கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி: வரலாற்றில் ஒளிரும் மகத்தான அறிவாளுமை! – சிராஜ் மஷ்ஹூர்

“இரும்பு, இரும்பைக் கூர்மைப்படுத்துகிறது. அறிஞர், அறிஞரைக் கூர்மைப்படுத்துகிறார்.”
-வில்லியம் டிரம்மண்ட்

கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மரணம் ஏற்படுத்திய வலியை, சமீபத்தில் நிகழ்ந்த வேறெந்த மரணமும் தரவில்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அவருக்காக அழுதது. அந்தளவுக்கு முஸ்லிம் சமூக அரங்கில் மிக ஆழமாக உணரப்பட்ட இழப்பு அது.

தென்னிலங்கையில் மாத்தறை நகரில் பிறந்த கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, தமிழ்மொழியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒருவராக முகிழ்த்தது ஒரு திருப்பம்தான். அந்த வரலாற்றுத் திருப்பத்திற்குப் பின்னே, அவர் கல்வி பயின்ற சென்தோமஸ் கல்லூரியின் தமிழாசிரியர் கந்தையா மாஸ்டர் இருக்கிறார். அதை அவரே பல இடங்களிலும் சிலாகித்துச் சொல்லியுமுள்ளார்.

தமிழும் ஆங்கிலமும் இணைந்த இருமொழிப் புலமைதான், கலாநிதி அவர்களின் ஆளுமை வார்ப்பின் அடித்தளம் எனலாம். ‘சுவபாஷா’ (தாய்மொழிக்) கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முந்திய தலைமுறையினருக்கு வாய்த்த ஆங்கில மொழி மூலக் கல்வியின் அறுவடை அவர்.

கலாநிதி சுக்ரி என்ற ஆளுமை உருவாக்கத்திற்குப் பின்னே கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், எடின்பரோ பல்கலைக்கழகம் என்ற மூன்று கல்வி நிறுவனங்களின் பின்புலங்கள் உள்ளன.

கொழும்பு ஸாஹிறா அந்தக் காலத்தில் வெறும் பாடசாலையாக மட்டும் இயங்கவில்லை. முஸ்லிம் சமூக பண்பாட்டு மையமாக இருந்தது. அறிஞர் சித்திலெப்பையின் உழைப்பின் சாரம் அது. ஸாஹிறா அமைந்துள்ள கொழும்பின் பத்தாம் பிரிவான மருதானையை, இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டுத் தலைநகரம் (Cultural Capital) என்று சொல்லலாம். அந்தளவுக்கு சமூக – சமய – பண்பாட்டு- கல்வி ஊடாட்டங்கள் கொடிகட்டிப் பறந்த இடம் அது.

ஸாஹிறவில் ஏ.எம்.ஏ. அஸீஸ் என்னும் பேராளுமையின் பெருநிழலின் கீழ் வளர்ந்தவர் சுக்ரி. அந்தக் காலத்தில் ஸாஹிறா வெறுமனே ஒரு ‘பள்ளிக் கூடம்’ அல்ல. அறிஞர் அஸீஸ் அதைப் ‘பல்கலைக்கழகமாகவே’ வார்ப்புச் செய்தார். ‘நமக்கென்றொரு ஜாமியாஹ்’ வேண்டும் என்று தொலைநோக்குடன் கட்டுரை எழுதிய ஏ.எம்.ஏ. அஸீஸ், சாதாரண பள்ளிக்கூடமா நடத்தியிருப்பார்?

யாழ்ப்பாணத்தில் பிறந்த அஸீஸ், கொழும்பு சாஹிறாவில் தமிழும் ஆங்கிலமும் ஒருங்கே இழையோடிய ஒரு அற்புதக் கலவையாக மிளிர்ந்தார். முஸ்லிம் மாணவர்கள், இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் கொழும்பு ஸாஹிறாவுக்குப் படையெடுத்த காலம் அது. தமிழ் மாணவர்கள் கூட கல்வி பயின்ற கலைக்கூடம். அறிவுச் செழுமையும் பண்பாட்டு அசைவியக்கமும் முழு வீச்சோடு இருந்த ஸாஹிறாவின் பொற்காலத்தில்தான் சுக்ரி போன்றவர்கள் அங்கு அடியெடுத்து வைத்தார்கள். அங்கு பேராசிரியர் கா. சிவத்தம்பியின் மாணவராகவும் இருந்தார்.

