கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி: ஓர் அறிஞனின் வரலாற்றுப் பாத்திரத்தை மதிப்பீடு செய்தல் – அப்பான் அப்துல் ஹலீம்

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அறிவுப்புல அடையாளங்களுள் ஒன்றாக அடையாளப்படுத்த முடியுமான கலாநிதி ஷுக்ரியின் பங்களிப்பை மதிப்பீடு செய்வதாயின், அவர் எந்தத் தளத்தில் தன்னை நிலைநிறுத்தியிருந்தார் என்பதையும் எந்த சிந்தனைப் பாரம்பரியத்திலிருந்து தனது அறிவுச் சேகரத்தைப் பெற்றார் என்பதையும் மிகச் சரியாக வரையறுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் அவரது வகிபாகம் பற்றிய கருத்தாடல்களுக்குள் நுழைய முன்னர் சர்வதேச இஸ்லாமிய உலகில் பொதுவாக தாக்கம் செலுத்தும் இரு சிந்தனைப் பாரம்பரியங்களைப் பற்றிய குறிப்பான அறிமுகமொன்றைப் பெற்றுக் கொள்வதானது அதற்கான பொருத்தமான நுழைவாயிலாக அமைய முடியும். இரு சிந்தனைப் பாரம்பரியங்கள் என்பதனூடாக நவீன உலகின் சவால்களை எதிர்கொள்வதை பரஸ்பரம் நோக்காக கொண்டிருந்த சிந்தனைப் புலங்களையே நாடுகிறேன்.

அவ்வாறு நவீன உலக சவால்களை எதிர்கொள்ளலை மையமாகக் கொண்டு கடந்த ஒன்றரை அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்குட்பட்ட காலப்பிரிவில் உலகளாவிய முஸ்லிம் சமூகத்துக்குள் உருவாகி வளர்ந்த சிந்தனை முகாம்கள் அனைத்தையும் புத்திஜீவித்துவ வட்டாரங்கள் இரு பெரும் தளங்களுக்குள் உள்ளடக்குகின்றன. புத்துயிர்ப்புவாத (Revivalist) சிந்தனைத் தளம் எனவும், சீர்திருத்தவாத (Reformist) சிந்தனைத் தளம் எனவும் அவற்றை அடையாளப்படுத்தலாம். இவ்விரு தளங்களையும் அதன் ஆழ அகலங்களோடு புரிந்து கொள்வதாயின் விஷேடமான கலந்துரையாடல்களுடன் கூடிய தொடர் ஆக்கங்கள் அவசியப்படும். எனினும் எமது தலைப்புக்கான கோட்பாட்டுப் பின்புலத்தை வழங்கும் நோக்கில் ஒரு சுருக்க அறிமுகத்தை மாத்திரம் இங்கு தர விரும்புகிறேன்.

புத்துயிர்ப்புவாத சிந்தனைத் தளம் தனக்கென பிரத்தியேகமான உலக நோக்கொன்றைக் கொண்டதாகும். ‘நவீன உலகின் சிந்தனைகள், கோட்பாடுகள், நிறுவனங்கள், வழிமுறைகள் என மொத்தமாக அனைத்துமே இஸ்லாத்துக்கும் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கும் எதிரானவை’ என்ற புரிதலே புத்துயிர்ப்புவாத சிந்தனையின் உலகநோக்கைத் தீர்மானிக்கின்ற அடிப்படையாகத் தொழிற்படுகிறது. நவீனத்துவமானது முஸ்லிம் உலகின் மீது ஈவிரக்கமற்ற கலாச்சார ஆக்கிரமிப்பொன்றை மேற்கொள்கிறது என்பதே அந்தப் புரிதலாகும். நவீன ஒழுங்குகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு பற்றிய அதீத அச்ச உணர்வும், அதன் விளைவாக சமூகம் மற்றும் கலாசார பாரம்பரியங்களது பாதுகாப்பு தொடர்பாக எழும் கலக்க நிலையும் இவ்வுலகநோக்கின் பிரதான இயல்புகள். எனவே நவீன உலகின் பயணத் திசைக்கு எதிர்த்திசையில் பயணிப்பதையும், நவீன உலகின் மாதிரிகள் (Models) அனைத்தையும் தமது எதிரிகளாகக் கட்டமைத்துக் கொள்வதையும் புத்துயிர்ப்புவாத சிந்தனைத் தளங்கள் தமது பொதுப் பண்புகளாக கொண்டிருந்தன. சமூகத்தின் பாற்பட்ட இந்தப் புரிதலிலிருந்து தனிப்பட்ட முஸ்லிமின் வாழ்வு தொடர்பாக ‘அவனது ஈமானுக்கு அச்சுறுத்தல்’ உள்ள சூழல் காணப்படுவதாக புத்துயிர்ப்புவாதம் வரைவிலக்கணப்படுத்தியது. இதனை எதிர்கொள்வதற்காக, முஸ்லிம் சமூகம் தனது மார்க்க அடிப்படைகள் பற்றிய புரிதலை ஆழப்படுத்துவதோடு அதன் தூய வடிவத்திலிருந்து அனைத்துக்குமான மாற்றீடுகளை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தீர்வாகவும் முன்வைத்தது. இதனடியாக தனிமனித மற்றும் சமூக வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் இறுக்கமான நெறிமுறைகளுக்குள்ளும், விதிமுறைகளுக்குள்ளும் வரையறை செய்து கொள்வதன் மூலமாகவே அந்தத் தீர்வை சாத்தியப்படுத்தலாம் என்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றது மட்டுமல்லாமல், அப்படியான குணாம்சங்கள் கொண்ட ஒரு சமூகம் ‘எதிர்பார்க்கப்படும் சீரிய இஸ்லாமிய சமூக அமைப்பு’ என்ற பெயர் கொண்டு அடையாளப்படுத்தப்படலானது. இதற்கான வரலாற்று மாதிரிகளை இனங் கண்டு, செயலிழந்து போன அந்த மாதிரிகளின் அடிப்படைகளை மீண்டும் தூசு தட்டி மீளக் கட்டியெழுப்புவதனூடாகவே இதனை சாத்தியப்படுத்தலாம் என்ற புரிதல் இதனடியாகத் தோற்றம் பெற்றது. இவ்வாறு மகத்துவம் நிறைந்த ஒரு வரலாற்றுக் காலப் பிரிவை தனக்கான மாதிரியாக முன்னிறுத்தி, அதனை மீள உயிர்ப்பிப்பதனூடாக (Reviving and reliving the glorified past) நவீன சவால்களை வெற்றிகொள்ளும் சக்தியை தனக்குள் வளர்த்துக்கொள்ளலாம் என்ற உலகநோக்கையே ஆய்வாளர்கள் புத்துயிர்ப்புவாதம் (Revivalism) என அடையாளப்படுத்துகின்றனர். இந்த சிந்தனைத் தளத்தின் பிரதான குணாம்சங்கள் (Characteristics) பல காணப்படுகின்றன.

கருத்தியல்களைச் (Ideologies) சூழ தன்னை ஒரு கட்டமைப்பாக (Structured movement) நிலைநிறுத்திக் கொள்ளல், தன்னைச் சூழ பாதுகாப்பு வேலிகளை இட்டுக் கொள்ளல் (Protectionism), கற்பனாவாத இலக்குகளை உருவாக்கிக் கொள்ளல் (Idealism), புரட்சிகர மாற்றங்களை யாசித்தல் (Revolutionism), சமூகத்தின் சார்பிலான பிரதிநிதிகள் என்ற மனோநிலை போன்றனவற்றை அவற்றில் சிலதாக அடையாளப்படுத்தலாம்.

புத்துயிர்ப்புவாத சிந்தனைத் தளத்தை உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக் காலத்தில் தோற்றம் பெற்று வளர்ந்த பாரம்பரிய புத்துயிர்ப்புவாத சிந்தனைப் பள்ளி என்றும், உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பின்னர் தோற்றம் பெற்று வளர்ந்த நவீன புத்துயிர்ப்புவாத சிந்தனைப் பள்ளி என்றும் வேறுபடுத்தி நோக்குவதனூடாக இத்தளம் பற்றிய இன்னும் ஆழமான புரிதல்களுக்குள் நுழைய முடியும். எனினும் விரிவஞ்சி அதனை தவிர்ந்து கொள்கிறேன்.

மறுபுறத்தில் சீர்திருத்தவாத (Reformist) சிந்தனைத் தளமானது இதற்கு நேர்மாற்றமான உலகநோக்கொன்றை அடிப்படையாகக் கொண்டே தோற்றம் பெற்று வளர்ந்தது. ‘நவீனத்துவத்தின் சவால்களோ அது உருவாக்கியிருக்கின்ற நிறுவனங்களோ இஸ்லாத்தினதும் இஸ்லாமிய வாழ்க்கை முறையினதும் இருப்புக்கான அச்சுறுத்தல் அல்ல’ என்பதே சீர்திருத்தவாத சிந்தனைத் தளத்தின் அடிப்படைப் புரிதலாகும். நவீனத்துவ உலகம் இஸ்லாத்தின் எதிரி என்ற ரீதியில் அணுகாமல், நவீனத்துவம் பிரசவித்த உலக ஒழுங்குக்கும் இஸ்லாமிய வாழ்வொழுங்குக்குமிடையில் இயல்பான முரண்பாடு நிலவுவதற்கான காரணம் என்ன? என்ற கேள்விக்கூடாக சீர்திருத்தவாத முகாம் பிரச்சினையை அணுகியது. அதற்கான பதிலையும் கண்டு கொண்டது. ‘முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட உலக ஒழுங்குக்குள் இயல்பாக ஒத்திசைந்த இஸ்லாமிய வாழ்வொழுங்கானது, நவீனத்துவத்தால் உருவாக்கப்பட்ட உலக ஒழுங்குக்குள் இயல்பாக ஒத்திசைய திணறுகிறது’ என்பதே அந்தப் பதிலாகும். இந்தப் பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிய விழைந்த போது இஸ்லாத்தினதும், நவீனத்துவத்தினதும் தத்துவார்த்த அடிப்படைகளுக்கிடையில் காணப்படும் முரண்படு தன்மைகளே பிரச்சினையின் அத்திவாரம் என்பதை அது கண்டுகொண்டது. எனவே நவீனத்துவ உலக ஒழுங்கொன்றுக்குள்ளும் கூட இஸ்லாமிய வாழ்வொழுங்கை ஒத்திசையச் செய்யும் வகையில் அதன் தத்துவார்த்த அடிப்படைகளோடு விமர்சனபூர்வமாக உரையாடுவதும், அந்த உரையாடல்களின் மூலமாக நவீனத்துவ நிறுவனங்கள் மற்றும் முறைமைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதுமே இந்த சிந்தனை முகாமின் தொழிற்பாடுகளாக மாறின. புத்துயிர்ப்புவாத தளத்தின் அடிப்படைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உலகநோக்கைக் கொண்ட சீர்திருத்தவாத தளத்தில் அதற்கென்று விஷேடமான குணவியல்புகளும் (characteristics) உருவாகின.

அறிவுப்புல செயற்பாடுகளும் தொடர் அறிவியக்கமும் அதன் தவிர்க்க முடியாத விளைவுகளாக உருப்பெற்றிருந்தன. வரலாற்றின் சவால்களுக்கன்றி சமகால சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்த அந்தத் தேவையானது தொடர் அறிவியக்கமொன்றின் இருப்பை நிர்ப்பந்தமான தேவையாக மாற்றியிருந்தது. அதன் விளைவாக புத்தாக்க சிந்தனைகளும், விமர்சன சிந்தனைகளும் இப்புலத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றன. இதனை சாத்தியப்படுத்தும் வகையில் சீர்திருத்தவாத சிந்தனைத் தளமானது தனக்கென பலமான தத்துவார்த்த அடிப்படைகளையும் அதனடியான கோட்பாட்டுச் சட்டகங்களையும் (Philosophically rich theoretical framework) உருவாக்கிக் கொண்டது. மொத்தத்தில் அறிவுற்பத்தியும், விமர்சனக் கலாச்சாரமும் இதன் பிரதான குணங்களாக பரிணமித்தன.

புத்துயிர்ப்புவாத சிந்தனைத் தளம் கட்டமைப்புகளுக்குள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முனைந்த அதே வேளை, சீர்திருத்தவாத சிந்தனைத் தளமோ கலாச்சாரக் காவலர்களாக தொழிற்படும் பாரத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரமான அறிவியக்கங்களாக பரிணமித்தது. ஆஃப்கானியின் செயற்பாடுகளூடாக ஓரளவு நிறுவனமயப்பட்டு, அப்துஹூவிற்கூடாக பயணித்த சீர்திருத்தவாத சிந்தனைப் புலத்தின் அறிவியக்கமானது ஒரு பக்கத்தில் செய்யித் அஹ்மத் கான், இக்பால், மாலிக் பின் நபி, அலி இஸ்ஸத் பெக்கோவிச், அப்துல்லாஹ் தர்ராஸ், ஸஈத் நூர்ஸி என்றும், மறுபக்கத்தில் அலி அப்துர் ரஸ்ஸாக், அப்துர் ரஹ்மான் அல்கவாகிபி, அப்துல்கரீம் ஸோரோஷ், அப்துல்மஜீத் ஷர்ஃபி, ஃபஸ்லுர் ரஹ்மான், மஹ்மூத் முஹம்மத் தாஹா என்றும் கிளை பரப்பியது.

புத்துயிர்ப்புவாத அணிகளுக்குள் சீர்திருத்தவாத குணாம்சங்கள் சில இருப்பதான அவதானமொன்றிருந்தாலும், நீண்ட திறனாய்வை வேண்டி நிற்கும் அது பற்றிய கலந்துரையாடலை பிரிதொரு சந்தர்ப்பத்துக்காக விட்டுச் செல்கிறேன்.

இந்த அறிமுகக் குறிப்புகளோடு கலாநிதி ஷுக்ரியின் சிந்தனைத் தளத்துக்குள் நுழையும் போது, சீர்திருத்தவாத சிந்தனைப் புலத்தின் அறிவார்ந்த உரையாடல்களை அதன் ஆழ அகலங்களோடும், அவற்றின் உயிர்த்துடிப்போடும் சுமந்த ஒருவராக அவரை இலகுவாக அடையாளப்படுத்தி விட முடியும். இச்சிந்தனைப் புலத்தின் சர்வதேச ஆரம்ப கர்த்தாக்களோடு தொடர்பிலிருந்த ஒருவராக அறிஞர் சித்திலெப்பையையும் பிற்பட்ட காலங்களில் கலாநிதி ஷுக்ரியின் பாடசாலைப் பருவ ஆசானான அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் போன்றவர்களையும் அடையாளப்படுத்தலாம். அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸின் உறவுக்கூடாக தோற்றம் பெற்று வளர்ந்த கலாநிதி ஷுக்ரியின் சீர்திருத்தவாத சிந்தனைப் புலத்துடனான உறவானது, மேற்கத்தேய அறிவகத்துடனான ஆழ்ந்த உறவினூடாகவும், தஸவ்வுஃப் பின்னணியுடன் அவருக்கேற்பட்டிருந்த அறிவுபூர்வமான மற்றும் விமர்சனபூர்வமான உறவினூடாகவும் மிகவும் வலுப்பெற்றிருந்தது. அதாவது இலங்கையில் சீர்திருத்தவாத உரையாடல்களின் ஆரம்ப கர்த்தாவாக கலாநிதி ஷுக்ரி இருக்கவில்லை. ஆனால் நவீன கால இலங்கையில் அதற்கு செயல் வடிவம் கொடுத்த மிக முக்கியமான ஆளுமையாக அவரிருந்தார் என்ற வரலாற்றுப் பாத்திரத்தைப் புரிந்து கொள்வது அவரின் பங்களிப்புகளை மதிப்பீடு செய்வதற்கு இன்றியமையாததாகும்.

உலகத் தரம் வாய்ந்த சர்வதேச பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராக பணி புரிவதற்கான சகல தகுதிகளையும் கொண்டிருந்த போதிலும், ஜாமியா நளீமிய்யாவின் உருவாக்கத்தில் பங்களிப்புச் செய்து அதன் பணிப்பாளராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னணி இதுதான். தான் பிறந்து வளர்ந்த மண்ணில் ஆழமான அறிவியக்கமொன்றை உருவாக்கி வலுப்பெறச் செய்வதற்காக அவர் மேற்கொண்ட காத்திரமான பங்களிப்பாகவே இதனைக் கருத வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த நான்கு தசாப்த காலத்தில், கலாநிதி ஷுக்ரியின் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கான அறிவுப்புல பங்களிப்பின் தளமாகத் தொழிற்பட்டது என்ற வகையில், ஜாமியா நளீமிய்யாவையும் இணைத்துக் கொண்ட நிலையில்தான் கலாநிதி ஷுக்ரியின் பங்களிப்பையும் அதன் தாக்கங்களையும் பற்றி கலந்துரையாட வேண்டியது அவசியமென்று கருதுகிறேன்.

இலங்கை முஸ்லிம் பொதுப்புத்தியில் ‘மார்க்கக் கல்வி’ என்ற அம்சம் மத்ரஸா முறைமையோடு இரண்டறக் கலந்து உறைந்து போயிருந்த ஒரு கால கட்டத்தில்தான், எட்டே வயது நிரம்பிய (அன்றைய பாஷையில்) ‘நளீமிய்யா மத்ரஸா’வை கலாநிதி ஷுக்ரி பொறுப்பேற்கிறார்.

ஏற்கனவே நளீமிய்யாவின் உருவாக்க சிந்தனையில் பங்களிப்புச் செய்திருந்தவர்களுள் ஒருவர் என்ற வகையில், அதன் உருவாக்கத்துக்கு முன்பே ஒரு நவீன பல்கலைக்கழகத்துக்குத் தேவையான அடிப்படை மூலக்கூறுகளான ஆய்வு சஞ்சிகை (Research Journal), மற்றும் வெளியீட்டுப் பணியகம் (University Press) என்பன அதன் முக்கிய பகுதிகளாக இருக்க வேண்டும் என்ற கருத்தை கலாநிதி ஷுக்ரி வலியுறுத்தியிருந்தார். ‘நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும்’ என்ற தனது புத்தகத்தில் கலாநிதி ஷுக்ரி இது பற்றி பிரஸ்தாபித்திருக்கிறார்.

பல்கலைக்கழகம் என்பது அறிவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகும். அந்த உற்பத்தியானது அங்கு நேரடியாக கற்கின்ற மாணவர்களுக்கு மாத்திரம் கிடைக்கும் போது, உற்பத்தி செய்யப்படும் அறிவால் வெளியுலகம் பிரயோசனமடைவது மட்டுப்படுத்தப்படுகிறது. இந்தப் போதாமையை ஈடு செய்வதற்காக பல்கலைக்கழகங்கள் கையாளும் இரண்டு முக்கிய வழிமுறைகள்தான் ஆய்வு சஞ்சிகையும் வெளியீட்டுப் பணியகமும். பல்கலைக்கழக சமூகத்தில் உற்பத்தியாகும் அறிவானது அதன் உச்ச கட்ட பயன்பாட்டை வழங்கும் வகையில் பரவலாக்கம் செய்யப்படுவதை நோக்காகக் கொண்டு இவ்விரு பிரதான அறிவுக் கிளைகளும் உலகளாவிய ரீதியில் தொழிற்படுகின்றன. பல்கலைக்கழகத்தை ஒரு பறவையாக உருவகித்தோமென்றால் அதன் இரண்டு சிறகுகளும் நிச்சயம் ஆய்வு சஞ்சிகையும், வெளியீட்டுப் பணியகமும் தான்.

இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இன்றும் கூட குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இல்லாத வெளியீட்டுப் பணியகக் கலாச்சாரம் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குச் சொந்தமான ஒரு ‘மத்ரஸாவில்’ எழுபதுகளின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டதெல்லாம் உச்சகட்ட வரலாற்றுப் பெருமை என்பதில் சந்தேகமேயில்லை. ‘இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கு அதற்கென பிரத்தியேகமாக தொழிற்படும் வெளியீட்டுப் பணியகங்கள் தனித்தனியே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே கஷ்டமாக இருக்கிறது’ என பேராசிரியர் ஜயதேவ உயங்கொட அவரது உரையொன்றில் குறிப்பிட்டிருப்பார். 2020ம் ஆண்டாகியும் முன்னணி தேசிய பல்கலைக்கழகங்கள் எதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளத் திணறுகின்றனவோ அதனை நான்கு தசாப்தங்களுக்கு முன்பே உணர்ந்தது மட்டுமல்லாமல் அதற்கு செயல்வடிவமும் கொடுத்ததானது நளீமிய்யாவுக்கென்று விஷேட தனித்துவமொன்றை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் ஜாமியா நளீமிய்யா ஒரு முன்னோடி என்ற அம்சம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றேடுகளில் மட்டுமல்ல இலங்கையின் அறிவுத் துறை வரலாற்றிலும் கட்டாயம் பொறிக்கப்பட்டே ஆக வேண்டும். அந்தப் பெருமை மிகு சிந்தனையின் பின்னாலிருந்த சிற்பி கலாநிதி ஷுக்ரி அவர்களே.

தமிழ் நிலைப்பட்ட இஸ்லாமிய உலகில் இன்றுவரை நிலைத்திருக்கும் ஆய்வுச் சஞ்சிகையான ‘இஸ்லாமிய சிந்தனை’யின் மூலகர்த்தாவாகத் தொழிற்பட்டவரும் கலாநிதி ஷுக்ரி அவர்கள்தான். அந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்த அவரது ஆய்வுக் கட்டுரைகள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அறிவுப் புலத்தில் விஷேடமாக தனித்து நிற்கும் அறிவுத் தொழிற்பாடுகளாகும். வேறு வார்த்தையில் சொல்வதானால் ‘ஆய்வு சஞ்சிகை’ என்ற இஸ்லாமிய சிந்தனை இதழின் taglineக்கான செயலுருவமாக அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன.

இப்படியாக, அவரது தலைமையின் கீழான நளீமிய்யாவில் அறிவியக்கமொன்றுக்கான அடிப்படைகளும், நவீன பல்கலைக்கழகத்தின் (Modern University) உள்ளீடுகளுக்கான அடிப்படைகளும் ஒருசேர சமாந்திரமாக இடப்பட்டன.

அதற்கேற்றாற்போல் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதலாவது ஆய்வு மாநாட்டையும் கலாநிதி ஷுக்ரியின் தலைமையிலான ஜாமியா நளீமிய்யா வெற்றிகரமாக நடாத்தி முடித்தது. அதில் முன்னணி ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் யாவும் கலாநிதி ஷுக்ரி அவர்களால் தொகுக்கப்பட்டு Muslims of Sri Lanka: Avenues to Antiquity என்ற தலைப்பில் 494 பக்கங்கள் கொண்ட புத்தகமாக 1986ம் ஆண்டு நளீமிய்யா வெளியீட்டுப் பணியகத்தால் வெளியிடப்பட்டது. இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாறு பற்றிய தேசிய மற்றும் சர்வதேச அறிவுப்புல ஆவணங்கள் மற்றும் ஆய்வுகளில் இன்றளவும் தொடராக மேற்கோள் காட்டப்படும் பூரணத்துவத்தை அண்மித்த ஓர் அறிவுத் துறைப் பங்களிப்பாக இதனைக் குறிப்பிட முடியும். ஆய்வு மாநாடுகளும், அவற்றில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆய்வு நூல்களாக வெளியிடப்படுவதும் நவீன பல்கலைக்கழக கலாச்சார அறிவுப் பரம்பல் தொழிற்பாட்டின் இன்னுமோர் அங்கம். அதிலும் கூட நளீமிய்யா அதன் முன்-கட்டிளமைப் பருவத்திலேயே கால் பதித்ததென்றால் கலாநிதி ஷுக்ரியின் மேதமையும் தூர நோக்கும் எந்தளவுக்கு இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

இவை போக, நளீமிய்யாவின் கலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட புதிய அம்சங்கள், வருடாந்த ஆய்வமர்வுகள், உலகளவில் பிரசித்தி பெற்றிருந்த அறிஞர்களின் நளீமிய்யாவுக்கான விரிவுரைத் தொடர் விஜயங்கள் என அறிவியக்க சிந்தனைப் பின்னணியையும், நவீன பல்கலைக்கழகத்தின் உள்ளீடுகளையும் ஒன்றிணைத்த நிலையில் ஒரு புதிய பயணத்துக்கான அடித்தளம் நளீமிய்யாவில் இடப்பட்டது.

மட்டுமல்ல, ‘கல்வியை அதற்குரிய முறையில் கற்றல்’ என்ற சுலோகம் கலாநிதி ஷுக்ரியினூடாக நளீமிய்யாவுக்குள் மாணவர்மயப்பட்டது என்றே கூறலாம். அண்மைக் காலங்களில் நளீமிய்யா சமூகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கலாநிதிக் கற்கையை நிறைவு செய்திருப்பதும், இன்னும் பலர் அதனைத் தொடர்ந்து கொண்டிருப்பதும் கலாநிதி ஷுக்ரி ஏற்படுத்திய அந்த அடித்தளத்தின் விளைவுகளே. மத்ரஸா பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இத்தகைய அறிவுநிலைப்பட்ட செயற்பாடுகளுக்கான அடித்தளமாக நளீமிய்யா தொழிற்பட்டமையானது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

மறுபுறத்தில், இவற்றுக்கு சமாந்திரமாக இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் ஆழ வேர் பரப்பியிருந்த பாரம்பரிய மற்றும் நவீன புத்துயிர்ப்புவாத முகாம்களின் செல்வாக்கு நளீமிய்யாவின் ஆரம்பம் தொட்டே நளீமிய்யாவுக்குள்ளும் தொழிற்பட்டதையும் இங்கு மறுக்க முடியாது. ஓர் அறிவு நிலையம் என்ற வகையில் அன்றைய முஸ்லிம் உலகில் பரவலாக தொழிற்பட்டு வந்த புத்துயிர்ப்புவாத சிந்தனையின் கரங்கள் நளீமிய்யாவின் கதவுகளையும் தட்டியதில் ஒன்றும் ஆச்சரியம் கிடையாது. வெளியுலகில் போன்றே நளீமிய்யாவுக்குள்ளும் புத்துயிர்ப்புவாத முகாம்களின் பாரம்பரிய பிரதிநிதித்துவத்துக்கும் அதன் நவீன பிரதிநிதித்துவத்துக்குமிடையில் ஒரு தொடர் முரண்பாட்டு நிலையும் (tension) காணப்பட்டது. காலப்போக்கில் நவீன புத்துயிர்ப்புவாத சிந்தனை முகாமானது பாரம்பரிய புத்துயிர்ப்புவாத முகாமினது செல்வாக்கை மிகைக்கும் நிலை நளீமிய்யாவுக்குள் ஏற்பட்டது.

ஒரு பக்கத்தில் கலாநிதி ஷுக்ரியின் சிந்தனையில் அகவயப்பட்டிருந்த அறிவுப் பாரம்பரியத்துக்கான அடித்தளம் நளீமிய்யாவுக்குள் பலமாக போடப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மறுபக்கம் நவீன புத்துயிர்ப்புவாத சிந்தனையின் மீதான கவர்ச்சியும் செல்வாக்கும் நளீமிய்யாவுக்குள் வேகமாக ஏற்பட்டுக் கொண்டிருந்தது. மாற்று சிந்தனைகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் இடையில் ஒரு முரண்பாட்டு நிலை தோற்றம் பெறுவதும் அதனடியான உரையாடல்கள் தோற்றம் பெறுவதும் அறிவு நிலையமொன்றுக்குள் இயல்பாக நடைபெறும் விடயங்களே. அந்த வகையில் ஒட்டுமொத்த சமூகத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட புத்துயிர்ப்புவாத சிந்தனைக்கும், ஒரு தனிமனிதனால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட அறிவியக்க சிந்தனைக்குமிடையிலான ஆரம்ப கட்ட உரையாடல்கள் நளீமிய்யாவுக்குள் தோற்றம் பெற்று அதில் புத்துயிர்ப்புவாத சிந்தனையின் கரம் மேலோங்கியிருக்கக் கூடும். அல்லது கலாநிதி ஷுக்ரியின் Intellectual Exposureஇனது ஆழ அகலத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கும் அவரோடு சமாந்திரமாக தோளோடு தோள் நிற்கின்ற அளவுக்குமான ஆளுமைகள் இல்லாதிருந்தமையால் புத்துயிர்ப்புவாத சிந்தனை அலைக்கு முன்பாக அவரால் தனியாக ஈடுகொடுக்க முடியாது போயிருக்கக் கூடும். எது எப்படியோ புத்துயிர்ப்புவாத சிந்தனையின் கரம் நளீமிய்யாவுக்குள் மேலோங்கியது. அதன் விளைவாக கலாநிதி ஷுக்ரி இட்ட அடித்தளங்கள் மீது போதியளவு சுவர்கள் கட்டப்படவில்லை என்பதே யதார்த்தமாகும்.

இதனை ஒரு மேம்போக்கான அவதானமாக நான் சொல்லவில்லை. மாற்றமாக ஒரு நளீமி என்ற வகையில் அதன் சிந்தனைத் தொடரில் ஓர் அங்கமாக இருந்த உள்ளக அனுபவத்திலிருந்தும், இன்றும் தொடர்கின்ற ஆத்மார்த்தமான தொடர்பிலிருந்துமே இதனைக் கூறுகிறேன். நான் நளீமிய்யாவுக்குள் மாணவனாக நுழையும் போது நளீமிய்யாவுக்கு சரியாக முப்பது வயது. அடுத்து வந்த ஏழு வருட காலங்கள் மிகப் பெரும்பாலும் நளீமிய்யாவுக்குள்ளேயே கழிந்தன. இக்காலப்பிரிவில் இருந்த நளீமிய்யா சமூகமானது அதற்கு முந்திய பரம்பரைகள் விட்டுச் சென்ற பாரம்பரியங்களின் தொகுப்பாகவே காணப்பட்டது. இங்கு ஒரு விடயத்தை முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். கலாநிதி ஷுக்ரி அப்போதும் நளீமிய்யாவுக்குள்தான் இருந்தார். ஆனால் அவர் ஏற்படுத்திய Reformist Intellectual Legacyயை விட, அவரிடம் கற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட Revivalist Popular Legacyயே நளீமிய்யாவுக்குள் பெரிதும் தாக்கம் செலுத்திக் கொண்டிருந்தது.

நளீமிய்யாவின் அன்றையை மாணவர் மையக் கலந்துரையாடல்களையும், மாணவர்-ஆசிரியர் வகுப்பறைக் கலந்துரையாடல்களையும், நளீமிய்யாவின் பாரம்பரியம் மிக்க சுவரொட்டியான ‘ராபிதா கலமிய்யா’ ஆக்கங்களையும், மாணவர் மன்ற மேடைப் பேச்சுகளையும், வருடாந்த போட்டி நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், மற்றும் அறிவமர்வுகளின் கருப்பொருள்களையும், அவற்றில் நிகழ்த்தப்பட்ட விரிவுரைகளையும் ஒரு discourse analysisஇற்கு உட்படுத்திப் பார்க்கின்ற போது வரும் பெறுபேறுகளை நிரல்படுத்தினால், கலாநிதி ஷுக்ரியின் அறிவுப் பாரம்பரியம் பற்றிய கருத்தாடல்கள் மற்றும் பேசுபொருள்கள் பட்டியலின் இறுதி இடங்களைக் கைப்பற்றும் நிலையே காணப்பட்டது. இதன் அர்த்தம் நளீமிய்யா முற்றாக கலாநிதி ஷுக்ரியின் அறிவுப் பாரம்பரியத்திலிருந்து வெளியேறி விட்டதென்பதல்ல. கலாநிதி ஷுக்ரி ஏற்படுத்திய அந்தப் பாரம்பரியங்கள் யாவும் இன்றளவும் நளீமிய்யாவுக்குள் எஞ்சியிருக்கின்றன. ஆனால் அவற்றின் வீரியம் பெருமளவு குறைந்திருக்கின்றது என்பதையும், அதன் பயன்பாடு பெருமளவு மட்டுப்பட்டிருக்கிறது என்பதையும், அந்தப் பாரம்பரியத்தை வாரிசுச் சொத்தாகப் பெற்ற மாணவர் பரம்பரையொன்று உருவாகவில்லை என்பதையுமே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குறிப்பிட்ட அளவிலேனும் இஸ்லாமிய சிந்தனை ஆய்வு சஞ்சிகையும், நளீமிய்யா வெளியீட்டுப் பணியகமும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த கோட்பாட்டுச் சட்டகங்கள் பலவற்றில் அதிர்வுகளை ஏற்படுத்தியமையும், சிலவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியமையும் மறுக்க முடியாத உண்மைகள். வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடுகள் பெரும்பாலும் தமிழ் மொழியில் இருந்த காரணத்தினால் அவை சர்வதேச அறிவுலகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லையாயினும், தமிழ் இஸ்லாமிய உலகின் தளங்களில் ஏற்படுத்தப்பட்ட கவனயீர்ப்புகள் காத்திரமானவை. ‘ஆத்மஞானிகளும் அறப்போராட்டங்களும்’ என்ற புத்தகத்தை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். அதனை வாசித்த தீவிர ஸூஃபித்துவ மரபு கொண்டவர்களை ஓரளவுக்கு நடுநிலைப்படுத்தும் வேலையையும், அதனை வாசித்த ஸூஃபி மரபுக்கு வெளியே இருந்தவர்களது தஸவ்வுஃப் பற்றிய புரிதலை அகலப்படுத்திய வேலையையும் அது செய்தது. இதனைத்தான் ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்களின் அறிவுப் பரவலாக்க வேலைத்திட்டம் (Knowledge dissemination project) என குறித்துக் காட்டினேன். எனினும் அந்தத் திட்டத்துக்காக நளீமிய்யாவில் போடப்பட்ட அடித்தளத்தின் உறுதிக்கேற்ற அளவில் அதன் பணி பரந்து வியாபிக்கவில்லை என்ற யதார்த்தத்தையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது.

நளீமிய்யாவின் மாணவர் பரம்பரை கலாநிதி ஷுக்ரியின் ஆளுமையால் கவரப்பட்டதென்பதும் அதனால் தாக்கமுற்றிருக்கின்றதென்பதும் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால் அவரது அறிவுப் பாரம்பரியத்தை முன்னகர்த்திச் செல்லக்கூடிய அல்லது அவரது intellectual concernகளுக்கு செயலுருவம் கொடுக்கக் கூடிய அளவில் அந்தப் பரம்பரை அறிவுப் புலம் சார்ந்து உருவாகவில்லை. அன்றும் இன்றும் அது ஜனரஞ்சக புத்துயிர்ப்புவாத திசையின் பக்கமே அதிகமதிகம் சார்ந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், ‘கலாநிதி ஷுக்ரியின் இந்த அறிவியக்கத் தொழிற்பாடானது அவரது மாணவர் சமூகத்துக்குள் எந்தளவு தூரம் துல்லியமாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது?’ என்ற கேள்வியை எழுப்பியே ஆக வேண்டிய தேவையும் இருக்கத்தான் செய்கிறது.

அவரால் இஸ்லாமிய சிந்தனையில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அந்த அறிவியக்க சிந்தனைத் துளிகளின் தொகுப்புகளாக இருக்கின்றன. ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டின் அபூதாலிப் அல்-மக்கீ தொட்டு ஹிஜ்ரி பதினான்காம் நூற்றாண்டின் அபுல் ஹஸன் அலி நத்வீ வரையில் வியாபித்திருந்த அவரது ஸூஃபித்துவ ஞானம், இமாம் கஸ்ஸாலி, மௌலானா ரூமி போன்றோருக்கூடாக மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வரை அவர் மேற்கொண்ட ஆன்மீக அறிவுப் பயணம், இக்பாலையும், மாலிக் பின் நபியையும், ஸஈத் நூர்ஸியையும் அவர் புரிந்து வைத்திருந்த அதிசயிக்கத்தக்க ஆழ அகலம், ஷேய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி, ஹுஸைன் ஹாமித் அல்ஹஸ்ஸான், அஹ்மத் அல்அஸ்ஸால், குர்ஷித் அஹ்மத் போன்ற அறிஞர்களுடன் அவருக்கிருந்த ஆத்மார்த்தமான நட்புறவு, ஆஃப்கானியினதும் அப்துஹூவினதும் பங்களிப்புகள் தொடர்பில் அவருக்கிருந்த அபரிமிதமான புரிதல் என அனைத்துமாக சேர்ந்து வடிவமைத்திருந்த கலாநிதி ஷுக்ரியின் Intellectual Legacyயும் அவரது மரணத்துடன் இணைந்து மரணித்து விட ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ‘இஸ்லாமிய சிந்தனை’யின் இதழ்கள் எழுத்துருவில் சுமந்து நிற்கும் அந்த Legacyயை செயலுருவம் கொடுத்து சுமந்து செல்லும் வகையில் ஒரு மாணவர் பரம்பரை உருவாகும் வரை அவரது மரணம் ஏற்படுத்திய இடைவெளி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

அப்படியொரு அறிவியக்கம் தோற்றம் பெற வேண்டும் என்பதற்கான தேவையை சமகால புத்துயிர்ப்புவாத முகாம்களின் சர்வதேச ரீதியிலான சிந்தனைச் சிக்கல்களும், தளம்பல் நிலைகளும், தடுமாற்றங்களும் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கின்றன. அதன் எதிரொலியாக இலங்கையிலும் புத்துயிர்ப்புவாத பின்னணி கொண்டவர்கள் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு தேக்க நிலைக்கும், குழப்ப நிலைக்கும், அச்ச நிலைக்கும் முகங்கொடுக்கின்ற நிலை தோற்றம் பெற்றிருப்பதை அவதானிக்கலாம். கலாநிதி ஷுக்ரி போன்ற அறிவியக்க சிந்தனையாளர்கள் பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே பேசி வரும் விடயங்களின் பால் உலகளாவிய ரீதியில் ஆய்வாளர்களின் கவனங்கள் திரும்பி வருகின்றன. அவற்றின் relevancy குறித்த தீவிர கருத்தாடல்கள் தோற்றம் பெற்று வளர்ந்து வருகின்றன. கலாநிதி ஷுக்ரியின் அறிவுப் பாரம்பரியத்தை வாரிசுச் சொத்தாக சுமந்து கொள்ளும் ஒரு மாணவர் பரம்பரை உருவாவதற்கும், அவரின் legacyயை சமூக உரையாடல்களின் விளிம்பில் கொண்டு போய் வைத்திருந்தவர்கள் மையப் புள்ளியை நோக்கி அதனை நகர்த்துவதற்கும் இதனை விட பொருத்தமான காலமொன்று கனியாது. பொதுவாக இலங்கை முஸ்லிம் சமூகமும் குறிப்பாக நளீமிய்யா சமூகமும் இப்போதாவது அந்தத் திசையை நோக்கி நகருமா?!

Affan Abdul Haleem
2020.05.2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *