இலங்கையில் இஸ்லாமியப் பண்பாட்டுச் சிந்தனைக்கு கலாநிதி சுக்ரியின் அறிவுப் பங்களிப்புக்கள் பேராசிரியர். எம்.எஸ்.எம் அனஸ்

 
இஸ்லாமியப் பண்பாட்டை நவீன யுகத்திற்கு அறிமுகப்படுத்துவதிலும் இஸ்லாமிய உலகைப் பாதித்து வரும் சிந்தனைச் சிக்கல்களில் விடுதலை பெருவதற்கான அறிவு ரீதியான பணிகளை மேற்கொள்வதிலும் சுக்ரி வழங்கி வரும் சேவைகள் மகத்தானவையாகும். இந்த வபைவத்தில் அவரைப் பற்றிய எனது பேச்சு இந்தப் பின்னணியிலேயே அமையவுள்ளது.
 
பேராசிரியர் எம்.ஏ.எம் சுக்ரி அவர்களைப் பாரட்டுவதற்காக மருதமுனை முஸ்லிம்களும் அதே போல் முழு அளவில் தென்கிழக்கு முஸ்லிம் சமூகமும் ஒன்றினைந்து இந்த வைபவத்தை நடத்துவது முழு கிழக்கிலங்கைக்குமான முன்மாதிரியான ஒரு நிகழ்வாகும். பேராசிரியர் சுக்ரி அவர்களின் இன்று வரையிலான அறிவுத் துறைக்காக அவர் ஆற்றி வரும் சேவைகளை பாராட்டும் இந்த நிகழ்வு முக்கியமானதெனக் கருதுகின்றேன். நீண்ட காலமாக இஸ்லாமிய பண்பாடு, சிந்தனை, கல்வி, சமூக சேவை போன்ற துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் சுக்ரி அவர்களை பாராட்டுவதோடு அவருடைய சேவைகளைப் பற்றிய ஒரு அறிவு ரீதியான மதிப்பீடும் சம்பந்தப்பட்டு இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமுமாகும்.
 
ஒரு அறிஞன் தனது வாழ் நாளிலேயே தனது அறிவுப் பணிகளையும் சேவைகளையும் பற்றிய மதிப்பீட்டை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் இங்கு வழங்கப்படுகின்றது. இதுதான் இந்த வைபவத்தின் முக்கியத்துவம் என்று நான் நினைக்கின்றேன்.
 
கலாநிதி சுக்ரி அவர்களையும் அவர்களின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் நான் நீண்ட காலமாக அறிந்திருக்கின்றேன். 1970ம் ஆண்டு என்று நினைக்கின்றேன் கொழும்பு ஸாஹிராவில் கபூர் மண்டபத்தில் ஒரு கருத்தரங்கில் நவீன இஸ்லாமிய சிந்தனைகளைப் பற்றி இளம் சுக்ரி சொற்பொழிவாற்றிக் கொண்டிருப்பதை அவதானித்த சம்பவம் எனக்க நினைவுக்கு வருகின்றது. அது எனக்கு ஒரு மகிழ்ச்சியையும் அவர் மீதான அபிமானத்தையும் அன்றே உருவாக்கியது. ஒன்று அவருடைய சிறப்பான உரையாற்றும் திறமை இரண்டு இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் சிந்தனைக் கொள்கைகளையும் நவீன கல்வி அறிவோடும் தற்கால உலக சிந்தனைகளோடும் ஒன்று கலந்து பொதுவாக உலகியல் கல்வி என்று நாங்கள் அடிக்கடி குறிப்பிடுகின்ற – இந்த விளக்கம் சரியானதா என்று எனக்குத் தெரியாது – எவ்வாறாயினும் நவீன கல்வித் துறையில் இருந்து வெளிவருகின்ற புதிய தலைமுறையினருக்கு இஸ்லாத்தில் இருந்து புதிய செய்திகள் தேவையாக இருந்தன அல்லது இஸ்லாம் நவீன சிந்தனைகளோடு எடுத்துச் சொல்லப்பட வேண்டியிருந்தது.
 
இது நவீன கல்வியின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல இது காலமாற்றத்தின் தேவையாகும். அதை சீரமைக்கக்கூடிய அதை உணர்ந்து அந்த சிந்தனையை வளப்படுத்தக்கூடிய ஆய்வாளர்கள் அறிஞர்கள் இருக்கிறார்களா என்று அன்று இளைஞர்களின் சிந்தனை வேகத்திற்கு ஈடு கொடுப்பவராக சுக்ரி விளங்குவதை என்னால் உணர முடிந்தது. அன்றைய கபூர் மண்டப நிகழ்வில் இருந்து இன்றுவரை கலாநிதி சுக்ரியின் பேச்சுக்களையும் எழுத்துக்களையம் நவீன உலக சிந்தனைகளோடு இஸ்லாமிய சிந்தனைகளைத் தொடர்புபடுத்தி அவர் வழங்குகின்ற சிந்தனைப் பரிமாற்றங்களை ஆர்வமாக அவதானிப்பவர்களில் ஒருவனாக இருந்து வருகின்றேன். இது ஒரு காலத்தின் தேவையைப் போன்றது. கல்வி கற்ற சமூகம் அது உலகக் கல்வியாக இருந்தாலும் ஆன்மீகக் கல்வியாக இருந்தாலும் கல்வி என்ற பொதுக் கண்ணோட்டத்திற்குள் வரும்போது உலகத்தின் தேவை சிந்தனை மாற்றமாகும். நவீனத்துவத்திற்கும் நவீன தெவைகளுக்கும் ஈடு கொடுக்கக்கூடிய அதே நேரத்தில் அர்த்த பூர்வமான கருத்துவளம் மிக்க சிந்தனைகள் தேவையாகும். இது இலங்கை இஸ்லாமிய சமுதாயத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஒரு பணி என்று நான் நினைக்கின்றேன்.
 
1950இன் இறுதிப் பகுதிகளில் ஏ.எம்.ஏ அஸீஸ் தனது பட்டப்படிப்பையும் உயர் கல்விகளையும் முடித்த பின்னர் ஒரு கருத்தைக் கூறினார். அது அவரது ‘இலங்கையில் இஸ்லாம்’ நூலில் இடம்பெற்று உள்ளது. அந்த நூல் 1963ல் வெளிவந்தது. புதிய சிந்தனைகள் எங்கள் உள்ளத்தில் பாரிய தாக்கங்களையும் பிரவாகங்களையும் ஏற்படுத்தி இருந்தது. புதிய சவால்கள் உலகத்தில் தோன்றியிருந்தன. இப்போது இவற்றிற்கு இஸ்லாத்தில் இருந்து நாம் காணக்கூடிய அல்லது காட்டக்கூடிய தீர்வுகள் என்ன?, இஸ்லாம் கூறும் வழிமுறைகள் என்ன? என்று நாம் அமைதியிழந்திருந்தோம். எந்தத் திசையில் இருந்து இதைப் பெறலாம் என்ற ஆர்வத்தோடு இருந்தபோது அல்லாமா இக்பாலின் கீதங்கள் எமக்குக் கேட்டன. எங்களிடையே ஒரு விழிப்புணர்வு எற்பட்டது. நவீன யுகத்திற்கு பதில் சொல்லக்கூடிய சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஆழமான சிந்தனைகள் இஸ்லாத்தில் இருப்பதைப் பற்றிய நம்பிக்கையின் குரலாக இக்பாலின் கீதங்கள் ஒலித்தன.
 
நாம் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். இதுதான் நான் இங்கு கூற விரும்புகின்ற இஸ்லாமிய சிந்தனையும் உலக சிந்தனையும் பற்றிய ஒரு பிரிகோட்டு நிலையாகும். சிந்தனைகளை துண்டு துண்டாக பல்வேறு பிரவாகங்களாக மாத்திரம் அல்ல அவற்றின் உண்மையான தோற்றப்பாட்டையும் ஒருமைப் பாட்டையும் உணர சந்தர்ப்பம் தரப்பட வேண்டும். அல்லாமா இக்பால் போன்றவர்களின் சிந்தனைகளின் சாரமாக இவைதான் இருந்தன. ஒரு பாரிய பொதுக் கல்வி முறை உலகளவிலும் பிராந்தியத்திலும் இலங்கையிலும் வெற்றியடைந்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் அதில் தன்னை முழுமையாக செயலூக்கத்துடன் ஈடுபடுத்தி வரும் நிலையில் இந்த அறிவு பற்றிய விரிவான பார்வை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்க வேண்டும். இது எமது இன்றைய பிரச்சினையுமாகும்.
 
சுக்ரி இந்த சிந்தனை பின்னணியின் ஒரு வாரிசாக இருக்கின்றார். இலங்கை முஸ்லிம்களின் சிந்தனை மரபில் அமைதியாக ஆனால் காத்திரமாக இந்தப் பணிகளை நீண்ட கால தனது அறிவு நடவடிக்கைகளின் மூலமாக சாதிக்க முயன்று வருகின்றார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் என்பதுதான் எனது மதிப்பீடு. இஸ்லாமிய அறிஞராக சுக்ரியை மதிப்பீடு செய்யும்போது சுருக்கமாக அதை நோக்குவதனால் நவீன புலமைத்துவம், நவீன ஆராய்ச்சி முறையியல் என்பன உலகிலும் ஐரோப்பாவிலும் செழுமை பெற்று வளர்ந்து வரும் சிந்தனைத் தாக்கங்கள் அவற்றின் நெறிமுறைகள் என்பவற்றை ஆதாரப்படுத்திய ஒரு சிந்தனை வழிகாட்டலை சுக்ரி சாத்தியம் ஆக்கினார்.
 
1970ம் ஆண்டு கபூர் மண்டப உரையில் நான் இதை அவதானித்தேன். அதுவரை நாங்கள் கேட்டு வந்த இஸ்லாமிய அறிவு மற்றும் பிரசார பேச்சுக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக ஒரு சிந்தனைப் பாணி அவரால் அறிமுகப்படுத்தப்பட்டதை அப்போது A/L படித்துக் கொண்டிருந்த என்னால் தீர்க்கமாக உணர முடிந்தது. அதற்குப் பின்னர் சுக்ரி அவர்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது நான் அவரை நேரடியாகச் சந்திக்கின்றேன். அது அடுத்ததாக எனது வாழ்வில் எதிர்காலத்தில் பிரகாசிக்கக்கூடிய ஒரு சிந்தனையாளரை அவருடைய சிந்தனையும் கருத்துக்களும் வடிவமைப்புப் பெறும் ஒரு காலகட்டத்தில் அவர் எப்படி உயர்வார் என்பதை இன்னும் தெரியாத நிலையில் நான் அவரோடு பழகினேன். அவரது கனிவான பேச்சும் பணிவன்பும் எப்போதும் என்னைக் கவர்ந்தன. அந்த இனிமையான சுபாவத்தில் இருந்து இன்று வரை நீடிக்கும் அன்பை அவரிடமிருந்து நான் காண்கின்றேன். அது சுக்ரி அவர்களைப் பற்றிய தனிப்பட்ட எனது அன்புக்கான பிரத்தியேகமான மதிப்பீடாகும்.
 
ஆனால் நீண்ட காலம் செல்லுமுன் அவர் கலாநிதிப் பட்டப்படிப்பிற்காக எடின்பறோவுக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டுக்குரிய ஆன்மீக சிந்தனையாளர் ஒருவரின் பணிகளை மொன்ற்கோமரிவொட்டின் மேற்பார்வையில் கற்றுக் கொள்ளும் வாயப்பு அவருக்குக் கிடைத்தது.
 
இஸ்லாமிய நாகரீகத்திலும் பண்பாட்டிலும் மார்க்க கோட்பாடுகளிலும் அணுஷ்டான முறைகளிலும் ஏற்கனவே தன்னை புடம் போட்டிருந்த சுக்ரி அவர்களுக்கு நவீன கல்வி நவீன சிந்தனைக்கான வாய்ப்புக்களையும் அவருக்கு உருவாக்கித் தந்திருந்தது. இதனால்; இந்தப்புதிய முறை முற்றிலும் புதிதானது என்று நான் சொல்வதற்கில்லை. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அந்தக் காலத்தில் இருந்த மிகப்பெரிய ஆசான்களின் கல்வி முறையும் கல்விப் போதனைகளும் அவரது சிந்தனையை வடிவமைப்பதில் பெற்ற முக்கியத்துவத்தை என்னால் உணர முடியும். அவர் சிறப்புத் துறையாக அரபு நாகரீகத் துறையில் பேராசிரியர் இமாம் அவர்களிடம் கல்வி கற்ற போது அவர் பெற்றுக் கொண்ட; அவர் கற்றுத் தேர்ந்து கொண்ட இஸ்லாமியப் பண்பாட்டு அறிவு ஞானம் என்பதும் கூட ஒரு பல்கலைக்கழக கல்வி விதிமுறை ஒழுங்குகளின் நெறிப்படுத்தப்பட்ட பின்னணியைத் தான் பிரதிபலித்திருக்க வேண்டும்.
 
சுக்ரியின் எதிர்கால கல்வித் திட்டத்திற்கான பிரதான அடித்தளங்களை வகுத்தவர்களில் பேராசிரியர் இமாமின் பங்கு முக்கியமானது. ஏ.எம்.ஏ அஸீஸின் வழிகாட்டலும் அதே அளவு முக்கியமனது என்று நான் கருதுகின்றேன். இவர்கள் இருவருமே நாங்கள் அடிக்கடி கூறுகின்ற மேற்கத்திய அல்லது உலகியல் கல்வி மரபுகளின் தவிர்க்க முடியாத மிகச் சிறந்த உச்சங்களை அனுபவித்ததோடு அதை சமூகத்திற்கும் வழங்கியவர்கள். ஏ.எம்.ஏ அஸீஸிடம் இருந்த ஒரு ஆழமான உணர்வு உலகக் கல்வி மார்க்கக் கல்வி என்று அடிக்கடி பிரித்துக்கூறப்பட்டு வந்த இந்தப் பிரிவுகளைக் கடந்த நிலையில் ஒரு ஐக்கிய இஸ்லாமிய உணர்வு என்ற ஒரு இலட்சியமும் அதற்கான வாய்புக்களும் என்பது பற்றி அஸீஸ் சிந்தித்து வந்தார். அஸீஸின் ஜாமியா பற்றிய சிந்தனையிலும் இது வேரூன்றி இருந்தது.
 
மார்க்க அறிவு, உலக அறிவு என்ற இந்த விடயத்தில் நவீன காலத்திற்கான ஒரு கல்வி கற்ற பரம்பரையை உருவாக்க வேண்டும் என்று அஸீஸ் விரும்பினார். இதை நாம் ஆழமாக நோக்க வேண்டும். கல்வி என்பது விடயதானங்களையும் பல்வேறு கோட்பாடுகளையும் மனனம் செய்து மனதில் பதிய வைத்து அவற்றை திருப்பி ஒப்புவிப்பது அல்ல. இரு அறிவு நிலைகளின் ஐக்கியம் என்ற கருத்திற்கு அப்பால் நவீன புலமைத்துவம் நவீன ஆராய்ச்சி முறை என்பதில் ஆழமான பிடிப்பும் ஆதரவும் அஸீஸூக்கு இருந்தது.
 
அத்தகைய நம்பிக்கையும் பயிற்சியும் பேராசிரியர் இமாமுக்கும் இருந்தது. இதை இன்னொரு வகையில் நாம் சிந்தித்தால் இலங்கையில் இஸ்லாமிய பண்பாட்டுக் கல்வி மரபை நவீன புலமைத்துவ ஒழுங்கில் புதிய யுக பார்வைகளோடு ஒன்றினைப்பது அல்லது அந்த முக்கியத்துவத்தை உள்ளடக்கிய கல்விப் பாரம்பரியத்தை புதிதாக உருவாக்குவது என்ற கவனம் முக்கியமானதாகும். ஏனெனில் கல்வியில் அல்லது அறிவில் அது என்ன வகையாக இருந்தாலும் செந்நெறி ஒழுங்கில் அமைந்த புலமை வாதமும் ஆராய்ச்சி ஒழுங்கு முறையும் உண்மைகளை தெளிவு படுத்துகின்ற ஆளுமையும் ஏன் தேவையான போது பகுப்பாய்வு விமர்சனங்களை தகுந்த வகையில் செய்யக்கூடிய பயிற்சியும் ஆற்றலும் என்று நாம் இதை விளங்க வேண்டும்.
கல்வி என்பது இதுவாகத்தான் இருக்க வேண்டும். கல்விக்கு பல அர்த்தங்கள் கூறப்பட்டாலும் கல்வியின் உண்மையான அர்த்தம் அதனுடைய முடிவற்ற சிந்தனை மாற்றமாகும். உண்மைகளை புரிந்து கொள்வதற்கு எடுக்கப்படுகின்ற யதார்த்தமான பாரிய நடவடிக்கைகளாகும். பேராசிரியர் இமாம் அவர்கள் அறிஞர் அஸீஸ் எம்.ஏ.எம். சுக்ரி போன்றவர்கள் இஸ்லாமிய கல்வி பண்பாட்டில் இதனுடைய தேவையை உணர்ந்திருந்தனர். இதற்கான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டிருந்தனர். சுக்ரியின் அறிவுப் பணி மற்றும் கல்விச் சேவைகளை இந்தப் பின்னணியில் இருந்துதான் நான் பார்க்கின்றேன். அது வளர்ச்சியினதும் மாற்றத்தினதும் புதிய தேவைகளுக்கான தகவமைப்பினதும் அடையாளங்களாக எமக்குத் தெரிகின்றது.
 
1980ம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தில் நாங்கள் இருவரும் விரிவுரையாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது நடைபெற்ற பல கலந்துரையாடல்களின் ஒரு சந்தர்ப்பத்தில் சுக்ரி பின்வருமாறு கூறினார். முஸ்லிம்களுடைய கல்வி மனப்பான்மையில் மாற்றம் வேண்டும். ஆய்வு மனப்பாங்கு மிக மிக மந்த நிலையில் இருக்கின்றது. முறையியல் பற்றி எந்தவித கருத்தும் செலுத்தப்படுவதில்லை. ஒரு விடயத்தை எழுதும்போதும் பேசும்போதும் ஆதாரங்களை சொல்வதும் சரியான பதிவுகளை ஒரு ஒழுங்கு முறையில் முன் வைப்பதும் எவ்வளவு பெரிய முக்கியத்துவம் என்பதை இன்னும் எமது முஸ்லிம்களின் அறிவுப் பண்பாட்டில் இலங்கையில் காண்பது அரிதாகவே உள்ளது.
 
இந்த நிலையில்தான் என்னுடைய ‘அல்குர்ஆன் வரலாறும் வாழ்க்கை முறையும்’ என்ற நூலை நான் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு அல்லது ஒரு முன்மாதிரியொன்றை உருவாக்குவதற்காக வெளியிட விரும்புகின்றேன்.
 
அல்குர்ஆனைப் பற்றி அதனுடைய சிந்தனை ஆழங்களைப் பற்றி மனித வாழ்வுக்கான அதன் வழிகாட்டுதல்களைப் பற்றி என் உள்ளத்தில் இருந்த அழமான உணர்வுகளை அந்த நூலின் மூலம் சொல்வது எனது பிரதான நோக்கம். அந்த வகையில் அந்த நூல் எனது ஒரு பெரிய இலட்சியம். ஆனால் அதை நான் புலைமைத்துவத்திற்கும் ஆராய்ச்சி முறைமைக்கும் ஒத்திசைவான முறையில் எழுதியிருக்கின்றேன். அந்த நூல் புதிய பரம்பரையினருக்கு ஆய்வு நெறிமுறைகளை எவ்வாறு பயன்படுத்தி தமது இஸ்லாம் பற்றிய சிந்தனைகளை தர்க்க ரீதியான முன்வைக்கலாம் என்பதற்கு எமது இஸ்லாமியப் பண்பாட்டு மற்றும் கல்விப் பின்னணில் வெளிவருகின்ற ஒரு நூலாகவும் நினைக்கின்றேன் என்று என்னிடம் கூறினார்.
 
இதுதான் சுக்ரி இஸ்லாமியக் கல்வி முறையிலும் அந்தப் பண்பாடுகளை எடுத்துச் சொல்வதிலும் நவீன புலமைத்துவத்தின் தேவை பற்றி அவருக்குள் இருந்த கவலையும் ஆதங்கமுமாகும். இது அவரது பணிகள் முழுக்க இன்றுவரை நீடிக்கும் அவரது புலமைத்துவ பின்னணி என்று கூற முடியும். எதையும் ஆதார பூர்வமாக முடிந்த வரை சான்றுகளோடு முன்வைக்கின்ற ஒரு பண்பு அவரால் விருத்தி செய்யப்பட்டது. அது இலங்கை முஸ்லிம்களின் கல்வி பாரம்பரியத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாக நினைக்கின்றேன்.
 
சாதரணமாக; அமைதியாக அவர் எழுதுவதும் பேசுவதும் அவருக்கு ஒரு பொதுப் பண்பாக இருந்தபோதும் அவருடைய எழுத்திலும் பேச்சிலும் சமுதாய மாற்றத்திற்கான பல கருத்துக்களும் உண்மைகளும் அடங்கியிருந்தன. தத்துவார்த்தமாக விடயங்களை சொல்வதில் அவருக்கு ஒரு விருப்பமும் பயிற்சியும் இருந்தது. இளைஞர் சமுதாயத்திற்கு இஸ்லாமிய பண்பாட்டு அறிவையும் உலக முன்னேற்றங்களின் விசாலத்தையும் எடுத்துக்கூறி தீவிரவாத அனுகுமுறைகளை விட கல்வி அறிவு மறுமலர்ச்சி, புதிய சிந்தனைகளின் மீதான நாட்டம் என்பவற்றை நோக்கி இளைஞர்களை அவரது சிந்தனைகள் திருப்பியதாக நான் உணர்கின்றேன். அவரிடம் படித்த மாணவர்கள் மட்டுமன்றி மாணவர் வட்டாரத்திற்கு வெளியே உள்ள ஆயிரக் கணக்கான இளம் சுக்ரி அபிமானிகள் அவ்வாறு நெறிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற உணர்வு எனக்கிருக்கிறது.
 
எங்களுக்குள் ஒரு சிந்தனையாளன் இருப்பதன் மூலம் எங்களுக்கான ஒரு பண்பாட்டு நெறிமுறையை ஒழுங்கமைக்க சிந்திக்க எமது வாழ்வையும் இருப்பையும் வரலாற்று பூர்வமானதாக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இந்திய இலங்கை வாழ்க்கை என்பது முஸ்லிம்களைப் பொறுத்த வரை தென்னாசிய வரலாற்று சுற்றாடல் நாகரீக பின்னணிகளுக்குரியது.
 
இதில் இஸ்லாமிய வாழ்வு என்ன? எங்களுடைய இலட்சியங்கள் வெற்றி பெறுவதற்கான அறிவு ரீதியான வழிமுறைகள் என்ன? என்ற சிந்தனை மிகத் தேவையானதாகும். எரிகின்ற தீச்சுடரில் வீழ்ந்து மாளும் ஆயிரக்கணக்கான விட்டில்களாக நாம் பலியாக முடியாது. அறிவு பூர்வமான முயற்சிகள் ஊடாக அதிலிருந்து எம்மை நாம் மீள சிந்திக்க வேண்டும். இதற்கான பாதைகள் எமது முந்தைய சிந்தனையாளர்களால் வகுத்துத் தரப்பட்டுள்னன. பல்வேறு வகை இஸ்லாமிய சிந்தனையாளர்களிடம் சுக்ரியின் ஆர்வம் பரவி இருந்த போதும் அவருடைய சிந்தனை நெறிப்படுத்தலில் விசேடமாக தாக்கம் செலுத்தியவர்கள் என என்னால் சிலரை இனங்காட்ட முடியும். அவருடைய நூல்கள், அவருடைய நூற்றுக் கணக்கான கட்டுரைகள் என்பவற்றை வாசித்து அறிந்ததனால் மட்டுமல்ல அவருடைய உரைகள் பலவற்றை கேட்டதில் இருந்தும் இதை நான் அவ்வாறு கூற நினைக்கின்றேன்.
 
இந்தியாவின் ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லாவி, மத்திய கிழக்கின் ஜமாலுத்தீன் ஆப்கானி,அல்லாமா இக்பால், மலிக் பின் நபி போன்றவர்கள் மீதான அவரது ஆர்வம் அதிகமானது மட்டுமல்ல அவரின் சிந்தனைகளின் அடிப்படைகளை வடிவமைத்த முக்கிய சிந்தனையாளர்கள் என்று கூற முடியும். ஷாஹ் வலியுல்லாஹ் இந்தப் பிராந்தியத்தின் தென்னாசியாவின் இஸ்லாமிய சிந்தனை மரபை நெறிப்படுத்தும் பாரிய அறிவையும் போராட்டத்தையும் தொடக்கி வைத்த பெரும் சிந்தனையாளர். அவரைப் பற்றி சுக்ரி அதிகம் எழுதியுள்ளார். ஆனால் எங்களிடம் என்ன நடந்தது. இத்தகைய தலைமைச் சிந்தனையாளர்கள் பலரை கருத்தில் எடுக்கத் தவறி விட்டோம் அல்லது மறுத்து வருகின்றோம். ஷாஹ் வலி அவ்வாறு எங்களால் கைவிடப்பட்ட ஒரு பெரும் சிந்தனையாளர். இந்திய உப கண்டத்தில் நவீன சிந்தனைக்கான ஊற்றுவாயாக அவரது சிந்தனைகள் எவ்வாறு இயங்கின என்பதே ஒரு பெரிய வரலாறாகும். இவற்றை நோக்கி நமது கவனம் ஏன் திரும்பவில்லை. ஆனால் அமைதியாக அவருக்கேயுரிய நிதானத்துடன் சுக்ரி இவர்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி வந்துள்ளார்.
 
ஜமாலுத்தீன் ஆப்கானி, அஷெய்க் முகம்மது அப்து போன்ற நவீன கால இஸ்லாமிய சீர்திருத்த சிந்தனையாளர்கள் வலியுத்திய விடயங்களில் சிந்தனை மாற்றம் நவீன கல்வி சமூகம் எதிர்நோக்கும் சவால்களுக்கான சிந்தனா ரீதியான தீர்வுகள் என்பவற்றை வலியுறுத்தியவர்கள். ஷாஹ் வலியுல்லாஹ் முதல் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த மாலிக் பின் நபி என்ற சுக்ரியின் நூல் உட்பட வலியுறுத்தும் விடயங்கள் இவைதான். தற்கால அறிஞர்களான சுலைமான் அலி நத்வியும், தாரிக் றமழானும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் விடயங்களும் இவைதான்.
விழா அழைப்பிதழில் ‘இஸ்லாமிய மெய்யியலாளர் சுக்ரிக்கான பாராட்டு வைபவம்’ என்று எழுதப்பட்டிருந்து. அழைப்பிதழில் இன்னொரு பகுதியில் முன்னணி இஸ்லாமிய ஆய்வறிவாளர் என்றும் எழுதப்பட்டு இருந்தது. இஸ்லாமிய மெய்யியலாளர் என்று சுக்ரியை வர்ணிக்கும் இந்த வார்த்தை எனது கவனத்திற்கு இந்த அழைப்பிதழ் மூலம்தான் முதலில் வந்திருப்பதாக நினைக்கின்றேன். சமூகம் கலாநிதி சுக்ரியை அந்த வகையில் பார்க்க விரும்புகின்றது. நமது பிராந்தியத்தின்; தேசத்தின் இஸ்லாமிய மெய்யியலாளர் என்ற அடையாளத்தை சுக்ரிக்கு வழங்குவதில் சமூகம் பெருமை கொள்ள முடியும். அந்தச் சொல்லின் பிரயோகம் இன்று கிழக்கில் மருதமுனையில் பதிவு பெற்றுள்ளது. இதை மருதமுனை வாசிகள் ஆர்வம் மிகுதியால் அறிவித்திருக்கலாம். ஆனால் அதனை யதார்த்தமாக்க இந்த மன்றத்தில் நான் சாட்சியாக இருப்பேன். சுக்ரியின் 40 வருட கால எழுத்துக்களையும் பேச்சுக்களையும் ஆராயும்போது இந்த இலக்கை நோக்கி அவரது சிந்தனை நெறிப்படுத்தப்பட்டிருப்பதை நன்குணர முடியும். குர்ஆனின் வரலாறும் வாழ்வும், மதமும் அறிவியலும், ஷாஹ் வலி, அல்லாமா இக்பால் பற்றிய கட்டுரைகளிலும் இப்போது என் கைகளில் இருக்கும் மாலிக் பின் நபி என்ற நூலிலும் இது நிதர்ஸனமாகி இருக்கின்றது.
 
இஸ்லாமிய மெய்யியலின் மூலாதாரமான விடயங்களை பேசுவதற்கும் மேற்கத்திய சிந்தனைகளில் இருந்து மெய்யியல் பண்புகளை ஆராய்வதற்குமான ஒரு அறிவுப் பின்னணி இல்லாமல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் ஒருவர் வெற்றி பெற முடியாது. சுக்ரிக்கு இருக்கும் இஸ்லாமிய பண்பாட்டு தத்துவஞான அறிவும் மேற்குலகு பற்றிய செறிவான எண்ணங்களும் கிரேக்க மற்றும் நவீன மெய்யியல் போக்குகள் பற்றி அவர் அறிந்திருக்கின்ற விடயங்களும் அவரை இஸ்லாமிய மெய்யியலாளர் என்ற உயர்ந்த தகுதிக்கு இட்டுச் செல்வதாக எனக்குத் தோன்றுகின்றது.
 
அந்த நோக்கில் பார்க்கும்போது ‘மலிக் பின் நபி’ என்ற நூல் அவரது இந்த முயற்சியின் உச்சம் என்று என்னால் கூற முடியும். மலிக் பின் நபியை இவ்வளவு எளிமையாக வாசகருக்கு அறிமுப்படுத்தலாம் என்பதற்கு இந்த நூல் சிறந்த உதாரணமாகும். அதற்கான பாராட்டை சுக்ரி அவர்களுக்கு நான் வழங்க விரும்புகின்றேன். ஆனால் அது இப்னு கல்தூன்,கார்ல் மார்க்ஸ், ஹெகல், சமூகவியல், மானிடவியல், வரலாற்று மெய்யியல், கருத்துக்களின் வரலாறு என்பவற்றை ஒன்று கலந்த ஒரு பின்னணியில் இருந்து மலிக் பின் நபி இதை தனது இஸ்லாமிய நோக்கிலான சமூகவியல் வராலற்றியல் பார்வையை முன்வைத்திருக்கின்றார்.
அது மிக ஆழமான ஒரு விடயமாகும். நாகரீகமும் வரலாறும் கருத்துக்களும் என்ற மூன்று அச்சானிகளில் மலிக் பின் நபியின் சிந்தனை சுவறி இருப்பதை மலிக் பின் நபி பற்றிய சுக்ரியின் நூல் அழகாக முன்வைத்திருக்கிறது. இது ஒரு பாரிய அறிவுப் பணியாகும். மலிக் பின் நபியை விளங்கிக் கொள்வதன் மூலம் இஸ்லாமியப் பண்பாட்டில் நிகழ்ந்துள்ள அதிர்ச்சி மிக்க தோல்விகள், நெருக்கடிகள், சிந்தனைச் சிக்கல்கள் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான இஸ்லாமிய வழிமுறைகள் என்பவற்றை மலிக் பின் நபி வரையறுத்துள்ளார்.
 