அதேபோலத்தான் பேராதனைப் பல்கலைக்கழகம், வித்தியாசமான பல்துறை அறிவாளுமைகளின் சங்கமமாக இருந்தது. அந்தக் காலத்தில் ஆளுமை மிக்க மாணவர் பரம்பரையொன்று அங்கு உருவாகி வளர்ந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பல்கலைக்கழகத்தை மீள்சமூகமயமாதல் முகவர் (Resocialization agent) என்பார்கள். கலாநிதி சுக்ரியின் உலகப் பார்வை (worldview) வடிவமைந்தது பேராதனையில்தான் என்று துணிந்து கூறலாம்.

கெட்டிக்கார மாணவர்களை தத்தம் துறைக்கு ஈர்க்க வேண்டுமென்ற ஆவல் நிறைந்த பேராசிரியர்கள் வாழ்ந்த காலம் அது. கலாநிதி சுக்ரியை தமிழ்த் துறையில் படிக்க வைக்க பேராசிரியர் சு. வித்தியானந்தனும் கலாநிதி க. கைலாசபதியும் விரும்பினார்கள். ஆனால், சுக்ரியின் நாட்டமோ அறபு -இஸ்லாமியத் துறையில் இருந்தது.

அவரோடு ஒரு சாலை மாணாக்கராக இருந்த பேராசிரியர் சி.மௌனகுரு சொல்கிறார், “நாங்களெல்லாம் மார்க்ஸ் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, சுக்ரி ஆர்னோல்ட் ரொயின்பீ பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்.” கலாநிதி சுக்ரி அப்போதே மிகச் சிறந்த வாசகராக இருந்தார் என்பதன் அடையாளமே இது.

பேராசிரியர் செய்யித் அக்தர் இமாம், அவருக்கு ஒரு குருவாக – வழிகாட்டியாக – Mentor ஆக விளங்கியது அங்குதான். பாகிஸ்தானியரான எஸ்.ஏ.இமாம் எனும் ஆழ்ந்த புலமை கொண்ட ஒரு பேராளுமை, சுக்ரிக்கு பேராசிரியராக வாய்த்தார். அவரின் கீழ் அறபு மொழியை விசேட துறையாகக் கற்றார். பேராசிரியருக்கு அப்போது சுக்ரி மட்டும்தான் மாணவர்.

“You know Shukri…” என்று தொடங்கி அறிவுக் கருவூலங்களை மழை போல பொழிந்தவர் அவர். சும்மா இருக்கும் நேரங்களிலெல்லாம், தன் மாணவனை அழைத்துக் கொண்டு போய் வகுப்பறையிலும் வெளிப் பூங்காவிலும் நூலகத்திலும் உரையாடல்கள், கருத்தாடல்கள் மூலம் பட்டை தீட்டியிருக்கிறார். இதை மிகுந்த ஈடுபாட்டோடு கலாநிதியவர்கள் என்னிடம் சிலாகித்துப் பேசியிருக்கிறார். கலாநிதி சுக்ரியின் உலகப் பார்வை (worldview) விரிவும் ஆழமும் பெற்றதற்குப் பின்னே பேராசிரியர் இமாம் இருந்தார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நான்கு முக்கியமான சூஃபி தத்துவாசிரியர்களுள் மூவரைப் பற்றி மேலைத்தேய அறிஞர்கள் மூவர் ஆராய்ந்து விட்டார்கள். ஆனால், இமாம் அபூதாலிப் அல் மக்கீயின் ‘கூத்துல் குலூப்’ பற்றித்தான் இதுவரை எவரும் ஆராய்ச்சி செய்யவில்லை என்று பேராசிரியர் இமாம் சொன்ன கருத்து, அவரது மனதில் ஆழப் பதிந்திருந்தது.

அவருக்கு, முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூதின் அனுசரணையூடாக பொதுநலவாய புலமைப்பரிசில் ( Commonwealth Scholarship) கிடைத்தது. அதன் காரணமாக, எடின்பரோ பல்கலைக்கழகத்திற்கு உயர் கல்வி கற்கச் சென்றார்.

அங்கு அறபு – இஸ்லாமியக் கற்கைகள் துறைப் பேராசிரியராக இருந்தவர்,
மொண்ட்கொமரி வொற் (W.Montgomery Watt). உலகப் புகழ்பெற்ற கீழைத்தேயவியலாளர், வரலாற்றியலாளர், முன்னைநாள் கிறிஸ்தவ பாதிரியார் என்ற பல்பரிமாணம் கொண்ட ஸ்கொட்லாந்துப் பேராசிரியர் அவர். அவரது மேற்பார்வையின் கீழ்தான் தனது கலாநிதிப் பட்ட ஆய்வைச் செய்து முடித்தார்.

ஆய்வுத் தலைப்பு பற்றிய கதை வந்திருக்கிறது. பேராசிரியர் மொண்ட்கொமரி வொற்றிடம், “கூத்துல் குலூப்’ பற்றி இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. அதைப் பற்றித்தான் ஆய்வு செய்ய விரும்புகிறேன்” என சுக்ரி சொல்லியிருக்கிறார். அவருக்கோ ஆச்சரியம். “உங்களுக்கு எப்படி அதைப் பற்றித் தெரியும்?” என்று வியப்பு மேலிடக் கேட்டிருக்கிறார். உடனே பேராசிரியர் இமாமைப் பற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார் சுக்ரி. இதன் பிறகு அவர்களிடையே இறுக்கமான உறவும் ஆழமான புரிந்துணர்வும் வளர்ந்தது.

ஐக்கிய ராச்சியத்தின் நூலகங்களில் தேடலும் வாசிப்புமாய்ப் புதைந்து போகிறார் சுக்ரி. கடைசிக் கீழைத்தேயவியலாளர் (Last Orientalist) என்று அடையாளப்படுத்தப்படும் பேராசிரியர் மொண்ட்கொமரி வொற்றுடனான ஊடாட்டங்களும் கருத்தாடல்களும், கலாநிதி சுக்ரியின் சிந்தனைப் புலத்தை மேலும் ஆழப்படுத்துகிறது.

இப்படியான ஒரு விரிந்த அறிவுப் பின்புலத்தோடுதான் நாடு திரும்பினார். பின்னர் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளராகப் பொறுப்பேற்றார். அவரது பிந்திய வாழ்வின் பெரும்பாகுதி ஜாமிஆவிலேயே கழிந்தது. ஜாமிஆவால் அவர் அடைந்த நன்மைகளை விடவும், அவரால் ஜாமிஆ அடைந்த பயன்கள்தான் அதிகம் என்றால் அது மிகையல்ல. அங்கிருந்த மாணவர் பரம்பரையில் அவர் ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமானது.

துரதிர்ஷ்டவசமாக, அவர் உருவாக்க விரும்பிய அறிவுசார் மரபு (Intellectual Legacy), அவரது மாணவர்கள் மத்தியிலோ, விரிந்த சமூக மட்டத்திலோ போதியளவு கவனத்தில் கொள்ளப்படவில்லை.

ஒற்றைக் கதையாடல்களை மறுதலித்தவர் அவர். பன்மைத்துவ சிந்தனைப் பாங்கில் (Plurality) ஆழ்ந்த ஈடுபாடு காட்டினார். 1980 களுக்குப் பின்னர் இங்கு அதிக கவனம் பெற்ற, மத்திய கிழக்கு சார் அறபு-இஸ்லாமிய சிந்தனையோட்டத்திற்குள் அவர் சுருங்கியிருக்கவில்லை. தென்னாசிய இஸ்லாமிய சிந்தனையாளர்கள், ஐரோப்பிய சிந்தனையாளர்கள், கீழைத்தேயவியலாளர்கள் குறித்தெல்லாம் தனது பார்வைப் புலத்தை விரித்தார். அவற்றைப் பேசுபொருளாக்கினார். அவரது முக்கியமான Proactive சிந்தனைத் தலையீடாக – மாற்று சிந்தனைக் கதையாடலாக இதை அடையாளம் காணலாம்.

அல்லாமா இக்பால் பற்றி, இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி பற்றி, ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி பற்றி, ஜமாலுத்தீன் ஆப்கானி பற்றி, அபுல் ஹஸன் அலி நத்வி பற்றி, முஹம்மத் அல் கஸ்ஸாலி பற்றி, மாலிக் பின் நபி பற்றி, ஆர்னோல்ட் ரொயின்பீ பற்றியெல்லாம் அவர் பேசத் தொடங்கினார். அவரது அறிதல் முறையும், அதை முன்வைக்கும் பாங்கும் தனித்துவமானவை.

காலனிய நீக்கம், நவீனத்துவத்தை எதிர்கொள்ளுதல் போன்ற வரலாற்றுச் சவால்களுக்கு முன்னே கலாநிதி சுக்ரி தனித்துத் துலங்கினார். “அவர்கள் உங்களைக் காலனியத்திற்கு உட்படுத்தினார்கள். ஆனால், நீங்கள் ஏன் காலனியத்திற்கு உட்படும் நிலைக்குக் கீழிறங்கி இருந்தீர்கள்?” என்ற அல்ஜீரிய சிந்தனையாளர் மாலிக் பின் நபியின் புகழ்பெற்ற மேற்கோளை கலாநிதி சுக்ரி அடிக்கடி சுட்டிக் காட்டுவார்.

அவரைத் தவிர, இந்தளவுக்கு இங்கிருந்த இஸ்லாமிய சிந்தனைப் புலத்தை வேறெவரும் ஆழப்படுத்தவோ விசாலப்படுத்தவோ இல்லை.

பாரதியையும் இக்பாலையும் ஒப்பிட்டு ‘இரு மகாகவிகள்’ என்று எழுதும் வல்லமையும் பரிச்சயமும் அவருக்குத்தான் இருந்தது.

இளமைக் காலத்திலிருந்தே நல்ல பேச்சாளராக அறியப்பட்டிருந்தார். அந்தக் காலத்து மீலாத் விழாக்களில் அவர் ஒரு முன்னணிப் பேச்சாளர். பேராசிரியர் தாரிக் ரமழானின் தந்தை ஸஈத் ரமழான் இலங்கை வந்தபோது, ஸாஹிறாக் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் அவரது உரையை அழகுற மொழிபெயர்த்தவர் கலாநிதி சுக்ரிதான்.

இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் அவர் வாராந்தம் நடத்தி வந்த ‘தத்துவ வித்துக்கள்’ தொடர் பேச்சு, அவரது சிந்தனைகள் பரவலாக பொதுமக்களைச் சென்றடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய சிந்தனை ஆய்விதழில் அவர் எழுதி வந்த ஆசிரியர் தலையங்கங்கள் மிகுந்த வீச்சானவை; கருத்துச் செறிவு மிக்கவை. அவற்றையெல்லாம் தொகுத்துத் தனி நூலாக்க வேண்டும். தமிழ் கூறு நல்லுலகில் இஸ்லாமிய சிந்தனைகள் குறித்து ஆழமாகப் பேசிய காத்திரமான இதழ் அதுதான் என்று துணிந்து கூறலாம்.

கலாநிதி சுக்ரியின் ஆய்வுகள் குறித்து தனியாகவே பேச வேண்டும். இஸ்லாமிய சிந்தனைப் பின்புலத்தோடு, ஆய்வு முறையியலுக்கு அமைந்து, கலாநிதி சுக்ரி அளவுக்கு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியோரை இங்கு விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றுள் பல தொலைந்து விட்டன. எஞ்சியிருக்கும் ஒரு சிலவற்றையாவது நூலுருவுக்குக் கொண்டுவர வேண்டும்.

சர்வதேச ஆய்வரங்குகளில் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் ஆய்வுகளுக்கென்று பிரத்தியேகமான மரியாதை இருந்தது. அறபு – இஸ்லாமிய உலகிலும் சர்வதேசப் பரப்பிலும் மிகவும் அறியப்பட்ட நம் நாட்டு ஆய்வறிஞராக அவரே இருந்தார். அவரது இழப்பு என்பது ஆய்வுத் துறையில் பாரிய இடைவெளியை உருவாக்கி விட்டிருக்கிறது.

அவரது நூல்களைத் தொட்டால் அதுவே தனித் தலைப்பாகி விடும். ‘ஆத்மஞானிகளும் அறப் போராட்டங்களும்’ ஒரு சிறிய நூல்தான். ஆனால், அது ஏற்படுத்திய அதிர்வலைகள் மிகவும் முக்கியமானவை. அதை வாசித்தால் சூஃபி மரபைப் பற்றி நிலவும் பொது மனப்பதிவு தலைகீழாக மாறி விடும். ‘தஃவாவும் நவயுகத்தின் சவாலும்’ பெரும் சிந்தனைக் கிளர்வை ஏற்படுத்தும் மொழிபெயர்ப்பு நூல்.

அவர் தொகுத்தளித்த “Muslims of Sri Lanka: Avenues to Antiquity” (இலங்கை முஸ்லிம்கள்: தொன்மைக்கான பாதைகள்) காலத்தால் அழியாத ஒரு மகத்தான வரலாற்றுப் பங்களிப்பு. இந்த முயற்சிக்குப் பின்னே ஏ.ஜே. ஸனீர், நூர் அமீன் போன்ற வேறு சிலரின் அறிவுத் துறைப் பங்களிப்பும் உள்ளன.

கலாநிதி சிறிமா கிரிபமுன, கலாநிதி கா. இந்திரபாலா, கலாநிதி T.B.H.அபேசிங்க, கலாநிதி C.R. டி சில்வா, கலாநிதி D.A.கொத்தலாவல, கலாநிதி கார்ல் W. குணவர்த்தன, கலாநிதி லோணா தேவராஜா, கலாநிதி அமீர் அலி, ஜனாப் பைஸல் தாவூத், கலாநிதி B.A.ஹுஸைன்மியா, ஜனாப் அஸ்கர் S. மூஸாஜி, கலாநிதி A.முஹம்மத் மஹ்றூப், கலாநிதி M.A.M. சுக்ரி, கலாநிதி விஜய சமரவீர, ஜனாப் H.M.Z. பாறூக், திரு. K.D.G. விமலரத்ன, கலாநிதி K.M.டி சில்வா, ஜனாப் பஸால் தாவூத் ஆகியோர் இந்நூலில் மிகப் பெறுமதியான வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

இந்நூலின் தொகுப்பாசிரியர் (Editor) என்ற வகையில், இதற்கு 80 பக்க அறிமுகக் கட்டுரையொன்றை கலாநிதி சுக்ரி எழுதியுள்ளார். அவரது ஆய்வுத் தேடலின் வீச்சைப் புலப்படுத்தும் அறிமுகம் அது.

கலாநிதி சுக்ரியின் பண்பாடுகளைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். அமைதியே உருவானவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். ஆற்றொழுக்கான மொழிநடை கொண்டவர். மற்றவர்களது கருத்துகளை உன்னிப்பாக செவிமடுப்பவர். பகட்டில்லாதவர். எளிமையானவர். அவரது பெயரில் ஒரு வாகனம் கூட இல்லாதவர். ஒரு மாணவன் விமர்சித்தால் கூட சிரித்துக் கொண்டே அதை எதிர்கொள்ளும் மனப் பக்குவம் கொண்டவர். சூழ்நிலையையும் மனிதர்களையும் அனுசரித்து நடந்து கொள்ளத் தெரிந்தவர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சுருங்கச் சொன்னால் அவர் ஒரு மனிதப் பழம்.

ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு கொண்டவர். சூஃபித்துவ மரபும் நவீன இஸ்லாமிய சிந்தனையும் தத்துவப் பாரம்பரியமும் நவீன சிந்தனைப் புலமும் அவரில் சங்கமம் கொள்ளும் அழகே தனி. இந்த வகையில் அவருக்கு நிகரான இன்னொருவரைக் காண்பது மிகவும் அரிது.

தன் வாழ்நாளின் பிந்திய காலத்தில் பௌத்த-முஸ்லிம் உரையாடல் குறித்து அதிக ஆர்வம் காட்டினார். அது குறித்து தென்கிழக்காசிய நாடுகளில் இடம்பெற்ற பல ஆய்வரங்குகளில் கலந்து கொண்டார்.

ஒருமுறை கலாநிதி யூஸுஃப் அல் கர்ளாவிக்கு சுகவீனம் என்று கேள்விப்பட்டு, அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது வாசல் வரை வந்து ‘முஹம்மத் அலி முஹம்மத் சுக்ரி’ என்று பெயர் சொல்லி அவரைக் கட்டியணைத்து வரவேற்ற சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
“எவ்வளவு பெரிய அறிஞர் அவர். நம்மைப் போல சாமான்யன் ஒருவரை வாசல் வரை வந்து வரவேற்கிறாரே – அதுவும் சுகவீனமான நிலையில்- எவ்வளவு பெரிய பண்பாடு இது. நம் நாட்டு அறிஞர்களிடையே இப்படி ஒரு பண்பாட்டைக் காண முடியுமா?” என்று சிலாகித்துப் பேசினார். இதுதான் கலாநிதி சுக்ரி.

லக்னோவிலுள்ள நத்வதுல் உலமாவின் தாரகையும், தென்னாசிய மண் கண்ட மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞருமான அஷ்ஷெய்க் அபுல்ஹசன் அலி நத்வி மீது அவருக்கு மிகப் பெரும் ஈர்ப்பு இருந்தது. அவரது அறிவாளுமையாலும் பண்பாட்டாலும் ஆழ்ந்து கவரப்பட்டிருந்தார். அது பற்றி எழுதியுமிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த கொடைவள்ளல் நளீம் ஹாஜியார் என்ற போஷகர் இல்லாமல் சுக்ரி என்ற ஆளுமை முழுமை பெற மாட்டார். மாணிக்கக் கல் வியாபாரியான மர்ஹூம் நளீம் ஹாஜியார், கலாநிதி சுக்ரியை விலை மதிக்க முடியாத ஒரு மாணிக்கமாகவே மதித்தார்; நேசித்தார்.

அவர்கள் இருவருக்கும் இடையிலான ஆழ்ந்த நட்புறவு ஆச்சரியம் தருவது. இலங்கை முஸ்லிம்களின் சமூக – சன்மார்க்க – கல்வி ஓட்டத்தைத் திசைதிருப்பிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவு அது. மறுமலர்ச்சி இயக்கம் மூலம் நாடளாவிய ரீதியாக அவர்கள் செய்த பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஹாஜியார் மீது கொண்டிருந்த எல்லையற்ற அன்பு காரணமாக, ‘நளீம் ஹாஜியார்: வாழ்வும் பணியும்’ என்ற நூலை கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி எழுதி வெளியிட்டார்.
இவர்கள் இருவரும் நமது வரலாற்றில் மின்னும் இரு தாரகைகள். இலங்கை முஸ்லிம்களின் இரு கண்கள்.

பிற்குறிப்பு:
பத்திரிகைத் தேவைக்காக அவசர அவசரமாக எழுதிய கட்டுரை இது. மிக விரிவாக பின்னர் எழுதும் எண்ணம் உள்ளது.

நன்றி: விடிவெள்ளி 22.05.2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *