது.
கலாநிதி சுக்ரி அவர்களின் சமூகப்பங்களிப்பு
மர்ஹும் நளீம் ஹாஜியாரின் வேண்டுதலை ஏற்று 1981 ஆம் ஆண்டு நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கலாநிதி சுக்ரி அவர்கள், அன்றிலிருந்து அதன் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் நெம்புகோலாக நின்று உழைத்தார். அவரைப் போன்ற ஓர் அறிவு ஜாம்பவான், பிரிட்டன் பல்கலைக்கழகமொன்றில் கலாநிதிப்பட்டம் பெற்ற பெருந்தகை நளீமிய்யாவின் பணிப்பாளராக பணியாற்றியமை நளீமிய்யாவுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். அதனூடே ஜாமிஆ ஒரு உலகளாவிய கணிப்புக்கு உள்ளானது. இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் ஒன்றியத்தின் உறுப்பினராக ஜாமிஆ நளீமிய்யா ஏற்கப்படவும் அது இஸ்லாமிய உலகில் அறியப்படவும் காலாக இருந்தவர் கலாநிதி சுக்ரியே என்பதை யாரும் மறுக்கமுடியாது.
நளீமிய்யாவின் பட்டச்சான்றிதழ் இஸ்லாமிய உலகின் சில பல்கலைக்கழகங்களால் சம அந்தஸ்துடன் ஏற்கப்படுவதற்கும் சுக்ரி அவர்களது அயராத முயற்சியே காரணம் எனலாம். இதைத் தாண்டி உலகக்கல்வியையும், மார்க்கக் கல்வியையும் இணைக்கும் ஒரு புதிய புரட்சிகரமான பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கலாநிதி சுக்ரி அவர்கள் மேற்கொண்ட பிரயத்தனங்களும் போற்றுதற்குரியவையாகும். நாட்டிலுள்ள ஏனைய மத்ரஸாக்களிலிருந்து ஜாமிஆ நளீமிய்யா பெற்றுள்ள இத்தனித்தன்மையின் தலைமகன் மர்ஹும் சுக்ரி அவர்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
ஜித்தாவிலுள்ள ராபிதா மற்றும் இன்னபிற நிறுவனங்களின் நிதியாதரவை ஜாமிஆவுக்குப் பெற்றுக் கொடுப்பதிலும் ஆரம்ப காலங்களில் கலாநிதி சுக்ரி அவர்கள் ஆற்றிய பணி மகத்தானதாகும்.
1986 இல் நளீமிய்யாவில் வைத்து வெளியிடப்பட்ட Muslims of Sri Lanka : Avenues to antiquity என்ற ஆய்வு நூலின் தொகுப்பாளரான கலாநிதி அவர்கள், அந்நூலில் எழுதியுள்ள கட்டுரையின் ஊடே முஸ்லிம் சமூகம் மீதான அவரது நுண்மையான வாசிப்பைப் பிரதிபலித்துள்ளார். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முஸ்லிம் வரலாறு குறித்து இதற்கு முன்னர் இத்தகையதோர் ஆய்வு நூல் வெளிவரவில்லை. கட்டுரையாளர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதும் தொழில்சார் வரலாற்றாளர்கள் என்பதும் இந்நூலின் கனதிக்கும் காத்திரத்திற்கும் அணி சேர்க்கின்றன. இந்த ஆய்வு நூலைச் சாத்தியப்படுத்திய நடுநாயகம் கலாநிதி சுக்ரி அவர்கள் என்பதை நாம் அனைவரும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
இஸ்லாமியக் கல்வித்துறை வளர்ச்சிக்கும் பண்பாட்டுக்கும் கலாநிதி சுக்ரி அவர்களது பங்களிப்பு அளப்பரியதாகும். சுமார் 18 நூல்களை ஆங்கில, தமிழ் சூழலுக்கு தந்துள்ள அவர் இஸ்லாமிய சிந்தனை, அடையாளம் என்பவற்றை இலங்கைச் சூழலில் நிலைநிறுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டுள்ளார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ‘தத்துவ வித்துக்கள்’ என்ற மகுடத்தில் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர் ஆற்றிவந்த உரைத் தொடர் முஸ்லிம்களின் கவனத்தில் குவிந்தது நினைவுபடுத்தத்தக்கது.
பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டு முஸ்லிம் சமூகம், இஸ்லாமிய பண்பாட்டு அடையாளம், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் அவர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இது அவரது புலமைப்பங்களிப்புக்கான நிலையான ஆதாரங்களாகும். தவிரவும் தேசியளவிலான ஆய்வு மன்றங்களில் பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுப் பேருரைகளையும் அவர் ஆற்றியுள்ளார். பல உலகப் புகழ்பெற்ற ஆய்விதழ்களில் அன்னாரது ஆய்வுக்கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. அவர் எழுதிய அந்த ஆய்வுக்கட்டுரைகள் (ஆங்கிலமொழி மூலம்) ஒரு தொகுப்பாக வெளிவரவில்லை என்பது கவனத்திற்குரியது. கொழும்பு ஸாஹிராவில் இடம்பெற்ற முஸ்லிம் கல்வி மாநாட்டிற்கு தலைமை தாங்கியபோது அவர் ஆற்றிய உரை எனது கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. 1999 ஆம் ஆண்டு லிபிய அழைப்பு பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் அவர் ஆற்றிய உரை ஈண்டு குறிப்பிடத்தக்கது. அவர் என்னிடம் தெரிவித்த ஒரு தகவலின் படி 1970 களிலிருந்து இலங்கையின் நாலாபுறங்களிலும் அவர் ஆற்றிய உரைகளின் எண்ணிக்கை சுமார் 750 அளவில் இருக்கக்கூடும். இவ்வுரைகளில் அவர் ஆற்றிய வானொலி உரைகள் சில இன்றும் முஸ்லிம் சேவை சுவடிக் கூடத்தில் பாதுகாப்பாக உள்ளது ஓரளவு மகிழ்ச்சியைத் தருகிறது.
கலாநிதி சுக்ரி ஒரு தேசிய புலமைச்சொத்து
மறைந்த கலாநிதி எம்.ஏ..எம். சுக்ரி அவர்கள் இந்நாட்டின் அனைத்து இன மக்களாலும் மதிக்கப்பட்ட ஒரு புத்திஜீவி. அவரது மொழிப்புலமை, அறிவுத்திறன், மக்களோடு பழகும் இயல்பு, அவர் பணியாற்றிய நிறுவனத் தொடர்புகள், கலந்து கொண்ட பொது மாநாடுகள் என்பன அவருக்கு இந்த அந்தஸ்த்தைப் பெற்றுக் கொடுத்தன. இதனால் கலாநிதி சுக்ரி ஒரு தேசிய புலமைச் சொத்தாகத் திகழ்ந்தார். நாட்டின் பல்வேறு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் முக்கிய பதவிகள் வகித்த அவர் பல சபைகளிலும் நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் விளங்கியுளளார். இலங்கை தேசிய நூலக மற்றும் ஆவணவாக்க சேவை சபை அங்கத்தவராக, இலங்கை சாகித்ய மண்டலசபை உறுப்பினராக, யுனெஸ்கோ இலங்கை தேசிய சபை அங்கத்தவராக என பல்வேறு நிறுவனங்களில் இணைந்து தனது புலமைப் பங்களிப்பினை அவர் வழங்கியுள்ளார். சுமார் 20இற்கு மேற்பட்ட இத்தகைய தேசிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் அவரை இணைத்துக் கொண்டு அவரது அறிவையும் ஆலோசனைகளையும் பெற்றுப் பயனடைந்தமை முஸ்லிம் சமூகத்திற்கு அவர் தேடித் தந்த பெருமையாகும்.
கலாநிதி சுக்ரி அவர்களின் ஆளுமைப் பண்புகள்
பொதுவாக அறிவு பெற்றவர்கள் அதிலும் கலாநிதிப்பட்டம் பெற்றவர்களும் சமூகத்தில் செலவாக்குப்பெறும் பிரபல்யங்களும் காலப் போக்கில் புலமைச் செருக்குடன் (Intellectual arrogance) செயல்படுவதுண்டு. இன்று முஸ்லிம் சமூகத்திலுள்ள சுயபட்டம் சூட்டிக்கொண்டுள்ள சிலர் அவர்களுக்கும் பிறருக்கும் இடையில் ஓர் இடைவெளியைப் பேணுவதில் மதமிஞ்சிய ஆர்வம் காட்டுவதை நான் தெளிவாகக் கண்டுள்ளேன். பலர் தமக்கு மிகச் சோலியான ஒரு செயல் அட்டவணை (busy schedule) இருப்பது போலவும் தன்னை இலகுவாகவும் நேரடியாகவும் எடுத்த மாத்திரத்திலேயே தொடர்பு கொள்ள முடியாது என்பதைப் போலியாகக் காண்பிக்கவும் செயலாளர்களையும் பரிவாரங்களையும் வைத்துக் கொண்டு உலாவரும் இன்றைய நாட்களில் பேரறிஞர் கலாநிதி சுக்ரி அவர்களின் பணிவையும் அடக்கத்தையும் கண்டு நான் வியந்து போயுள்ளேன். தொலைபேசியில் அவரை யாரும் எந்த நேரத்திலும் அழைக்கலாம். அத்தனைக்கும் இதமாகவும் பொறுப்புணர்வுடனும் அவர் பதில் தருவார். அதே வேளை அறிஞர்கள் பொதுவாக சமகாலத்தவர்களை அங்கீகரிப்பதில்லை. கலாநிதி சுக்ரி அவர்கள் ஏனைய கல்விமான்களையும் மதிக்கும் மகத்தான குணமுள்ளவராக இருந்தார். அவரது புன்னகையில் எப்போதும் ஒரு இதம் தவழும், சொற்களில் எளிமை இருக்கும். வார்த்தைகளில் கனிவும் மென்மையும் இழையோடும்.
ஒரு பத்தாண்டிற்கு முன்னர் அறிவை இஸ்லாமிய மயமாக்கல் எனும் எனது நூல் வெளிவந்தது. அதன் ஒரு பிரதி நளீமிய்யாவின் ஓர் இளம் விரிவுரையாளர் மூலம் அவர் கைக்கு எட்டியுள்ளது. அதனை நன்கு வாசித்து விட்டு என்னைத் தொலைபேசியில் அழைத்து Keep it up என்று ஊக்குவித்தார். எனக்குக் கற்றுத்தந்த, என்னைவிட 40 வயது அதிகம் நிறைந்த, அறிவில் என்னை விட பழுத்த ஒரு பேரறிஞன் இந்தச் சின்னவனை அழைத்துப் பாராட்டும் இந்தப் பக்குவம்தான் அவரது சிறப்பம்சம். இந்த புலமை முதிர்ச்சியின் அடையாளம் அவரது பணிவாகவும் நல்ல பண்பாடுகளாகவும் வெளிவந்தது. இது இன்றைய இளம் தலைமுறை அறிவு ஜீவிகளுக்கு ஒரு நல்ல ஆதர்ஷமாகும். சமூக அந்தஸ்துக்காக (Social துக்காக (Social Status) சமூக இடைவெளி பேண விரும்பும் சில உலமாப் பெருந்தகைகளுக்கும் இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும். கலாநிதி சுக்ரி அவர்களின் குரலை தொலைபேசியில் கேட்ட அந்தத் தருணத்தில் நான் மெய் சிலிர்த்துப் போனமை இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
கலாநிதி எந்த இயக்கத்தையும் சாராது இயங்கியவர். நிறுவனங்கள் அற்ற வேண்டிய பணிகளைத் தனித்து நின்று ஆற்றிய ஒரு செயலவீரர். அவருக்கும் அவரைப் போன்ற பேரறிவாளர்களுக்கும் இயக்கம் தேவைப்படவில்லை. யாரது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் மசியாதவர் அவர். ஆனால் தெளிவான சில அரசியல் நிலைப்பாடுகள் அவரிடம் இருந்ததை அவருடனான உரையாடல் நான் புரிந்து கொண்டேன். சமூக மாற்றம் வெறும் கட்சி அரசியல் வழியே சாத்தியமில்லை என்பதும் அதற்கு நீண்டகால பண்பாட்டு உருமாற்ற செயன்முறை அவசியம் என்றும் ஆழமாக நம்பியவர் அவர். அவருடனான எனது நீண்ட உரையாடல்களை எதிர்காலத்தில் நூலாக வெளிக் கொணரும் உத்தேசம் உள்ளது. அவருக்கு இலங்கை முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையில் கடன்பட்டுள்ளது. அவரது ஆழ்ந்த ஆய்வுகளும் சிந்தனைகளும் இதுவரை காலமும் வெளியிடப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை என்ற வருத்தத்தை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.
சமுகத்தைப் புரிந்துகொள்ளல், சமூகத்தை மாற்றியமைத்தல் ஆகிய இரண்டையும் தழுவிய சிந்தனையாளர்களின் சட்டகங்களில் தன் காலத்தைத் தாண்டி சிந்தித்த ஓர் அறிவாளுமையாகவே அவர் நம்முன்னால் பரிணமிக்கிறார். அல்லாஹ் அவரது அத்தனை செயல்பாடுகளையும் அங்கீகரித்து உயர்ந்த அமைதியை வழங்க வேண்டும் எனப் பிரார்த்திப்போமாக!