ஷாஹ் வலியையும் ஆப்கானியையும் அல்லாமா இக்பாலையும் கற்றுக் கொள்ளாத ஒருவனால் மலிக் பின் நபியை அதன் பூரண ஒளியில் அறிந்து கொள்ள வாய்பிருக்கும் என்று நான் நம்பவில்லை. கூர்மையாக நோக்கினால் சேர் செய்து அஹ்மத்கானும் ஆப்கானியும் முன்வைத்த அடிப்படையான சமய சீர்திருத்த மனப்பாங்கு மலிக் பின் நபியினால் மேலும் மெருகூட்டப்பட்டிருக்கின்றது. பிரான்சில் அவர் கற்றுக் கொண்ட பிரான்ஸிய தத்துவ அறிவும் ஐரோப்பிய நாகரீம் பற்றிய அறிவும் மேற்கத்தேயரின் கருத்துக்களின் வரலாறு பற்றிய அறிவும் வரலாற்று மெய்யியல் மானிடவியல் போன்ற சிந்தனைத் தாக்கங்கள் ஊடாக இன்றைய சமுதாயத்திற்கு ஏற்ற மொழியில் மாலிக் பின் நபி முன்வைக்கும் விடயங்கள் கூர்ந்து அவதானிக்கத் தக்கவை.
 
அது சுக்ரியின் ஆர்வத்திற்கும் கவனத்திற்கும் உரிய கருத்துக்களாகவும் இருக்கின்றன. அதைத்தான் நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அல்லாமா இக்பாலையும் மலிக் பின் நபியையும் ஒப்பிட்டு அவர் எழுதிய கட்டுரைகளிலும் ஆழமாக அவர் விரும்பும் சில விடயங்களை அமைதியாக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதில் அவருக்கு ஒரு ஆர்வம் இருப்பதை என்னால் உணர முடிகின்றது. அதிலிருந்து பல விடயங்களை எடுத்துக்கூற முடியும். ஒரே ஒரு அம்சத்தை மாத்திரம் ஆனால் மிக அடிப்படையான அம்சத்தை மாத்திரம் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
 
அது மலிக் பின் நபி நூலில் சுக்ரி அவர்களே குறிப்பிட்டிருப்பது போல் சிந்தனைச் சிக்கலில் இருந்து இஸ்லாதமிய வரலாற்றையும் இஸ்லாமியப் பண்பாட்டையும் அறிவதும் தீர்வைக் காணுவதும் என்ற நீண்டகால அறிவு பூர்வமான தேடல் ஒரு கட்டத்தை அடைந்திருக்கின்றது.
 
சேர் செய்து அஹமத்கான் இதே கருத்தை அவரது பாணியில் முன்வைத்த போது உலமாப் பிரிவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆப்கானியும் அப்துவும் இதைப் பற்றிப் பேசிய போது பெரிய ஆதரவு மார்க்க வாதிகளிடம் இருந்து கிடைக்கவில்லை. ஆனால் அது மாற்ற முடியாத மறைக்க முடியாத உண்மையாக இருந்தது. இஸ்லாமிய அறிவினுடைய அத்திவார செயல்பாட்டு கூறுகளில் ஒன்றாக அது இருக்கின்றது என்பதை ஒரு சிந்தனையாளர் கூட்டம் எப்போது வலியுறுத்தி வந்துள்ளது. ‘இஸ்லாமிய சமயத்தை மீள் கட்டமைப்புச் செய்தல்’ என்ற நூலில் இக்பால் குறிப்பிட்ட அடிப்படையான விடயமே அதுதான். அது வேறு ஒன்றுமல்ல ‘இஜ்திஹாத்’. சுதந்திர சிந்தனைக்கான உரிமை என்று அதை மலிக் பின் நபி மீண்டும் ஒரு முறை நமது யுகத்தில் வலியுறுத்தியுள்ளார். மகத்தான உண்மைகள் மறைக்கப்பட முடியாதவை என்பதற்கு இது பெரும் சாட்சியமாக அமைந்திருக்கின்றது.
 
இஸ்லாமிய உலகின் சிந்தனைச் சிக்கலுக்கு இஜ்திஹாதின் அல்லது சுதந்திர சிந்தனையின் தேவையை சமூகம் பயன்படுத்த தவறியதன் விளைவுகளில் ஒன்றாக அல்லாமா இக்பாலும் மலிக் பின் நபியும் எவ்வாறு உணர்ந்தனர் என்பதை சுக்ரியின் மலிக் பின் நபி நூல் தெளிவாகக் கூறுகின்றது. இதுதான் இஸ்லாமியப் பண்பாட்டுக் கல்வியினுடைய நுண்ணாய்வு நெறிமுறையாகும். அதை இன்னும் ஆழமாக மேற்கத்தேய பாணியில் கூறுவதானால் விமர்சன மனப்பாங்கு எனலாம். நவீன புலமைத்துவம் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தும் விடயத்தின் அத்திவாரமே இதுதான். மெய்யியல் பயிற்சி இல்லாத ஒருவரினால் மலிக் பின் நபியின் நூல்களையோ ஜமாலுத்தீன் அப்கானியின் கருத்துக்களையோ அல்லாமா இக்பாலின் ‘இஸ்லாமிய சமயத்தை மீள் கட்டமைப்புச் செய்தல்’ என்ற நூலையோ ‘அஸ்ராரே ஹுத்இ’ என்ற கவிதை நூலையோ விளங்கிக் கொள்ளலாம் என்பதற்கு சாத்தியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
சுருக்கமாகக் கூறுவதானால் முஸ்லிம் நாகரிகத்தின் மறுமலர்ச்சி முஸ்லிம் சமூகப் புனருத்தாரனம் என்பது எப்போதுமே சுக்ரியின் மனதைக் கவர்ந்த ஆழமான விடயங்களாகும். முஸ்லிம்களின் முன்னேற்ற சீர்குலைவு அது ஏன் முஸ்லிம் உலகை தொடர்ந்து பாதித்து வருகின்றது என்ற கேள்விகளுக்கு விடை காண்பதற்குத்தான் ஆப்கானி முதல் மலிக் பின் நபி வரை முயற்சித்து வந்துள்ளனர். அந்தப் பாரம்பரியத்தில் ஒரு பகுதியில் நமது இலங்கையின் சிந்தனையாளன் ஒருவன் அந்த அறிவாராய்ச்சியில் தன்னை அர்ப்பணித்திருப்பது ஒரு பெருமைக்குரிய விடயமாகும். நாகரிங்களுக்கிடையில் இஸ்லாமிய நாகரிகம் தன்னைப் பாதுகாத்து தனது தனித்துவத்தை அடக்கு முறை இல்லாமல் ஆழ்ந்த நல்லுணர்வுகளோடு எவ்வாறு சாத்தியமாக்குவது என்பது இன்று நவீன இஸ்லாமியச் சிந்தனையாளர்களை தூண்டி வரும் கேள்வியாகும்.
 
எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாமிய உலகில் உருவாகியுள்ள சிந்தனைச் சிக்கலுக்கு தீர்வு காண்பது என்ற பாரிய பொறுப்புக்கு அறிவு ரீதியான விளக்கத்தை தேடும் பாரிய பணியில் சுக்ரியின் பணிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது. இந்தச் சிந்தனைச் சிக்கலுக்கான காரணங்களை புரிந்து கொள்வது நீதமான நடுநிலையான தீர்வுகளை வழங்குவது அதற்கான ஆரோக்கியமான அறிவு ரீதியான கலந்துரையாடல்களை கருத்து நிலைப்பாடுகளை ஆராய்வது என்ற ஒரு பிரதான பணியினை சுக்ரி இலங்கை முஸ்லிம்களின் இஸ்லாமியப் பண்பாட்டுப் புலமையாக நிலைநிறுத்தியுள்ளார்.
 
அதுதான் அவரது இன்று வரையான சேவைகளின் மகுடம் என்று நான் கருதுகின்றேன். மானுட மேன்மைகள் மானுடப் பண்புகள் கலாசாரப் பெறுமானங்கள் மற்ற நாகரிகங்களோடும் மதங்களோடும் இனங்களோடும் ஒத்திசைந்து வாழ்வதற்கான இஸ்லாமிய அறிவு ரீதியான பண்பாட்டு வழிமுறைகள் எனபவற்றை இளைஞர்களிடமும் கல்வி கற்றவரிடமும் உருவாக்கும் பணியில் சுக்ரியின் சிந்தனைப் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
 
பல்லின சமுதாயம் என்ற கருத்தையும் இலங்கையில் மோதலுக்கு இடமற்ற வாழ்வை நீதியான முறையில் பெற்றுக் கொள்வதனையும் சிந்திக்க வேண்டிய சூழலில் சுக்ரியின் இஸ்லாமியக் கருத்துக்களில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. பல்துறை அறிவு கிழக்கு மேற்கு நாகரிகங்கள் மீதான பயிற்சி, உலக அறிவுப் புலமை மீதான பற்று, உண்மை தேடும் மனோபாவம் எனபவற்றின் மூலம் சுக்ரி முஸ்லிம் சமூகத்திற்கு இலங்கையிலும் தென்னாசிய முஸ்லிம் சமூகப் பின்னணியிலும் வழங்கி வரும் சேவைகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்த வகையில் இந்த விடயங்களை சுக்ரி அவர்களின் முன்னிலையிலேயே பேசி மதிப்பீடு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தினை மருதமுனைக் கல்விச் சமூகம் ஒழுங்கு படுத்திய இந்நிகழ்வு ஒரு வரலாற்று முக்கியத்துவமுடையது. இஸ்லாமிய பண்பாட்டு அறிவையும் அதில் உள்ளடங்கியிருக்கும் சிக்கல்களையும் முரண்களையும் தீர்வுகளையும் உலமாக்கள் கல்வியாளர்கள், சமூகப் பெரியார்கள், ஆசிரியர்கள், சாதாரண மக்கள் போன்ற பிரிவினரோடு எவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதற்கு சுக்ரியை பாராட்டும் இந்த மருதமுனை வைபவம் ஒரு பெரும் முன்னோடி நடவடிக்கை என்று நான் பாராட்ட விரும்புகின்றேன். இது இளைஞர்களிடையேயும் இஸ்லாமியப் பண்பாட்டிலும் இஸ்லாமியக் கல்வியில் ஆர்வமுள்ளவர்களிடையேயும் புதிய சிந்தனைகளுக்கான பெரிய உத்வேகத்தையும் அறிவு ரீதியான ஆரோக்கியமான கலந்துரையாடலையும் உருவாக்கும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
 
செவ்விதாக்குணர் எம்.எம்.எம்.அஸ்மின்
Resources by puttalam online
 
05.01.2014 ஆம் திகதி மருதமுனை முஸ்லிம்களால் தென்கிழக்கு முஸ்லிம் சமூகம் சார்பில் ஜாமியா கலாபீட தலைவர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களின் சேவை நலனைப் பாராட்டுவதற்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் அவர்கள் வழங்கிய சிறப்புரையின் தொகுப்பு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *